Advertisement

பார்வையில் மதுச்சாரல் -6(1)

அத்தியாயம் -6(1)

நிச்சயதார்த்தம் எளிமையாக செய்தால் போதும் என்றுதான் அரவிந்த் சொன்னான். ஆனால் வெகு வருடங்களுக்கு பின் தன் வீட்டில் நடக்கும் நல்ல விஷேஷம், எந்த குறையும் இல்லாமல் எல்லாமே சிறப்பாக நடக்க வேண்டுமென வேணுதான் பிரியப் பட்டார்.

பிள்ளைகளே உலகம் என வாழும் தன் தந்தையின் வார்த்தையை மீற முடியாமல் அரவிந்த் சம்மதம் தெரிவித்திருந்தான். ஒரு மாலை வேளையில் அரவிந்த் தீபிகா இருவரது நிச்சயதார்த்தமும் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வேணு அவருடன் பிறந்தவர்கள் மனைவியின் உடன் பிறப்புகள் என அனைவருக்கும் சொல்லியிருந்தார். மதியழகன் பக்கமும் அவரது சொந்தங்கள் அனைவருக்கும் சொல்லியிருந்தார்.

“கிட்டக்க கல்யாணம் இருக்கும் போது இவ்ளோ செலவு பண்ணி நிச்சயம் வேற தேவையா?” என கூட சிலர் நினைத்தார்கள்.

கர்ணாவும் அஷ்வினும் சுற்றி சுற்றி வேலை பார்த்தார்கள். சிவப்பு நிற லெஹங்காவில் காட்சி தந்த தாமினி கர்ணாவுக்குள் பரவசத்தை பரப்பிக் கொண்டிருந்தாள்.

தங்கள் பக்க உறவினர்களை வாங்க என அழைத்து சிலரோடு நின்று சிரித்து பேசி என சுற்றிக் கொண்டிருந்த தாமினியின் பின்னால் சென்று, “மனசை பறிக்கிற மினி” என சொல்லி உடனே அகன்றான் கர்ணா.

‘ஹையோ இதுக்குத்தான் இந்த ரெட் வேணாம்னு நினைச்சேன், இப்போ அவன் ஆசையா சொன்னதுக்காக வாங்கி போட்டதா நினைச்சிட்டானா?’ சலிப்பும் கோவமுமாக கர்ணாவை பார்த்தவளுக்கு இதை அணியும் நேரம் அவன் நினைவு தானாக எழுந்ததும் நினைவுக்கு வர தன்னையே கடிந்து கொண்டாள்.

அவ்வப்போது கர்ணா ரசனையாக தாமினியை பார்க்க நண்பன் பார்வை செல்லுமிடத்தை கவனித்து கொண்டேதான் இருந்தான் அஷ்வின்.

தன்னை போலவே கர்ணாவுக்கும் காதல் தோல்வி என நினைத்திருந்த அஷ்வின், “கர்ணா என்னடா நடக்குது?” எனக் கிண்டலாக கேட்க சுதாரித்து பதில் தராமல் நழுவி சென்று விட்டான் கர்ணா.

“ஓடு ஓடு எத்தனை நாள் என்கிட்டேர்ந்து தப்பிக்கிறேன்னு பார்க்குறேன்” என ஒரு சிரிப்புடன் வாய்விட்டு சொல்லி அஷ்வின் நகர கல்யாணி அவள் குழந்தையுடன் நிற்பதை பார்த்தான்.

தன்னையே அவள் பார்த்திருப்பதை கண்டவன் அருவருப்பாக நோக்கி விட்டு மணமகன் அறைக்குள் நுழைந்து கொண்டான். மேடையில் அஷ்வினை காணாமல் கர்ணாவிடம் வேணு கேட்க நண்பனை தேடிக் கொண்டு வந்தான் கர்ணா.

யாருமில்லா அறையில் வெற்று சுவரை வெறித்தப் பார்த்துக் கொண்டு அஷ்வின் அமர்ந்திருக்க, “அச்சு என்னடா நீ?” கோவமாக கேட்டான் கர்ணா.

எழுந்து நின்ற அஷ்வின் “இது இப்படித்தான் நடக்கும்னு தெரிஞ்சும் ஈஸியா ஃபேஸ் பண்ண முடியலைடா” என தவிப்போடு கூற வேகமாக வந்து நண்பனை கட்டிக் கொண்டான் கர்ணா.

“எல்லார் லவ்வும் சக்ஸஸ் ஆகுறது இல்லைதான், ஆனா நாலு வருஷம் முட்டாளா திரிஞ்சிருக்கேன்ல கர்ணா?”

“அச்சு!” கண்டிப்போடு கர்ணா அழைக்க நீண்ட மூச்செடுத்துக் கொண்டு விலகிய அஷ்வின் ஓய்வறை சென்றான். கர்ணா அங்கேயே காத்திருக்க சில நிமிடங்களில் வந்தவன், “போலாம்டா” என்றான்.

கர்ணா அவனை பாவமாக பார்க்க, “கொன்றுவேன் உன்னை, ச்சீ லுக்க மாத்து” என சொல்லி அவன் கையை பிடித்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

இப்போது அஷ்வினின் பார்வையை எதிர் கொள்ள பயந்த கல்யாணி ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள். அவள் அம்மா மேடைக்கு வரும்படி அழைத்தும் குழந்தையை காரணம் சொல்லி அங்கேயே இருந்து விட்டாள்.

நிச்சயப் பத்திரிகை வாசிக்கப் பட்டு பெண்ணும் மாப்பிள்ளையும் ஒன்றாக அமர வைக்கப் பட்டு நலங்கு செய்து கொண்டிருந்தனர்.

தீபிகாவுக்கு துணையாக தாமினி அவளருகிலேயே நின்று கொண்டிருக்க இங்கே அரவிந்துக்கு துணையாக கர்ணா நின்று கொண்டான். அனைவரும் பெண்ணையும் பையனையுமே கவனித்துக் கொண்டிருக்க அரவிந்துக்கு பின்னால் சென்று தாமினியின் கையில் எதையோ திணித்தான் கர்ணா.

அவள் பல்லைக் கடித்து கையை இறுக்கிக் கொள்ள முகத்தில் சலனமே இல்லாமல் தன் பலத்தை பிரயோகித்து அவள் கையில் தான் கொடுக்க நினைத்ததை கொடுத்து விட்டான்.

தாமினி கண்களால் அவனை முறைக்க அவனோ மெல்லிய சிரிப்புடன் நகர்ந்து கொண்டான். தாமினி தன் கையை விரித்து பார்க்க கைக்குட்டை ஒன்றிருந்தது. அங்கிருந்து தள்ளி வந்து பிரித்துப் பார்க்க கர்ணாவின் உருவம் பிரிண்ட் செய்யப் பட்டிருக்க அவன் கையில் ‘சாரி’ என்ற பதாகை.

அதீத முறைப்போடு கர்ணாவை தேட அவன் டி ஜே விடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.

அவன் உருவம் இருப்பதால் குப்பைத் தொட்டியில் போட மனம் வராமல் வேறெங்கும் வைத்து யார் கண்ணிலும் பட்டாலும் பிரச்சனைதான் என நினைத்தவளாக சுருட்டி கைக்குள் வைத்துக்கொள்ள “கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா, கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா” என பாடல் ஒலிக்க ஆரம்பிக்க அதிர்ந்து போய் தாமினி பார்க்க குறும்பு சிரிப்போடு அவளையே பார்த்திருந்தான் கர்ணா.

ஒன்றும் சொல்ல முடியாமல் ஓரமாக போய் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். தீபிகாவோடு அவளது தோழி ஒருத்தி நின்றிருந்தாள்.

அந்த இடத்தில் லயிக்க முடியாமல் ஏதேதோ யோசனைகளோடு தாமினி அமர்ந்திருக்க கர்ணா அவள் பக்கத்தில் வந்தமர்ந்ததை கவனித்திருக்கவில்லை.

“ப்ளீஸ் மினி பத்து நிமிஷம் கொடு, நான் என்னை புரிய வைக்கிறேன்” என கர்ணா சொல்ல கோவமாக அவனை பார்த்தவள் எழப் போக அவள் கையில் இன்னொரு கைக்குட்டையை திணித்து விட்டு நல்ல பிள்ளை போல அமர்ந்து கொண்டான்.

தாமினிக்கு தான் எதுவும் எதிர்வினை ஆற்றி அனைவருக்கும் தெரிந்து ஏதும் பிரச்சனை ஆகுமோ என பயம், எனவே தள்ளி சென்று கைக்குட்டையை பிரித்து பார்த்தாள்.

தாமினி கர்ணா இருவரது உருவங்களும் பிரிண்ட் செய்யப் பட்டிருக்க கர்ணா அவளிடம் சாரி என பொறிக்கப் பட்ட இதயத்தை கொடுப்பது போலிருந்தது.

‘எல்லாம் இவன் இஷ்டமா? அன்னிக்கு கூட ஏதோ புரியாம சொல்றான் திரும்ப வருவான்னு நினைச்சேனே? நாலு வருஷமா வராம இன்னைக்கு வந்து சாரின்னு சொன்னா…’ தாமினிக்கு கோவத்தில் மூச்சு சீரற்று வந்தது.

அவளை பார்த்திருந்த கர்ணா வேகமாக அவளிடம் சென்று, “ரிலாக்ஸ் மினி…” என ஏதோ பேச வர அங்கு நிற்காமல் சென்று விட்டாள் தாமினி.

நிகழ்ச்சி முடிந்து பந்தி ஆரம்பித்திருக்க கர்ணாவால் அதற்கு மேல் தாமினியிடம் கவனம் செலுத்த முடியவில்லை. தாமினி கல்யாணியோடு சேர்ந்து சாப்பிட வர அஷ்வின் அங்கு நிற்காமல் செல்ல கர்ணாவின் முகமும் இறுகிப் போனது.

கர்ணாவை கடினமாக பார்த்த மினி, “உன் சிஸ்டர் எங்கேஜ்மெண்ட், யாருக்கும் நீ இருக்கிறது பிடிக்கலைனா அவங்க போகட்டும் வெளில, உட்கார்க்கா” என கல்யாணியை அதட்டினாள்.

கர்ணாவும் கோவமாக பார்க்க அவனை சட்டை செய்யாமல் சாப்பிட ஆரம்பித்த தாமினி சங்கடமாக நெளிந்து கொண்டிருந்த கல்யாணியிடம், “சஞ்சு குட்டி எப்போ உன்னை தேட ஆரம்பிப்பான்னு தெரியாது, சீக்கிரம் சாப்பிடுக்கா” என சொல்ல அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.

அஷ்வின் போல கர்ணாவால் சட்டென நகர முடியவில்லை. பரிமாற ஆட்கள் இருந்தாலும் அவர்கள் இருவரும்தான் மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர், இப்போது அஷ்வின் இல்லாமல் போக தானும் செல்வது சரியாக இருக்காது என யோசித்து அங்கேயே இருந்தான்.

கர்ணா கடந்து செல்கையில் வேண்டுமென்றே, “மினி இட்லி எடுத்திட்டு வர சொல்லுங்க” என்றாள் தாமினி.

அவளை ஆச்சர்யமாக பார்த்த கர்ணா அவனே சென்று இட்லிகள் எடுத்து வந்து அவள் இலையில் வைக்க, “சாம்பார் யாருங்க ஊத்துவா?” எனக் கேட்டாள் தாமினி.

ஏதோ அவள் தன்னிடம் சமாதானமாக போகிறாள் என நினைத்து புன்னகை செய்தவன் வேகமாக ஓடிப் போய் சாம்பார் எடுத்து வந்து ஊற்றி, “வேறென்ன வேணும் மினி?” என அக்கறையாக கேட்டான்.

“ஹ்ம்ம்… டென் மினிட்ஸ் என்கிட்ட பேசணும்னு சொன்னீங்கல்ல? பேசலாம், அதுக்கு முன்னாடி கல்யாணி அக்கா உங்க ஃப்ரெண்ட் அஷ்வின்கிட்ட பேசணுமாம், ஏற்பாடு பண்ணி தாங்க” என சின்ன குரலில் கேட்டாள் தாமினி.

இப்படி கேட்பாள் என எதிர்பார்க்காத கல்யாணி அதிர்ந்து விழிக்க ரௌத்திரமாக பார்த்த கர்ணா, “இதை போல உன்னை தவிர வேற யார் கேட்ருந்தாலும் இந்த கொதிக்கிற சாம்பாரை அப்படியே எடுத்து அவங்க தலையில ஊத்தியிருப்பேன், நீயா போய்ட்ட… பொழைச்சி போன்னு விடுறேன்” என கோபமாக சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து அடுத்த பந்தி வரிசையில் போய் நின்று கொண்டான்.

தாமினியின் கண்கள் கலங்கி விட அவளை பாவமாக பார்த்த கல்யாணி, “ப்ச், எனக்காக பார்த்து நீ ஏன் இன்னும் சிக்கல் பண்ணிக்கிறியா மினி?” என ஆற்றாமையாக கேட்டாள்.

கண்ணீர் வந்து விடாமல் சமாளித்தவள், “எப்படி சொல்லிட்டு போறாங்கன்னு பார்த்தியாக்கா? நாம… நீ என்ன சொல்ல வர்றேன்னு கேட்க மாட்டாங்க, ஆனா அவர் சொல்றது மட்டும் நான் கேட்கணுமா? என்னை கல்யாணம் செய்துக்க போறவருக்கு நான்தான் முக்கியமா இருக்கணும், வேற யாரோ இல்லை. உன்னை துரோகின்னு சொன்னா…” என தாமினி சொல்லும் போதே கல்யாணியின் கண்கள் கலங்க அவள் கையை ஆதரவாக பிடித்துக்கொண்டாள்.

இயலாமையாக சிரித்த கல்யாணி, “சாப்பிடு மினி” என்றாள்.

“கர்ணா எனக்கு செஞ்சதும் துரோகம்தானேக்கா? அவருக்கு என்னை விட அவர் ஃப்ரெண்ட் ரொம்ப முக்கியம், உன் மேலேதான் தவறுன்னா கூட அவர் என்னை வேணாம் சொன்னது தப்புதானே? இப்போ தீபி அவங்க குடும்பத்துக்கு போறான்னதும் திரும்ப என் பின்னால வர்றார், நான் எப்படி ஒத்துப்பேன்?” எனக் கேட்டாள்.

இவர்கள் இருவரும் ஒரு பந்தி வரிசையின் இறுதியில் அமர்ந்திருக்க அவர்கள் பக்கத்தில் ஆட்கள் யாருமில்லை. இப்போது அந்த காலி இருக்கைகளிலும் ஆட்கள் வர, “சாப்பிடு மினி, அப்புறம் பேசலாம்” என கண்டிப்போடு கல்யாணி கூற நிலைமை புரிந்து தாமினியும் அடுத்து எதுவும் பேசவில்லை.

‘நானே எப்படியாவது அவளை சமாதானம் செய்ய நினைச்சா இந்த கல்யாணியை யாரு அவ கூட வர சொன்னது? அவ எப்படி பட்டவன்னு தெரிஞ்சும் அஷ்வின் கூட பேச வைங்கிறா, ஏன் என்ன பேசணுமாம் அவளுக்கு? என் ஃப்ரெண்ட் பார்த்து உறுத்துதாமா அவளுக்கு, பண்றதெல்லாம் பண்ணிட்டு சாரி கேட்கணுமா அவளுக்கு? அச்சு திரும்பவும் அவன் நிம்மதிய தொலைக்கணுமா? அவன் நல்லா இருக்கிறது பிடிக்கலையாமா இவளுக்கு? இப்போ நானும் கோவமா பேசி… ப்ச்…’ சலிப்பாக உணர்ந்தான் கர்ணா.

கல்யாணியின் மகன் சஞ்சய் அவளை தேடுவதாக கைபேசியில் அழைத்து அவள் தாய் சொல்ல தாமினியிடம் சொல்லிக் கொண்டு சென்று விட்டாள் கல்யாணி.

சாப்பிட்டு முடித்து கை கழுவுமிடம் வந்த தாமினியிடம் “சாரி” என்றான் கர்ணா.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு சாரி கேட்டா சரியா போச்சா?” என சீறினாள் தாமினி.

“மினி! நான் இப்போ கோவமா பேசினத்துக்கு சாரி கேட்டேன். நான் செஞ்சது பெரிய தப்புனு எனக்கு தெரியும், ஈஸியா எல்லாம் மன்னிக்க வேணாம் என்னை. நான் கண்டிப்பா உன்னை சமாதானம் செய்வேன்”

“அவ்ளோ நம்பிக்கையா! ட்ரை பண்ணுங்க” என இகழ்ச்சியாக சொல்லி சென்று விட்டாள்.

நிச்சய விழா முடிந்து மண்டபத்தை காலி செய்து கொண்டிருக்க கர்ணாவிடம் வந்த தாமினி அவன் வழங்கிய கைக்குட்டைகள் இரண்டையும் அவன் காலடியில் போட்டு விட்டு திரும்பிப் பாராமல் சென்றாள்.

யாரும் கவனிக்கும் முன் சட்டென குனிந்து எடுத்து தன் சட்டைப் பைக்குள் பத்திரப் படுத்திய கர்ணாவின் முகம் வாடிப் போயிருந்தது.

Advertisement