Advertisement

பார்வையில் மதுச்சாரல் -5(2)

அத்தியாயம் -5(2)

தாமினிக்கு மிகவும் சோர்வாக இருந்தது. இன்னும் கர்ணாவை மறக்க முடியவில்லை, அதே சமயம் மன்னிக்கவும் முடியவில்லை. சலனமின்றி சென்ற அவளது வாழ்வில் அவன்தான் திடீரென வந்தான். அவனை பார்த்த உடன் குறு குறுப்புதான் என்றாலும் பெரிதாக எடுக்க வில்லை தாமினி.

வம்பெதுவும் செய்யாமல் அமைதியாக தனக்காக காத்திருந்து காத்திருந்தே இளம் மனதை தூண்டி விட்டான். ஏதேதோ பேசி அழகான காதல் வாழ்க்கை பற்றி எதிர்பார்க்க வைத்தான். ஒரு நாள் அவனுடன் கடந்த ஒரு மைல் தூரத்திலேயே மனதிற்குள் நுழைந்து சட்டமாக உட்கார்ந்து கொண்டான்.

அடுத்த நாள் ஆசை ஆசையாக அவள் வர அங்கே அவனை காணவில்லை. முதல் நாள் போல தாமதமாக வருவானோ என எண்ணி அங்கேயே காத்திருக்க அவன் வரவே இல்லை.

கர்ணாவின் கைபேசி எண்ணும் இல்லாததால் அவனை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. ஒரு மணி நேரம் அந்த வெயிலில் யாருமற்ற சாலையில் இதோ வந்து விடுவான் என நம்பிக் கொண்டே அவள் காத்திருக்க அவன் வருவதாக காணோம்.

வத்சலா அழைத்து இன்னும் ஏன் வரவில்லை எனக் கேட்கவும் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் கிளம்பினாள். ஏதோ அவசர வேலை அடுத்த வாரம் வந்து விடுவான் என தனக்கு தானே சமாதானம் கூறிக் கொண்டாள்.

அடுத்த வாரமும் வராமல் ஏமாற்றினான் கர்ணா. தாமினிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. அவனுக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ என்றெல்லாம் பயந்து போனாள். கோயிலுக்கு ஓடி சென்று அவன் நலனுக்காக மனமுருக கண்ணீர் கசிய வேண்டிக் கொண்டாள்.

வீட்டில் யாரிடமும் பகிர முடியவில்லை. தோழிகளிடம் சொன்னால் கிண்டல் செய்வார்களோ என பயந்து அவர்களிடமும் சொல்லாமல் அவன் நினைவிலேயே மருகிக் கொண்டிருந்தாள்.

கர்ணா படிக்கும் கல்லூரி தெரியும்தான், ஆனால் தனியாளாக அங்கு சென்று என்னவென விசாரிப்பாள்.

உற்சாகமான பெண்ணின் மகிழ்ச்சியோடு சேர்த்து நிம்மதியையும் உறக்கத்தையும் பறித்துக் கொண்டு மாயமாகிப் போனான் கர்ணா.

அந்த ஆறு மாதங்களில் தாமினியிடம் ஒரே ஒரு வேண்டுதல்தான். அவன் என் வாழ்வில் வரா விட்டாலும் பரவாயில்லை, அவனுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது, அவன் நன்றாக இருக்க வேண்டும் என அவனை தனக்கு காட்டிக் கொடுத்த உச்சிப் பிள்ளையாரை விடாமல் வேண்டினாள்.

அந்த ஞாயிறு நடன வகுப்பு முடித்து விட்டு தாமினி வர தொலைவிலேயே ஒரு பைக் நிற்பதை கண்டு விட்டாள். அவனாக இருக்குமோ என நினைக்கும் போதே கண்கள் கலங்கி விட்டன. அந்த தூரத்தை எப்படி கடந்தால் என்றே தெரியாமல் உணர்ச்சி வயப் பட்டவளாக அருகில் வர அவனேதான்.

பதட்டத்தில் ஸ்கூட்டரை சரியாக நிறுத்தாமல் கீழே விட்டாள். அதை தூக்கி நிறுத்தக் கூட தோன்றாமல் கர்ணாவை நீர் நிறைந்த விழிகளோடு பார்த்து நின்றாள் தாமினி.

அவளை போல கர்ணாவின் முகத்தில் எந்த உணர்வுகளும் இல்லை, சாவகாசமாக வந்து அவள் ஸ்கூட்டியை தூக்கி நிறுத்தினான்.

தாமினிக்கு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. இப்போதைக்கு அவன் நன்றாக இருப்பதே போதுமானது என்ற எண்ணத்தில் அவனே சொல்லட்டும் என அமைதியாக நின்றிருந்தாள். ஆனால் கண்களில் மட்டும் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

எதையோ சொல்ல திணறுவது போல நின்றான் கர்ணா. கண்களை அழுந்த துடைத்துக் கொண்ட தாமினி, “எவ்ளோ நாள் தேடினேன் உங்களை, ஏன் வரலை நீங்க?” என கேட்கும் போதே குரல் உடைந்து போனது.

“ப்ளீஸ் அழாதீங்க” என்ற கர்ணா வேறெங்கோ பார்த்தான்.

சில நொடிகள் மௌனமாக கழிய, “உங்க அக்கா கல்யாணி ஒரு சீட்டர்” என கோவத்தை உள்ளடக்கிய குரலில் சொன்னான் கர்ணா.

தாமினி குழப்பமாக அவனை பார்க்க, “என் ஃபிரெண்ட் அஷ்வினை நாலு வருஷம் அவ்ளோ டீப்பா லவ் பண்ணிட்டு இப்போ வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா” என்றான்.

“நான் உங்களை மீட் பண்ணிட்டு போன அன்னைக்கு நைட் அஷ்வினுக்கு பெரிய ஆக்சிடெண்ட். உயிர் பிழைக்கிறதே கஷ்டம்னு சொல்லிட்டாங்க. ஒரு மாசம் ஆச்சு அவன் உயிருக்கு ஆபத்தான ஸ்டேஜ் தாண்ட, ஆனா ஸ்பைனல் கார்ட் இன்ஜுரி. பெட் ரிட்டன் ஆகிட்டான். உருகி உருகி லவ் பண்ணின உங்க அக்கா அவன் ஹெல்த் பத்தி கொஞ்சம் கூட கவலை படாம… துரோகி…” பேச முடியாமல் பற்களை கடித்தான் கர்ணா.

“கல்யாணி அக்காவா? அவங்க நல்லவங்க…”

“பேசாத அந்த துரோகி பத்தி!” ஒருமையில் அழைத்து கர்ணா சீற பயத்தில் கண்களை அனிச்சையாக மூடி திறந்தாள் தாமினி.

“எவ்ளோ நாள் கல்யாணி மேரேஜ் விஷயத்தை அவன்கிட்டேர்ந்து மறைக்க முடியும்? சர்ஜரி பண்ணி ஓரளவு குணமாகி வந்தவனுக்கு அவளோட சுய ரூபம் தெரிஞ்சு…” கர்ணா பேச முடியாமல் வேதனையில் கண்களை மூடிக் கொண்டான்.

சில நொடிகளுக்கு பின் தாமினியை உற்று பார்த்தவன், “தகுதியில்லாதவ செஞ்ச துரோகம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு ட்ரை பண்ணிட்டான்” என சொல்ல அவன் கண்கள் கலங்கிப் போயிருந்தன.

தாமினிக்கு தலை கால் புரியவில்லை, அவன் பேசியதை தனக்குள் ஓட்டிப் பார்த்து விளங்கிக் கொண்டவள், “அவங்க இப்போ…” அடுத்து கேட்க முடியாமல் தயக்கமும் பயமுமாக பார்த்தாள்.

“இருக்கான், இடியட் எங்களை விட எவளோ பெருசு இல்லைனு கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுக்கிட்டு இருக்கான்” என கர்ணா சொல்ல நிம்மதியாக சுவாசித்தாள் தாமினி.

அடுத்து என்ன சொல்லப் போகிறானோ என தவிப்பாக தாமினி பார்த்திருக்க, “நான்தான் உங்க பின்னாடி வந்தேன். நான் ட்ரூவாதான் லவ் பண்ணினேன்…” என்றவன் நெற்றியை தேய்த்துக் கொண்டு அவளை சங்கடமாக பார்த்தான்.

ஏதோ சரியில்லை, விவகாரமாக எதுவோ வரப் போகிறது என கணித்து விட்ட தாமினியின் முகத்தில் கலக்கம் அப்பட்டமாக தெரிய கர்ணா அவளை பாராமல் திரும்பி நின்று கொண்டான்.

கர்ணா தன்னை நிலைப் படுத்திக் கொள்ள இரு நிமிடங்கள் எடுத்தன. தாமினி பக்கம் திரும்பி அவள் முகத்தை பார்த்தவன், “எஸ் நான் லவ் பண்றேன் உங்களை, இன்னும் மறக்க முடியலை, முடியுமான்னும் தெரியலை. ஆனா இதுக்கு மேல இது சரிவராது. எல்லாத்தையும் விட… என்னை விட அஷ்வின் எனக்கு ரொம்ப முக்கியம், அவனை என்னால ஹர்ட் பண்ண முடியாது. இதை சொல்லிட்டு போகத்தான் வந்தேன்” என தடுமாறாமல் கூறி முடித்தான்.

கன்னத்தின் ஈரத்தை துடைத்துக் கொண்ட தாமினி, “இனி என் கண் முன்னால வந்திடாதீங்க” என அழுத்தமான குரலில் கூறினாள்.

“தப்புதான் மினி…”

“வேணாம் வேற எந்த விளக்கமும் எனக்கு வேணாம். போங்க இங்கேர்ந்து” எனும் போது என்ன முயன்றும் மீண்டும் அழுதாள் தாமினி.

கர்ணாவால் அங்கிருந்து நகர முடியவில்லை, தாமினிக்கும் இந்த நிலையில் ஸ்கூட்டரை இயக்க பயமாக இருக்க அங்கேயே நின்றாள்.

“அஷ்வின் பாவம் மினி…”

“என் பேரை சொல்லாதீங்க” என கத்தினாள் தாமினி.

“சாரி”

“கெட் லாஸ்ட் யூ…” எதுவும் சொல்லி விடாமல் தன்னை நிலைப் படுத்திய தாமினி அவனை பார்க்காமல் திரும்பி நின்று கொண்டாள்.

கர்ணா வானத்தை வெறித்துப் பார்த்து விட்டு சற்று தள்ளிப் போய் சாலையோரமாக பள்ளத்தின் பக்கம் கால்களை தொங்க போட்ட வண்ணம் அமர்ந்து விட்டான்.

தாமினிக்கு அவன் அங்கேயே இருப்பது தெரிந்தது, ஆனால் திரும்பி பார்க்கவில்லை. அவன் முன் அழக் கூடாது என பலமுறை சொல்லிக் கொண்டு அழுகையை மொத்தமாக அடக்கிக் கொண்டாள்.

ஸ்கூட்டரின் டிக்கி திறந்து தண்ணீர் பாட்டில் எடுத்து கட கடவென தண்ணீரை பருகினாள். ஹெல்மெட் அணிந்து கொண்டவள் வழக்கத்திற்கு மாறாக அதி வேகமாக ஸ்கூட்டரை இயக்கிக் கொண்டு அந்த இடத்திலிருந்தே சென்று விட்டாள்.

அன்றைய தின நினைவில் தாமினிக்கு இப்போதும் அழுகை வருவது போலிருந்தது. சுற்றம் உணர்ந்து தன்னை சமாளித்துக் கொண்டாள்.

வீடு வரவும் கை நிறைய பைகளோடு வத்சலாவும் தீபிகாவும் காரிலிருந்து இறங்கினார்கள். சின்ன மகளை கவனித்த மதியழகன் அவள் நெற்றியில் கை வைத்து பார்த்து விட்டு, “என்னடா செய்யுது?” என அக்கறையாக கேட்டார்.

எதுவும் சொல்லாமல் அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டாள் தாமினி.

பைகளை உள்ளே வைத்து விட்டு வந்த வத்சலாவும் தீபிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே அவர்கள் அருகில் வந்தனர்.

தாமினி மெலிதாக தேம்ப, மதியழகன் மகளின் முதுகை வருடி விட்டுக் கொண்டே, “என்னடா அக்கா கல்யாணம் ஆகி நம்மளை விட்டு போகப் போறான்னு கவலையா?” எனக் கேட்டார்.

“ம்…” என்றாள் தாமினி.

“ச்சீ லூஸு நான் எங்கடி போகப் போறேன், அடிக்கடி மீட் பண்ணிக்கலாம்டி” என சொன்ன தீபிகா தங்கையின் தோளை ஆதரவாக பற்றிக் கொண்டாள்.

“போதும் உள்ள வாங்க, கல்யாண வேலை அவ்ளோ கிடக்கு, காலெல்லாம் வலிக்க வேற செய்யுது, முத வீட்டுக்குள்ள வாங்க” என சொல்லி விட்டு உள்ளே சென்றார் வத்சலா.

“பாருங்கப்பா நான் போகப் போறேன்னு அம்மாக்கு கொஞ்சமும் கவலை இல்லை, என் மினிக்குத்தான் என் மேல பாசம், நீங்க கவலை படுறீங்களா இல்லையா?” அப்பாவிடம் வம்பு பேசினாள் தீபிகா.

“பக்கம்தானே போகப் போற, தாமினியை கூட இப்படி பக்கமாதான் கொடுப்பேன். அப்பா நினைச்சதும் உங்களை வந்து பார்த்துப்பேன்” என இரு மகள்களுக்கும் பொதுவாக சொன்னார் மதியழகன்.

“போங்க எனக்கொன்னும் கல்யாணம் வேணாம். நான் உங்களோடவே இருந்துப்பேன்” என மூக்குறிந்து கொண்டே சொல்லி விட்டு வீட்டுக்குள் ஓடினாள் தாமினி.

தீபிகா கவலையாக பார்க்க சிரித்த மதி, “உனக்கு பார்க்க ஆரம்பிச்ச புதுசுல நீயும் இப்படித்தான் சொல்லிட்டு இருந்த, இப்போ மாப்ளயோட போன்ல பேச ஆரம்பிச்சா சுத்தி நடக்கிறதே தெரிய மாட்டேங்குது உனக்கு” என்றார்.

வெட்கப்பட்டுக் கொண்டே, “அப்பா…” என சிணுங்கிய தீபிகாவும் உள்ளே சென்று விட்டாள்.

‘மாப்ளயோட தம்பிக்கு தாமினிய பேசி முடிச்சா என்ன?’ என மதியழகனுக்கு திடீரென யோசனை வர ‘ஹ்ம்ம்… முதல்ல பெரியவ கல்யாணத்தை முடிப்போம்’ என நினைத்துக் கொண்டே அவரும் உள்ளே சென்றார்.

Advertisement