Advertisement

பார்வையில் மதுச்சாரல் -5(1)

அத்தியாயம் -5(1)

தண்டவாளத்தின் சிதைந்த பகுதி சீரமைக்கப் பட்டுக் கொண்டிருக்க மேற்பார்வை செய்து கொண்டிருந்தான் கர்ணா. கவனம் முழுதும் அங்கு வைக்க முடியாமல் தாமினி பாடு படுத்திக் கொண்டிருக்க நல்ல மூச்சுகள் விட்டு அங்குமிங்கும் நடந்து தன் மனதை ஒரு நிலைப் படுத்திக் கொண்டான்.

வேலை முடியவும் சரி பார்த்து விட்டு அலுவலக அறைக்கு சென்றான். மதிய சாப்பாடு எடுத்து வைத்தவனுக்கு சாப்பிட பிடிக்கவில்லை. எந்த காரணத்துக்காக தாமினி வேண்டாம் என்ற கடின முடிவை எடுத்து தவித்துக் கொண்டிருக்கிறானோ இப்போது அதெல்லாம் காரணமே இல்லை என அஷ்வின் கூறியிருக்க, அரவிந்துக்கும் தீபிகாவுக்கும் நிச்சயம் வரை வேறு வந்திருக்க தனக்கு சரியாக இதை கையாள தெரியவில்லையோ என தோன்றியது.

தாமினியின் கைபேசி எண் பெறுவது பெரிய விஷயமில்லை, ஆனால் நேரில்தான் பேசி புரிய வைக்க வேண்டும். கண்டிப்பாக தாமினி அத்தனை எளிதில் தன்னை மன்னிக்க மாட்டாள் என தோன்றியது. எல்லாம் இப்படி சிக்கலாகிக் கிடக்கிறதே என வருந்தினாலும் நடக்காது என நினைத்த ஒன்று இப்போது நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக பட சற்றே ஓர் நிம்மதியும் ஓரமாக வந்தது.

‘இன்னும் நேரமிருக்குடா கர்ணா, கஷ்டம்தான் ஆனா இந்த முறை விட்டிடக் கூடாது’ என தனக்கு தானே சமாதானமாக சொல்லிக் கொண்டு உண்ண ஆரம்பித்தான்.

வேணு அழைத்தார், மாலையில் நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் ஆடைகள் எடுக்க செல்ல போவதாகவும் அஷ்வின் வேலை காரணமாக வர இயலாது என சொல்லி விட்டதால் இவனை கண்டிப்பாக வரும் படி கூப்பிட்டார். சரியென சொல்லி வைத்தவனுக்கு ‘மினியும் வருவாதானே?’ என்ற நினைவில் முகம் மலர்ந்து போனது.

அனுமதி பெற்றுக் கொண்டு நான்கு மணிக்கெல்லாம் நேராக தெப்பக்குளம் பகுதியில் வேணு வரச் சொன்ன கடைக்கு சென்றான். தீபிகா அவள் குடும்பத்தினரோடு வந்திருக்க தூரமாக அவர்களை நோக்கி வரும் போதே கர்ணாவின் கண்கள் தாமினியைத்தான் தேடின.

கர்ணாவை ஏமாற்றாமல் தாமினியும் வந்திருந்தாள். அவளை பார்த்துக் கொண்டே நடந்தவன் எதிரில் வந்த கடை ஊழியரை இடித்து விட அந்த பையன் கீழே விழுந்து விட்டான். அந்த சத்தத்தில் அனைவரது கவனமும் அங்கு சென்றது.

கடைப் பையனை கை கொடுத்து தூக்கி விட்டு மன்னிப்பு கேட்டு அனுப்பி வைத்தவனை எதிர்கொண்ட வேணு, “உன் கவனம் எங்கடா இருக்கு?” என கடிந்து கொண்டே அழைத்து வந்தார்.

பட்டுப் புடவைகள் பகுதியில் இருந்தனர். பத்மினி பாட்டி, வத்சலா, தீபிகா, தாமினி நால்வரும் மும்முரமாக பார்த்துக் கொண்டிருக்க மதியழகன் அமைதியாக அமர்ந்திருந்தார். அவ்வப்போது ஏதாவது புடவை எடுத்து கண்களாலேயே அரவிந்திடம் அபிப்ராயம் கேட்டுக் கொண்டிருந்தாள் தீபிகா.

கர்ணா இருப்பை அறிந்தும் அவன் பக்கம் திரும்பாமல் இருந்தாள் தாமினி. அனைவர் முன்னிலையிலும் அத்தனை வெளிப்படையாக அவளை பார்க்க முடியாமல் அவ்வப்போது இயல்பாக பார்ப்பது போல அவளை பார்த்துக் கொண்டிருந்தான் கர்ணா. அவனது பார்வையை தாமினியால் உணர முடிந்ததோ என்னவோ பேசும் போது தடுமாறினாள்.

“நைட் சரியா தூங்கலையா நீ? என்னடி உளறிட்டு இருக்க?” என வத்சலா கேட்க, தாமினி ஆமாம் என்பது போல தலையாட்டினாள்.

“இந்த வயசுல தூக்கம் வராத அளவுக்கு அப்படி என்னடியம்மா பிரச்சனை உனக்கு?” எனக் கேட்டார் பாட்டி.

“ஒரு பிரச்சனையும் இல்லம்மா, போனை நோண்டிட்டே இருந்தா எங்கேர்ந்து தூக்கம் வரும்? அவசரத்துக்கு பேசிக்க சாதா போன் இருந்தா பத்தாது. கண்ண கெடுத்து தூக்கத்தையும் கெடுத்துக்கிட்டு” வத்சலா குறை படிக்க, தாமினி முறைக்க, மதியழகன் குரலை செருமி மனைவியை கண்டித்தார்.

“அதெல்லாம் அம்மா வேற ஆள் இல்லை சும்மா இருங்க” என கணவரிடம் வெளிப்படையாக சொன்ன வத்சலா, “அந்த பெரிய பார்டர் போட்ட புடவை நல்லா இருக்குல்லம்மா?” என பாட்டியிடம் கேட்டார்.

“இப்போ இது மாதிரியெல்லாம் பொண்ணுங்களுக்கு பிடிக்கிறது இல்ல, தீபிகாவுக்கு நாம பார்க்கிறது பிடிக்கல போல, அவளே பார்க்கட்டும், நாம நம்மளுக்கு பார்க்கலாம் வத்சலா” என்றார் பாட்டி.

“நல்லா சொல்லுங்க மா, இவளுக்கு ஒண்ணு பிடிச்சிட்டா புள்ளைங்களுக்கும் பிடிக்கணுமா என்ன?” என மதி கேட்க அவரது கைபேசி சத்தமிட மனைவியின் முறைப்பிலிருந்து தப்பிக்க அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

வேணுவும் கர்ணாவை தனியே அழைத்து சென்று அவனுக்கும் அஷ்வினுக்கும் உடைகள் எடுக்க சொன்னார்.

“இன்னொரு நாள் பார்க்கலாம் வேணுப்பா” என்றான் கர்ணா.

“டேய் டைம் இல்லடா, நீதான் சீக்கிரம் செலக்ட் பண்ணுவியே, எடுடா” என வேணு வலியுறுத்த சிரத்தையே இல்லாமல் கால் மணி நேரத்தில் இருவருக்கும் உடைகள் எடுத்து விட்டான்.

வேணு ஆச்சர்யமாக பார்க்க, “பிடிச்சது எடுத்திட்டேன், ரொம்ப லுக் கொடுக்காதீங்க தலைவரே” என்றான்.

“அப்படியே எனக்கும் ஏதாவது எடு” என வேணு வேலை கொடுக்க, ஐந்து நிமிடங்களில் அவருக்கும் தேர்வு செய்து கொடுத்து விட்டு, “வாங்க அங்க போலாம்” என்றான்.

“அங்க புடவை எடுக்கிறாங்கடா, நமக்கென்ன தெரியும் அதை பத்தி? நீதான் சீக்கிரம் செலக்ட் பண்றியே, அரவிந்த் அத்தை மாமா வீட்டுக்கும் வச்சு கொடுக்க ட்ரெஸ் எடுக்கணும், புடவையெல்லாம் அம்மாவை அழைச்சிட்டு வந்து இன்னொரு நாள் எடுத்துக்கிறேன், ஜெண்ட்ஸ் ட்ரெஸ் இப்போவே எடுத்திடலாம், வா ஹெல்ப் பண்ணு” என்றார்.

“இதுக்குத்தான் என்னை வர சொன்னீங்களா? அந்துபி அவனை தனியா விட்டுட்டோம்னு கோச்சுப்பான். இது இன்னொரு நாள் பார்த்துக்கலாம், வாங்க” என சொல்லி அவரை அடுத்து பேச விடாமல் கையோடு இழுத்து சென்று விட்டான்.

அங்கு சென்றும் என்ன புண்ணியம்? தாமினி யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவளின் கோவத்தை கர்ணாவால் உணர முடிந்தது.

தீபிகா ஒரு புடவை எடுத்து தோளில் போட்டு தங்கையிடம் அபிப்ராயம் கேட்க அவள் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். நேரம் சென்றது, ஒரு வழியாக தீபிகா அவளுக்கான புடவைகள் தேர்ந்தெடுத்து முடிக்க பத்மினி பாட்டி, வத்சலா இருவரும் அவர்களுக்கான புடவை எடுத்துக் கொண்டார்கள்.

“தாமினிக்கு புடவை எடுங்க” என பத்மினி சொல்ல, வேண்டாம் என மறுத்தாள் தாமினி.

“அட தீபிக்கு ஒரே தங்கை நீ, வேணாம் சொல்லாத, எடுத்துக்க மா” என்ற பாட்டி, “எங்க அந்த நாலாவதா அரக்கு கலர்ல இருக்கிறத எடுங்க” என கடைக்காரரிடம் சொல்ல ஊழியரும் எடுத்துப் போட்டார்.

“இல்ல பாட்டி, அவளுக்கு லெஹங்கா வேணுமாம், முன்னாடியே சொல்லிட்டா” என்றாள் தீபிகா.

“அது நீங்க எடுத்து கொடுங்க, இது பையன் வீட்லேர்ந்து செய்றது” என பாட்டி விடாப்பிடியாக சொல்ல தாமினிக்கும் புடவை பார்க்க ஆரம்பித்தனர்.

தாமினி அதிகமாக அலசி ஆராயவில்லை, மஞ்சள் நிறத்தில் ஒரு பட்டை தேர்வு செய்து கொண்டாள். இப்போது அனைவரும் அரவிந்த்துக்கு எடுக்க செல்ல தாமினி பின்னால் நடந்து வர அவளுக்கும் மிக அருகில் எதேச்சையாக நடப்பது போல நடந்தான் கர்ணா.

“ஏன் டல்லா இருக்க மினி?” என கர்ணா கேட்க முகம் சுழித்து பார்த்தவள், “நான் நல்லாத்தான் இருக்கேன்” என சாதாரணமாக சொன்னாள்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” தயங்கி தயங்கித்தான் சொன்னான் கர்ணா.

“பேசுங்க”

“இங்க இல்ல, ம்ம்… தனியா…”

இகழ்ச்சியாக சிரித்த தாமினி, “தனியா பேசுற அளவுக்கு நமக்குள்ள எதுவும் இல்ல” என சொல்லி நடையில் வேகம் கூட்டி தன் அம்மாவோடு இணைந்து கொண்டு அவளுக்கு லெஹங்கா எடுக்க செல்ல மற்றவர்கள் ஆடவர்கள் பிரிவுக்கு சென்றனர்.

யார் கவனத்தையும் கவராமல் அவளருகில் சென்ற கர்ணா, “ரெட் ஷேட்ல எடு மினி” என ரகசியமாக சொன்னான்.

பல்லைக் கடித்து மினி முறைக்க கண்களால் சிரித்துக்கொண்டே அகன்று விட்டான்.

வத்சலாவும் சிகப்பு வண்ண ஆடையை எடுத்து வைத்துக் கொண்டு, “நல்லா இருக்குடி, எடுத்துக்கடி” என சொல்ல, “ப்ச் எனக்கு பிடிக்கல, அதை வைம்மா” என எரிச்சலாக கூறினாள் தாமினி.

வத்சலா அதை வைத்து விட்டு முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள வேறு பார்த்த தாமினிக்கும் எதுவும் பிடிக்கவில்லை.

“ம்மா இன்னொரு நாள் வரலாமா?” எனக் கேட்டாள் தாமினி.

“நான் செலக்ட் பண்ணினது எவ்ளோ நல்லா இருக்கு? ஆசையா உனக்கு போட்டு பார்க்க நினைச்சேன், ஏய் அதையே எடுக்கலாம்டி” என வத்சலா கெஞ்சலாக கேட்க தாமினியின் உள்ளம் உருகி விட்டது.

‘என் அம்மாக்காக எடுக்கிறேன், அவனுக்காக இல்ல’ தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு அதையே எடுத்துக் கொண்டாள்.

அந்த கடையில் அரவிந்துக்கு ஆடை அமையாமல் வேறு கடை சென்றார்கள். தாமினி வேண்டுமென்றே கர்ணா பேச சந்தர்ப்பமே கொடுக்காமல் யாருடானாவது சேர்ந்தே நின்று கொண்டாள். அரவிந்துக்கும் உடைகள் எடுத்து முடித்து இரவு உணவுக்காக ஒரு ஓட்டல் சென்றார்கள்.

இரு பக்கமும் நீளமான சோஃபா, நடுவில் உணவு மேசை. வேண்டுமென்றே தான் அமர்வதை தாமதப் படுத்தி தாமினி அமர்ந்த பின் அவளுக்கு எதிரில் அமர்ந்து கொண்டான் கர்ணா.

தாமினி எவ்வளவுதான் அவனை பார்ப்பதை தவிர்க்க நினைத்தாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவனை எதேச்சையாக பார்க்க நேரிட கண்களால் கெஞ்சினான் கர்ணா.

“பெரிய இம்சை” உதட்டசைவில் தாமினி சொல்ல, “சாரி” என வாயசைத்தான் கர்ணா.

தன் மூக்கு விடைக்க அவனை தாமினி பார்த்திருக்க கர்ணா அசராமல் மன்னிப்பை வேண்டிக் கொண்டே இருந்தான்.

மற்றவர்கள் அரவிந்தையும் தீபிகாவையுமே கவனித்துக் கொண்டிருக்க இவர்களுக்குள் நடக்கும் சத்தமில்லா போர் யார் கவனத்தையும் கவராமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

சாப்பிட்டு முடித்து இரு வீட்டாரும் புறப்பட, பின்தங்கிய கர்ணா மினியின் கையில் எதையோ திணித்து விட்டு நகர்ந்து கொள்ள முறைத்தவள் என்னவென பார்த்தாள்.

டிஸ்யூ பேப்பரில், ‘ப்ளீஸ் உன்கிட்ட பேசணும் ஒரே ஒரு சான்ஸ் தா’ என எழுதி மன்னிப்பு கேட்கும் பதாகையை ஒரு ஸ்மைலி பிடித்திருப்பது போல வரைந்திருந்தான்.

“மினி என்னடி வா” என வத்சலா அழைக்க கையிலிருந்த டிஸ்யூவை கசக்கி குப்பை தொட்டியில் போட்டு விட்டு காரில் ஏறிக் கொண்டாள்.

பார்த்திருந்த கர்ணாவின் முகம் வாடிப் போனது. ‘மனம் தளராதே’ என தனக்கு தானே கூறிக் கொண்டான்.

Advertisement