Advertisement

பார்வையில் மதுச்சாரல் -4(2)

அத்தியாயம் -4(2)

சற்று வியந்த பார்வை பார்த்தவள், “பார்க்கிறேன் எவ்ளோ பெரிய ஜென்டில் மேன் நீங்கன்னு…” என்றாள்.

“எனக்கு ஜென்டில்மேனா எல்லாம் இருக்க வேணாம், உங்களுக்கு பிடிச்சவனா இருந்தா போதும்” என கர்ணா சொல்ல அவளுக்கு அவனிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.

வண்டியை தள்ளிக் கொண்டே நடந்தார்கள் இருவரும்.

“அச்சோ இப்படி எப்பவும் ஸ்கூட்டிய தள்ளிட்டே என்னால நடக்க முடியாது” என்றாள் தாமினி.

“ஒரு ஐடியா இருக்கு, நீங்க ஒத்துப்பீங்களானு தெரியலை” என்றான்.

“என்ன?”

“இங்க ஒரு வண்டியை போட்டுட்டு ஒரு வண்டில நாம ரெண்டு பேரும் அந்த எண்ட் போய்டலாம், அங்க வண்டியை நிறுத்திட்டு நடந்து இங்க வரலாம். அப்புறம் இங்க வந்து இங்க இருக்க வண்டியில அங்க போய்டலாம்”

“நல்ல ஐடியா, ஆனா பாருங்க… எந்த சம்பந்தமும் இல்லாம உங்க பைக்ல நான் எப்படி வர்றது?”

“அது ஒண்ணும் பிரச்சனை இல்லிங்க, நான் உங்க ஸ்கூட்டில உங்க பின்னாடி உட்கார்ந்து வர்றேன்” என கர்ணா சொல்ல, “அப்பவும் நமக்கு எந்த சம்பந்தமும் இல்லதானே” எனக் கேட்டாள் தாமினி.

“உங்களுக்குதாங்க அப்படி, எனக்கு அப்படி இல்லையே. நான் வர ரெடியாதானே இருக்கேன்” என கர்ணா சொல்லவும் வாய் விட்டு சிரித்தாள் தாமினி.

“அவ்ளோ பெரிய ஜோக்கா என்ன இது?” அவளின் சிரிப்பை ரசித்துக் கொண்டே கேட்டான்.

“பின்ன என்னங்க? என்னோட பயப்படாம டபுல்ஸ் வர்றேன்னு சொல்றீங்க? நான் சிங்கிளா போறதே பெருசு”

“அதனால என்னங்க? வாழ்க்கை முழுக்க உங்க கூட வர ஆசையிருக்கும் போது ஸ்கூட்டர்ல உங்க பின்னாடி உட்கார்ந்து வர பயப்படலாமா? நான்தான் பின்னாடி இருப்பேனே… பயமில்லாம நீங்க ஓட்டுங்க” என்றான்.

“பார்த்துங்க அப்புறம் உங்க உயிருக்கு நான் உத்திரவாதம் இல்லை”

“புதுசா வண்டி ஓட்டறப்பவும் சரி புதுசா லைஃப் ஸ்டார்ட் பண்றப்போவும் சரி, கொஞ்சம் பயம் இருக்கும், ஷேக் ஆகும், போக போக ஸ்டெடி ஆகிடும்ங்க”

“அப்போ உங்க பைக்க நிறுத்திட்டு ஏறுங்க என் ஸ்கூட்டில, இதுக்கு மேல முடியாது என்னால” நெற்றியில் வழிந்த வியர்வையை ஒத்தி எடுத்துக் கொண்டே கூறினாள் தாமினி.

உடனே தலையசைத்த கர்ணா பைக்கை அங்கேயே ஓரமாக நிறுத்தி பூட்டி விட்டு அவள் பின்னால் ஏறிக் கொண்டான். நாற்பதில்தான் வண்டியை செலுத்தினாள். அவள் போனி டெயிலில் அடங்கியிருந்த கூந்தல் முடிகள் பறந்து வந்து கர்ணாவின் முகத்தில் மோதி விளையாடியது.

ஒற்றைக் கையால் தன் முகத்திலிருந்து அவள் முடிகளை ஒதுக்கி விட்டுக் கொண்டே மந்தகாச புன்னகையோடு அமர்ந்திருந்தான் கர்ணா. சில நிமிடங்களில் வண்டியை நிறுத்தினாள் தாமினி. இருவரும் இறங்கிக் கொண்டனர். தாமினி தன் ஸ்கூட்டரை பூட்டி விட்டு அவனோடு நடந்தாள்.

நல்ல வெயில், சாலையே வெறிச்சோடிக் கிடந்தது.

“டான்ஸ்னா ரொம்ப பிடிக்குமா?” எனக் கேட்டான் கர்ணா.

“ம்ம்… ரொம்ப, ஆனா அப்பா ஒத்துக்கவே இல்லை, ரொம்ப அடம் பண்ணி அம்மாவை சரி கட்டினேன், அப்புறம் அம்மாதான் அப்பாகிட்ட பேசி சம்மதிக்க வச்சாங்க. இப்போதான் ஒரு வருஷமா கத்துக்க வர்றேன்” என்றவள் சிறு வயதிலிருந்து அவளுக்கு எத்தனை விருப்பம் நடனத்தின் மீது என விளக்கினாள்.

“பாருங்க உங்களுக்கு இவ்ளோ பிடிச்ச விஷயம் ஆனா எனக்கு அது பத்தி ஏ பி சி டி கூட தெரியாது” என உண்மையான கவலையோடு கூறினான்.

“அப்போ நீங்களும் வாங்களேன் டான்ஸ் கத்துக்க” என தாமினி சொல்ல கர்ணா திகைக்க சிரித்தாள் தாமினி.

“விளையாட்டுக்கு சொல்றீங்க… ஹ்ம்ம்… டான்ஸ் எல்லாம் எனக்கு வராது, ஆனா நீங்க ஆடினா எவ்ளோ நேரம் வேணா பார்ப்பேன், உங்க வீட்ல நீங்க அடம் பண்ற மாதிரி நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு எதுக்காகவும் என்கிட்ட அடம் பண்ண வேணாம்”

“ஓஹ் என்ன கேட்டாலும் செஞ்சு தருவீங்களோ?”

“என்னால முடியுற எதையும்”

“கல்யாணம் முன்னாடி இப்படித்தாங்க எல்லாரும் சொல்வாங்க, அப்புறம்தான் உண்மையா எப்படி அவங்கன்னு தெரிய வரும்”

“சேச்ச, நான் எப்பவும் மாற மாட்டேங்க, நீங்க பார்க்கத்தானே போறீங்க”

“அதெப்படிங்க நான் பார்க்க முடியும், உங்களை கல்யாணம் செய்துக்க போற பொண்ணுக்குதான் அதெல்லாம் தெரியும்” கிண்டலாக சொன்னாள் தாமினி.

“கரெக்ட் என்னை கல்யாணம் செய்ற பொண்ணு பார்க்கத்தானே போறாங்க” தாமினியை பார்த்துக் கொண்டே கர்ணா கூற அவனை இமைக்காமல் சில நொடிகள் பார்த்தாள் தாமினி.

“என்னங்க அப்படி பார்க்குறீங்க?” அவள் முன் கையை ஆட்டிக் கொண்டே கேட்டான் கர்ணா.

“ம்… ப்ச், ஒண்ணுமில்ல, நாம உங்க பைக் கிட்ட வந்திட்டோம்” என்றாள்.

“ம்ம்ம்… நாளைக்கு வெயிட் பண்ணுவேன்”

“ம்ம்ம்… கரெக்ட் டைமுக்கு நீங்க இங்க இல்லைனா நான் வெயிட் பண்ண மாட்டேன்”

“கரெக்ட்டா வந்திடுவேன், அப்படி நான் வரலைனா இங்க தனியா நிற்காதீங்க, ஸேஃப் இல்லை”

“திரும்ப அங்க எப்படி போறது? என்னால உங்க பைக் ஓட்ட முடியாது”

“ஏன் என் பைக்ல ஏற மாட்டீங்களா?”

தாமினி தயக்கமாக பார்க்க, “இட்ஸ் ஓகே, திரும்பி நடந்தே போய்டலாமா?” எனக் கேட்டான்.

“வேணாம், நான் வர்றேன்” என தாமினி அவனுடன் வர சம்மதிக்க ஆசையாக அவன் வண்டியில் அமர்ந்தான் கர்ணா.

எத்தனை மெதுவாக ஓட்டினாலும் ஒரு மைல் தூரத்தை கடந்தே விட்டான். இருவர் கண்களிலும் ஒரு ஜொலிப்பு தெரிய முகங்களில் ஒரு நிறைவான புன்னகை. நாளை சந்திப்போம் என சொல்லிக் கொண்டு இருவரும் எதிரெதிர் திசைகளில் பயணித்தார்கள்.

அஷ்வின் கைபேசியில் யாருடனோ பேசி விட்டு வந்தவன், “என்னடா கர்ணா நின்னுகிட்டே கனவு கண்டுக்கிட்டு இருக்க?” எனக் கேட்டான்.

“ப்ச், அந்துபி பேசிட்டு வந்திட்டானா இல்லையா?”

“ஆச்சுன்னு நினைக்கிறேன்” என அஷ்வின் சொல்லிக் கொண்டிருக்கையில் தாமினி வெளியில் வந்தவள், “உள்ள கூப்பிடுறாங்க” என சொல்லி சென்றாள்.

இருவரும் உள்ளே செல்ல அரவிந்த் அவன் முன்னர் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்திருந்தான்.

“ரெண்டு பேருக்கும் பிடிச்சிட்டு சொல்லிட்டாங்க, நிச்சயத்துக்கு நாள் குறிச்சாச்சு” பத்மினி பாட்டி மகிழ்வாக தெரிவித்தார்.

“என்னைக்கு?” என ஆவலாக விசாரித்தான் அஷ்வின்.

தேதி சொன்ன வேணு, “சண்டேதான்டா வருது, உங்களுக்கெல்லாம் லீவ் எடுக்க எதுவும் பிரச்சனை இல்லை” என்றார்.

வேணு வீட்டினர் சொல்லிக் கொண்டு கிளம்ப தாமினியுடன் தீபிகா வந்தாள். கல்யாணி மகனை கவனிப்பதாக சொல்லிக் கொண்டு அறையிலேயே இருந்து கொண்டாள்.

அரவிந்த் தீபிகாவிடம் தலையசைத்து விடை பெற அவளும் தலையசைத்து சிரித்தாள். கர்ணா துணிந்து தாமினியை பார்க்க அவள் முகத்தில் நொடி நேரம் கோவம் வந்து சென்றது, கர்ணா கெஞ்சுதலாக பார்க்க அவளோ முகம் திருப்பிக் கொண்டாள்.

பத்மினி பாட்டியும் வேணுவும் தாமினியை பார்த்து சொல்லிக் கொள்ள அவள் சிரித்து விடை கொடுத்தாள்.

வாயிலருகே தீபிகா பெற்றோருடன் மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்க அஷ்வினும் கர்ணாவும் மட்டும் முன்னே நடந்தார்கள்.

கர்ணாவுக்கு என்னவோ போலிருந்ததால் அஷ்வினை காரோட்ட கேட்டுக் கொண்டான். அவனை ஒரு மாதிரியாக பார்த்த அஷ்வின், “என்ன கர்ணா நீ ஆளே சரியில்லையே, என்ன விஷயம்?” என விசாரித்தான்.

“அங்க சாப்பிட்ட ஸ்வீட் ஓவர் நெய், ஏதோ வயித்த பிரட்டுற மாதிரி இருக்கு” என்றான்.

“எல்லாரும் அதைத்தானேடா சாப்பிட்டோம்? ஹ்ம்ம்… என்ன அவளை பத்தி நினைக்குறியா? என்னை நினைச்சு கவலை படுறியா?” அஷ்வின் கேட்டுக் கொண்டிருக்க, மற்ற மூவரும் வந்து விட்டனர்.

“இப்போ உன்னால டிரைவ் பண்ண முடியுமா இல்லையா?” அதட்டலாக கேட்டான் கர்ணா.

“என்னடா ஆச்சு உனக்கு? என்கிட்டேர்ந்து எதையும் மறைக்குறியா நீ?” சின்ன குரலில் கேட்டான் அஷ்வின்.

“யாராவது வண்டியை எடுங்கடா, வீட்டுக்கு போய் இப்படி குசு குசுன்னு பேசிட்டு நில்லுங்க” அதட்டினார் பாட்டி.

அஷ்வின் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொள்ள மற்றவர்களும் ஏற கார் புறப்பட்டது. அரவிந்த் மனமெல்லாம் தீபிகா நிறைந்திருக்க அவன் முகம் அப்படியே காட்டிக் கொடுத்தது. பாட்டியும் வேணுவும் நிறைவாக பார்த்துக் கொண்டார்கள்.

அஷ்வினை கல்யாணி அத்தியாயம் கொஞ்சம் கலவர படுத்துகிறதுதான். காதல் தோல்வி என்பதை விட தான் ஏமாந்து போனோமே என்பதுதான் அவனுக்கு மிகப்பெரிய வலி. வெகு நாட்களுக்கு பின் இப்போதும் வலித்தது. ஆனாலும் அவள் நன்றாக இருக்கும் போது நானும் நன்றாக இருப்பேன் வாழ்ந்து காட்டுவேன் என்ற எண்ணம் திண்ணமாக எழ அவன் முகத்திலும் அந்த உறுதி தெரிந்தது.

பாவம் கர்ணா, இப்போது மினியை தன்னோடு இணைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக பட்டாலும் அவளை எப்படி சமாதானம் செய்வது, முதலில் தன்னிடம் பேசுவாளா என குழம்பிக் கொண்டிருந்தான்.

Advertisement