Advertisement

பார்வையில் மதுச்சாரல் -4(1)

அத்தியாயம் -4(1)

பயத்தில் வண்டியை பள்ளத்தில் விட்டாலும் கடைசி நொடியில் விழுந்து விடாமல் பிரேக் பிடித்து நிறுத்தியிருந்தாள் தாமினி. வண்டியை விட்டு இறங்கி ஹெல்மெட் கழட்டி விட்டு பெரிய பெரிய மூச்சுகள் விட்ட தாமினி தன்னை நிலைப் படுத்திக் கொள்ள, மேடான சாலையில் அவளை தொடர்ந்து வந்த வண்டி வந்து நின்றது.

மொத்தமாக பயந்து போனவள் என்ன செய்வது என சுற்றும் முற்றும் பார்க்க தன் ஹெல்மெட் கழட்டி, “நீங்க ஓகேதானே அடி ஒண்ணுமில்லையே, பயந்திட்டேன் நான்” என்றான் கர்ணா.

வாய் குவித்து மூச்சு விட்டு கண்களை மூடி பயத்தை விரட்டி விட்டு கர்ணாவை பார்த்து, “நீங்கதானா? நான் யாரோன்னு நினைச்சு பயந்திட்டேன்” என்றாள்.

ஏன் பயந்தாள் என குழப்பமடைந்து அவன் விழிக்க, “எவனோ ரௌடி ஃபாலோவ் பண்ணிட்டு வர்றான்னு நினைச்சு டென்ஷன்லதான் வண்டியை பள்ளத்தில விட்டுட்டேன்” என விளக்கம் கொடுத்தாள்.

தன் வண்டியை விட்டு இறங்கி அவளிடம் வந்தவன், “சாரி, உங்களை பயமுறுத்த நினைக்கல நான், அது… நீங்க ஓகேதானே” என மீண்டும் அவள் நலன் விசாரித்தான்.

“நல்ல வேளை அடி படல, இப்போ வண்டியை எப்படி மேல ஏத்தறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றாள்.

சாலையிலிருந்து அறுபது டிகிரி சரிவாக இருந்தது பள்ளம்.

“நான் எடுக்கிறேன் வண்டியை, நீங்க ஃபர்ஸ்ட் மேல ஏறுங்க” என்றான்.

அந்த சரிவில் எளிதாக இறங்கி விடலாம், ஏறுவது சற்று சிரமம்தான். அவள் தயக்கமாக சரிவை பார்க்க “வாங்க என் கை பிடிச்சிட்டு ஏறுங்க” என சொல்லி அவளுக்கும் முன் சென்று இரண்டடிகள் ஏறி அவளை நோக்கி தன் வலக்கையை நீட்டினான்.

அவளுக்கும் வேறு வழியில்லாததால் ஹெல்மெட்டை ஸ்கூட்டரின் டிக்கியில் பத்திரப் படுத்தி விட்டு அவன் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு ஏறினாள். கர்ணாவுக்கு சிரமம்தான் என்றாலும் நன்றாக பேலன்ஸ் செய்து கொண்டான்.

அவளை சாலைக்கு அழைத்து வந்தவன் மீண்டும் கீழிறங்கி ஸ்கூட்டியை அந்த பள்ளத்திலேயே சற்று தூரம் ஓட்டி சரியான வேகத்தில் மேட்டில் ஏற்றி சாலைக்கு கொண்டு வந்து விட்டான்.

அவனிடம் வந்த தாமினி, “தேங்க்ஸ், நான் ஃபர்ஸ்ட் டைம் இப்படி தனியா வர்றேன், ரொம்ப பயந்து போய்ட்டேன், வீட்டுக்கு தெரிஞ்சது அவ்ளோதான். ரொம்ப தேங்க்ஸ்ங்க…” மலர்ந்த முகமாக கூறினாள்.

பரவாயில்லை என சொன்னவன், அவன் பெயர் படிப்பு கல்லூரி என இரண்டு வரிகள் சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டான். பதிலுக்கு அவளும் தன்னை பற்றி சொல்ல வர முந்திக் கொண்ட கர்ணா, “எனக்கு தெரியும்” என சொல்லி அவளின் விவரங்களை கட கடவென சொல்ல முதலில் திகைத்த தாமினி இப்போது முறைக்க கர்ணா பாவமாக பார்த்தான்.

“அப்போ நீங்க சாதாரணமா இந்த வழில வரல, என்னைத்தான் ஃபாலோவ் பண்ணி வந்திருக்கீங்க அப்படித்தானே?” கோவமாக தாமினி கேட்க பொய் சொல்ல வராமல் ஆமாம் என தலையாட்டினான் கர்ணா.

தாமினிக்கு கோவமான கோவம், ‘எவ்வளவு பயந்து விட்டேன், நல்ல வேளையாக எதுவும் ஆகவில்லை, ஏதாவது அடி பட்டிருந்தால்…’ என நினைத்தவள் அவனிடமிருந்து தன் வண்டியை வாங்கி வேகமாக ஏறி அமர்ந்து அவனை திரும்பியும் பாராமல் சென்று விட்டாள்.

தன் பார்வையிலிருந்து தாமினி மறையும் வரை அப்படியே நின்ற கர்ணா தளர்ந்து போனவனாக அந்த சாலை ஓரமாக அப்படியே அமர்ந்து விட்டான். தன்னை பற்றி தவறாக நினைத்து விட்டாளே என அவனுக்கு மிகுந்த வருத்தமாகிப் போனது.

ஏன் இவ்ளோ கோவம், என்னை பொறுக்கினு நினைச்சிட்டாளோ? இனி அடுத்து எப்படி அவளை அணுகுவது? நாளைக்கு அவள் அப்பாவிடம் சொல்லி அழைத்து வருவாளோ? என சிந்தித்துக் கொண்டே அப்படியே அமர்ந்திருந்தான்.

நேரம் அதுபாட்டுக்கும் சென்று கொண்டேயிருக்க பாட்டியிடமிருந்து அழைப்பு வர எடுத்து பேசினான்.

“மதிய சாப்பாட்டுக்கு வந்திடுவேன்னு சொல்லிட்டு போன, வேணு வீட்ல இருப்பேன்னு நினைச்சிட்டு இருந்தா அங்கேயும் இல்லையாமே நீ, எங்கடா இருக்க நீ?” பாட்டி சத்தம் போட்டார்.

“ப்ச் பக்கத்துலதான் இருக்கேன், வர்றேன் கத்தாத” என சொல்லி கைபேசியை சட்டைப்பையில் வைத்து எழுந்தவன் வண்டியை வீடு நோக்கி விட்டான்.

அந்த நாள் கர்ணாவுக்கு சரியாகவே செல்லவில்லை, எதையோ பறி கொடுத்தது போலிருந்தது. தான் தவறானவன் இல்லை என்பதை அவளிடம் எப்படியாவது விளக்கி விட வேண்டும் என்பதே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

அடுத்த நாளும் தனியேதான் நடன வகுப்பு வந்தாள் தாமினி. இந்த முறை அந்த ஆள் நடமாட்டம் இல்லாத சாலையின் ஆரம்பத்தில் அவள் வகுப்பு முடிந்து இங்கு வரும் நேரம் கணக்கிட்டு காத்திருந்தான் கர்ணா.

தன் வண்டியில் சாய்ந்து நின்றவன் தாமினி வருவதை கவனித்து விட்டு நேராக நிமிர்ந்து உனக்காகத்தான் காத்திருக்கிறேன் என தெரியும் விதமாக அவளையே பார்த்த வண்ணம் நின்றான்.

அவனை கவனிக்கத்தான் செய்தாள் தாமினி, ஆனாலும் வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டாள். கர்ணாவுக்கு ‘சொத்’ என ஆகிவிட்டது. தன் பார்வையிலிருந்து அவள் மறையும் வரை அங்கேயே இருந்தவன் பின் கிளம்பி விட்டான்.

இடையிலிருந்த ஐந்து நாட்களும் படிப்பு நண்பர்கள் என தன்னை பிஸியாக வைத்திருந்தாலும் நீரில் அமிழ்த்திய எடையில்லா தக்கை போல தாமினியும் அவன் நினைவுகளில் வந்து வந்து சென்றாள்.

தாமினிக்கு இன்னும் அவன் மீதான கோவம் குறையவில்லை. ‘யார் என்ன ஏதும் தெரியாமல் அதென்ன பின்னால் வருவது?’ மனதில் அவனை தாளித்துக் கொண்டே இருந்தாள்.

அடுத்த வார சனிக்கிழமையும் சாலை முகப்பில் வந்து நின்றவனை கண்டு எரிச்சல் மூண்டாலும் கண்டு கொள்ளாமல் சென்றாள். சளைக்காமல் மறுநாளும் வந்து நின்றான்.

வாரம் தவறாமல் வந்து நிற்பவனை கண்டு முதலில் கோவமும் எரிச்சலும் எழ பின் ‘அவன் பாட்டுக்கும் நிற்கிறான் எவ்ளோ நாள் நிற்பான்னு பார்க்கிறேன்’ என நினைத்து இலகுவாக அவனை கடந்தாள் தாமினி.

ஆகிற்று… இரண்டரை மாதங்களாக எல்லா சனி ஞாயிறுகளிலும் இவள் வரும் நேரம் காத்துக் கிடக்கிறான் கர்ணா. அவளை பார்த்து சிரிப்பது கூட இல்லை, ஆனால் இமைக்காமல் அவளையே பார்த்து நிற்பான். கடின முகத்தோடு கடந்து செல்லும் தாமினியிடம் இப்போதெல்லாம் அவனை கடந்த பின் மெல்லிய முறுவல் பூக்கிறது.

தான் யாராலோ விரும்ப படுகிறோம் என்பது தாமினிக்கு ஒரு வகையான ஆனந்தத்தை கொடுத்தது, சிறிது கர்வம் என்று கூட சொல்லலாம்.

இதோ இந்த சனிக்கிழமையும் அவன் நிற்பான் என தெரிந்து ஏதோ ஓர் ஆர்வத்தோடே வந்தாள் தாமினி. வழக்கமாக கர்ணா நிற்குமிடத்தில் அவனை காணவில்லை. தன்னால் அவள் ஸ்கூட்டி வேகம் குறைந்து நின்று விட்டது. வண்டியை விட்டு இறங்காமல் சுற்றிலும் அவனை தேடினாள்.

யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் ஹெல்மெட்டை கழட்டி வைத்து விட்டு அடுத்து என்ன செய்வதென தெரியாமல் நகத்தைக் கடித்துக் கொண்டு இரண்டு நிமிடங்கள் அங்கேயே நின்றாள்.

‘அவ்ளோதான் இனிமே வர மாட்டான், நல்லதுதானே… நீ ஏன் தேடுற, விடு’ மனதில் சமாதானம் சொல்லிக் கொண்டே ஹெல்மெட்டை போட்டுக் கொண்டாள். ஆனாலும் அங்கிருந்து செல்ல மனம் வராமல் தான் என்ன நினைக்கிறோம் என ஒன்றும் புரியாமல் நின்றாள்.

பின்னால் பைக் வரும் ஓசை கேட்க அவன்தான் என அத்தனை உறுதியாக உள்ளம் கூற ஆர்வமாக திரும்பினாள்.

அவன் வண்டியேதான். நிம்மதியாக மூச்சு விட்டவள் ஸ்கூட்டரை கிளப்பிக் கொண்டு செல்ல எத்தனிக்க அவன் வண்டி வேகமாக வந்து வழி மறிப்பது போல நின்றது.

ஹெல்மெட்டின் கண்ணாடியை தூக்கி விட்டு தாமினி முறைக்க, அவனும் ஹெல்மெட் கழற்றி, “இன்னைக்கு உங்களை பார்க்க அஞ்சு நாள் வெயிட் பண்றேன், இப்படி அசால்ட்டா போனா என்ன அர்த்தம்?” எனக் கேட்டு புன்னகை செய்தான்.

அவளும் ஹெல்மெட் கழற்றி, “அவ்ளோ வெயிட் பண்றவரு இப்படி லேட்டா வரக்கூடாது” என்றாள்.

“வீட்ல வேலை வச்சிட்டாங்க, லேட் ஆகிடுச்சு, எப்படியும் உங்களை பார்த்திடணும்னு வண்டியை விரட்டிட்டு வந்தேன்” என கர்ணா சொல்ல தாமினியின் உள் கூட்டில் ஏதோ குளிர்ச்சியாக பரவியது.

தன்னைக் காண்பித்துக் கொள்ளாமல் “ஓஹ் இப்போ நான் என்ன பண்ணனும்? வாரம் தவறாமல் இங்க வெயிட் பன்றார், ரிஸ்க் எடுத்து பைக்ல பறந்து வந்திருக்கார்னு உடனே…” பேசிக் கொண்டிருக்க தடை செய்தான் கர்ணா.

பைக்கிலிருந்து சட்டென இறங்கி நின்று, “வேணாம் மினி, உடனே லவ் பண்ண வேணாம்” என கர்ணா சொன்னதில் திகைத்து விழித்தாள் தாமினி.

“என்னை பத்தி தெரிஞ்சுக்கங்க, நான் எப்படி உங்களை பார்த்துப்பேன்னு உங்களுக்கு புரிய வைக்கிறேன். உங்களுக்கும் என்னை பிடிக்கும்னு எனக்கு தெரிஞ்சதும் நான் உங்ககிட்ட கேட்பேன், அப்போ ஓகே சொல்லுங்க. இப்போ வேணாம்” நடு சாலையில் நின்று கொண்டு தன் கண்களை ஆழ்ந்து பார்த்து சிறு சிரிப்பை இதழ்களில் தேக்கி சொன்ன கர்ணாவை தாமினியால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

ஏதோ கார் வர, “ஒரு டூ மினிட்ஸ், ப்ளீஸ் ஓரமா நிறுத்துங்க வண்டியை” என கெஞ்சலாக சொல்லி தன் வண்டியை ஓரம் கட்டினான் கர்ணா. தாமினியால் மறுக்க முடியவில்லை, அவளும் வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கிக் கொண்டாள்.

கார் கடக்கும் வரை அமைதியாக இருந்த கர்ணா, “உங்களை பார்த்ததும் பிடிச்சு போச்சு, என்னவோ என் மனசுல நீங்கதான்னு ஸ்ட்ராங்கா தோணுது. அப்படியே உங்களுக்கும் இருக்கணும்னு அவசியமில்லை, ஆனா என்னை பத்தி எதுவும் தெரியாம வேணாம் சொல்லாதீங்க. நாம கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்” என திக்காமல் திணறாமல் அவளிடம் சொன்னான்.

“எங்க போய் எப்படி டைம் ஸ்பெண்ட் பண்றது? எங்க வீட்ல தெரிஞ்சது அவ்ளோதான், அதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாது” என்றாள் தாமினி.

“வேணாம் வேணாம் எங்கேயும் வெளில வர வேணாம். இந்த ஒரு மைல் ரோட் இருக்கே, வீக் எண்ட் உங்க டான்ஸ் கிளாஸ் முடிச்சிட்டு நீங்க வரும் போது இந்த ஒரு மைல் ரோடை என்னோட சேர்ந்து கடந்து போங்க, அப்புறம் லைஃப் லாங் இதே போல என்னோட சேர்ந்து வரலாம்னு தோணினா…” என்றவன் கண்கள் மலர சிரித்து, “அப்படி தோணினா நீங்க சொல்லக்கூட வேணாம், நானே கண்டுபிடிச்சிடுவேன்” என்றான்.

அவன் பேசப் பேச தாமினி இமைக்க மறந்தாள். அவள் மனமும் அவனை நோக்கி செல்வதை உணர்ந்துதான் இருந்தாள், ஆனாலும் அவனை பற்றி எதுவும் தெரியாமல் காதல் என்ற பெரிய விஷயத்திற்குள் உடனே நுழைய அவள் தயாராகவில்லை.

தாமினியின் பதிலுக்காக கர்ணா காத்திருக்க அவள் தலை மேலும் கீழும் ஆடியது. ஏதோ அவள் காதலுக்கே சரியென சொன்னது போல, “எஸ்!” என உற்சாகமாக கூறியவன் ஓரடி அவளை நோக்கி வந்து, “தேங்க்ஸ் தேங்க்ஸ் மினி!” என ஆர்ப்பறித்தான்.

“ஓகே ஓகே ஆனா எனக்கு பிடிக்கலைன்னு நான் சொல்லிட்டா…”

“நீங்க சொல்லக்கூட வேணாம், தெரிஞ்சாலே போதும் உங்க கண்ல படவே மாட்டேன்” அவளை முடிக்க விடாமல் அத்தனை உறுதியாக கூறினான்.

Advertisement