Advertisement

பார்வையில் மதுச்சாரல் -23(final 2)

அத்தியாயம் -23(final 2)

மலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க இவர்கள் பேச்சை கவனிக்கவில்லை.

“நீ அப்பாவை நினைச்சு கவலை படாத. கண்டிப்பா சீக்கிரம் சரியாகிடுவாங்க. அப்புறம் மத்த ரிலேட்டிவ்ஸ்… ஹ்ம்ம்… விட்ரு, அவங்கள நம்மளால மாத்த முடியாது, அது நம்ம வேலையும் இல்லை. நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்னு முழு மனசா நம்பு ஐஸ்வர்யா. அதுக்கு மேல என்னோட வாழ்ந்து பார்த்து தெரிஞ்சுக்க” என அஷ்வின் சொல்ல, ஓரளவு தெளிந்த முகத்தோடு சரி எனும் விதமாக தலையசைத்தாள் ஐஸ்வர்யா.

இரவில் மலரை தன்னோடு அழைத்து சென்று விட்டார் பாட்டி. ஐஸ்வர்யாவுக்கு தீபிகாவும் தாமினியும் நின்று அலங்காரம் செய்து அஷ்வின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.

அஷ்வின்தான் என முடிவான பிறகு மனதளவில் மணவாழ்க்கைக்கு ஐஸ்வர்யா தயாரானாலும் இப்போது தயக்கமும் பயமும் வந்து ஒட்டிக் கொண்டது. ஆனாலும் தன் மனநிலை காட்டி அஷ்வினை ஏமாற்றம் அடைய செய்யக் கூடாது என கவனமாக இயல்பாக இருப்பது போல காட்டிக் கொள்ள முயன்றாள்.

“இவ்ளோ கஷ்டம் வேணாம் ஐஸ், நாம இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கலாம். சீக்கிரம் எல்லாம் தானா நம்மளை மீறி நடக்கும்” என அஷ்வின் சொல்ல நிம்மதியாக பார்த்தாள் ஐஸ்வர்யா.

“நீ எதையும் மனசுல போட்டு குழப்பாம என்கிட்ட சொல்லிடு, ஒன்னொன்னும் உன் முகத்தை பார்த்து என்னால கண்டுபிடிக்க முடியாது”

“தேங்க்ஸ்” என்றாள் ஐஸ்வர்யா.

புன்னகைத்த அஷ்வின், “இதுவே லாஸ்ட் தேங்க்ஸா இருக்கட்டும் ஐஸ், நமக்குள்ள இதுக்கு அவசியமில்லை” என்க மலர்ந்து சிரித்தாள் ஐஸ்வர்யா.

அரவிந்த் தீபிகா இருவரது மகன் ஆதி சிணுங்கிக் கொண்டே இருந்தான்.

“நிறைய பேர் தூக்கினதுல உடம்பு வலிக்குது போலங்க” என கவலையாக தீபிகா சொல்ல, “ம்ம்… நான் வச்சுக்கிறேன், நீ கொஞ்ச நேரமாவது தூங்கு. ஃபீட் பண்ண டைம் ஆனதும் எழுப்பி விடுறேன்” என்றான் அரவிந்த்.

“புள்ள அழறான், நான் தூங்கவா?”

“முழிச்சிட்டு இருந்தா இவன் சரியாகிடுவானா? உன் உடம்பையும் பார்த்துக்கணும் தீபு, நான்தான் பார்க்கிறேன்னு சொல்றேன்ல. யாராவது ஒருத்தர் முழிச்சிருந்தா போதும். காலைல பாட்டிகிட்ட கேட்டு ஏதாவது செய்யலாம். நீ தூங்கு” என அரவிந்த் அதட்ட தீபிகாவும் படுத்துக் கொண்டாள்.

மலரை தன்னுடன் படுக்க வைத்துக்கொண்டார் பாட்டி. அவளும் அசதியில் உடனே உறங்கிப் போனாள்.

இரவு உடை மாற்றி வந்து தாமினி படுக்க அவளருகில் படுத்திருந்த கர்ணா மனைவியின் சட்டையை மேலே ஏற்றி வெற்று முதுகில் ‘ஐலவ் யூ’ என எழுதினான்.

எழுந்தமர்ந்து பின் கணவன் பக்கமாக படுத்துக் கொண்ட தாமினி, ‘போடா’ என அவன் வெற்று மார்பில் விரல் கொண்டு கிறுக்கினாள்.

“என்னடி டா போடுற?” கொஞ்சம் அதட்டினான் கர்ணா.

“போடா போடா…” என மூச்சு விடாமல் சொன்னாள் தாமினி.

அவளது மூச்சை அடக்கி விலகியவன் நெற்றியில் ஆழமாக முத்தமிட்டு, “தூங்குமா” என சொல்ல அவன் மார்பில் ஒன்றிக் கொண்டாள் தாமினி.

சில ஆண்டுகளுக்கு பிறகு…

சனிக்கிழமை இரவு கர்ணா வீட்டின் வெளியில் பாத்திரத்தில் பால் சோறு வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார் பத்மினி பாட்டி. ஆறு வயது மலர் நடு நாயகமாக நின்று தன் கண்களை உருட்டி கைகளில் அபிநயம் பிடித்து கதை சொல்வதையே நாட்டிய நிகழ்ச்சி போல நடத்திக் கொண்டிருந்தாள்.

சும்மாவா தாமினியின் சிஷ்யை ஆகிற்றே. வீட்டின் பின் பகுதியில் தாமினி நடனம் பயிற்றுவிக்க சிறிதாக இட வசதி செய்து கொடுத்திருக்கிறான் கர்ணா. அருகில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை நடன வகுப்புக்கு தாமினியிடம் அனுப்பி வைக்கின்றனர். மலரும் பயில்கிறாள். மாலை நான்கிலிருந்து ஆறு வரை அந்த இடம் ஜதியாலும் பிஞ்சுகளின் சலங்கை ஒலியாலும் நிறைந்து போயிருக்கும்.

அஷ்வின் ஐஸ்வர்யா தம்பதிகளின் பத்து மாத மகன் தேவ் வேணுவின் மடியில் இருந்தான். ஆரம்பத்தில் சின்ன மகன் திருமணம் குறித்து வேணுவுக்கு அதிருப்தி இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அவர்களின் வாழ்வை பார்த்து இப்போது மிகுந்த திருப்தியே.

அரவிந்த் தீபிகா இருவரின் மகன் ஆதி தன் மலர் அக்கா சொல்லும் கதை கேட்டுக் கொண்டே பாட்டி ஊட்டி விட்ட சாப்பாட்டுக்கு வாய் திறந்து கொண்டிருந்தான். கர்ணா தாமினி இருவரின் புதல்வி லயா தன் கொள்ளு பாட்டியின் இடுப்பை அணைத்தவாறு அவரை நெருக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

லயா எப்போதும் அப்படித்தான், பாட்டியை விட்டு நகர மாட்டாள்.

குழந்தைகளின் பெற்றோர்கள் இங்கு இல்லாமல் வீட்டின் பின் பக்கத்தில் ஜோடிகளாக அமர்ந்திருந்தனர். சும்மா இல்லை மாலையில் அரைத்த மருதாணியை தங்கள் மனைவிகளின் கைகளுக்கு இட்டுக் கொண்டு.

தேவ் பிறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்பு வரை வேலைக்கு சென்று வந்த ஐஸ்வர்யா இப்போது வேலையை விட்டு விட்டாள். அஷ்வின் மாடியில் தனியாக வீடு எழுப்பியிருக்கிறான். அவனை கடன் வாங்க விடாமல் அரவிந்தும் கர்ணாவும் உதவினார்கள்.

குழந்தைக்கு சளி பிடித்து விடும் என ஐஸ்வர்யா மருதாணி வைத்துக் கொள்ள அப்போதே மறுத்திருந்தார் பாட்டி. இருப்பினும் மனைவி விருப்பத்துக்காக உள்ளங்கையில் மட்டும் கொஞ்சமாக வைத்து விட்டான் அஷ்வின்.

அரவிந்துக்கு சரியாக வைக்க வராமல் நீள் வட்டம், சதுரம், செவ்வகம் என ஏதேதோ வடிவத்தில் தீபிகா கையில் மருதாணி வைத்து அவளிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தான்.

“வர்றதுதானே வைக்க முடியும், உங்கப்பா மாதிரி பேசாத” என்றான் அரவிந்த்.

“இப்போ நேர்ல எல்லாம் நல்லாத்தானே பேசிக்கிறீங்க, அப்புறம் எதுக்கு எங்கப்பாவை வம்புக்கு இழுக்குறீங்க?” எனக் கேட்டது தீபிகா இல்லை தாமினி.

“அவங்க பேசிக்கும் போது நீ ஏன் தலையிடுற?” அழகாக அவள் கைக்கு மருதாணி வைத்து விட்டுக் கொண்டே கண்டிக்கும் விதமாக கேட்டான் கர்ணா.

“ம்ம்… மாமா எங்கப்பா பத்தி பேசினா நான் அமைதியா இருக்கணுமா? இது ஒரு முறைன்னு இல்லை, சும்மா சும்மா பேசுறாங்க. எங்கப்பா பாவம்” என்றாள் தாமினி.

இப்போது அரவிந்தை பார்த்த கர்ணா, “உன் வாய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா அந்துபி?” என கண்டித்தான்.

“சரிடா சரிடா இன்னிக்காவது சண்டை போடாம தூங்குங்க” என சொல்லி சிரித்தான் அரவிந்த்.

“அவனை நம்பாத தாமனி, ரெண்டு பேரும் உங்கப்பாவை பத்தி நிறைய புரணி பேசுறாய்ங்க. அவன் உன்கிட்ட நடிக்கிறான்” என அஷ்வின் கொளுத்தி போட கணவனை முறைத்தாள் தாமினி.

“சும்மா இருங்க!” என அஷ்வினை அதட்டினாள் ஐஸ்வர்யா.

“அதெல்லாம் ரசமலாய் கொடுத்து சமாதானம் பண்ணிடுவான்” என அஷ்வின் சொல்ல கர்ணா தாமினி தவிர மற்றவர்கள் வாய் விட்டு சிரித்தார்கள்.

“ரசமலாய் கதை எல்லாம் உங்க ஃப்ரெண்ட்கிட்ட சொல்றீங்களா?” சின்ன குரலில் கேட்டு பல்லை கடித்தாள் தாமினி.

“ஹையோ அந்த தெத்து பல்லை விடுடி. உனக்கு ரசமலாய் பிடிக்கும் மட்டும்தான் அவனுக்கு தெரியும். வேற எல்லாம் நான் சொல்லலை, அதெல்லாம் போய் சொல்வேனா… ஹி ஹி…” அசடு வழிந்தான் கர்ணா.

“ஏய் சும்மா டீஸ் பண்றாங்கடி மினி, உன் மாமா கூட உன்னை வெறுப்பேத்ததான் அப்பா பத்தி பேசினாங்க. கர்ணா பாவம், சண்டை போடாத” என்றாள் தீபிகா.

“இந்த விஷ ஜந்துக்கள் மத்தியில நீங்க மட்டும்தான் அண்ணி நல்லவங்க” என்றான் கர்ணா.

“அப்போ போன வாரம் மதி மாமாவை ஏதோ சொன்னியேடா… ச்சே நல்ல நேரத்துல நினைப்பு வர மாட்டேங்குது” என வேண்டுமென்றே அஷ்வின் இல்லாத ஒன்றை யோசனை செய்ய உண்மையாக ஏதாவது சொல்ல போகிறான் என நினைத்து மருதாணி வைத்த கையால் அவன் வாயை மூடினாள் ஐஸ்வர்யா.

அவள் கையை விலக்கி, “என்ன ஐஷு இது? மருதாணி ஊட்டி விடுறியா நீ?” எனக் கேட்டுக் கொண்டே மனைவியின் சுடிதார் துப்பட்டா எடுத்து வாயை துடைத்துக் கொண்டான் அஷ்வின்.

இங்கே தாமினி கணவனை பார்வையால் சுட்டெரிக்க அவனும் பார்வையில் கெஞ்சிக் கொண்டே அவள் பாதங்களை மடியில் எடுத்து வைத்துக்கொண்டு சிரத்தையாக மருதாணி வைத்து விட்டான்.

“புள்ளைங்க எல்லாம் கொட்டாவி விடுது, நீங்க இன்னும் உங்க பொண்டாட்டிங்க கைல வரைஞ்சு முடிக்கலையா?” என பாட்டி சத்தமிட அஷ்வின் எழுந்து சென்றான்.

தாத்தாவின் மடியிலேயே தேவ் உறங்கியிருக்க மகனை தூக்கிக் கொண்ட அஷ்வின், “நீங்க கிளம்புங்கப்பா, இதோ பத்து நிமிஷத்துல வந்திடறோம்” என சொல்லி உள்ளே சென்றான். அவனை வால் பிடித்துக்கொண்டு மலரும் ஆதியும் கூட சென்றனர்.

மலர் சென்று கர்ணாவிடம் கை நீட்ட, “கொஞ்சமா வச்சி விடுறேன், செல்லத்துக்கு சளி பிடிச்சுக்க போகுது” என சொல்லி குழந்தைக்கும் வைத்து விட்டான். அவன் வைத்து முடிக்கும் போது தூணில் சாய்ந்து உறங்கிப் போயிருந்தாள் மலர்.

ஐஸ்வர்யா கை கழுவி விட்டு வந்து தேவ்வை வாங்கிக் கொள்ள அஷ்வின் மலரை தூக்கிக் கொண்டான்.

“நானும் கழுவிடவா?” எனக் கேட்டாள் தீபிகா.

“காலைல கழுவுங்க க்கா, ஆதிய வேணும்னா நான் வச்சுக்கிறேன்” என்றாள் ஐஸ்வர்யா.

“ஆல்ரெடி அவங்க ரெண்டு பேருக்கும் இடையில ரெண்டு குழந்தைங்க, இதுல ஆதியையும் வச்சுக்க போகுதாம். என் ஃப்ரெண்ட் கூமுட்டை தியாகி மாதிரி சிரிச்சிட்டே நிக்கிறதை பாரு” கர்ணா கிசு கிசுப்பாக தாமினியிடம் சொன்னான்.

“ஏன் பேச மாட்டீங்க உங்க பொண்ணு பாட்டி கூடவே இருக்காளே அந்த கொழுப்பு! இருக்கட்டும் அடுத்த குழந்தை வந்தா நானும் ரெண்டு பேருக்கும் இடையில போட்டு வைக்கிறேன்” தாமினியும் கிசு கிசுப்பாக சொன்னாள்.

“மினிம்மா அப்படியெல்லாம் சொல்லப்படாது!” கெஞ்சினான் கர்ணா.

“அடேய் நைட் நேரத்துல கிசு கிசு பேசினாலும் காதுல விழுந்து தொலையுதுடா. மினிம்மா முனிம்மான்னுட்டு, போய் தூங்குங்க” அதட்டினான் அஷ்வின்.

“பேசிட்டே இருந்தா இங்கேயே நிக்க வேண்டியதுதான், ஆதி பாதி ராத்திரில எழுந்தா அவன் அம்மாவை தேடுவான், எங்க கூடவே இருக்கட்டும்” என அரவிந்தே தன் மகனை வைத்துக்கொண்டான்.

அவர்கள் வீடு சென்று விட வெளிக் கேட் பூட்டி கொள்ளு பேத்தியோடு பாட்டியும் படுத்து விட்டார்.

மாமரக் காற்று இதம் கூட்ட கர்ணாவின் தோளில் சாய்ந்திருந்தாள் தாமினி.

“உனக்கு தூக்கம் வந்திட்டு மினி, வா” என சொல்லி எழுந்த கர்ணா மனைவியை தன்னிரு கைகளிலும் ஏந்திக் கொண்டான்.

அவன் மீது கை படாமல் தாமினி வைத்திருக்க, “ஹேய் சும்மா பிடிச்சுக்கோ மினி, மருதாணி கறை நல்லது. ஏன் கறையாக்கினேன்னு நான் சண்டை போட அப்படிதான் செய்வேன்னு நீ வம்பு பண்ண… அப்புறம் அப்படி இப்படி…” முடிக்காமல் கண்கள் சிமிட்டி சிரித்தான் கர்ணா.

“ஆசைதான் அதென்ன எங்கப்பாவை பேசுனீங்க நீங்க? சொல்லலை அப்புறம் இருக்கு உங்களுக்கு” மிரட்டினாள் தாமினி.

இது வழக்கம்தானே, தாமினியை எப்படி சமாதானம் செய்வது என நன்கறிந்த கர்ணா புன்னகை முகம் மாறாமல் அவளை படுக்கையில் விட்டு கதவுகள் அடைத்தான்.

இந்த குடும்பம் இவர்களின் உறவு நிலை, அன்பு, நட்பு, அனுசரனை ஆகியவை இன்னும் இன்னும் மேன்மை அடைய சீரும் சிறப்புமாக வாழட்டும்.

Advertisement