Advertisement

பார்வையில் மதுச்சாரல் -23(final 1)

அத்தியாயம் -23(final 1)

அஷ்வினுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருமணம் முடிந்து இப்போதுதான் வீடு வந்திருந்தனர். அடடா இதை நடத்தி முடிப்பதற்குள் தாமினி பட்ட பாடுகள்…

ஐஸ்வர்யா ஒரு வழியாக மறுமணத்திற்கு சம்மதம் என கூறிய பின்னர் மெல்ல அஷ்வின்தான் மாப்பிள்ளை என கூற அவளுக்கு மயக்கம் வராத குறைதான்.

“வேணாம் மினி, இந்த கல்யாணம் எங்களுக்கு ஒரு பாதுகாப்பு மாதிரிதான். என்னை போல இருக்கிற யாரையாவது பாரு, இல்லைனா வேணவே வேணாம்” என சொல்லி விட்டாள்.

“அவரும் உங்களை மாதிரிதான் அக்கா” என்ற தாமினி அனைத்தையும் மறைக்காமல் சொல்லி விட ஐஸ்வர்யாவுக்கு அழுகைதான் வந்தது.

தன் தலையில் அறைந்து கொண்டு, “எத்தனை பேர் வாழ்க்கைல விளையாடியிருக்கேன் நான்? சும்மா இல்லை கடவுள் என்னை இந்த பாடு படுத்தறது” என புலம்பி அழுதாள்.

“அக்கா, அழுகை சீன் எல்லாம் முடிஞ்சு போச்சு, அஷ்வின் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறார், திரும்பவும் அவரை கஷ்ட படுத்தாம ஓகே சொல்லுங்க” என தாமினி மிரட்ட, மிரண்டு போய் பார்த்தாள் ஐஸ்வர்யா.

“உங்க பயம் புரியுது, அஷ்வின் அப்பா ஓகே சொன்னா உங்களுக்கு சரிதானே?”

“மினி ப்ளீஸ், நான் போய் எப்படிம்மா? வேற நல்ல பொண்ணா பாரு அவருக்கு. நான் வேணாம்” என ஒரேயடியாக மறுத்து விட்டாள்.

அதன் பின்னர்தான் அஷ்வின் அவளை சந்தித்து பேசினான். அவனிடமும் அதையேதான் சொன்னாள்.

“எதனால நான் வேணாம்னு சொல்றீங்க?” என அழுத்தமாக கேட்டான் அஷ்வின்.

“நான் வாழ்ந்து கெட்டவ, போதுமா?” என கோவமாக சொன்னவள், “உங்களுக்கு என்ன தலையெழுத்து என்னை கட்டணும்னு? விட்ருங்க என்னை” என கெஞ்சலாக சொன்னாள்.

“மனசால நானும் வாழ்ந்து கெட்டவன்தான் ஐஸ்வர்யா” என அஷ்வின் சொல்ல ஐஸ்வர்யா ஏதோ சொல்ல வர கை காட்டி தடுத்தவன், “நீங்க எதை சொல்றீங்கனு புரியாம இல்லை. எவ்ளோ காலத்துக்கு இதெல்லாம் ஒரு காரணமா சொல்லிட்டு இருக்க போறீங்க? எல்லாத்தையும் விசாலமா பாருங்க. இப்போ உங்க எண்ணத்துல மலரோட அப்பா இருக்காரா?” எனக் கேட்டான்.

“ச்சீ அவனை போய் என் குழந்தைக்கு அப்பானு சொல்லாதீங்க, அவனை பத்தி பேசவே எனக்கு விருப்பமில்லை” என்றாள்.

“அவ்ளோதானே, நீங்க மேரேஜ்கு ஓகே சொல்லியாச்சு, நான்தான் உங்களை கல்யாணம் செய்துக்க போறேன். பயப்படாம இருங்க. இனிமே மலருக்கு நான்தான் அப்பா” என அஷ்வின் சொல்ல ஐஸ்வர்யாவுக்கு பயம் பயம் மட்டுமே.

“எல்லாரும் ஒத்துப்பாங்களா என்ன சொல்வாங்களோன்னு பயமா?” என அஷ்வின் கேட்க அவள் ஆம் என தலையாட்டினாள்.

“வேற என்னெல்லாம் பயம், ஓபனா சொல்லுங்க” என ஊக்கினான்.

“இன்னொரு வாழ்க்கைக்குள்ள போகவே பயம்தான். மத்தவங்கள பார்க்கும் போது நானும் நல்லா வாழ மாட்டேனான்னு ஆசை வராம இல்லை, ஆனா அந்த ஆசையே தப்போன்னு எல்லாம் தோணுது. நான்தான் உங்களை மாத்திட்டேன் அப்படின்னு பேச்செல்லாம் வந்தா என்னால எப்படி தாங்க முடியும்? அதை விட உதவி செஞ்ச வீட்டுக்கே துரோகம் செய்ற மாதிரி ஆகாதா?” என ஐஸ்வர்யா பேச பேச அவளுக்கும் வாழ ஆசை இருக்கிறது, ஆனால் சமூகத்தின் தளைகள் பயம் கொள்ள வைக்கின்றன என புரிந்து கொண்டான் அஷ்வின்.

“அதை விட பிரவீண்…” என ஆரம்பித்து முடிக்காமல் நிறுத்தினாள்.

“பழசை எல்லாம் விடுங்க, அதெல்லாம் பிரச்சனை ஆகாம நான் பார்த்துப்பேன். உங்க கூட என் லைஃப் நல்லா இருக்கும்னு தோணினா அப்புறம் சொல்லுங்க, என் மேல உங்களுக்கு சின்னதா ஒரு நம்பிக்கை வரும்னு எதிர்பார்த்திட்டு இருப்பேன்” என புன்னகையோடு சொல்லி சென்று விட்டான்.

தாமினி தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்கு ஐஸ்வர்யாவிடம் பேசி பேசியே அவள் மனதை கரைத்தாள். பிரவீணிடம் விஷயத்தை சொல்லி அவனையும் இவளோடு பேச வைத்தாள்.

“நடந்து முடிஞ்சதுல எனக்கு கோவம், வருத்தம் எல்லாமே இருக்குதான். அதுக்காக உங்க லைஃப் நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு மோசமானவன் இல்லை நான். எல்லாத்தையும் மறந்திட்டு அஷ்வின் கூட புது லைஃப் ஸ்டார்ட் பண்ணுங்க. இதுல என்னோட சுயநலம் கூட இருக்கு, அஷ்வின் நல்லா இருந்தாதான் என் வைஃப் நிம்மதியா இருப்பா” என தன் நிலைப்பாட்டை பிரவீண் தெரிவிக்க ஐஸ்வர்யாவிடம் நல்ல மனமாற்றம் ஏற்பட்டது.

அஷ்வின், பிரவீண் இருவரது பெருந்தன்மையும், வாழ்க்கை பற்றிய புரிதலும் தொலைநோக்கு சிந்தனையும் ஐஸ்வர்யாவை வியக்க வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

தள்ளியே இருந்த அஷ்வின் தாமினியின் யோசனை படி இயல்பாக ஐஸ்வர்யாவிடம் பழக ஆரம்பித்தான். தன்னை புரிந்து கொள்ள வைத்தான்.

மறுமணத்திற்கு சரி என்ற ஐஸ்வர்யா அஷ்வினுக்கு ‘சம்மதம்’ என சொல்ல சில மாதங்கள் ஆனது. அதற்குள் தீபிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. தாமினிக்கு வளைகாப்பும் முடிந்திருந்தது. குழந்தையின் பெயர் சூட்டும் விழா வரை பொறுமை காத்து பின் வேணுவிடம் விஷயத்தை சொன்னார்கள். எதிர்பார்த்தது போலவே அவர் மறுக்கவே செய்தார்.

பாட்டி வேறு அவருக்கு ஆதரவளிக்க சிறியவர்கள் திண்டாடி போனார்கள். தீபிகாவும் மதியழகனும் என்ன சொல்வார்களோ என பயந்து அவர்களிடம் தாமினி விஷயத்தை சொல்ல அதிசயமாக தீபிகா ஒத்துக் கொண்டாள். மதியழகன்தான் முட்டுக்கட்டை போட்டார்.

“ஒரு முறை தோத்து போய்ட்டேன் பா, இன்னொரு முறையும் தோக்க வைக்காதீங்க” என்ற ஒற்றை வரியில் அப்பாவின் சம்மதத்தை பெற்று விட்டான் அஷ்வின்.

மதியழகனிடம் சொல்லிப் பார்த்தும் அவர் நிலையிலிருந்து மாறாமல் இருக்க அவரை விட்டு விட்டனர். இதோ இன்று திருமணத்தில் கூட மகள்களின் கட்டாயத்தால் கலந்து கொண்டவர் மங்கல்யதானம் ஆனதுமே கிளம்பி விட்டார்.

திருமணத்திற்கு சம்மதிக்காத உறவுகளிடம் அரவிந்தைதான் மல்லு கட்ட வைத்தாள் தாமினி. பாட்டி கூட “இப்படியெல்லாம் தேவையா? கடைசி புள்ள கல்யாணத்தை எப்படி எல்லாம் நடத்த ஆசை பட்டிருப்பான் வேணு? இப்போ ஏதோ போல நடக்குது பாரு எல்லாம். இதுக்குத்தான் நான் சொன்னேன்” என நொந்து போனவராக சொன்னார்.

“கல்யாணத்தை ஜோரா நடத்தறதை விட ரொம்ப முக்கியம் அவங்க நல்லா வாழறது, இப்போ மாமாக்கு அரை மனசா இருக்கலாம், கண்டிப்பா அவர் சந்தோஷ படுற மாதிரி ரெண்டு பேரும் வாழ்ந்து காட்டுவாங்க. நீங்க கொஞ்சம் எனர்ஜியா இருந்தாலே மாமாவும் நல்லா இருப்பார், நீங்க ஏன் பாட்டி டல் அடிக்கிறீங்க? இதுவா நீங்க, வாங்க நீங்க” என ஏதேதோ பேசி பாட்டியை சரி கட்டி வைத்தாள்.

இதுதான் என முடிவெடுத்த பிறகு முழு மனதுடன் எல்லாம் செய்ய வேண்டுமென பாட்டியும் ஒத்துழைப்பு நல்க, தாமினி நினைத்தது போலவே வேணுவும் கொஞ்சம் தெளிந்தார்.

திருமண வேலைகள் அனைத்தையும் கணவன் துணையோடு எடுத்து கட்டி செய்தாள் தாமினி.

கோயிலில் எளிமையாக நடந்த திருமணம் என்றாலும் எல்லா உறவுகளும் புடை சூழ உடன் நிற்கவில்லை என்றாலும் குறை என எதுவுமில்லாமல் சிறப்பாக செய்து முடித்து விட்டாள் தாமினி.

‘உன் ஃப்ரெண்ட் என்னை விட முக்கியமா’ என கேட்ட என் மனைவியா இவள் என கர்ணாவுக்கு வியப்பு என்றால் அவளை நினைத்து ‘சாதித்து விட்டாளே!’ என அஷ்வினுக்கு பிரமிப்பு.

கை நிறைய வளையல்களும் பெரிய வயிற்றோடும் நிற்காமல் சுழன்று கொண்டிருந்த தாமினியை இழுத்து பிடித்து அமர வைத்தான் கர்ணா.

“வேற ஆளுங்க இல்லையா? எதுக்கு இவ்ளோ ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற?” என திட்டினான் கர்ணா.

“வேற யார் இருக்கா? அக்கா கை குழந்தையோட என்ன செய்ய முடியும்? பாட்டியாலேயும் ரொம்ப முடியலை. ஹெல்ப் பண்ணிட்டிருந்த அம்மாவையும் போன் மேல போன் போட்டு அப்பா கூப்பிட்டுகிட்டார். நான்தானே பார்க்கணும்?”

“சரி நான், அந்துபி எல்லாம் இல்லையா? எங்ககிட்ட சொன்னா பார்க்க மாட்டோமா?”

“உங்க ஃப்ரெண்டோட பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா எல்லாம் யாரோ மாதிரி நிக்கிறாங்க, ஐஸ் அக்காக்கு ஒரு மாதிரி இருக்கும். தாம்பூல பை கொடுத்து அனுப்பி விடுங்க, மத்த வேலை அப்புறம் சொல்றேன்” என்ற மனைவியை முறைத்தான் கர்ணா.

“ஏன் என்ன?”

“அவங்களா கிளம்பும் போதுதான் பை கொடுத்து அனுப்ப முடியும், நாமளா கொடுத்து கிளம்புங்கன்னு சொல்ல முடியுமா? விரட்டுறோம்னு நினைக்க மாட்டாங்களா? வேணுப்பாக்கு தெரிஞ்சா வருத்த படுவார்”

“அட! வாயால போங்கன்னா சொல்ல போறீங்க? கைல பைய கொடுங்க, தானா கிளம்பிடுவாங்க. உங்க அந்துபி சார் என்ன பண்ணிட்டு இருக்கார்? பையனையும் பொண்டாட்டியையும் பொறுமையா கொஞ்சிக்கலாம்னு நான் சொன்னதா சொல்லி இங்க ஆஜர் ஆக சொல்லுங்க”

“ஏய் என்னமா பேசுற நீ! இரு இரு இப்படியே சொல்லுறேன்”

“நான் மாத்தி சொல்ல சொன்னேனா? போங்க ஒரு வார்த்தை மாத்தாம அப்படியே சொல்லுங்க, அப்போதான் ஒழுங்கா வேலை பண்ணுவார்” என தாமினி சொல்ல, இதற்கு மேல் மனைவி விட மாட்டாள் என புரிந்து அரவிந்தை அழைக்க சென்றான் கர்ணா.

இன்னும் அரவிந்துக்கு மாமனாரோடு பிணக்கு முழுதுமாக தீர்ந்த பாடில்லை. பணி ஓய்வு பெற்றவர் பேரனை கொஞ்சிக் கொண்டு எந்நேரமும் வீட்டிலேயே இருக்க அடிக்கடி அரவிந்தும் அங்கு செல்வதில்லை. இன்று தன் வீட்டில் மகனும் மனைவியும் இருக்க மகன் ஆதியை கையில் எடுத்தவன் தன்னை மறந்து அவனோடு நேரம் செலவிட்டுக் கொண்டிருந்தான்.

கர்ணா போய் தாமினி சொன்னதை அப்படியே சொல்லி அரவிந்தை அழைக்க, அவன் சிரித்து விட்டான்.

“நீங்களும் ரூம் வந்து ரொம்ப நேரமாகுது, அவ சொல்ற மாதிரிதான் நடந்துக்குறீங்க, சிரிக்காம போங்க” என சொல்லி குழந்தையை தன் கையில் வாங்கிக் கொண்டாள் தீபிகா.

“இல்லை, அக்கா வீட்டுக்காரனையே இந்த வாங்கு வாங்குறாளே… என் தம்பிய நினைச்சேன் அதான் சிரிப்பு வந்திடுச்சு” என்றான் அரவிந்த்.

“அதெல்லாம் நாங்க வாங்கிப்போம் அப்பறம் கொடுத்துப்போம். எங்க கொடுக்கல் வாங்கல் பத்தி கவலை படாம வா அந்துபி. இங்க எல்லாம் செட் ஆனாதான் அவ ரெஸ்ட் எடுப்பா” என கர்ணா சொல்ல உடனே எழுந்து கொண்டான்.

வேணுவின் உறவுகளுக்கு இப்படி குழந்தையோடு ஒரு பெண்ணை அஷ்வினுக்கு மணம் முடித்ததில் விருப்பமில்லை. வேணுவின் அழைப்பை ஏற்று வந்திருந்தாலும் முறுக்கிக் கொண்டுதான் நின்றனர். வேணுவிடம் வேறு ஏதேதோ பேசி அவர் மூளையை சலவை செய்து கொண்டிருந்தனர்.

“வேணுப்பா உங்க போன் அடிக்கிற போல இருக்கு, ரூம்ல இருக்கு, போய் பாருங்க” என இயல்பாக சொல்வது போல வேணுவை அவ்விடம் விட்டு அகற்றினான் கர்ணா.

அரவிந்த் அனைவருக்கும் தாம்பூல பை வழங்கி, “எல்லாரும் வந்ததுல ரொம்ப சந்தோஷம். ரெஸ்ட் எடுக்குறீங்களா, அங்க கர்ணா வீட்டுக்கு அனுப்பி வைக்கட்டுமா?” என கேட்க, “ஏதோ வேணுவுக்காக வந்தோம். பெரியவங்க சொல்லுக்கு மரியாதை இல்லாம எல்லாம் நடத்துக்கிட்டீங்க, நல்லா இருந்தா சரிதான்” என வேணுவின் அண்ணன் எழுந்து கொள்ள ஒருவர் பின் ஒருவராக கிளம்பி விட்டனர்.

அது வரையிலுமே மகளோடு அறையில்தான் அடைந்து கிடந்தாள் ஐஸ்வர்யா. அஷ்வின் அவனது அப்பாவின் அறையில் இருந்து கொண்டான்.

மாலை ஆனதும் ஐஸ்வர்யாவை விளக்கு ஏற்ற வைத்து குடும்பமாக கோயில் சென்று வர சொன்னாள் தாமினி. இதுவரையிலும் மலரை ஒதுக்கியது இல்லை, இனியும் அஷ்வின் ஒத்துக்காமல் பார்ப்பானா, தன் மகள் தனியாகி விட மாட்டாளே என பயமும் குழப்பமுமாக நின்றிருந்தாள் ஐஸ்வர்யா.

அதற்கெல்லாம் அவசியமே இல்லை எனும் விதமாக பட்டு பாவாடை சட்டையில் இரட்டை குடுமியில் மல்லிகை சுற்றி தேவதை போலிருந்த மலரை கையில் தூக்கிக் கொண்டு வந்தான் அஷ்வின். மலர் ஏதோ கேட்க அஷ்வின் சிரத்தையாக அவளுக்கு பதில் சொல்ல கலங்கிய கண்களை மறைக்க குனிந்து கொண்டாள் ஐஸ்வர்யா.

மூவரும் அருகில் உள்ள கோயிலுக்கு காரில் சென்றனர். கோயிலிலும் அஷ்வின் கை பிடித்துக்கொண்டே வலம் வந்தாள் மலர். மலர் அஷ்வினை அப்பா என விளிப்பதை அப்போதுதான் ஐஸ்வர்யாவும் கவனித்தாள்.

‘இது எப்போதுலிருந்து?’ என்பது போல ஐஸ்வர்யா பார்க்க, “எல்லாம் கர்ணாவோட வேலை. அவன் சொன்னாதான் எதையும் கேள்வி கேக்காம கேட்டுப்பாங்களே இந்த குட்டி பட்டு” என விளக்கம் சொன்னான் அஷ்வின்.

Advertisement