Advertisement

பார்வையில் மதுச்சாரல் -2(2)

அத்தியாயம் -2(2)

“நாமளும் சாப்பிட்டு தூங்கலாமேப்பா” என்ற அரவிந்த் அப்பாவின் பார்வை தம்பியிடத்தில் இருப்பது உணர்ந்து அஷ்வினின் வாழ்வும் மலருமா என்ற எண்ணத்தோடு தம்பியை ஏக்கமாக பார்த்து பெருமூச்சு விட்டான்.

“சும்மா இப்படி என்னை பாவமா பார்த்திட்டே இருக்காதீங்க, நான் கர்ணாகிட்ட சும்மா சொல்லலை, நிஜமாவே எனக்கு பிடிச்ச பொண்ணு பார்த்தா கல்யாணம் செய்றதாதான் இருக்கேன்” என்றான் அஷ்வின்.

“அப்படி யாரையும் உனக்கு பிடிக்கலைன்னா?” தம்பியின் மனம் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டி கேட்டான் அரவிந்த்.

“கண்டிப்பா இப்படியே இருக்க மாட்டேன், நீங்க பார்க்கிற பொண்ணை கட்டிக்கிறேன், போதுமா?” என தன்மையான குரலில் அஷ்வின் சொல்ல வேணுவின் முகம் மலர்ந்து போனது.

தொலைக்காட்சியில் இரவு நேர மெகா தொடர் ஓடிக் கொண்டிருக்க, “உனக்கு சலிக்கவே செய்யாதா பப்பி?” எனக் கேட்டுக் கொண்டே பாட்டி பக்கத்தில் அமர்ந்து கொண்டான் கர்ணா.

“அரை மணி நேரத்துல வர சொன்னா எப்படா வர்ற?”

“அப்படியே வந்த உடனே சாப்பாடு போடுற மாதிரி… எப்படியும் விளம்பர இடைவேளையிலதானே அம்மணி எந்திரிப்பீக?”

“கல்யாணம் பண்ணிக்கோ, நீ எப்ப வருவேன்னு கேட்ட புடிச்சுகிட்டு கால் கடுக்க காத்து நிப்பா உன் பொண்டாட்டி, வக்கனையா ஆக்கி போட்டு உன் கால கூட புடிச்சி விடுவா” நொடித்தார் பாட்டி.

“எங்க பப்பி? இப்போ எல்லாம் பசங்க நாங்கதான் பொண்ணுங்க காலை புடிச்சி விடுறோம்”

“சரிடா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி காலை புடிங்க, காக்கா புடிங்க…”

“போதும் பப்பி, காலைல ஒருத்தவங்களுக்கு சீரியல் பார்க்காதன்னு அட்வைஸ் கொடுத்திட்டு இப்போ நீ என்ன செய்ற?”

“அதுக்கு தலைவலிடா, எனக்கு என்ன? நீ தொண தொணன்னு பேசாத, டிவில பேசுறது கேட்க மாட்டேங்குது”

கர்ணாவும் டிவியை பார்க்க, “இதுல எவளையாவது புடிச்சிருந்தா சொல்லுடா” என்றார் பாட்டி.

“ஏன் எனக்கு அவளை பார்க்க போறியா?”

“நீ சொல்றவளையே பார்க்க முடியுமா? அந்த சாயல்ல யாரையாவது பார்ப்பேன்” என்றார்.

கர்ணாவுக்கு சட்டென அவன் மின்மினிதான் வந்து சென்றாள். ‘அவள் சாயலிலா? அவளேதான் வேண்டும் என சொல்லும் மனதை என்ன செய்வேன்?’ தானாக ஒரு பெருமூச்சு அவனிடம் எழ, “ஆட் போட்டுட்டாங்க பாரு, சாப்பிடலாம் வா” என சொல்லி எழுந்து கொண்டான்.

“ஒரு வாரமா கல்யாண மண்டபத்தையே காட்டுறாங்க, கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு டென்ஷன்லேயே வச்சிருக்காய்ங்க…” இன்னும் சீரியல் தாக்கத்திலிருந்து வெளி வராத பாட்டி பேரனின் முக சுணக்கத்தை கவனிக்கவில்லை. அதற்குள் தெளிந்து விட்டான் கர்ணா.

இயல்பாக பாட்டியுடன் அமர்ந்து இரவு உணவை முடித்துக் கொண்டு பாத்திரங்கள் ஒழிக்கவும் உதவி விட்டு படுக்க சென்று விட்டான் கர்ணா. அடைக்கப் பட்ட இமைக் கதவுகளுக்குள் தாமினி நிறைந்து நின்றாள். நடக்காது நடக்க வேண்டாம் என எப்பொழுதும் போல இன்றும் சொல்லிக் கொண்டாலும் தாமினி பற்றியே நினைத்துக் கொண்டு அப்படியே உறங்கிப் போனான்.

ஞாயிறு மதியம் இரண்டரை மணி அளவில் வேணு வீடு சென்றனர் கர்ணாவும் பாட்டியும். புகைப்படம் பார்த்து மற்ற விஷயங்களும் இரு தரப்பினருக்கும் ஓரளவு மனதுக்கு பிடித்த பின்னர்தான் இன்று பெண் பார்க்க செல்கின்றனர். எனவே அனைவரும் கல கலப்பாகவே காணப் பட்டனர். கர்ணா காரோட்ட அவனுக்கருகில் அஷ்வினும் மற்றவர்கள் பின்னிருக்கையிலும் அமர்ந்து கொண்டனர்.

பெண் வீடு செல்ல வாசலில் வரவேற்ற பெண்ணின் பெற்றோர் பார்த்து கர்ணா அதிர, “அடடே வத்சலா!” என விளித்த பாட்டி வத்சலாவின் கைகளை பிடித்தார்.

பாட்டியை எப்படி தெரியும் என தன் கணவர் மதியழகனுக்கு விளக்கினார் வத்சலா.

‘போட்டோல பார்த்தவங்க தாமினி அக்காவா?’ யோசனையோடு நின்ற கர்ணாவை, “என்னடா?” என்ற அஷ்வினின் கேள்வி நடப்புக்கு இழுத்து வந்தது.

ஹாலில் மாட்டியிருந்த குடும்ப புகைப்படம் தாமினியின் அக்காதான் தீபிகா என்பதை உறுதி செய்தது. ஏற்கனவே அரவிந்துக்கு பெண்ணை பிடித்துப் போயிருக்க இது எப்படி சாத்தியமாகும்? என கர்ணாவுக்குள் பர பரப்பு. அனைவருக்கும் பலகாரம் இருந்த தட்டுக்கள் கொடுத்தார் வத்சலாவின் தங்கை மணிமேகலை.

மணிமேகலையை அடையாளம் கண்டு கொண்ட அஷ்வின் கர்ணாவின் முகம் பார்க்க அவனும் தன் நண்பனின் முகம்தான் பார்த்திருந்தான். கர்ணா கண்களால் என்ன செய்வது எனக் கேட்க எதுவும் பேசாதே என சைகை செய்தான் அஷ்வின்.

வேணு அருகில் அமர்ந்திருந்த கர்ணா இயல்பாக எழுவது போல எழுந்து அஷ்வின் அருகில் அமர்ந்து கொண்டான். அஷ்வின் தன் பதட்டத்தை குறைக்க கால்களை ஆட்டி கைகளை பிசைந்து கொண்டிருக்க அவன் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டான் கர்ணா.

“பொண்ணை அழைச்சிட்டு வாங்க, ரெண்டு பேரும் நேர்ல பார்த்துக்கட்டும்” என பத்மினி சொல்ல, “கல்யாணி… தீபியை அழைச்சிட்டு வாடா” என குரல் கொடுத்தார் வத்சலா.

அஷ்வினின் சர்வமும் ஒடுங்கியது போலிருந்தது. அனைவரும் பெண்ணை பார்க்கும் முனைப்பில் இருந்ததால் கர்ணாவை தவிர யாரும் இவனை கவனிக்கவில்லை.

அவன் கண்கள் கலங்குவது போலிருக்க, “அச்சு ப்ளீஸ்டா, வேணாம்” நண்பன் காதில் கிசு கிசுத்தான் கர்ணா.

பெண் அழைத்து வரப் பட அஷ்வின் தலை நிமிரவே பயந்தான். கர்ணா மனதிற்குள்ளேயே கோவத்தை பதுக்கி நிமிர்ந்து பார்த்தான். புகைப்படத்தில் பார்த்திருந்த தீபிகாவை அஷ்வினின் முன்னால் காதலி கல்யாணி அழைத்துக் கொண்டு வந்தாள்.

அஷ்வின் ஒரு பெண்ணை காதலித்தான் என்பது தெரியுமே தவிர கர்ணா தவிர வேறு யாருக்கும் கல்யாணிதான் அந்தப் பெண் என்பது தெரியாது. மணிமேகலை யாரென அஷ்வினுக்கு தெரிந்தாலும் அவனை மேகலைக்கு தெரியாது.

மெல்ல தன்னை சுதாரித்துக் கொண்ட அஷ்வின் அரவிந்தை பார்க்க அவன் முகம் மலர்ச்சியாகவும் வெட்கமாவும் காணப் பட்டது. ஒரு புன்னகையை தேக்கி நிமிர்ந்தமர்ந்தான் அஷ்வின்.

கல்யாணி இன்னும் அஷ்வினை கவனித்திருக்கவில்லை. பாட்டி ஏதோ பேச்சு கொடுத்து தீபிகாவை பேச செய்தார். ஏதோ ஓர் சந்தர்ப்பத்தில் அஷ்வினை பார்த்து விட்ட கல்யாணியும் திகைத்துப் போனாள். அவள் தடுமாற அஷ்வின் தான் இயல்பாக இருப்பது போலவே காட்டிக் கொண்டான்.

கர்ணாவுக்கு இந்த சூழலை எப்படி கையாள வேண்டும் என தெரியாத நிலை. பெண்ணும் பையனும் தனித்து பேசட்டுமே என இருவரையும் வீட்டின் பின்னாலிருந்த தோட்டம் அனுப்பி வைத்தனர் பெரியவர்கள்.

“இவ என் தங்கை பொண்ணு கல்யாணி, அமெரிக்கால இருக்கா. வருஷம் ஒரு முறை வந்திட்டு போவா, ஒரு வயசுல பையன் இருக்கான். தூங்கிட்டு இருக்கான்” கல்யாணியை அறிமுகம் செய்து வைத்தார் வத்சலா.

கேட்டுக் கொண்ட பத்மினி, “எங்க தாமினி?” என விசாரித்தார்.

“உள்ள இருக்கா” என்றார் மதியழகன்.

“அக்காவை பார்க்க வந்ததால தங்கையை ரூம் அரெஸ்ட் பண்ணியாச்சா? வர சொல்லுங்க, அவளுக்கும் அக்கா மாப்ள அவ வாழப் போற குடும்பம் எல்லாம் பார்க்க ஆசை இருக்காதா?” என பத்மினி சொல்ல, புன்னகைத்த மதியழகன் மகளை வெளியில் அழைத்தார்.

ஒரு சுடிதாரில் வெளியில் வந்த தாமினி தன் அழகிய தெத்துப் பல் தெரிய பாட்டியை பார்த்து சிரித்தாள், கூடவே ரகசியமாக கர்ணாவை பார்த்தாள். அவனோ அஷ்வினுடன் பேசிக் கொண்டிருந்தான், அப்படித்தான் தாமினியை கவனிக்கவில்லை என தன்னை காட்டிக் கொண்டான் கர்ணா.

போன் பேசுவது போல அஷ்வின் எழுந்து வெளியில் செல்ல கர்ணாவும் உடன் சென்றான்.

“அச்சு அப்பாகிட்ட சொல்லிடலாமா?” எனக் கேட்டான் கர்ணா.

“அரவிந்தை பார்த்ததானே… அண்ணனுக்கு பிடிச்சிருக்கு, நீ எதுவும் குழப்பாத” என்றான் அஷ்வின்.

“கல்யாணிய அடிக்கடி பார்க்கிற மாதிரி வரும், உன்னை விட அந்துபிக்கு எதுவும் பெருசு இல்லைடா”

“எனக்கும் அப்படித்தான் கர்ணா. அண்ணா வேணாம் சொல்றதால எனக்கு எந்த நல்லதும் நடக்க போறதில்லை, நான் எதுவும் சொல்லாம இருந்தா அவன் ஆசை நிறைவேறும். ஏற்கனவே என்னாலதான் அவன் மேரேஜ் டிலே ஆச்சு, ப்ச்… நான் ஓகேதான். இது எக்ஸ்பெக்ட் செய்யாததால ஒரு ஷாக், இன்னும் பழசையே நினைச்சிட்டு இருப்பேன்னு நினைச்சியா? எனக்கு நீங்க எல்லாரும்தான் முக்கியம், பழைய விஷயத்தை விடு” என்றான் அஷ்வின்.

“கல்யாணி ஒரு துரோகி, அவ குடும்பத்து ஆளுங்க…”

“ஸ்டாப் கர்ணா, நீ எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிற? அண்ணா அவங்ககிட்ட பேசப் போயிருக்கான், அவன் விருப்பத்தை வச்சு மட்டும்தான் இந்த கல்யாணம் நடக்கிறதும் நடக்காம போறதும் இருக்கணும். நீ கன்ஃப்யூஸ் பண்ணிக்காத” என்றான் அஷ்வின்.

கர்ணாவுக்கும் அரவிந்தின் விருப்பம் தெரிந்துதான் இருந்தது. ஆனால் அஷ்வினின் வலியும் வேதனையும் மற்றவர்களை விட கர்ணா நன்கறிவான். இப்போது இப்படி அஷ்வின் சொல்வது அரவிந்துக்காக என்றாலும் இது அவனது முதிர்ச்சியையும் பக்குவத்தையும்தானே காட்டுகிறது.

‘உன்னோடு எப்போதும் நானிருப்பேன்’ எனும் விதமாக அஷ்வின் தோளை கர்ணா தட்டிக் கொடுக்க அதை உணர்ந்தது போல தலையசைத்தான் அஷ்வின்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க தேநீர் எடுத்து வந்தாள் தாமினி. கர்ணா அவளை பார்த்து திகைத்து வேறு பக்கம் பார்க்க இருவருக்கும் சேர்த்து தேநீர் குவளைகளை எடுத்துக் கொண்ட அஷ்வின், “தேங்க்ஸ்” என்றான்.

கர்ணா தன்னை பார்ப்பானா என ஆர்வமாக இரு நொடிகள் நின்ற தாமினி ஏமாற்றத்தோடு திரும்பி நடந்தாள்.

“என்னடா பேசப் போன அண்ணா அங்கேயே செட்டில் ஆகிட்டானா? விட்டா இந்த வாரமே கல்யாணம் வைக்க சொல்வான் போல” அஷ்வின் சொல்ல தாமினி சென்ற திசையை வெறித்துக் கொண்டிருந்தான் கர்ணா.

Advertisement