Advertisement

பார்வையில் மதுச்சாரல் -22

அத்தியாயம் -22

காலை சாப்பாடு முடிந்த உடனே தீபிகாவுக்கு மருந்து கொடுக்கும் விஷேஷம் ஆரம்பமானது. ஐந்து மாத பூசிய வயிற்றோடு பட்டு உடுத்தி மலர்ந்த முகமாக இருக்கையில் அமர்ந்திருந்தாள் தீபிகா. அதிகம் பேருக்கு சொல்லவில்லை, வேணுவின் உடன்பிறப்புகள் மற்றும் மதியழகன் அவர் பக்கதிலிருந்து அவர் தங்கை அவரது மனைவியின் தங்கைக்கு சொல்லியிருந்தார் அவ்வளவே.

பிரச்சனைகள் தவிர்க்க வேண்டி ஐஸ்வர்யாவுக்கு சொல்லவில்லை, ஆனால் மலரை காப்பகம் அனுப்பாமல் தன்னுடன் அழைத்து வந்திருந்தாள் தாமினி. யாரென கேட்டவர்களுக்கு வீட்டில் குடியிருப்பவர் மகள் என மட்டும் சொல்ல யாரும் பெரிதாக பிரஸ்தாபிக்கவில்லை.

ஆனால் மதி மட்டும் ‘இப்படி பிரேமா இருக்கும் இடத்தில் குழந்தையை அழைத்து வராதே’ என சின்ன மகளிடம் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

விழா நன்றாக முடிந்து மதிய உணவுக்கு பின் தன் வீட்டில் ஒரு வாரம் வைத்திருந்து அனுப்பவதாக முன்னரே கூறியிருந்ததன் படி தீபிகாவை தங்களுடன் அழைத்து சென்று விட்டனர் மதியழகன் தம்பதியினர்.

இன்னும் தங்கள் வீடு செல்லாமல் பாட்டி, கர்ணா, தாமினி மூவரும் மலருடன் அங்குதான் இருந்தனர். மலருக்கு உறங்கும் நேரம் என்பதால் ஹாலிலேயே பாயில் படுக்க வைத்து விட்டாள் தாமினி.

அஷ்வினும் அரவிந்தும் பாத்திரங்கள் ஒழித்து போட திண்ணையை சீர் படுத்திக் கொண்டிருந்தான் கர்ணா.

சமையலறை வந்த தாமினி, “என் வீட்டுக்காரர் தனியா கஷ்ட படுறார், நான் இங்க பார்க்கிறேன் யாராவது அங்க போங்க” என்றாள்.

“அவ்வளவு அக்கறையா உனக்கு? அப்போ நீயே ஹெல்ப் செய்ய வேண்டியதுதானே?” என்றான் அஷ்வின்.

“அவர் நாற்காலி மேசைன்னு வெயிட் தூக்குறார், என்னை ஹெல்ப் செய்ய விட மாட்டார்”

“அப்படியா அவ்ளோ நல்லவனா அவன்?” என அஷ்வின் சீண்ட, “சும்மா இருடா டேய்!” என அதட்டிய அரவிந்த், “நீ இங்க பாரு மினி, நான் அவனுக்கு ஹெல்ப் செய்றேன்” என சென்று விட்டான்.

மதிய விருந்து பற்றி பேசிக் கொண்டே இவர்கள் இருவரும் வேலை செய்ய திடீரென, “அன்னிக்கு ஏதோ சொன்னீங்க, அப்புறம் வாயே திறக்கல” என்றாள் தாமினி.

“என்ன?”

“அதான் உங்க கல்யாணம் பத்தி”

“நான்தான் மனசு திறந்து சொல்லிட்டேனே, இனிமே நீங்க யாராவதுதான் வாய திறக்கணும்” என சொல்லி சிரித்தான் அஷ்வின்.

“முன்னாடி என்கிட்ட கேட்டீங்களே… இப்போ நான் உங்களை கேட்கிறேன், உங்களுக்கு ஐஸ்வர்யா க்கா மேல கோவம் இல்லையா? ஒரு விதத்துல அக்காவும் உங்க லவ் போனதுக்கு ஒரு காரணம்தானே? இப்போ பரிதாபத்துல சொல்லிட்டு பின்னாடி இப்படி நினைக்காம இருப்பீங்களா?” எனக் கேட்டாள் தாமினி.

“காலைல என் அம்மா கை பிடிச்சு வெளில போனப்போ நைட் அவங்க இருக்க மாட்டாங்கன்னு எனக்கு தெரியாது. என் காலேஜ் டேஸ்ல எனக்கு இப்படியெல்லாம் ஆகும்னு நான் நினைச்சது இல்லை. நீயும் கர்ணாவும் பிரிஞ்ச பிறகு சேர்வோம்னு என்னிக்காவது நினைச்சுருக்கீங்களா? கல்யாணிய உறவா திரும்பவும் சந்திப்பேன்னு கனவு கூட வந்தது இல்லை எனக்கு. இதுலேர்ந்து என்ன தெரியுது?” என கேள்வியோடு அஷ்வின் நிறுத்த, “அதையும் நீங்களே சொல்லுங்க” என்றாள் தாமினி.

“நம்ம கைல எதுவுமே இல்லை தாமினி. நடக்கணும்னு இருக்கிறதுதான் நடக்குது, எதுக்கும் யாரும் காரணம் இல்லை”

“நீங்க சொல்றது எல்லாம் சரி, ஆனாலும் ஐஸ் அக்கா மேல ஒரு சின்ன உறுத்தல் கூட இல்லாம உங்களால இருக்க முடியுமா?”

“திருப்பி திருப்பி ஏன் கேட்கிறேன்னு புரியலை. ஆனா யோசிச்சு பாரு அப்போ என் கோவம் முழுக்க கல்யாணி மேலதான், ஐஸ்வர்யா யாருன்னு கூட தெரியாது. ஒரு வேளை அப்பவே தெரிஞ்சிருந்தா கோவம் இருந்திருக்கும். இப்போ கல்யாணி மேலேயும் கோவமில்லை, ஐஸ்வர்யா மேலேயும் கோவமில்லை. ஐஸ்வர்யா இன்டென்ஷன் யாரையும் அவமான படுத்தறதோ ஏமாத்தறதோ இல்லை, காதலிச்ச பையன் சாக போறேன்னு சொல்றான், அவனுக்கு துரோகம் செய்யக் கூடாதுனு காலம் கடந்த நினைப்பு, குழப்பிட்டாங்க. எனக்கு நடந்தது, கல்யாணிக்கு நடந்தது, இப்போ ஐஸ்வர்யாவோட நிலை இது எல்லாமே ஆல்ரெடி நடக்கணும்னு இருந்திருக்கும் அவ்ளோதான்”

“ம்ம்… ஆனா இந்த தெளிவு எல்லாருக்கும் இருக்காது. ஒரு குழந்தையோட இருக்க பொண்ணுக்கு உதவ முன் வந்த மாமா அவங்களை மருமகளா ஏத்துக்க யோசிப்பார், தீபி அக்கா, என் அப்பா எல்லாரையும் கன்வின்ஸ் பண்றதும் ஈஸி இல்லை. முதல்ல பாட்டியே இதுக்கு சம்மதிக்கல”

“ஆமாம் தாமினி, ஆனா இது எல்லாத்தையும் விட ஐஸ்வர்யா சம்மதம் ரொம்ப முக்கியம், அவங்க ஓகே சொல்லிட்டா அப்புறம் மத்ததை ஒன்னொண்ணா சால்வ் பண்ணலாம்”

“எப்படி சால்வ் பண்ணுவீங்களாம்?”

“என் ஃபிரெண்ட் வைஃப் ரொம்ப புத்திசாலி, அவங்க பார்த்துப்பாங்க” என அஷ்வின் சொல்ல முறைத்தாள் தாமினி.

“என்ன ஹெல்ப் பண்ண மாட்டியா?”

“அக்கா கோச்சுப்பா, அப்பா பேச்சை மீற முடியாது. நான் எதுவும் செய்ய மாட்டேன், வேடிக்கை மட்டும்தான் பார்ப்பேன்”

“நான் கஷ்ட படுறதை வேடிக்கை பார்ப்பியா நீ? அப்போ பார்”

“ஓஹ் நல்லா பார்க்கிறேன்” என சொன்னவள், “வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம நான் ஏதாவது கேட்டா என்கிட்டவே ஹெல்ப் கேட்குறதை பாரு, வேலை முடிஞ்சது, நான் வெளில போறேன் ப்பா” என தாமினி அவளாக பேசுவது போல பேசி செல்ல, எதுவும் சொல்லாமல் சிரித்துக்கொண்டிருந்தான் அஷ்வின்.

தாமினி ஹால் வந்து விட்டாள், யாராவது ஏதாவது கேட்டால் இயந்திரம் போல பதில் தந்தாள், அவள் மூளைதான் அஷ்வின் சொன்னது பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறதே.

மாலையில் மலர் எழுந்த பிறகு கர்ணா குடும்பம் அவர்கள் வீடு சென்று விட்டது. அங்கு வந்தும் தாமினி இயல்பாக இல்லை. சோர்வாக இருக்கிறாள் போல என பாட்டியும் கர்ணாவும் நினைத்துக்கொண்டனர். ஆனால் நேரம் செல்ல செல்ல ஏதோ குழம்புகிறாள் என அறிந்து கொண்ட கர்ணா என்னவென விசாரிக்க வேண்டும் என நினைத்தான்.

இரவு உறங்க செல்வதற்கு முன் அஷ்வினுக்கு அழைத்த தாமினி, “முதல்ல ஐஸ் அக்காட்ட பேசுறேன், நீங்கன்னு சொன்னா சம்மதிக்கவே மாட்டாங்க. கல்யாணத்துக்கு அவங்க சரி சொல்லட்டும், மத்தத்தை அப்புறம் பார்க்கலாம். அதுவரை மௌன சாமியாரா இருங்க” என்றாள்.

“நீ சொல்றதும் கரெக்ட்தான், ஆனா அதெப்படி மௌன சாமியாரா இருக்கிறது?”

“ம்ம்… திடீர்னு குண்டு போட்டுட்டு வேற எதுவும் சொல்லாம இருக்கானேனு பாட்டி உங்களை உத்து உத்து பார்ப்பாங்க, பச்ச புள்ள மாதிரி ஈன்னு சிரிச்சிட்டு ஒரு வார்த்தை கூட பேசாம இருக்கணும்”

சிரித்தவன், “ஏன் அப்படி இருக்கணும்?” என கேள்வி கேட்டான்.

“நீங்க ரொம்ப ஸ்ட்ராங்னு தெரிஞ்சா பாட்டி ஆரம்பத்திலேயே ஆஃப் பண்ண பார்க்கலாம். நம்மாள எதுவும் செய்ய முடியாது. ஐஸ் அக்காட்ட போய் டைரெக்ட்டா ஏதாவது பேசி வச்சிட்டாங்கனா ஒரேயடியா மூடு விழாதான்”

“ச்சேச்ச, பாட்டி அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க”

“அவங்கள பொறுத்த வரைக்கும் யாருக்கும் பிரச்சனை வராமல் சுமூகமா தீர்க்கதான் பார்ப்பாங்க. செய்யலாம் செய்யாமலும் போகலாம், எதையும் உறுதியா சொல்ல முடியாது, ஸோ யூ கீப் கொயட்!” என கட்டளை இட அவனும் சரியென சொல்லி வைத்தான்.

கை கட்டி மனைவியையே பார்த்திருந்த கர்ணா, “என்னம்மா இதெல்லாம்?” எனக் கேட்டான்.

“ரெண்டுல ஒண்ணு முடிவு பண்ணனும்னு பேசியிருந்தோமே, நான் முடிவு பண்ணிட்டேன். அஷ்வின் ஸ்ட்ராங்கா இருக்கார். அதை விட முக்கியமா தெளிவா இருக்கார். என் அத்தை, என் அக்கா, என் அப்பா இவங்களை காரணமா வச்சு அஷ்வின் ஆசைய மறுக்கிறது ரொம்ப தப்பு. அத்தை அஷ்வினை பொறுத்த வரை வேற ஆள், அக்கா அப்பா எல்லாம் அவரோட லவ் விட்டு தர அளவுக்கு அவருக்கு முக்கியம் இல்லை. உங்க வேணுப்பா மட்டும் பரிபூரணமா ஓகே சொல்லிட்டா மத்தது எப்படி இருந்தாலும் சரிதான்னு இறங்கிட வேண்டியதுதான்” என்றாள்.

“பாட்டி?”

“பாட்டிக்கும் இதே பதில்தான், ஆனா ஐஸ் அக்கா கல்யாணத்துக்கு ஓகே சொன்னதுக்கு அப்புறம்தான் சொல்வேன்”

“அந்த பொண்ணு சரின்னு சொல்லுமா?”

“அவங்க கல்யாணத்துக்கு மட்டும் ஓகே சொன்னா போதும், மாப்ள நம்மதான் பார்க்கணும். அஷ்வினையே மாப்பிள்ளையா பார்த்திடலாம்” தோள்கள் குலுக்கி சொன்னாள் தாமினி.

“எல்லாம் ஈஸியா போச்சா உனக்கு?”

“ஒரு நல்லது நடக்க நாமளும் காரணமா இருந்திட்டு போவோமே”

“அவன்கிட்ட நான் பேசுறேன்”

“என்ன பேச போறீங்க?”

“நல்லா யோசி தாமினி, ஃபர்ஸ்ட் ஐஸ்வர்யாக்கு பிரவீண் கல்யாணி எல்லாம் அவ செஞ்ச செயலோட எப்படி லிங்க் ஆகியிருக்காங்கனு தெரியாது, தெரிஞ்சா அது ஒண்ணு போதும் அஷ்வினை வேணாம் சொல்ல” என்றான்.

“அப்படி பார்த்தா அவங்களால பாதிக்க பட்டிருக்கார் அஷ்வின், அப்போ அவங்க ஏன் வேணாம் சொல்லணும்?”

“ஏய் என்னடி பேசுற? நாளைக்கு எல்லாரும் ரிலேட்டிவ்ஸ் ஆகும் போது ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிற சிச்சுவேஷன் வரும். அது ஒரு மாதிரி நெருடல் ஆகாதா?”

“கல்யாணியை அஷ்வின் பார்க்கிற மாதிரி ஆகுதுதானே? உங்க ஃப்ரெண்ட் இப்போ கேஷுவலா எடுத்துக்கிறார், அது போலதான் பிரவீண் மாமாவும் எடுத்துக்கணும்”

“ஐஸ்வர்யாவுக்கு உறுத்தாதா?”

“ஒரேயடியா இல்லைனு சொல்ல மாட்டேன், ஆனா எத்தனை நாள் பார்த்துக்க போறாங்க? அதுக்காக அவங்க வாழவே கூடாதா? தப்பு செய்ற மனுஷங்களுக்கு திரும்ப நல்லதா எதுவும் நடக்க கூடாதா? ஒரு முறை தவறிப் போனவங்களுக்கு செகண்ட் சான்ஸ் கிடைச்சா ஏன் அதுல இருக்க நெகடிவ்ஸ் மட்டுமே பார்க்குறீங்க?” மூச்சிரைக்க பேசினாள் தாமினி.

“எதார்த்தத்தை கேட்டா நெகடிவா பேசுறேங்கிற?”

“ப்ச், அஷ்வின் ஐஸ் அக்கா ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். ஏமாந்து போயிருக்காங்க, லைஃப்ல பெரிய அடி வாங்கியும் சர்வைவ் பண்ணிட்டு இருக்காங்க. ஆச்சுவலி அதனாலதான் உங்க ஃப்ரெண்ட்டுக்கு ஐஸ் அக்கா மேல பிடித்தம் வந்திருக்கு. அவங்களால அவங்களை ஈஸியா புரிஞ்சுக்க முடியும், மலருக்கு அப்பா அம்மா ரெண்டு பேரோட அரவணைப்பு கிடைக்கும்” தாமினி பேச பேச கர்ணா பாவமாக பார்த்தான்.

“ஆவி போக பேசிட்டு இருக்கேன், இப்படி பார்த்தா என்ன அர்த்தம்?”

“எப்படி மினி நடக்கும் இது? உன்னால நடத்தி வைக்க முடியுமா?”

“ட்ரை பண்ண போறேன், பெரிய சேலஞ்சே ஐஸ் அக்காவை இன்னொரு கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கிறதுதான், அதை செய்திட்டா கண்டிப்பா கல்யாணம் பண்ணி வச்சிடலாம்”

“இங்க நடு ராத்திரில தூக்கத்துல ஒரு சின்ன பொண்ணு உளறுவா அவளை எங்கேயாவது பார்த்தியா?” என கிண்டலாக கேட்டான் கர்ணா.

“ரொம்ப உளறினேனா?” சின்ன குரலில் கேட்டாள்.

“இடையில என் பேரெல்லாம் வருது, திட்டிறியா கொஞ்சுறியான்னு தான் தெரியல” என சொல்லி சிரித்தான்.

முறைத்தவள், “அதென்ன சின்ன பொண்ணு? நான் சின்ன பொண்ணா?” கோவமாக கேட்டாள்.

“இல்லையா பின்ன?” கர்ணா சிரிப்பை அடக்கிக் கொண்டு கண்களில் விஷமம் நிறைத்து கேட்க குப் என அவளின் முகம் சிவந்து போனது.

“அச்சுவோட ஆரம்பத்துல ஒட்டாம தள்ளி நின்ன, இப்போ அவனோட ஆசைய நிறைவேத்த நானே தயங்கறப்போ நீ முன்னாடி நிக்குற. இதை என்னன்னு சொல்றது? ஆனா சந்தோஷமா இருக்கு” என சொல்லி மனைவியை அணைத்துக் கொண்டான் கர்ணா.

“நான் சின்ன பொண்ணா தெரியாது, ஆனா நல்ல பொண்ணுதான்”

“அதிலென்ன டவுட் மினிக்குட்டி? பட படன்னு பேசுற பத்தரை மாத்து தங்கம்டி நீ” இப்படியாக அவர்களின் கொஞ்சலுக்கும் கெஞ்சலுக்கும் மிஞ்சலுக்கும் பஞ்சமின்றி சென்றது அந்த இரவு.

நாட்கள் நகர்ந்து செல்ல, அடுத்த மாத தொடக்கத்தில் அஷ்வின் வேலை செய்யும் தொழிற்சாலையில் வேலை மாறி விட்டாள் ஐஸ்வர்யா. மலரும் அரை நாள் மட்டும் காப்பகம் சென்று மதியம் வீடு வந்து விடுகிறாள். தாமினிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நட்பு பலப் பட துவங்க உரிமையாக தினம் இரண்டாவது திருமணம் பற்றி பேசுகிறாள் தாமினி.

இதுநாள் வரை வாழ்வதே பெருத்த சிரமத்திலிருக்க இப்போதுதான் எல்லாம் சலனமின்றி செல்ல துவங்குகிறது. மீண்டும் ஒரு வாழ்க்கை என்றால் அதன் பலனோ பாதிப்போ தான் மட்டுமின்றி மலரையும் அது சேருமே. தாமினியின் பேச்சில் இன்னொரு வாழ்க்கை பற்றி துளி ஆசை வந்தாலும் மலை அளவு பயமும் தயக்கமும் இருக்க மறுத்துக் கொண்டேதான் இருந்தாள் ஐஸ்வர்யா.

அஷ்வின் எதுவும் சொல்லாமல் பழைய படி இயல்பாகவே இருக்க, பாட்டியாக எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. சரி வராது என நினைத்து அவனே ஒதுங்கி விட்டான் போலும், நாமாக பேசி மீண்டும் கிளறக் கூடாது என நினைத்து அமைதியாக இருந்து கொண்டார்.

அஷ்வினும் ஐஸ்வர்யாவும் ஒரே நிறுவனத்தில் வேலையில் இருந்தாலும் பார்த்துக் கொள்வதே அரிதுதான். அஷ்வின் அவளை பார்க்க முயலக் கூட இல்லை. அவனை பொறுத்தவரை காதல் என சொல்லி ஐஸ்வர்யாவை மாற்றுவது என்பதெல்லாம் சாத்தியம் இல்லாதது. தன்னோடு வாழ்க்கையில் இணைந்து விட்டால் பின்னர் தானாக மாறிப் போவாள் என எண்ணினான்.

நல்ல விஷயம் என்னவென்றால் மருமகளின் பிரசவம் முடியும் வரையிலும் அஷ்வினின் கல்யாண பேச்சை தள்ளி வைத்திருந்தார் வேணு.

அன்று அதிகாலை நேரம் தன்னை எழுப்பிய மனைவியை முறைத்த கர்ணா, “நைட் சண்டை போட்டதுக்கு இப்படியா சீப்பா பழி வாங்குவ, போடி பெட்டரா யோசி” என சொல்லி குப்புற படுத்துக் கொண்டான்.

“நைட் சண்டையா? ஆமாம்ல, ஆனா எதுக்கு சண்டை?” என தாமினி கேட்க மீண்டும் நேராக படுத்து, “எதுக்கு சண்டை? எது ஸ்டார்ட்டிங் பாயிண்ட்?” என கர்ணாவும் யோசித்தான்.

“தெரியலை மினி, எண்டிங் பாயிண்ட்தான் நினைவிருக்கு” அசடு வழிந்தான் கர்ணா.

“ஹான் ஹான், அதான் அப்படித்தானே நம்ம சண்டைக்கு எண்ட் கார்ட் போடுறீங்க? அதுக்குத்தான் பலன் கிடைச்சிருக்கு” என்றாள்.

கண்களால் என்ன என கர்ணா கேட்க, “பாப்பா” என ஒற்றை வார்த்தை உதிர்த்து சிரித்தாள் தாமினி.

தன்னை நோக்கி சுட்டி காட்டி, “அப்பா?” எனக் கேட்டவன் அவளை நோக்கி சுட்டி காட்டி, “அம்மா?” எனக் கேட்க அவள் ஆம் என தலையசைத்தாள்.

மகிழ்ச்சியில் வார்த்தைகள் வராமல் தாமினியை இழுத்தணைத்து தன் மீது போட்டுக் கொண்டவன் கண்கள் மூடிக் கொண்டான்.

சில தருணங்களில் மௌனம் மட்டும் போதுமானது மகிழ்ச்சியை கொண்டாட…

Advertisement