Advertisement

பார்வையில் மதுச்சாரல் -21(2)

அத்தியாயம் -21(2)

கர்ணா சென்று தன் பாட்டியின் பின்னால் மறைந்து கொள்ள, மலர் அவனை தொடப் பார்க்க, பாட்டியை அங்கே இங்கே என கர்ணா நகர்த்த அவர் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

“எப்போ வந்தார்னு தெரியலை” என தாமினி சொல்லிக் கொண்டிருக்க, “பாட்டியை இந்த ஆட்டு ஆட்டுறாங்களே, பாவம் விழுந்திட போறாங்க” என கவலையாக சொன்னாள் ஐஸ்வர்யா.

“அதெல்லாம் கெட்டியா பிடிச்சிருப்பாங்க க்கா, நான் கிளம்பறேன்”

“மலரை அனுப்பி விடு மினி”

“விளையாடிட்டுதானே இருக்கா, நைட் டின்னருக்கு உங்களுக்கு கம்பெனி கொடுக்க வந்திடுவா” என சொல்லி கீழே சென்றாள் தாமினி.

தாமினியை கண்ட கர்ணா இப்போது அவளின் பின்னால் சென்று ஒளிந்து கொள்ள மலர் பாப்பா இவர்களை நோக்கி ஓடி வந்தாள். கர்ணா கையை பிடித்து மலரிடம் ஒப்படைத்தாள் தாமினி.

மலர் குதூகலிக்க, “என்ன நீ புடிச்சு கொடுத்திட்ட? இது செல்லாது” என வம்பு செய்தான் கர்ணா.

“வைஃப் சொல்றது செய்றது செல்லாதுன்னு சொல்லாதடா” என கிண்டலாக சொன்னான் அஷ்வின்.

“ஏன் சொன்னா என்ன ஆகும்?” என அஷ்வினிடம் வம்புக்கு சென்றாள் தாமினி.

“என் ஃப்ரெண்ட் கால் முடியலை கை முடியலைனு சொல்றான், அப்பப்போ இடுப்பு வலிக்குதுன்னு சொல்றான். அதெல்லாம் நீ போட்டு மிதிக்கிறதால இல்லையா?” என அஷ்வின் கேட்க, “இருக்கும்டா அஷ்வினு, இவ என் பேரனை போட்டு படுத்தி வைக்கிறா” என பாட்டியும் சேர்ந்து கொண்டார்.

இப்போது தாமினி தன் கணவனை முறைக்க அவன் இவர்களை முறைக்க, “பார்த்தியா பாட்டி நம்ம முன்னாடியே நம்ம கர்ணாவை முறைக்கிறதை? கிளிய வளத்து பூனை கைல கொடுத்திட்டோமே” என்றான் அஷ்வின்.

“யாரு… நீங்க கிளி நான் பூனையா?” என சொன்னவனை விட்டு கணவனிடமே சண்டைக்கு சென்றாள் தாமினி.

“ச்சீ அந்த காண்டாமிருகம் பேச்சை பெருசா எடுக்காத மினி, அவன் முதுகு என் கையால பூசை வேணும்னு கேட்குதாம்” என மனைவியின் கையை பிடித்து சமாதானம் செய்தான் கர்ணா.

“சூப்பர்டா, இப்படி தாமினி கோவ படுறப்போ உன்னை திட்டுற மாதிரி திட்டுவேன், வாங்கிக்கோனு சொன்னதால அமைதியா போறேன்” என தீவிரமான முக பாவனை வைத்துக்கொண்டு அஷ்வின் சொல்ல கணவன் கையை உதறி விட்டு உள்ளே சென்றாள் தாமினி.

கர்ணா தன் நண்பனை இழுத்து வைத்து சாத்த, “தள்ளி போங்கடா, குழந்தை முன்னாடி அடிச்சுக்கிட்டு” என அதட்டினார் பாட்டி.

“பப்பி அடுத்து உனக்குத்தான், நீயும் இவன் கூட சேர்ந்துகிட்டு எதுக்கு வெறுப்பேத்துற அவளை?” என பாட்டியிடம் பாய்ந்தான் கர்ணா.

“விளையாட்டுன்னு அவளுக்கு தெரியாதா? சும்மா புலம்பாம போடா” என்றவர் அஷ்வினை பார்த்து, “நீ போ, முத மாடி வரை மலரை விட்டுட்டு வா, அவ மேல ஏறுற வரை அங்கேயே நின்னு பார்த்திட்டு வா” என அவனையும் ஏவினார்.

மலரை விட்டு விட்டு அஷ்வின் வரும் போது இயல்பாகவே இருந்தாள் தாமினி. வேலை மாற்றத்துக்கு ஐஸ்வர்யா சரி என்றதை சொல்லி அவளது முந்தைய வாழ்க்கை பற்றியும் கூறியவள் இரண்டாம் திருமணம் பற்றி பேசியதையும் கூறினாள்.

“குழந்தை இருக்கே, அம்மா பொண்ணு ரெண்டு பேரையும் மனசார ஏத்துக்குற பையன் கிடைக்க வேணாமா மினி?” எனக் கேட்டான் கர்ணா.

“ஏன் இவளை மாதிரியே துணை இழந்து குழந்தையோட இருக்கிறவங்க இருப்பங்களே, அது மாதிரி நல்ல இடம் வந்தா செய்யலாம்” என்றார் பாட்டி.

அஷ்வின் அமைதியாகவே இருக்க மற்ற மூவரும் மிகவும் தீவிரமாக இது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்க, “நான் கல்யாணம் பண்ணிக்கவா?” என்ற அஷ்வினின் கேள்வியில் மூவருமே திகைத்து போயினர்.

முதலில் மீண்ட தாமினி, “என்ன சொன்னீங்கனு தெரிஞ்சுதான் சொன்னீங்களா அஷ்வின்?” எனக் கேட்டாள்.

ஆம் என தலையசைத்தவன், “ஏன் தப்பா? அடுத்தவங்களே நல்லது செய்யணும்னு நினைக்கணுமா? நான் செய்யக் கூடாதா?” என கேள்வி எழுப்பினான்.

“அஷ்வினு! இது… ஹ்ம்ம்… புரியாம பேசாத. வேணு என்ன நினைப்பான்?” என்றார் பாட்டி.

“ஆமாம்டா, இதுல நிறைய இருக்கு. அண்ணிக்கு பிரசவம் ஆனதும் உன் மேரேஜ் செய்யணும்னு வேணுப்பா ஆசை படுறார். இன்னிக்குத்தான் ரீமேரேஜ் பத்தியே ஐஸ்வர்யாகிட்ட தாமினி பேசியிருக்கா, அந்த பொண்ணு ஒத்துக்கணும். இங்க வீட்ல குடி வைக்கவே நிறைய யோசிக்க வேண்டி இருந்தது, கல்யாணம்னா தாமினி அத்தைக்கு தெரிய வரும். பிரவீண் யாருன்னு ஐஸ்வர்யாவுக்குமே சொல்லணும். நிறைய குழப்பம் வரும், இங்க இருக்க வேணாம்னு நினைச்சு ஐஸ்வர்யாவேற எங்கேயாவது போக கூட வாய்ப்பிருக்கு” என பொறுமையாக சொன்னான் கர்ணா.

“இதெல்லாம் நான் யோசிக்கலன்னு நினைக்குறியா?” எனக் கேட்டான் அஷ்வின்.

“அப்போ எல்லாத்துக்கும் தீர்வு இருக்கா உங்ககிட்ட?” எனக் கேட்டாள் தாமினி.

இல்லை என மறுப்பாக தலையாட்டியவன், “ஆனா ஐஸ்வர்யாக்கு ரீமேரேஜ் அப்படிங்கிற பேச்சு வந்த பிறகும் வாய மூடிட்டு இருக்க முடியலை. என்னை தவிர யாராலேயும் அவங்க ரெண்டு பேரையும் நல்லா பார்த்துக்க முடியாது” என உறுதியாக சொன்னான்.

“அஷ்வினு! போதும் இந்த பேச்சு, நீ வீட்டுக்கு போ. மாசமா இருக்க பொண்ணு வேலைய முடிச்சிட்டு சீக்கிரம் தூங்கணும், போ வீட்டுக்கு” என பாட்டி சொல்ல, “என்ன பாட்டி உங்களுக்கே இதுல விருப்பம் இல்லையா?” என அவரை சரியாக கணித்து கேட்டான் அஷ்வின்.

“அப்புறமா பேசலாம், இப்போ அடுத்த வாரம் தீபிகாவுக்கு மருந்து கொடுக்குற ஃபங்ஷன் இருக்கு, அதை பார்ப்போம் முதல்ல” என பாட்டி கண்டிப்பான தோரணையில் கூற நண்பன் முகத்தை ஒரு முறை தீர்க்கமாக பார்த்து விட்டு எழுந்து சென்றான் அஷ்வின்.

“என்ன பப்பி உனக்கு பிடிக்கலையா?” என பாட்டியிடம் கேட்டான் கர்ணா.

“உனக்கு வேற தனியா சொல்லணுடாமா, சீக்கிரம் சாப்பிட்டு படுக்க போங்க” என்றார் பாட்டி.

“ப்ச், என்னன்னு சொல்லு” என விடாமல் கேட்டான் கர்ணா.

“என்ன சொல்ல? இது எப்படி சரியா வரும்? வேணு ஒத்துக்க மாட்டான். ஒரே வீட்ல ஐஸ்வர்யாவை தீபி அனுசரிச்சு போக மாட்டா. தீபி அப்பாவுக்கு மன வருத்தம் வரும். உதவி செய்றது வேற, அதுக்காக இவ்ளோ பிரச்சனைக்கு இடையில வாழ்க்கை தர்றேன்னு… எல்லார் நிம்மதியும்தான் பறி போகும்” என பாட்டி சொல்ல கர்ணா ஏதோ சொல்ல வர கண்களால் கணவனை அமைதி காக்க சொல்லி விட்டாள் தாமினி.

அதன் பின் பேச்சுக்கள் இல்லாமல் சாப்பாடு மட்டும் நடந்தது. நிஜத்தில் பாட்டி பயந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும், அனுபவம் வாய்ந்தவருக்கு அஷ்வினின் தீவிரம் புரிய சிக்கல் இல்லாமல் இதை எப்படி தீர்ப்பது என்ற யோசனை மட்டுமே அவர் மூளை முழுவதையும் ஆக்ரமித்திருந்தது.

கர்ணாவுக்கு தன் நண்பன் மனதில் இப்படி இருக்க கூடும் என்ற அனுமானம் முன்பே இல்லாததால் இன்னும் அதிர்வில் இருந்தான்.

படுக்கையறையில் நடை போட்டுக் கொண்டிருந்த கர்ணா பின் ஒரே இடத்தில் நின்று யோசித்துக் கொண்டிருக்க, “சும்மா பேயடிச்ச மாதிரி நிக்காதீங்க. என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்” என்றாள் தாமினி.

“என்னடி மூணாவது மனுஷன் மாதிரி பார்ப்போம்ங்கிற, நாமதான் ஏதாவது செய்யணும்”

“ஏதாவது செய்றதுன்னா உங்க ஃப்ரெண்ட் ஆசைய நிறைவேத்தி வைக்கிறதா, இல்லை இது சரி வராதுன்னு அவருக்கு புரிய வைக்கிறதா?”

விழித்த கர்ணா, “தெரியலையே” என்றான்.

“முதல்ல இது ரெண்டுல எதுன்னு நாம ஒரு முடிவுக்கு வருவோம், அப்புறம் என்னன்னு பார்க்கலாம். இப்போ தூங்குங்க” என்றாள்.

“தூங்குறதா? நமக்கு எப்போ பாப்பா வரும்னு தினம் கேட்குற, இப்போ தூங்கலாம் சொல்ற?” என குறும்பாக கேட்டான் கர்ணா.

அவனை நோக்கி தலையணையை விட்டெறிந்தவள், “இதுக்கு பேர்தான் ரணகளத்திலேயும் குதூகலம் ம்ம்?” என சீறினாள்.

“அதான் ரெண்டுல ஒண்ணு முடிவு பண்ணிட்டு பார்க்கலாம் சொல்லிட்டியே, இங்க நமக்குள்ள குழப்பம் வேணாம், நாம ரெண்டு பேரும் சேர்ந்து புதுசா…” என்றவன் முடிக்காமல் மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு பாடலை ஹம் செய்தான்.

“என்ன?” என தாமினி மிரட்டலாக கேட்க,

“என்னடி சவுண்டு?” என கர்ணாவும் சத்தமிட, அதன் பின் ‘புதுசா புதுசா ஒரு காதல் பாட்டுதான் அங்கே.

Advertisement