Advertisement

பார்வையில் மதுச்சாரல் -2(1)

அத்தியாயம் -2(1)

திருச்சியின் அதிக ஜன நெருக்கடி இல்லாத தெருவில் இருந்தது கர்ணாவின் வீடு. வீட்டின் முன் பக்கம் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் நித்யகல்யாணியும் சிகப்பு நிற அடுக்கு செம்பருத்தியும் அழகு சேர்த்தன. கொய்யா மரத்தில் அணில்கள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. வீட்டின் பின் பக்கம் இரண்டு தென்னை மரங்கள், இரண்டு வாழை மரங்கள், ஒரு மாமரம், மருதாணி செடி என இருந்தன.

தரை தளத்தில் கர்ணாவும் அவன் பத்மினி பாட்டியும் வசிக்க மேலே இரண்டு தளங்களையும் வாடகைக்கு விட்டிருந்தனர்.

சாக்கு பையில் பழுப்பதற்காக வைத்திருந்த பேயன் வாழைப் பழத்தை எடுத்து பார்த்த பத்மினி, “நல்லா பழுத்து போச்சு டா கர்ணா!” என உற்சாகமாக சொல்லி ஒரு பழத்தை ஆசையாக உறித்து சாப்பிட்டவர் நான்கைந்து பழங்களை கையில் எடுத்து சென்று கர்ணாவிடம் கொடுத்தார்.

“உனக்கு ஏன் சுகர் வரலை பப்பி இன்னும்?” கிண்டலாக கேட்டுக் கொண்டே ஒரு பழம் மட்டும் வாங்கி சுவைத்தவன் அதன் அதீத ருசியில் இன்னொன்றும் சாப்பிட்டான்.

“எனக்கு சுகர் வரலைன்னு உனக்கு ரொம்ப கவலையாடா, போ போய் வேணு வீட்ல போய் நாலு சீப்பு கொடுத்திட்டு வா” என சொல்லி கையோடு ஒரு பையில் போட்டும் கொடுத்தார்.

“ஒரு நாள் லீவ் போட்டேன், ரெஸ்ட் எடுக்க விடுறியா நீ?” சலித்துக் கொண்டே பையை கையில் வாங்கினான் கர்ணா.

“அப்படியா, போங்க தொரை போயிட்டு கரெக்ட்டா அரை மணி நேரத்துக்குள்ள இங்க வந்து சேருங்க, அப்புறம் நல்லா ரெஸ்ட் எடுங்க” என பாட்டி நக்கலாக சொல்ல அவரை பார்த்து அசடு வழிய சிரித்துக்கொண்டே புறப்பட்டான் கர்ணா.

தெரு முனையில் இவர்கள் வீடு என்றால் தெரு கடைசியில் வேணுகோபாலன் வீடு. கர்ணாவின் தந்தையும் வேணுவும் ஒன்றாக வங்கியில் வேலை பார்த்தவர்கள். பேசி வைத்துதான் பக்கம் பக்கமாக இடம் வாங்கி வீடு கட்டினார்கள்.

கர்ணா ஏழு வயது பிள்ளையாக இருக்கும் போது அவனது பெற்றோர் விபத்தில் அகால மரணமடைய பத்மினிக்கு ஆதரவாக இருந்தது வேணு குடும்பத்தினர்தான். பத்மினியின் மகனுக்கு அலுவலகத்தில் கிடைத்த பணம், காப்பீட்டில் கிடைத்த தொகை அனைத்தையும் முறையாக பெற வழி செய்து, மாத வட்டி வரும் வகையில் குறிப்பிட்ட தொகையை வங்கியில் கர்ணா பெயரில் டெபாசிட் செய்து கொடுத்தது எல்லாம் வேணுதான்.

பத்மினியின் பெயரில் இருந்த பூர்வீக இடமொன்றை விற்று அந்த பணத்தில் வீட்டுக்கு மேலே இன்னும் இரு தளங்கள் கட்ட செய்து வாடகைக்கு விடவும் வகை செய்தார் வேணு. இப்படி பொருளாதார ரீதியாக மட்டுமின்றி உங்கள் மகனாக நான் எப்பொழுதும் துணைக்கிருப்பேன் என வாய்மொழியாக அல்லாமல் செயலால் பத்மினியை உணர வைத்தார் வேணு.

வேணுவுக்கு இரு மகன்கள். மூத்தவன் அரவிந்த் கர்ணாவை விட மூன்று வயது பெரியவன், இரண்டாவது மகன் அஷ்வினுக்கு கர்ணா வயதுதான். பெற்றோர் இழந்த புதிதில் அவர்களை நினைத்து கர்ணா அழுதது எல்லாம் கல் மனதையும் கரைக்க செய்து விடும்.

பத்மினியால் பேரனை சமாளிக்க முடியாமல் போக வேணுவின் மனைவி சுலோச்சனா பகல் பொழுதெல்லாம் அவர் வீட்டுக்கு அழைத்து வந்து வைத்துக்கொண்டார். கர்ணாவை அவர் பிள்ளைகளோடு ஒன்ற செய்து மெல்ல மெல்ல கர்ணாவை அவனது பேரிழப்பிலிருந்து மீட்டெடுத்தார்.

தன் பெற்றோர் அளவுக்கு கர்ணாவுக்கு அவனது சுலோ அம்மா… கர்ணா சிறு வயதில் அப்படித்தான் அழைப்பான், சுலோ அம்மாவும் அவன் நினைவுகளில் நீங்காத இடம் பிடித்துக்கொண்டார். ஆமாம், இப்போது அவர் உயிரோடில்லாத காரணத்தால் அவருக்கு நெருக்கமானவர்கள் நினைவுகளில் மட்டுமே வாழ்கிறார்.

தன் நண்பனை பறி கொடுத்த வேணு அடுத்த மூன்று ஆண்டுகளில் தன் காதல் மனைவி சுலோச்சனாவையும் பறி கொடுக்க மொத்தமாக இடிந்து போனார்.

அந்த சமயத்தில் பத்மினியின் உதவி இல்லையென்றால் என்ன ஆகியிருப்பாரோ. வளர்த்து ஆளாக்கிய மகனை இழந்த போது பேரனுக்காக மீண்டெழுந்த பத்மினி வேணுவுக்கு ஆறுதல் சொல்லி அவர் குழந்தைகளையும் தன் பேரன்களாக வரித்துக் கொண்டு மெல்ல மெல்ல அவர்களை தேற்றினார்.

இப்படியாக இரு குடும்பங்களுக்கும் இரத்த உறவு இல்லாத போதும் அவர்களின் இழப்பும் அந்த சமயங்களில் ஒருவர் மற்றவருக்கு செய்த உதவிகளும் கொடுத்த ஆறுதலும் அவர்களை இறுக்கமாக பிணைத்திருந்தது.

இரும்பு கேட்டை திறந்து கொண்டு கர்ணா உள்ளே நுழைய, “வாடா, ஹாஸ்பிடல் போயிட்டு வந்தாச்சா?” என விசாரித்தார் வாசலில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த வேணு.

மருத்துவமனை சென்று வந்த விவரங்களை சொல்லிக் கொண்டே கர்ணா உள்ளே செல்ல வேணுவும் அவனை தொடர்ந்து சென்றார்.

உரிமையாக வீட்டின் சமையலறை சென்று வாழைப்பழ சீப்பை எடுத்து வைத்த கர்ணா, “இது அந்துபிக்கும் அச்சுக்கும், நீங்க வேணும்னா ஒண்ணு எடுத்துக்கோங்க வேணுப்பா” என்றான்.

“டேய் என் சுகர் எல்லாம் கண்ட்ரோல்ல இருக்குடா, ரெண்டு சாப்பிட்டுக்கிறேன்டா. பேயன் பழமெல்லாம் அவ்ளோ ஈஸியா கிடைக்குமா?” கேட்டுக் கொண்டே அப்போதே இரண்டு பழங்களை சாப்பிட்டார் வேணு.

மூன்றாவதாக ஒரு பழத்தை அவர் எடுக்க போகையில், “தலைவரே சுகர் அதிகம் ஆகிப் போச்சுன்னா அந்துபி கொடூரமா டயட் சொல்லுவான், பார்த்துக்கோங்க” என கர்ணா மிரட்ட மனமே இல்லாமல் ஹால் சென்றார் வேணு.

இரண்டு வருடங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டார் வேணு. அந்த நாட்கள் அனைவருக்கும் வயிற்றில் புளியை கரைக்கும் நாட்கள். வேணு யோசிக்கவே இல்லை, வேலையை விட்டு விட்டார்.

“இந்த சண்டே அரவிந்துக்கு பொண்ணு பார்க்க போகணும்டா, எல்லோரும் போய் பார்க்கணும்னுதான் சண்டே ப்ரோக்ராம் போட்ருக்கு, அம்மாகிட்ட சொல்லிட்டேன்” என பத்மினி மூலம் ஏற்கனவே கர்ணா அறிந்த விஷயத்தை சொன்னார் வேணு.

“ஃபோட்டோலேயே அந்துபி ஃபிளாட், இப்போ அவங்களுக்குத்தான் அந்துபியை பிடிக்கணும். எனக்கு ஒரே ஒரு கண்டிஷன்தான், கல்யாணத்துக்கு அப்புறம் அந்துபியை அந்துபின்னுதான் கூப்பிடுவேன், அண்ணான்னு கூப்பிட சொல்லி எல்லாம் கட்டாயப் படுத்தக் கூடாது” என்றான் கர்ணா.

“எல்லாம் சரியா வரணுமேன்னு இருக்கு எனக்கு, இவன் கவலைய பாரு”

“பின்ன பழக்கத்தை மாத்திக்க முடியாது என்னால”

கர்ணா மழலையாக பேச ஆரம்பித்த பொழுது அரவிந்தை ‘அந்துபி’ என்றும் அஷ்வினை ‘அச்சு’ என்றும் அழைக்க ஆரம்பிக்க எப்படி என தெரியாமல் நன்றாக பேச ஆரம்பித்த பிறகும் அவர்களை அப்படியே அழைத்தான். பெரியவர்கள் முதலில் திருத்த முயற்சிக்க கர்ணா ஒத்துழைப்பு நல்காததால் அவனது அத்தகைய அழைப்பு மாறவே இல்லை.

இப்போது அரவிந்த் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராகவும் கர்ணா இரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியராகவும் பணியில் இருக்கின்றனர். அஷ்வின் வாகன உதிரிகள் தயாரிக்கப் படும் தனியார் நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டு துறையில் பணியில் இருக்கின்றான்.

மாலை இரவாக கனிய ஆரம்பிக்க அரவிந்தும் அஷ்வினும் வந்து சேர்ந்தார்கள்.

“என்னங்கடா இன்னைக்கு ஒரே நேரம் வர்றீங்க?” வேணு செய்து கொடுத்த உருளைக்கிழங்கு போண்டாவை சுவைத்துக் கொண்டே கேட்டான் கர்ணா.

“அடடே கர்ணப் பிரபு இங்கதான் இருக்கீங்களா?” கர்ணா முன்பிருந்த போண்டா தட்டை தான் பறித்துக் கொண்டு கேட்டான் அஷ்வின்.

“அடே அச்சு, இந்த புதருக்குள்ள உன் முகத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டியதா இருக்கு, ப்ளீஸ் சண்டே ஷேவ் பண்ணாட்டாலும் பரவாயில்ல, ட்ரிம்மாவது பண்ணி தொலடா” என பேசிக் கொண்டே அஷ்வின் கையிலிருந்த தட்டை பட்டென தட்டிப் பறித்துக் கொண்டு சற்று தள்ளி நின்று கொண்டான் கர்ணா.

அரவிந்த் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தமர, அவனிடம் போண்டா தட்டை நீட்டினான் கர்ணா.

ஒரு போண்டா மட்டும் எடுத்துக் கொண்ட அரவிந்த், “பாட்டிக்கு ஸ்பெக்ஸ் மாத்தியாச்சா?” என விசாரித்தான்.

“பின்ன… சண்டே உனக்கு பார்க்க போற பொண்ண நல்லா பார்க்கணும்ல, பேஷா மாத்தியாச்சு” என்றான் கர்ணா.

“சும்மா ரீல் விடாதடா, பாட்டி உனக்குதான் மும்முரமா பொண்ணு தேடிட்டு இருக்கிறது தெரியாதா எங்களுக்கு?” என்றான் அரவிந்த்.

“இன்னும் உனக்கே முடியலை, எனக்கென்ன அவசரம்?” எனக் கேட்டான் கர்ணா.

“கர்ணா! அம்மா அவங்க நல்லா இருக்கும் போதே உனக்கு கல்யாணம் செய்ய நினைக்கிறாங்க. அரவிந்துக்கே கல்யாண பேச்சு மூணு வருஷம் முன்னாடி ஆரம்பிச்சது, ஏதோ தடை பட்டு போச்சு. எல்லாம் காலத்தோட நடக்கணும், மறுத்து பேசாத” என்றார் வேணு.

“எனக்கும் அச்சுக்கும் ஒரே வயசுதான், அவனுக்கு நீங்க செய்யும் போது நானும் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என கர்ணா சொல்ல வேணு உட்பட மூவரும் அவனை முறைத்தனர்.

“இதென்ன அப்பா புள்ளைங்க எல்லாம் சேர்ந்துகிட்டு மிரட்ட பார்க்குறீங்களா? என் பப்பிகிட்ட சொல்லிடுவேன்” விளையாட்டாக பேச்சை திசை மாற்ற விரும்பினான் கர்ணா.

“இந்த விஷயத்துல உன் பப்பியும் எங்க கூட கூட்டு களவாணி” என்றான் அரவிந்த்.

“என்னை காட்டி எல்லாம் தட்டி கழிக்காத கர்ணா, நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலையே, என் மனசுக்கு பிடிச்ச மாதிரி யாரையாவது மீட் பண்ணினேனா கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன். முதல்ல அரவிந்துக்கு முடியட்டும், நீ பாட்டி சொல்லை தட்டாதே” என்றான் அஷ்வின்.

“அந்துபி நீ தூங்கும் போது குறட்டையோட சேர்த்து தீபி தீபின்னு புலம்பறியாமே…” அரவிந்துக்கு பார்த்திருக்கும் தீபிகாவை வைத்து கிண்டல் செய்ய ஆரம்பித்தான் கர்ணா.

“தீபி இல்லடா தீபு, அவங்க வீட்ல தீபின்னு கூப்பிடறதால அண்ணாத்தே அவர் மட்டும் கூப்பிட ஸ்பெஷல் செல்ல பேர் வச்சிருக்கார்” அஷ்வினும் கிண்டலில் இணைந்து கொள்ள அரவிந்த் முகம் வெட்கத்தில் சிவந்தது.

“என்னடா அங்க ஓகே சொல்லாமலே இப்படி வெட்க படுறார் கேஷியர்” கர்ணா இன்னும் ஓட்ட, “டேய் ஏங்கடா!” சிரிப்பும் வெட்கமுமாக கேட்டான் அரவிந்த்.

விடாமல் கர்ணாவும் அஷ்வினும் அண்ணனை வைத்து செய்ய மூத்த மகனை நிறைவோடு பார்த்திருந்த வேணு சமையலறை சென்று விட்டார்.

இளையவர்கள் மூவரும் ஓயாமல் பேசிக் கொண்டிருக்க பாட்டியிடமிருந்து வேணுவுக்கு அழைப்பு வந்தது. பெண் பார்க்கும் படலம் பற்றி என்ன வாங்க வேண்டும் எத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும் என இருவரும் பேசி முடித்து, “இங்க வந்தாதான் அவனுக்கு டைம் போறதே தெரியாதே, அனுப்பி வைக்கிறேன்” என சொல்லி வைத்தார் வேணு.

வேணு கிளம்ப சொல்வதற்கு முன் எழுந்து நின்றான் கர்ணா.

“டைம் என்னடா ஆகுது? இதுக்கு மேல உனக்கு சாப்பாடு போட்டுட்டு அவங்க தூங்கணும், சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ” என வேணு சொல்ல மழுப்பலாக சிரித்து விட்டு நழுவி சென்றான் கர்ணா.

Advertisement