Advertisement

பார்வையில் மதுச்சாரல் -20(2)

அத்தியாயம் -20(2)

தீபிகா தேநீரோடு வர அவளும் பாட்டியும் பருக ஆரம்பித்தனர்.

வேணுவுக்கு அழைத்த கர்ணா, “அச்சு வர லேட் ஆகும் வேணுப்பா, ஐஸ்வர்யாவை நீங்க ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போயிட்டு வாங்க. இன்னையோட டோஸ் முடிஞ்சதுன்னு சொன்னான். வென்ஃப்லோ ரிமூவ் பண்ணி அழைச்சிட்டு வாங்க” என சொல்லி வைத்தான்.

ஃபேன்சி பட்டு ஒன்றில் தயாராகி வந்த தாமினியை விழிகளிலும் மனதிலும் நிறைத்துக் கொண்டே தான் கிளம்ப அறைக்கு சென்றான் கர்ணா.

“ஆசையா கூட்டிட்டு போறார், சும்மா சின்ன புள்ள மாதிரி சண்டை போடாம ஒழுங்கா போயிட்டு வரணும்” என அறிவுரை சொன்னாள் தீபிகா.

பாட்டி எழுந்து வெளியில சென்று நின்று கொண்டார். இந்த நேரம் பூ விற்று செல்வார்கள், பேரன் கிளம்பும் முன் யாராவது வர வேண்டும் என தவிப்போடு சாலையையே பார்த்திருந்தார் பாட்டி.

அவரை சுட்டிக் காட்டிய தீபிகா, “ஏதாவது ஒரு வகையில நீ நடந்துக்கிறது பாட்டியா ஹர்ட் பண்ணிடும் மினி. நீங்க சந்தோஷமா இருக்கீங்கங்கிறது மட்டுமில்ல இருப்பீங்க அப்படிங்கிற நம்பிக்கையையும் பாட்டிக்கு நீ தரணும்” என்றாள்.

புன்னகைத்த தாமினி, “சரி ஆனா பாட்டி ஒண்ணும் என்கிட்ட எதுக்காகவும் கோச்சுக்க மாட்டாங்க” என சொல்லி விட்டு பாட்டியிடம் சென்றாள்.

“விடுங்க இன்னிக்கு உங்க பேரன் ஃ புல் ஃபார்ம்ல இருக்காரு போல, வழில வாங்கி தருவார்” என்றாள் தாமினி.

“எதுக்குடி வம்பு? அந்த மடையனுக்கு நீ கூட இருந்தா மூளை சரியா வேலை செய்யாது, மறந்தாலும் மறந்து போவான். அரை முழம் பூவுக்கு ஆறு நாள் மூஞ்சு தூக்கி வச்சுக்கவா?” எனக் கேட்டார் பாட்டி.

“அப்படியா மறந்து போவாரா உங்க பேரன்? அப்போ ஒழுங்கா உள்ள வாங்க, வெளில வான்னு கூப்பிட தெரியுதில்ல? வாங்கி தர்றாரா இல்லையான்னு பார்க்கிறேன்” அடமாக சொன்னாள் தாமினி.

“அடியே! அவனை ஒண்ணும் பண்ணிறாதடி”

“நீங்க வாங்க உள்ள, ஏதாவது அவர்கிட்ட பேசுனீங்க அப்புறம் இருக்கு உங்களுக்கு?” என தாமினி மிரட்டிக் கொண்டிருக்க கர்ணா வெளியில் வந்து விட்டான்.

பேரனிடம் ஏதோ பாட்டி சொல்லப் போக கண்களை உருட்டி மிரட்டினாள் தாமினி.

“என்ன பப்பி?” என கர்ணா கேட்க, “இவ ஹாண்ட் பேக் மறந்திட்டா பாரு” என்றவர் “போ மினி போய் எடுத்திட்டு வா” என்றார்.

“அவ இருக்கட்டும், நான் எடுத்திட்டு வர்றேன்” என சொல்லி கர்ணா உள்ளே விரைய, “பாட்டி!” என கண்டிப்போடு அழைத்தவள் பின் கிண்டலாக, “பாட்டி…” என ராகமிழுத்து அழைக்க, “இவன் புரிஞ்சுக்காம உள்ள போறத பாரு, ஹ்ம்ம்.. ம் இன்னிக்கு உன் ஊருக்கு மட்டும் மழை போல… போகுது, ரொம்ப லேட் பண்ணாம வந்துடுங்க. வெளிலேயே சாப்பிட்ருங்க” என சொல்லி ஓரமாக நின்று கொண்டார் பாட்டி.

இருவரும் பைக்கில் கிளம்ப பாட்டியை பார்த்து கண்ணடித்து சிரித்துக்கொண்டே அவர் பார்வையிலிருந்து மறைந்தாள் தாமினி.

தீபிகா வெளியில வர அவளிடம் விஷயத்தை சொல்லி, “ரெண்டும் இப்படி முட்டிகிட்டே திரிஞ்சா குடும்பம் எப்போடியம்மா பெருகுறது?” என ஆயாசமாக கேட்டார்.

“எல்லாம் பெருகும் பெருகும்” என தீபிகா சொல்ல வேணு வந்தார். அவர்கள் பேச ஆரம்பிக்க நேரம் அப்படியே சென்றது. மலரும் ஐஸ்வர்யாவும் கூட கீழே வர தீபிகா தானாக நலம் விசாரித்தாள். குழந்தை தாமினியை தேட வெளியல் சென்று விட்டதாக பாட்டி சொல்ல அங்கேயே விளையாட ஆரம்பித்தாள்.

மதியத்திலிருந்தே கீழே செல்ல வேண்டும் என மலர் கேட்டுக் கொண்டேதான் இருந்தாள். அதிகம் தொந்தரவு செய்கிறோமோ அவர்களின் ஓய்வு நேரம் மலரால் பாதிக்குமோ என பயந்துதான் கீழே அனுப்பவில்லை.

இதற்கு மேலும் அந்த சிறு வீட்டில் குழந்தையை இழுத்து பிடிக்க முடியாமல்தான் கீழே வந்திருந்தாள். அவளது முகத்திலேயே சங்கடம் அப்பட்டமாக தெரிந்தது.

போக போகத்தான் இங்கு இயல்பாக இருப்பாள், எல்லாவற்றையும் வாய் மொழியால் உணர்ந்துவதை காட்டிலும் நாம் நடந்து கொள்ளும் விதத்தில் உணர்ந்து கொள்ளட்டும் என பாட்டியும் அமைதியாகவே இருந்து கொண்டார்.

ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலைக்குத்தான் அழைத்து சென்றான் கர்ணா. இருவரும் இறங்கிக் கொள்ள, தாமினியின் கையை பற்றி தன் கையோடு அழுத்தமாக பிணைத்துக் கொண்டான்.

“ப்ச், வலிக்குது” என சிணுங்கினாள் தாமினி.

லேசாக தளர்த்தியவன், “பாட்டிகிட்ட பூ வேணாம் உங்க பேரன் வாங்கி தரட்டும்னு சொன்னியா?” எனக் கேட்டான்.

“அடப்பாவிங்களா! எப்படி சொன்னாங்க?” வியப்பாக கேட்டாள்.

“பப்பி சொல்லலை மினி” என்றவன் கைபேசி எடுத்து காட்டினான்.

“அண்ணி மெசேஜ் பண்ணியிருக்காங்க, வழில சிக்னலுக்கு நின்னப்போ பார்த்தேன்” என்றான்.

“அதுக்கப்புறம் எவ்ளோ பூக்கடை வந்துச்சு?” கோவமாக கேட்டாள்.

“ஆனா நானா வாங்கி தந்த மாதிரி இருக்காதே” என கர்ணா சொல்ல தாமினிக்கு சிரிப்புதான் வந்தது.

“தீபி அனுப்பின மெசேஜ் காட்டாம நீங்களா வாங்கி தர்றதுக்கு என்ன?” என சிரிப்பினூடே கேட்டாள்.

“சொதப்பினா சொதப்பிட்டு போறேன், அதுக்காக பொய்யா எல்லாம் உன்னை இம்ப்ரெஸ் செய்ய விருப்பமில்லை” என மனதில் நினைத்ததை அப்படியே கர்ணா சொல்ல தங்கள் கைகளின் பிணைப்பின் அழுத்தத்தை கூட்டிய தாமினி நேசம் நிறைந்து சிரித்தாள்.

“கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு பூ வாங்கி கொடுத்திருக்கேன், இன்னிக்கு என்னவோ… அதிகமா எக்ஸைட் ஆகுறேன் போல…”

“பரவாயில்லை, நடக்கலாம் வாங்க” என தாமினி சொல்ல வெயில் தாழ்ந்து விட்ட அந்த நேரத்தின் குழுமையை, மிதமான காற்றை, பொதுவான இடத்தில் கிட்டிய தனிமையை அனுபவித்துக் கொண்டே நடந்தார்கள்.

தாமினி அவளது ஸ்கூட்டரில் சறுக்கி சென்ற இடம் பார்த்து நினைவு கூர்ந்து சிரித்தார்கள்.

தன்னை வேண்டாம் என கர்ணா சொன்னதை சொல்லி முகத்தை சின்னதாக்கினாள் தாமினி.

கோர்த்திருந்த அவளது கையை எடுத்து நெஞ்சில் வைத்து அழுத்தியவன், “இனிமே நம்ம பயணம் சேர்ந்துதான் மினி” என்றான்.

உட்காரலாம் என்ற கர்ணா சாலை ஓரம் பள்ளத்தின் பக்கம் கால்கள் தொங்க போட்டு அமர்ந்து தாமினி அமர கைக்குட்டை விரித்து போட்டான்.

அமர்ந்து கொண்டவள், “லவ் பண்ண ரொம்ப நல்ல இடம்” என கிண்டல் செய்தாள்.

“பார்க் பீச் போனா அந்த இடமெல்லாம் லட்சக்கணக்குல லவ்வர்ஸ் பார்த்திருக்கும். ஆனா இந்த இடத்துக்கு நாம மட்டும்தான், இது நம்மளோட இடம் மினி”

“ஹ்ம்ம்… அப்போ இங்கேயே ஒரு மஹால் கட்டிடுங்க”

“எதுக்கு? நாளைக்கு நம்ம இடத்தை ஊர் உலகம் முழுக்க வந்து பார்க்கவா? நமக்கு பிரைவேசி வேணாம்? நான் மாட்டேன் ப்பா” என தோள்களை குலுக்கி கர்ணா சொல்ல நன்றாக சிரித்தாள் தாமினி.

அந்த தெத்துப் பல் அழகில் மயங்கினான் கர்ணா. கணவன் முகம், பார்வை கண்டு திரும்பிக் கொண்டவள், “போகலாம்ங்க, யாருமில்லாம இருக்க பிடிச்சிருக்குன்னாலும் பயமா இருக்கு” என்றாள்.

“நாம இங்க இருக்கோம்னு அச்சுக்கு தெரியும் மினி, நான் இருக்கும் போது என்ன பயம்?”

தாமினி முறைக்க கர்ணா எழுந்து அவளும் எழ உதவினான். சாலையின் முடிவில் சென்ற வளைவில் ஒரு தேநீர் கடை இருக்க மசாலா தேநீர் வாங்கி பருகினார்கள். அங்கு ஓரளவு கூட்டம் இருக்க தாமினியை அங்கேயே இருக்க சொல்லி விட்டு இவன் மட்டும் சென்று பைக் எடுத்து வந்தான்.

அடுத்து உச்சி பிள்ளையார் கோயில் நோக்கி வண்டியை விட்டான். இந்த முறை மறக்காமல் வழியில் பூ வாங்கி கொடுத்தான்.

இருவரும் சேர்ந்து நடப்பது இதுதான் முதல் முறை. அதீத உற்சாகத்தை மீறி மனதில் ஒரு வித அமைதி பரவியது. இறங்குவோரின் பார்வை தவறாமல் இந்த தம்பதிகளை தொட்டு சென்றது.

இருவர் முகங்களும் பூரித்து களை நிரம்பி மலர்ந்து போயிருந்தன. பிள்ளையாருக்கு மனமாற நன்றி சொல்லி விட்டு இறங்கினார்கள். தாமினிக்கு பிடித்த உணவகத்தில் இரவு உணவையும் முடித்துக் கொண்டு மிதமான வேகத்தில் மீண்டும் பைக் பயணம்.

தாமினி தலையில் பூ பார்த்த பாட்டி நெஞ்சில் கை வைத்து நிம்மதி மூச்சு விட, “ஆனாலும் என் பப்பிய ரொம்ப டென்ஷன் பண்ற நீ” என்றான் கர்ணா.

“அடேய் சும்மா இருக்கிறவளை கிளப்பி விடாத, போய் தூங்குங்க” என அவர்களை பேச விடாமல் அறைக்கு துரத்தி விட்டார் பாட்டி.

அறைக்குள் வந்த உடனே, “நான் என்ன செஞ்சேன் உங்க பப்பிய?” இடுப்பில் கை வைத்துக்கொண்டு கோவமாக கேட்டாள் தாமினி.

“என்னடி ரொம்ப கத்துற? பயந்திடுவேன்னு நினைச்சியா?” என கர்ணாவும் பதிலுக்கு கத்த இதனை எதிர்பார்க்காத தாமினி அதிர்ந்து போய் பார்த்தாள்.

அடக்கிய அவனது சிரிப்பு வெளிப்பட தாமினி முகத்தை திருப்ப அவளால் முடியவில்லை. கோவமாக ஏதோ சொல்ல வந்தவளால் எதுவும் பேசவும் முடியவில்லை.

இருவரது நாசிகள் தொட்டுக் கொள்ள, இருவரது சுவாசமும் ஒன்றாகியிருக்க காதலுரை பேசிக் கொண்டிருந்த உதடுகள் பிரிய மறுத்தன.

அடுத்த கட்ட நகர்வுக்காக ஏக்கமாக தவிப்பாக யாசிப்பாக பார்த்தான் கர்ணா. “ஹ்ம்ம்… நல்ல நாள்தான்” என்ற தாமினியின் குரல் ரீங்காரமாக கர்ணாவின் காதில் ஒலித்தது.

இருவரின் இத்தனை வருட இளமை தவம் உடைய ஆரம்பித்தது. இதுவரைக்கும் அறிந்திராத உணர்ந்திராத தேடல் நோக்கி சென்றது அவர்கள் பயணம்.

Advertisement