Advertisement

பார்வையில் மதுச்சாரல் -20(1)

அத்தியாயம் -20(1)

மாலையில் தாமினியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கிளினிக் சென்று ஐஸ்வர்யாவுக்கு மருந்து செலுத்தி அழைத்து வந்து விட்டான் அஷ்வின்.

தீபிகா மூலம் வத்சலாவுக்கும் விஷயம் தெரிய, “யாருமில்லாத பொண்ணு, உன்னால அவளுக்கு கிடைக்கிற உதவி இல்லைன்னு ஆக வேண்டாம் தீபி, இதை வச்சு மாப்ள கூட சண்டை போடாம சந்தோஷமா இருக்கணும், என்ன?” என்றார்.

“நானும் உதவக் கூடாதுன்னு நினைக்கல ம்மா. அதனாலதான் சரின்னு சொல்லிட்டேன். ஆனாலும் தாமினி வீட்ல குடி வைக்கிறாங்க, அவளுக்கும் கர்ணாவுக்கும் பிரச்சனை ஆகிட கூடாதுன்னு ஒரு யோசனை ஓடுதும்மா, ஏற்கனவே அவங்களுக்குள்ள இன்னும் ஏதும் சரியாகல” என கவலையாக சொன்னாள் தீபிகா.

“இந்த யோசனை சொன்னதே உன் தங்கச்சிதானே, அப்புறம் அவளே சண்டை போடுவாளா? அவங்களுக்குள்ள எப்பவும் சண்டை சச்சரவு வந்தாலும் இந்த பொண்ணை வச்செல்லாம் சண்டை போட மாட்டா, பயப்படாத”

“அப்போ வேற விஷயம் வச்சு சண்டை போடுவாங்கிற?” எனக் கேட்டு சிரித்தாள் தீபிகா.

“போடட்டும், சண்டை போட்டு போட்டு தெளிஞ்சாதான் புரிதல் வரும், கோச்சுக்கிட்டு இங்க வந்து உட்காராம இருந்தா சரிதான்”

“அதுக்கெல்லாம் கர்ணா விட மாட்டார்மா”

“உன் வீட்டுக்காரர் கூட விடல, உன்னை தேடி வந்திட்டார். இதெல்லாம் திருஷ்டிதான், வேறன்ன சொல்ல?” இப்படியாக தாயும் மகளும் சிறிது நேரம் பேசி விட்டு வைத்தனர்.

வீடு வந்த கணவரிடம் விஷயத்தை சொல்லி விட்டார் வத்சலா. அவருக்குத்தான் இதில் விருப்பமில்லை, கூடவே கோவமும்.

“ஏதோ சின்ன குழந்தை இருக்கு, எதுவும் சொல்லக்கூடாதுனு நினைச்சா இதென்ன இப்படி பண்றாங்க? இந்த விஷயம் பிரேமாவுக்கு தெரிஞ்சா கோவ பட மாட்டாளா? உன் தங்கச்சிக்கு கூட மன வருத்தம் வரலாம். வேற எங்கேயாவது குடி வைக்க சொல்லு” என்றார் மதியழகன்.

“உங்க தங்கச்சி பேரப் புள்ளையே எடுத்திட்டாங்க, பிரவீணும் கல்யாணியும் நல்லா வாழும் போது பழசையே பேசக்கூடாது. முதல்ல இதெல்லாம் நீங்க ஏன் சொல்றீங்க? ஏதாவது விஷேஷம்னா இங்க வர போக இருக்காங்க, மணிமேகலைய கூட கொஞ்சம் மாசத்துல அங்க அமெரிக்கா கூப்பிட்டுக்க போறாங்க. நீங்களா வாய விட்டு குட்டைய குழப்பாம இருந்தா எதுவும் பிரச்சனை ஆகாது”

“ஏய் என்ன நீ? அதெப்படி என் தங்கச்சிக்கு தெரியாம போகும்? அவ கோச்சுக்குவா?”

“சும்மா தங்கச்சி தங்கச்சின்னீங்க…” என பல்லை கடித்த வத்சலா, “உங்க மாப்பிள்ளைங்க ரெண்டு பேரும் ஏற்கனவே கோவத்துல இருக்காங்க, அவங்க உறவு சுமூகமா இருக்கணும்னா உங்க தங்கச்சி பத்தி ரொம்ப யோசிக்கிறத நிறுத்துங்க” என கண்டிப்போடு சொன்னார்.

“அதில்ல வத்சலா…” என மதி ஏதோ சொல்ல வர கையை காட்டி அவரை பேச விடாமல் செய்தவர், “ரிடையர் ஆனோமா பேரன் பேத்தி எடுத்து கொஞ்சினோமா மாப்பிள்ளைங்களோட அரட்டை அடிச்சோமான்னு காலத்தை ஓட்டணுமா, இல்லை உங்க தங்கச்சிக்காக எல்லாரையும் பகைச்சுக்கிட்டு நிம்மதி இல்லாம வாழனுமா?” என சத்தம் போட மதியழகன் வாய் திறக்காமல் உள்ளே சென்று விட்டார்.

மதியழகனுக்கு இதில் துளியும் விருப்பமில்லை, ஆனால் மனைவி சொல்வது போல மாப்பிள்ளைகளுடன் மனஸ்தாபம் இன்னும் வலுத்து விடுமோ என்ற பயமிருந்தது. இப்போதைக்கு அமைதி காப்போம், என் பெண்களுக்கு இதனால் ஏதாவது பிரச்சனை என்றால் அப்போது யார் சொன்னாலும் கேட்காமல் அப்பெண்ணை அப்புற படுத்தி விட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டார்.

தன் மாமனாரை உன் அப்பா என கர்ணா சொன்னதை வைத்து அன்றைய இரவும் தாமினி கர்ணா தம்பதிகளுக்கு வழக்கம் போல முட்டல், மோதல், கெஞ்சல், கொஞ்சல் எனதான் சென்றது. ஆனால் விடியற்காலையில் எழுந்த போது இருவருமே பிணக்கை மறந்து போயிருந்தனர்.

ஐஸ்வர்யா கையில் நரம்பு ஊசி இருந்த காரணத்தால் தாமினிதான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தாள். அஷ்வினும் வேணுவும் வந்திருந்தனர். தீபிகாவுக்கு வரக்கூடாது என்றில்லை, அதி காலையில் எழ சோர்வாக உணர்ந்து ‘வரணுமா?’ என ஒரு வார்த்தைதான் கேட்டாள். உடனே வேண்டாம் என சொல்லி விட்டான் அரவிந்த்.

பால் காய்ச்சி அனைவருக்கும் கொடுத்தாள் தாமினி. அவளோடு கர்ணா அவ்வப்போது கண்களால் பேச, அனைவர் முன்னிலையிலும் இதென்ன என முதலில் முறைத்தவள் பின் கண்டு கொள்ளவே இல்லை.

“கல்யாணம் பண்ணியும் ஒன் சைட் லவ் போல இருக்குடா உன் கதை” என கிண்டல் செய்தான் அஷ்வின்.

“ஏய் டபுள் சைட்தான், அவ வெட்க படுறா” என சொன்ன கர்ணா முகத்தில்தான் அத்தனை வெட்கம்.

அதன் பின் மலரை அழைத்துக் கொண்டு ஆண்கள் அனைவரும் கீழே வந்து விட இட்லி, சாம்பார், கேசரி என எளிமையாக அங்கேயே உணவு சமைத்தார்கள் பெண்கள்.

முதல் தளத்தில் குடி இருந்தவர்கள் வந்து பார்த்து சென்றார்கள். அவர்களிடம் ஏற்கனவே, “ஆதரவற்ற பெண், தூரத்து சொந்தம்” என பாட்டி சொல்லியிருக்க அதற்கு மேல் ஐஸ்வர்யாவிடம் அவர்கள் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

தீபிகாவுக்கும் காலை உணவு அஷ்வின் மூலமாக பாட்டி கொடுத்தனுப்ப முதலில் யோசித்தவள் பின் வாங்கிக் கொண்டாள். பார்த்திருந்த அரவிந்த், “வேணாம்னா சாப்பிடாத, திருப்பி அனுப்பினா நல்லா இருக்காது” என்றான்.

முறைத்த தீபிகா, “கொடுத்து விடுறேன்னு முன்னாடியே என்கிட்ட சொல்லலை. நானும் பொங்கல், சட்னி எல்லாம் செய்து வச்சிட்டேன், அதை நினைச்சுதான் யோசிச்சேன்” என்றாள்.

அரவிந்த் கண்களால் மன்னிப்பு வேண்ட, “சொல்லலையா? பாத்திரத்துல கொஞ்சம் வச்சு கொடுங்க அண்ணி, யாரும் சாப்பிடல, வேஸ்ட் ஆகாது” என்றான் அஷ்வின்.

உணவெடுக்க தீபிகா உள்ளே செல்ல, “பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசி அரவிந்த்” என்றான் அஷ்வின்.

“அவ சாப்பிட யோசிக்கிறா நினைச்சு வாய தொறந்தேன் டா”

“அப்போ இனிமே வாயே திறக்காத” என சிரிப்புடன் அஷ்வின் சொல்ல அரவிந்தும் சிரித்தான்.

தீபிகா கொடுத்தனுப்பிய உணவோடு சேர்த்து காலை உணவை முடித்துக் கொண்டதும் ஐஸ்வர்யாவையும் மலரையும் அவர்கள் வீட்டில் விட்டு மற்றவர்கள் கிளம்பி விட்டனர்.

வேலைக்கு செல்ல கர்ணா தயாராகிக் கொண்டிருக்க உள்ளே வந்தாள் தாமினி. சட்டையை டக் இன் செய்து கொண்டிருந்தவன் அவளை இழுத்தணைக்க திகைத்தவள் பின் வாகாக அவன் அணைப்பில் இருந்து கொண்டே, “ஸ்டேஷன் போகணும் நீங்க” என்றாள்.

“வேணும்னா லீவ் போடவா?” என குறும்பாக கேட்டான்.

“ம் போடுங்க” என சீண்டலாக சொன்னாள்.

“லீவ் போட்ருவேன், அப்புறம் ரூம் விட்டு நீ வெளில போக கூடாது”

“பாட்டி கேட்டா என்ன சொல்றதாம்?” என தாமினி கேட்க கர்ணா விழிக்க அவனிடமிருந்து விலகியவள், “கிளம்புங்க” என சொல்லி சிரித்தாள்.

“நல்லா டைவெர்ட் பண்ற என்னை” என்றவன் மீண்டும் அவளை பிடித்திழுத்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு அடம் செய்து தானும் பெற்றுக் கொண்ட பின்னர்தான் அறையிலிருந்து வெளியேறினான்.

அஷ்வினும் அலுவலகம் சென்று விட மதியம் போல ஐஸ்வர்யாவை ஒரு முறை சென்று பார்த்து வந்தாள் தாமினி. முன் மாலை நேரம் தீபிகா இங்கு வந்தாள். அவளாகவே ஐஸ்வர்யாவை பார்த்து வரட்டுமா எனக் கேட்டாள்.

“ரெண்டு மாடி ஏறணும், வேணாம் தீபி. கீழ வரும் போது பார்த்துக்க. இல்லன்னாலும் ஒண்ணுமில்ல, அந்த பொண்ணுக்கு உங்க பிரச்சனை எதுவும் தெரியாது, நீ குழப்பிக்காத” என சொல்லி விட்டார் பாட்டி.

அதிசயமாக நேரத்தோடு வந்து நின்றான் கர்ணா. அண்ணியை கண்டு விட்டு இயல்பாக பேசிக் கொண்டிருக்க, இவன் குரல் கேட்டுக் கொண்டே ஆச்சர்யத்தோடு தேநீர் போட்டுக் கொண்டிருந்த தாமினி எட்டிப் பார்த்தாள்.

கர்ணா புருவம் உயர்த்தி என்ன எனக் கேட்க என்ன இவ்வளவு சீக்கிரம் என சாடையில் கேட்டாள் தாமினி.

“டீயா எனக்கு வேணாம், ஹான் நமக்கு வேணாம். வெளில போகணும்னு சொன்னியே மறந்திட்டியா? சீக்கிரம் கிளம்பு” என்ற கர்ணாவை குழப்பத்தோடு பார்த்தவள் பின் முறைத்தாள்.

“சொல்லவே இல்லடா இவ” என்றார் பாட்டி.

“அட நீங்க வேற பாட்டி, அவளுக்கே தெரியாது போல” என்ற தீபிகா, “நான் பார்த்துக்கிறேன், நீ கிளம்பு தாமினி” என சொல்லிக் கொண்டே சமையலறை புகுந்தாள்.

“எனக்கு மூட் இல்லை, திடீர்னு சொன்னா எப்படி கிளம்பறது? நான் போகல” என்றாள் தாமினி.

“ஏய் ரொம்ப பண்ணாதடி, போ” என அக்கா அதட்ட அவளையும் முறைத்து விட்டு ஹாலில் இருந்த கணவனை இன்னும் நன்றாக முறைத்து விட்டு அறைக்கு சென்றாள்.

கர்ணா சிரிப்போடு பார்த்திருக்க, “காலைல ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா உனக்கு என்னவாம்?” என பாட்டியும் கேட்டார்.

“அங்கேர்ந்து வர முடியுமான்னு தெரியாம எப்படி சொல்ல? வெளியூர் போகவா கூப்பிடுறேன், இங்க பக்கம்தான். நீ ஓவரா செல்லம் கொடுக்காத அவளுக்கு” என்றான் கர்ணா.

“சரி போ நீயும் வேற ட்ரெஸ் மாத்து, இப்படியே போகாத”

“எதுக்கு அவகிட்ட மாத்து வாங்கவா? வரட்டும் அவ வெளில” என சொல்லி அங்கேயே அமர்ந்து கொண்டான்.

Advertisement