Advertisement

பார்வையில் மதுச்சாரல் -19(1)

அத்தியாயம் -19(1)

இரவு இந்த நேரமெல்லாம் வழக்கமாக அவரவர் அறையில் முடங்கி விடுபவர்கள் இன்னும் அஷ்வின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தனர். அவனும் வந்து சேர ஐஸ்வர்யா, மலர் இருவரது நலனை விசாரித்தறிந்து கொண்டார் வேணு.

அரவிந்தும் தீபிகாவும் அவனிடம் தனி தனியே நலம் விசாரிக்காமல் வேணுவுக்கு கூறிய பதிலையே கேட்டுக் கொண்டனர். அஷ்வின் விரைவாக குளித்து உடை மாற்றி வர அவனுக்கான உணவு காத்திருந்தது. மற்றவர்களும் ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

பசியின் வீரியத்தால் எதுவும் நினைக்காமல் முதலில் சாப்பிட ஆரம்பித்தவன் மெல்ல மெல்ல தான் வருவதற்கு முன் இங்கு என்ன நடந்திருக்கும் என யோசிக்க ஆரம்பித்தான். எதுவும் தெரியாமல் தீபிகா முன்னிலையில் எதுவும் கேட்கவும் முடியாமல் தன் அண்ணியின் முகத்தைதான் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான் அஷ்வின்.

“ஒழுங்கா சாப்பிடு அஷ்வின், நான் அவ்ளோ பெரிய அரக்கி இல்லை ஓகே” என கண்டிப்பான குரலில் தீபிகா சொல்ல, “ஹையோ அண்ணி! நான் அப்படி நினைக்கல. நீங்க டல்லா இருக்கீங்களான்னுதான் பார்த்தேன். இந்த நிலைல உங்க பிஸிகல் அண்ட் மெண்டல் ஹெல்த் கூட ரொம்ப முக்கியம்ல அண்ணி” என பதற்றமும் விளக்கமுமாக சொன்னான்.

“நான் நல்லாத்தான் இருக்கேன், ஆனா நீங்க எல்லாரும் என்னை தப்பா நினைச்சிருப்பீங்கதானே? எனக்கு அரவிந்த் பேர் இது மாதிரி அந்த பொண்ணோட அடி படறதுல சுத்தமா விருப்பமில்லை, அதுவும் என் அத்தை பையனுக்கு பார்த்த பொண்ணு வேற. அதுக்குன்னு இப்படி ஒரு நிலைல ஹெல்ப் பண்ணக்கூடாதுன்னு சொல்வேனா?” எனக் கேட்டாள்.

“விடும்மா, அரவிந்த்தான் அவசர பட்டுட்டான். நாம வேற மாதிரி அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணிடலாம், இனிமே அரவிந்துக்கும் அந்த பொண்ணுக்கும் சம்பந்தம் இல்லை” என்றார் வேணு.

“இல்லை மாமா, அந்த குழந்தை பார்த்ததிலேர்ந்து எனக்கும் ஒரு மாதிரியா இருக்கு, நான் இனிமே அரவிந்தை எதுவும் சொல்ல மாட்டேன்” என தீபிகா சொல்ல, தன் மனைவியை பிரியமாக பார்த்தான் அரவிந்த்.

அஷ்வின் சாப்பிட்டு முடித்திருக்க, “லேட் ஆகிட்டு, நீங்க போங்க, நாளைக்கு பேசிக்கலாம்” என்றார் வேணு.

அனைவரும் என்ன சொல்லியும் கேட்காமல் அனைத்தையும் தீபிகாவே எடுத்து வைக்க ஆரம்பிக்க மற்றவர்களும் உதவ இரண்டு நிமிடங்களில் வேலை முடிந்து விட்டது.

மருமகள் வீட்டை விட்டு சென்றதிலிருந்து உறக்கமிழந்திருந்த வேணு அன்று நிம்மதியான மன நிலையில் படுத்தார்.

தங்கள் அறையில் படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் தீபிகா.

“படுக்காம என்ன யோசனை தீபு? லேட் ஆகிட்டு, படு” என்றான் அரவிந்த்.

“நான் தப்பா யோசிக்கல, நீங்க தப்பா நினைச்சிட்டீங்க தானே?”

“ரொம்ப குழப்பிக்காத, தூங்கு” என்றான்.

“அஷ்வின், மாமா கூட அப்படித்தான் நினைச்சிருப்பாங்க”

“இருக்கலாம் தீபு, ஆனா நான் அடிச்சதுதான் பெரிய தப்புன்னு சொன்னாங்க. இப்போ உன் மேல அவங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. அவங்க என்ன நினைப்பாங்க இவங்க என்ன நினைப்பாங்கனு ரொம்ப யோசிச்சு யோசிச்சு பேசவோ நடந்துக்கவோ முடியாது. இப்படி தூக்கத்தை விட்டுட்டு யோசிக்கிற அளவுக்கு பெரிய பிராப்லமும் இல்லை” என்ற அரவிந்த் அவளருகில் சென்று படுத்துக் கொள்ளும் படி செய்து தானும் படுத்தான்.

“ஐஸ்வர்யாக்கு ஹெல்ப் பண்றதுல பிரச்சனை இல்லை, ஆனா உங்களுக்கு கெட்ட பேர்…” மனைவியை பேச விடாமல் அவள் வாயை கையால் மூடியவன், “நான் முன்னாடியே சொன்னதுதான் தீபு, ஐஸ்வர்யாக்கு தேவையானது அப்பாவும் அஷ்வினும் செய்வாங்க, நான் இன்வால்வ் ஆகல. ஆரம்பத்துல உனக்கு விருப்பமில்லைங்கிறப்பவே அப்பாகிட்ட சொல்லியிருக்கலாம்னு தோணுது இப்போ. நான் அடிச்சேங்கிறது காலத்துக்கும் உனக்கு மறக்காதுதானே?” எனக் கேட்டான்.

அரவிந்த் தோள் வளைவில் பொருந்திக் கொண்டவள், “ம்ம்… மறக்காது, ஆனா போக போக அதிகமா நினைக்காம இருப்பேனா இருக்கும்” என்றாள்.

“சாரி”

“முன்னாடியே சொல்லிட்டீங்களே?”

“எத்தனை சாரி சொன்னாலும் நடந்தது மாறாதே”

“இதையே பேசிட்டு இருக்க போறோமா?”

“அதானே” எனக் கேட்ட அரவிந்த் குழந்தை பிறப்பு வளர்ப்பு என பேச சிறிது நேரத்தில் அப்படியே உறங்கிப் போனார்கள்.

படுத்து வெகு நேரமாகியும் அஷ்வினுக்குதான் கண்களை மூட முடியவில்லை. ஐஸ்வர்யாவும் மலரும்தான் வந்து நின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யவில்லை என்றால் தனக்கு நிம்மதியே இல்லை என நினைத்துக்கொண்டே இருந்தவனை உடல் அசதிதான் எப்படியோ உறங்க வைத்தது.

அடுத்த நாள் காலையிலேயே கர்ணாவும் அஷ்வினுமாக மருத்துவமனை சென்றனர். மலரை அழைத்துக் கொண்டு கர்ணா வீடு வந்து விட ஐஸ்வர்யாவை அவள் முன்னிருந்த மருத்துவமனை அழைத்து சென்றான் அஷ்வின்.

ஐஸ்வர்யாவுக்கு காலையில் செலுத்த வேண்டிய மருந்தை செலுத்திய பிறகு முறையாக அவளை டிஸ்சார்ஜ் செய்து துணைக்கிருந்த அக்காவுக்கு பணம் கொடுத்து அவரது வீட்டிற்கு ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தான்.

அஷ்வின் காரோட்டிக் கொண்டிருக்க பின் சீட்டில் முற்றிலும் ஓய்ந்து போனவளாக சோக சித்திரமாக இருக்கையில் சாய்ந்து கண் மூடியிருந்த ஐஸ்வர்யா இன்னும் இன்னும் அஷ்வினை பாதிக்க செய்தாள்.

ஒரு கையால் காரோட்டிய அஷ்வின் மறு கையால் நெஞ்சை நீவிக் கொண்டே, ‘என்ன இது?’ என்ற யோசனையோடும் இடையிடையே அவளை பார்த்துக் கொண்டும் கர்ணா வீடு வந்தடைந்தான்.

ஐஸ்வர்யா தயங்கி தயங்கித்தான் வீட்டிற்குள் வந்தாள். மலர் பாப்பா வந்து அம்மாவின் கால்களை கட்டிக் கொள்ள தூக்கி கொஞ்சினாள்.

“அம்மா கைல ஊசி இருக்கு பாருங்க, சமத்து சக்கரை கட்டில இறங்கிக்கோங்க” என தாமினி சொல்ல உடனே இறங்கிக் கொண்டாள்.

“நான் வீட்டுக்கு போறேன், ஏதாவது ஆட்டோ பிடிச்சு கொடுத்தா போதும், நான் பார்த்துப்பேன்” என்றாள் ஐஸ்வர்யா.

“அப்படி என்ன இருக்கு அங்க? மெதுவா போலாம், உட்காருங்க” என்ற தாமினி அவளை அமர வைத்து குடிக்க பால் கொண்டு வந்து கொடுத்தாள். அவள் பருகி முடித்ததும் அவளருகிலேயே அமர்ந்த தாமினி அவள் கையை ஆதரவாக பற்றிக் கொண்டாள்.

ஏதோ பேசப் போகிறாள் என்பது உணர்ந்து தாமினி முகத்தை கூர்ந்து பார்த்தாள் ஐஸ்வர்யா.

“எங்க வீட்ல ரெண்டாவது மாடில போன மாசம்தான் காலி பண்ணினாங்க, பேசாம நீங்க இங்கேயே வந்திடுங்களேன். சின்ன வீடுதான், ஆனா உங்களுக்கு கரெக்ட்டா இருக்கும், அங்க என்ன வாடகை கொடுத்தீங்களோ அதுவே கொடுங்க, போதும்” என்றாள் தாமினி.

முகம் மலர்ந்த அஷ்வின் கர்ணாவை பார்க்க அவன் புருவம் உயர்த்தி ‘என்ன?’ எனக் கேட்டான். தோள்களை உயர்த்தி முகத்திலும் ‘சிறப்பு’ என்ற பாவனை காட்டினான் அஷ்வின்.

“நல்ல ஆளுங்களா வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சோம், உடனே முடியாதுன்னு சொல்லாம யோசிச்சு சரின்னு சொல்லுங்க” அவளுக்கு உதவுவது போல பேசாமல் நயமாக தாமினி பேச சரி என தலையசைத்தாள் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவுக்கு குளிக்க பின்னால் சென்று இடம் காட்டி விட்டு தாமினி வர நண்பர்கள் இருவரும் தீவிர ஆலோசனையில் இருந்தனர்.

என்ன என்பது போல தாமினி பார்க்க, “ஐஸ்வர்யா யாருமில்லாத பொண்ணுன்னு பார்க்கிற வரை பிரச்சனை இல்லை, பிரவீணுக்கு பார்த்த பொண்ணு அப்படிங்கிற கண்ணோட்டத்துலதான் உன் அப்பா பார்ப்பார், கண்டிப்பா கோவப்படுவார். ஹெல்ப் பண்ணுங்கன்னு நேத்தே அண்ணி சொல்லியிருக்காங்க, ஆனாலும் இங்க நம்ம வீட்டு மாடில குடி வைக்க போறோம்னா என்ன சொல்வாங்க தெரியலைனு அஷ்வின் சொல்லிட்டு இருந்தான், அதான் பேசிட்டு இருந்தோம்” என்றான் கர்ணா.

“ஆமாம், இதெல்லாம் சரி செய்யணும். ஆனா இந்த சிக்கல், பேச்செல்லாம் ஐஸ்வர்யாவுக்கு தெரியாம பார்த்துக்கணும், இல்லைனா அவங்க பாட்டுக்கும் இங்க தங்கலைனு சொல்லிட்டு வேற எங்கேயாவது போய்டுவாங்க” என்றாள் தாமினி.

“பிரவீண் உனக்கும்தானே அத்தை பையன், ஐஸ்வர்யா மேல உனக்கு கோவமில்லையா தாமினி?” என அவளை அறிந்து கொள்ள வேண்டி கேட்டான் அஷ்வின்.

“பிரவீண் மாமாக்கு இப்போ என்ன குறைச்சல், நல்லாத்தானே இருக்காங்க? இந்த விஷயம் நடந்தப்போ ஐஸ்வர்யா மேல நிறைய கோவம் இருந்துச்சு. உங்க ஃப்ரெண்ட் என்னை வேணாம் சொல்லிட்டு போனதுக்கு அப்புறம் அவளாலதான் எல்லாம் அப்படின்னு திட்டக் கூட செஞ்சிருக்கேன். இப்போ பரிதாபம் மட்டும்தான் இருக்கு. ஒரு வேளை ஐஸ்வர்யா நிலை எனக்கு வந்திருந்தா என் பேரெண்ட்ஸ் கண்டிப்பா என்னை விட்ருக்க மாட்டாங்க, என் அக்காவும் விட்ருக்க மாட்டா” என்றாள் தாமினி.

“மினி… நீ என்னைத்தான் லவ் பண்ணின, அப்போ என் கூடத்தான் லவ் மேரேஜ் ஆகியிருக்கும், நான் போய் உன்னை விடுவேனா? நீ ஏன் இப்படி பேசுற?” முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கர்ணா கேட்க அஷ்வினும் தாமினியும் அவர்களுக்குள் சிரித்தார்கள்.

கர்ணா இருவரையும் முறைக்க அவன் முதுகில் தட்டிய அஷ்வின், “ஒரு பேச்சுக்கு சொன்னா ஓவரா ஃபீல் ஆகாத” என்றான்.

Advertisement