Advertisement

பார்வையில் மதுச்சாரல் -16(2)

அத்தியாயம் -16(2)

“என்ன தாமினி இது?” சிரிப்பாக கேட்டான் கர்ணா.

“வீட்ல விளையாட்டு சாமான் இல்லையே, அதான் இப்படி விளையாட விட்டுட்டேன்” என்றாள் தாமினி.

“இவ்ளோ அறிவாளி பொண்டாட்டியா எனக்கு?”

“ஆமாம் உங்களுக்கு நான் கொஞ்சம் ஓவர்தான் இல்லை, என்ன செய்யலாம்?” என வாரினாள் தாமினி.

“இப்படியெல்லாம் கேட்காதம்மா, ஏதாவது கோச்சிங் கிளாஸ்ல சேர்த்து விட்டாவது பையன் ஜெனரல் க்நாலேட்ஜ் இம்ப்ரூவ் பண்ணி விடுறேன்” தன் தாடியை தடவிக் கொண்டே சொன்ன அஷ்வின் முதுகில் இரண்டு வைத்தான் கர்ணா.

அவர்களை பார்த்து விட்டு மலர் பாப்பா சிரிக்க மூவரும் குழந்தையை ரசித்து பார்த்திருந்தனர்.

தாமினி திடீரென, “பகல் முழுக்க டைம் இருந்துச்சே, ஒரு போன் பண்ணி எனக்கு எல்லாம் சொன்னீங்களா? அப்படியா எனக்கு பயந்தவர் நீங்க?” எனக் கேட்டாள்.

தலையில் கை வைத்த அஷ்வின், “போதும்மா அவன் டயர்டா இருக்கான், கண்டிப்பா ஏதாவது வாய விடுவான். சின்ன வயசுலேயே எனக்கு பிபி வர வச்சிடாதீங்க, ஐஸ்க்ரீம் மெல்ட் ஆகுறதுக்குள்ள பாப்பாக்கு கொடுத்திட்டு, உன் வீட்டுக்காரன் உனக்கு ஏதோ ஸ்பெஷலா வாங்கிட்டு வந்திருக்கான். கொஞ்ச நேரம் அதை சாப்பிடுறதுல பிஸி ஆகிடுங்க” என சொல்லி அவன் வீட்டுக்கு கிளம்பி விட்டான்.

விட்டால் போதும் என தப்பித்து வீட்டுக்குள் ஓடி விட்டான் கர்ணா.

குழந்தைக்கு ஐஸ்க்ரீம் கொடுத்து தானும் ஒன்று எடுத்துக் கொண்டாள் தாமினி. இன்னும் கவரை ஆராய்ந்து பார்க்க ரஸமலாய் இருக்க ஒரு சிரிப்புடன் ஃபிரிட்ஜில் பத்திரப் படுத்தினாள்.

கர்ணா குளித்து வர டிவியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தாள் மலர். கர்ணா குழந்தையின் அருகில் அமர்ந்து கொள்ள, “அம்மாட்ட” என சொல்லி உதடுகள் பிதுக்கி அழ ஆரம்பித்து விட்டாள்.

கர்ணாவின் மனம் அப்படியே இளகிப் போயிற்று, குழந்தையை திசை திருப்பும் வண்ணம் பைக்கில் ஒரு ரவுண்ட் அடித்து வந்தான். வெளியில் வேடிக்கை காட்டிக் கொண்டே தாமினியும் கர்ணாவும் சேர்ந்து மலருக்கு உணவு கொடுத்து விட்டனர்.

சிறிது நேரத்தில் மலர் கண்களை கசக்க, “தூக்கம் வந்திட்டு போலடா, என் பெட்ல படுக்க வச்சு தட்டிக் கொடு, நைட் என்னோடவே தூங்கட்டும்” என பாட்டி சொல்ல அப்படியே செய்தாள் தாமினி. பின் அவர்களும் உண்டு உறங்க சென்றனர்.

தாமினியின் கையை பற்றிக் கொண்டு மென்மையாக தடவிக் கொடுத்தவன், “நிஜமா உன்னை நினைச்சு பயந்துதான் போயிருந்தேன். தேங்க்ஸ் மினி” என்றான்.

“இந்த நேரம் போய் கோவ படுவேனா? சின்ன குழந்தை, அம்மாவை பிரிஞ்சு பழகி போய்டுச்சு போல. ரொம்ப தேடலை, அடமும் கிடையாது. சரியா சாப்பாடு கொடுக்கிறதா தெரியலை, நோஞ்சானா இருக்கிறதா பாட்டி சொல்றாங்க. பாவம்ங்க, நல்லா வாழ வேண்டிய பொண்ணு அது வாழ்க்கைய அதுவே கெடுத்துக்கிட்டு” என்றாள்.

“குணமாகி வரட்டும், அந்துபி லைஃப்ல டிஸ்டர்ப் ஆகாத அளவுக்கு ஏதாவது அந்த பொண்ணுக்கு செய்யலாம்”

“அஷ்வின் கூட அதான் சொன்னார்”

“ரெண்டு பேரும் என்ன பேசிகிட்டீங்க?” என கர்ணா கேட்க எல்லாம் சொன்னாள்.

“நடக்கிறது எல்லாம் நிஜம்தானே?” எனக் கேட்டான் கர்ணா.

அவன் வெற்று மார்பின் முடியை தாமினி பிடித்திழுக்க அலறினான் கர்ணா.

“கனவில்லைனு தெரியுதா?” எனக் கேட்டாள்.

“போடி! வேற ஏதாவது கொடுத்து கனவில்லைனு சொல்லியிருக்கலாம்”

“அங்க என் அக்கா அழுதிட்டு இருக்கா, என்ன வேணுமாம் உங்களுக்கு?”

“இப்படி சொன்னா என்ன கேட்க, தூங்கு” என சொல்லி படுத்து விட்டான்.

அறையை விட்டு வெளியில் சென்றவள் இரு நிமிடங்களில் கையில் ரஸமலாய் எடுத்துக் கொண்டு வந்தாள். அவளை பார்க்க படுத்தவன், “இன்னும் சாப்பிடலையா நீ?” எனக் கேட்டான்.

“ஏதவாது கொடுக்க சொன்னீங்க? உங்களுக்குத்தான் எடுத்து வந்தேன்” என்றாள்.

“அது உனக்கு மினி” என்றான்.

“அன்னைக்கு நீங்க ஆசையா கேட்டும் நான் கொடுக்கலைல?” என தெத்துப் பல் தெரிய சின்ன புன்னகையுடன் சொன்னாள்.

கர்ணா ஆசையாக எழுந்தமர அவன் பக்கத்தில் அமர்ந்து ஊட்டி விட்டவள் தானும் கொஞ்சம் சாப்பிட்டாள்.

“நான் ரஸமலாய் சாப்பிட நாளாகும்னு நினைச்சேன்”

“ரஸமலாய் மட்டும்தான் இப்போ, மத்ததெல்லாம் அப்புறம்தான்” என்றாள் தாமினி.

நகர்ந்து தாமினியின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டவன், அவள் கையை எடுத்து நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டான்.

“நாலு வருஷம் முன்னாடியே உனக்கு இன்ட்ரெஸ்ட்னு தெரியலைன்னா உன் பின்னால வரக்கூடாதுன்னு நினைச்சவன் மினி, இப்போவும் உன் விருப்பமில்லாம கட்டாயம் எல்லாம் செய்ய மாட்டேன். இப்போ என் கூட இருக்கியே, இது போதும்” என்றான்.

அவன் வெற்று மார்பை இதமாக தடவிக் கொண்டிருந்தவள், “இப்படி எல்லார் முன்னாடியும் இருக்க கூடாது, புரிஞ்சதா?” எனக் கேட்டாள்.

“எப்போ அப்படி இருந்தேன்? பேஸிக்கா நான் கொஞ்சம் கூச்ச சுபாவி” என கர்ணா சொல்ல அரவிந்த் திருமணத்தன்று இவன் உறங்கியதையும் தான் சட்டை பொத்தான் போட வந்து இவன் தன் கையை பிடித்ததையும் கூறினாள்.

“வெட்கையா இருந்துச்சுன்னு சும்மா ரெண்டு பட்டன் கழட்டி விட்டதுக்கு ஓவர் அலும்பு பண்ணியிருக்க. அன்னிக்கு செம கோவம், என்ன செஞ்சிடுவேன்னு அவ்ளோ அழுகை உனக்கு?”

“ச்சேச்ச” என்றவள் அக்காவின் பிரிவு, இவனுடன் பேசாமல் இருந்தது என அன்றைய மனநிலையை சொல்லி, “உங்க மேல சாஞ்சு அழணும் போல இருந்தது” என அன்று நினைத்ததையும் மறைக்காமல் சொன்னாள்.

“பேட் மூட்ல இருந்த உன் நிலையை இன்னும் ஒர்ஸ்ட் ஆக்கினேனா? சாரி மினி. ஆனா உன் அத்தை இன்னும் சீன் கிரியேட் பண்ணினாங்க. இப்போ என் கூட நீ இருக்கிறதை யாரால தடுக்க முடியும், அவங்க மூஞ்சு எங்க வச்சுப்பாங்க?” என கர்ணா கேட்க கண்டனமாக பார்த்தாள் தாமினி.

“ஹையையோ யம்மா! நான் ஃப்ளோல பேசிட்டேன். உன் அத்தை, கல்யாணி இவங்க பேரெல்லாம் என் வாய்லேர்ந்தே வராது இனிமே. நீ வேதாளமா இரு, நான் விக்கிரமாதித்தன் கிடையாது. நான் என்னாசை வைஃபை சரி கட்ட தெரியாத அப்பாவி ஜீவன்” கர்ணா பேசிக் கொண்டே போக, “தூங்குங்க கர்ணா, நாளைக்கு ஆஃபீஸ் போகணும் நீங்க” என்றாள்.

தாமினியை மையலாக பார்த்துக் கொண்டே, “தூக்கம் கலைஞ்சு போச்சு போல, ஏதாவது பேசி நீயே தூங்க வை மினி” என்றான்.

மனம் விட்டு பேசினார்கள் இருவரும். நேரம் போவது தெரியாமல் இருவரும் ஏதேதோ பேச கர்ணா தன்னையறியாமல் அவள் மடியிலேயே உறங்கி விட அவனுக்கு தலையணை வைத்து விட்டு மின் விளக்கை அணைத்து தாமினியும் படுத்துக் கொண்டாள்.

சில நிமிடங்கள் அவனையே பார்த்திருந்தவள் அவனை நெருங்கி அவன் மீது கை போட்டு அணைத்துக் கொண்டாள்.

தன்னை விட அஷ்வின் குடும்பம் கணவனுக்கு முக்கியம் என்ற அவளின் நினைப்பு முழுதும் மாறி விட்டதா என்றால் இல்லைதான். ஆனால் இன்று அஷ்வினுடன் பேசியதில் அவளுள் சொல்லத்தகுந்த மாற்றம் வந்திருந்தது. கர்ணாவும் தன்னிடம் உருகி குழைவதும் ஒரு நாள் கூட விட்டு பிரிய மனமில்லாமல் வா என அழைத்ததும் என எல்லாம் சேர்ந்து இவன் மீதான கோவத்தை வெகுவாக குறைத்திருந்தது.

அனைத்தையும் விட மணமாகி பத்து நாட்கள் கடந்தும் படுக்கையை பகிர்ந்து கொள்வதில் அவசரம் காட்டாமல் ஆசை இருந்தாலும் தனக்காக பார்க்கும் அவன் செயல் மிகவும் கவர்ந்தது.

தானும் இன்னும் கொஞ்சம் பொறுமையோடு நடந்து கொள்ள வேண்டும், பிரச்சனைகள் ஓய்ந்த பின் தங்கள் வாழ்வை அனுபவித்து வாழ வேண்டும் என்றெல்லாம் நினைத்து கண்கள் மூடிக் கொண்டாள்.

அப்பொழுதும் மனம் சமன் படாமல் ஏதோ உறுத்த படுக்கையிலிருந்து பாதி எழுந்து அவனது பிரிந்திருந்த உதடுகளில் மென்மையாக முத்தமிட்டு, “என்ன கோவம் இருந்தாலும் உங்களைதான் பிடிக்குது, சின்ன குழந்தைகிட்ட கூட பொறாமை வருது, நான் என்ன செய்ய?” என சின்ன குரலில் கேட்டாள்.

“ம்… எது செஞ்சாலும் எழுப்பி விட்டு செஞ்சா நானும் ஃபீல் பண்ணிப்பேன்” என கண்கள் திறவாமல் சிரிப்பை அடக்கிக் கொண்டு கர்ணா கூற அவன் மார்புக்குள் புதைந்தாள் தாமினி.

அவளை நன்றாக அணைத்து இறுக்கிக் கொண்டவன், “தூங்கிடு மினி, இனியும் கட்டுப்பாடா இருக்க முடியும்னு தோணல” என்றான்.

“ஒழுங்கா நீங்களும் தூங்கிடுங்க, நல்ல நாள் பார்த்துதான் எல்லாம்” என்றாள்.

“வேணும்னா இப்போ நல்ல நேரமான்னு பார்க்கவா?” ஆசையாக கேட்டான் கர்ணா.

“நான் பார்த்திட்டேன், அதனாலதான் தூங்க சொல்றேன்” என தாமினி வெட்கத்தோடு சொல்ல ஏமாற்றம் கொண்டாலும் அவள் நல்ல நாளா என பார்த்ததே மனதில் இதம் சேர்க்க கட்டவிழ்ந்த உணர்வுகளை நிலைப் படுத்தி உறங்க முற்பட்டான்.

Advertisement