Advertisement

பார்வையில் மதுச்சாரல் -16(1)

அத்தியாயம் -16(1)

தாமினி இப்போதுதான் வீடு வந்திருப்பாள் போலும், இன்னும் பாட்டி ஐஸ்வர்யா பற்றி எந்த விவரமும் சொல்லியிருக்கவில்லை என்பது அவளது குழம்பிய முகமே சொன்னது.

கர்ணா மலரை கீழே இறக்கி விட குழந்தைக்கோ புதிய இடம் மிரள செய்வதாக இருக்க கர்ணாவை ஒன்றிக் கொண்டு அவன் கால்களை கட்டிக் கொண்டு நின்றாள். திடீரென தன் கணவனிடம் ஒரு குழந்தை இத்தனை நெருக்கத்தை காட்டவும் வியப்பாகவும் கொஞ்சம் பொறாமையோடும் கணவன் முகம் பார்த்தாள் தாமினி.

மனைவியை சங்கடமாக பார்த்துக் கொண்டே மலரை மீண்டும் தூக்கிக் கொண்டவன், “மினி, இந்த பாப்பா ஐஸ்வர்யாவோட குழந்தை” என்றான்.

ஐஸ்வர்யா யாரென தெரியாமல் இன்னும் குழம்பிய தாமினி யோசிக்க, “அந்துபி ஹெல்ப் பண்றானே, அந்த பொண்ணு” என விளக்கம் கொடுத்தான்.

சட்டென தாமினி முகத்தில் சினம் குடியேற கர்ணா எச்சில் கூட்டி விழுங்கினான்.

“பாப்பா இந்த அங்கிள்கிட்ட வாங்க, நாம பைக்ல டாடா போலாம்” என மலருக்கு ஆசை காட்டி அஷ்வின் கை நீட்ட மறுப்பாக கர்ணாவின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள் குழந்தை.

தாமினி முறைப்பாகவும் கர்ணா இயலாமையோடும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க, “தாமினி கொஞ்சம் என் கூட வா, நான் எக்ஸ்ப்ளைன் பண்றேன்” என அஷ்வின் கெஞ்சலாக கேட்க கொல்லைப் பக்கம் நோக்கி நடந்தாள் தாமினி.

“உன் வைஃப் பார்வையாலேயே ஃபாலோ பண்ண சொல்லிட்டு நடந்து போகுது, சரியான நேரத்துல உன் பப்பி எங்கடா எஸ் ஆகிட்டாங்க?” என நண்பனை கடிந்து கொண்டே தாமினியை தொடர்ந்து சென்றான் அஷ்வின்.

தாமினி பின் பக்கம் தூணில் சாய்ந்து வெறும் தரையில் சோர்வாக அமர்ந்திருக்க அவள் எதிரில் நாற்காலி எடுத்து போட்டு அமர்ந்தான் அஷ்வின்.

“நான் சொல்றதை பொறுமையா கேட்கணும், அண்ணி பிரச்சனைய தள்ளி வச்சிட்டு ஐஸ்வர்யா யாருன்னே தெரியாதுன்னு மைண்ட் செட் பண்ணிக்க தாமினி” என்றான் அஷ்வின்.

தாமினி பதில் பேசாமல் கண்களில் கோவத்தை காட்ட, “கண்ணு முன்னாடி இன்னொரு உயிர் கஷ்ட படும் போது ஈஸியா கடந்து போற தைரியமெல்லாம் எங்களுக்கு கிடையாது தாமினி. நாங்க எல்லாம் எமோஷனலான கோழைகள். ப்ச் நீ கோவப்பட வேணாம், கர்ணாவை இதுல நான் சம்பந்த படுத்தல, அந்த குழந்தையை அழைச்சிட்டு போய்டுறேன் நான். அவன் கூட சண்டை போடாத” என சொல்லி எழுந்து கொண்டான் அஷ்வின்.

“விஷயத்தை சொல்லாம இப்படி புரியாத மாதிரி பேசி அப்புறம் நீங்க மட்டும்தான் உலகத்துல நல்லவங்கனு பில்டப் கொடுக்காதீங்க. பொறுமையா கேட்கணும் அக்கா பிரச்சனை தள்ளி வைக்கணும் அப்படியெல்லாம் சொன்னா கோவம் வராதா? நான் விவரம் இல்லாத பொண்ணு இல்லை, எனக்கும் பிராப்லம் எப்படி ஹாண்டில் செய்யணும்னு புரியும், ஒழுங்கா உட்கார்ந்து நடந்ததை சொல்லுங்க” என பட படவென பேசினாள் தாமினி.

தாமினி இப்படி சொன்னதே அவள் புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையை அஷ்வினுக்கு கொடுக்க சின்ன ஆசுவாச மூச்சு விட்டு மீண்டும் அமர்ந்தான்.

ஐஸ்வர்யாவை இருவரும் காண சென்றதிலிருந்து இப்போது வரை நடந்த அனைத்தையும் சிரத்தையாக கூறி முடித்தான்.

“ஐஸ்வர்யா அம்மா வீடு சைட்ல யாருக்காவது சொல்லலாம்ல?” எனக் கேட்டாள் தாமினி.

“அவ அம்மா உயிரோட இருந்த வரை வந்து பார்த்திட்டு போவாங்க போல, லாஸ்ட் இயர் அவங்க தவறிட்டாங்க, அப்பாவும் இல்லை. அவ அண்ணன் இருக்கார், அண்ணி சேர்க்க மாட்டாங்க போல. அவ அக்காவும் டெல்லில இருக்காங்களாம், அவங்கதான் அரவிந்த் ஃப்ரெண்ட். அவங்க வீட்ல கூட ஐஸ்வர்யா கூட பழக கூடாது சொல்லிட்டாங்க. இப்போதைக்கு எந்த ஆதரவும் இல்லை. முதல்ல அந்த பொண்ணு உடம்பு சரியாகி வரட்டும், அண்ணி பிராப்லம் நான் சால்வ் பண்றேன்” என பொறுமையாக எல்லாம் சொன்னான் அஷ்வின்.

“அந்த பாப்பா ஏன் அவர் கூட அவ்ளோ அட்டாச்டா இருக்கு?” என மற்றதை விடுத்து அவளின் அதி முக்கிய சந்தேகத்தை கேட்டாள் தாமினி.

“தெரியலையே, விசாரிக்கணும்… ஒரு வேளை உன் ராசி நட்சித்திரமோ என்னவோ. கோவக்காரனையே பிடிச்சு தொலையுது” என கிண்டலாக கூறினான்.

தாமினி முறைக்க, “இப்படி நேரடியா முறைச்சுடு, பெட்டர். என்னை அவாய்ட் பண்ணாத, ஹர்ட் ஆகலைனு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன். உன் ஹஸ்பண்ட் நீ கூட இல்லாமதான் தூங்க மாட்டேங்குறான், என்ன பேசினாலும் சுத்தி வளைச்சு உன்னை பத்தி பேசி முடிக்கிறான். உன் இடம் உன்னோடது மட்டும்தான்” என்றான் அஷ்வின்.

அஷ்வின் மீது எந்த தவறும் இல்லையே, இப்படி நேரடியாக இவன் சொல்லவும் சங்கடமாக பார்த்தவள், “அது… பர்பஸ்ஃபுல்லா செய்யல. அவருக்கு நீங்க ரொம்ப க்ளோஸ் இல்லையா அதனால ஏதோ…” சொல்ல முடியாமல் தடுமாறினாள் தாமினி.

“பொஸஸிவ்னெஸ்… ஹ்ம்ம்! இருக்க வேண்டியதுதான்” என சிரித்த அஷ்வின், “எனக்கு தெரியும் எங்க பாண்டிங் சாதாரணமா திக் ஃபிரெண்ட்ஸ்னு சொல்ற லெவலுக்கு மேலன்னு. எனக்கு மேரேஜ் ஆனா கூட உங்க பிராப்லம் நானும் ஃபேஸ் பண்ணலாம். தெரியலை நாங்க இப்படித்தான், அதுக்குன்னு ஸ்பவுஸ் இடமென்ன ஃப்ரெண்ட் இடமென்னனு தெரியாதவங்க இல்லை நாங்க. இதெல்லாம் போக போக நீயா உணர்ந்து தெரிஞ்சுக்க வேண்டியது. இப்போதைக்கு என்னால செய்ய முடிஞ்சது…” என இழுத்து “நான் வேணும்னா அவன் கூட கா விட்ரவா?” எனக் கேட்டான்.

அதிர்ந்து பார்த்த தாமினி, “ஆக மொத்தம் என்னை வில்லியாக்க போறீங்க, அதானே?” எனக் கேட்டாள்.

வாய் விட்டு நகைத்தவன், “தள்ளி இருந்தாலும் எங்க பாண்டிங் மாறாது, நான் சீரியஸா கேட்கிறேன்” என்றான்.

“விளையாட்டா கூட இப்படி கேட்காதீங்க அஷ்வின், அப்புறம் அவ்ளோதான் என்னை தள்ளி வச்சிடுவார் உங்க ஃப்ரெண்ட்” என்றாள்.

“யாரு அவனா? அவனுக்கு உம்மேல ஓவர் லவ்ஸ், என்ன என் மேல உள்ள பாசத்துல ஏதாவது ரவுசு பண்ணியிருப்பான் இடியட். அஷ்வினா தாமினியாங்கிற கேள்வி அவனுக்கு நாம வைக்க வேணாம். ஆன்சர் எனக்கு தெரியும்” என்றான்.

“என்ன என்ன தெரியும் உங்களுக்கு?” ஆவல் தொக்க கேட்டாள்.

“அவனுக்கு அஷ்வின்தான், ஏன்னா கர்ணாவும் தாமினியும் வேற வேற இல்லை. அப்படித்தான் என்னை உணர வச்சிருக்கான், சீக்கிரம் நீயும் புரிஞ்சுப்ப” என அஷ்வின் சொல்ல தாமினிக்கு கண்கள் கலங்குவது போலாக மூச்சு இழுத்து விட்டு நிலையாக இருந்து கொண்டாள்.

அஷ்வினுக்கு அவளின் உணர்வுகள் புரிய எதுவும் பேசாமல் சிறு இடைவெளி விட்டான்.

என்ன சொல்வதென தெரியாமல் லேசாக சிரித்து வைத்தாள் தாமினி.

“இன்னிக்கு நீயா இங்க வரலை, அவன் வந்திருப்பான் உன்னை தேடிட்டு” என்றான் அஷ்வின்.

“உங்க ஃப்ரெண்ட்டை விட்டு தர மாட்டீங்களே… என் மிஸ்டேக் எனக்கு புரியுது, உங்களை அவாய்ட் பண்ணினது ரொம்ப தப்பு. எல்லாமே கொஞ்சம் குழப்பமாகிடுச்சு, நாங்க சரி பண்ணிக்கதான் ட்ரை பண்றோம், பண்ணிப்போம். ஆனா வேற பொண்ணு பார்க்க சொன்னவர் உங்க ஃப்ரெண்ட், எனக்கு மறக்கல” என்றாள்.

“கண்டிப்பா உன்னை தவிர யாரையும் கல்யாணம் செய்திருக்க மாட்டான். யார் விஷயத்தையும் உங்களுக்குள்ள கொண்டு வராம அவனை மட்டும் பாரும்மா”

சரியென தாமினி தலையசைக்க, “அந்த பாப்பா இங்க இருக்கிறதுல உனக்கு பிரச்சனை இல்லையே, பாட்டி இருக்கவும் இங்க இருந்தா வசதியா இருக்கும்னு நினைச்சோம். உனக்கு அப்ஜக்ஷன்னா ஓபனா சொல்லிடு, நான் அங்க அழைச்சிட்டு போயிடுறேன்” என்றான் அஷ்வின்.

“எனக்கும் மனசாட்சி இருக்குங்க. ஆனா இப்போதைக்கு இதெல்லாம் அக்காவுக்கு தெரிய வேணாம்”

“அடுத்து நான் சொல்ல வந்தது அதுதான்”

“என்ன எனக்கு மனசாட்சி இல்லைனா?” என தாமினி கேட்ட கேள்வியில் சிரித்து விட்டவன், “அண்ணிகிட்ட சொல்ல வேணாம்னு சொல்ல வந்தேன்” என்றான்.

மனைவி என்ன வினையாற்றுவாளோ என்ற பீதியுடன் குழந்தையோடு கர்ணா வர இவர்கள் இருவரும் புன்னகை முகமாக இலகுவாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு ‘என்னங்கடா நடக்குது?’ என நினைத்து விழித்தான்.

பாட்டியும் வர, “எப்போடா வந்தீங்க?” என கர்ணாவை கேட்க பின்னர்தான் அஷ்வினும் தாமினியும் இவர்களை பார்த்தனர்.

“எங்க போய்ட்ட பப்பி நீ?” பல்லைக் கடித்தான் கர்ணா.

“கோயிலுக்கு போயிருந்தேன், தாமினி போன் பண்ணினா… சாவி எங்க இருக்குன்னு சொன்னேனே, என்ன ஆச்சு இப்போ?” எனக் கேட்டுக் கொண்டே பேரனுக்கு திருநீறு வைத்து விட்ட பாட்டி குழந்தைக்கு பூசி அப்படியே தாமினி பக்கம் வந்தார்.

தாமினி நெற்றி காட்டி நிற்க அவளுக்கு வைத்தவர், “நீ என்னடி சொன்ன என் பேரனை? இப்படி அரண்டு போய் நிக்கிறான்… அடிச்சி கிடிச்சு போட்டுட்டியா?” எனக் கேட்டுக் கொண்டே, அஷ்வின் நெற்றியில் திருநீறு வைத்து, “சீக்கிரம் இவனை அடிக்கவும் ஒரு பொண்ணை காட்டுப்பா புள்ளையாரப்பா” என சொல்ல தாமினியும் அஷ்வினும் சிரித்தனர்.

“அடேய் என்னங்கடா உங்க உள்குத்து, ஒண்ணும் புரயாம மூளைக்குள்ள பூச்சி ஓடுது” என கர்ணா சொல்ல தாமினியின் முகம் பார்த்தார் பாட்டி.

“உங்க பேரன் பயந்து போயிருக்காங்க, நான் கவனிச்சுக்கிறேன் பாட்டி” என சொல்லி சிரித்தாள் தாமினி.

கர்ணா இன்னுமே விழித்துக் கொண்டு நிற்க குழந்தையிடம் வந்த தாமினி, “ஹலோ பாப்பா, நான் இந்த அங்கிளோட ஃப்ரெண்ட்தான். பாவம் அங்கிளுக்கு கை வலிக்குதாம், வர்றீங்களா நாம ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்” என கை நீட்டி அழைக்க தயங்கினாலும் அவளிடம் சென்று விட்டாள்.

“வீட்ல ஏது மினி ஐஸ்க்ரீம்?” யோசனையாக கர்ணா கேட்க, “ஹ்ம், என் வீட்டுக்காரர் நான் பொய் சொல்ல விட மாட்டாங்க, போய் வாங்கிட்டு வருவாங்க” என்றாள் தாமினி.

கர்ணா நிம்மதி அடைந்தவனாக கைகளை விரித்து நெட்டி முறிக்க, அவனை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றான் அஷ்வின்.

கர்ணாவும் அஷ்வினும் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு வருவதற்குள் மலர் பாப்பாவை சுடு தண்ணீரில் குளிக்க வைத்து ஆடை மாற்றி இரட்டைக் குடுமி போட்டு விட்டிருந்தாள் தாமினி. இரு குடுமிகளிலும் இரு அடுக்கு செம்பருத்தி பூக்கள் வேறு அழகு சேர்த்தன. வந்தவர்கள் பார்த்தது அழகிய இளஞ்சிட்டு தட்டு டம்ளர்கள் என வைத்து விளையாடிக் கொண்டிருந்ததைதான்.

Advertisement