Advertisement

“நீ ஆம்புலன்ஸ் போன் பண்ணு” என கர்ணா சொல்ல விரைந்து செயல்பட்டான் அஷ்வின். 

குழந்தைக்கு தண்ணீர் கொடுத்து “அழாத பாப்பா, அம்மாவுக்கு ஒண்ணுமில்ல, நாங்க அம்மாவோட ஃ ப்ரெண்ட்ஸ்தான். உனக்கும் ஃப்ரெண்ட்ஸ். இப்போ அழறதை நிறுத்தினா நான் நிறைய சாக்லேட் வாங்கி தருவேன்” என கர்ணா ஏதேதோ சொல்ல புரிந்ததோ இல்லையோ ஒரு கட்டத்தில் அழுகையை நிறுத்திய குழந்தை அவனை உற்று பார்த்து விட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டது. 

ஆம்புலன்ஸ் வரவும் ஐஸ்வர்யாவை அதில் ஏற்றி விட்டு கர்ணாவும் அஷ்வினும் குழந்தையுடன் பைக்கில் பின் தொடர்ந்து சென்றார்கள். மருத்துவமனை சென்று சிகிச்சைக்கு பின் ஐஸ்வர்யா கண் விழிக்க இரண்டு மணி நேரமானது.

டைஃபாய்டு காய்ச்சல், மருத்துவமனையிலேயே இருக்கட்டும் என மருத்துவர் சொல்லி விட யாரை துணைக்கு வைப்பது, குழந்தையை என்ன செய்வது என இரு ஆண்களும் குழம்பிப் போனார்கள். 

ஐஸ்வர்யாவிடம் தங்களை அரவிந்தின் சகோதரர்கள் என அறிமுகம் செய்து கொண்டான் அஷ்வின். 

“அண்ணாதான் அனுப்பினாங்களா உங்களை? அவங்களுக்கு ரொம்ப சிரமம் தர்றோம்னு நினைச்சுதான் காலைல அண்ணா கேட்கும் போது நல்லா இருக்கேன்னு சொல்லிட்டேன்” என்றாள். 

 “யாராவது தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க, அழைச்சிட்டு வர்றோம்” என்றான் அஷ்வின். 

“அண்ணாவை தவிர யாரும் தெரியாது, வேலை செய்ற இடத்துல உள்ளவங்க லீவ் போட்டுட்டு வருவாங்களானு தெரியலை” என சோர்வாக பதில் சொன்னாள். 

கர்ணாவிடமிருந்த குழந்தை அம்மாவிடம் செல்ல தாவ, ஐஸ்வர்யாவின் ஒரு கையில் சலைன் சென்று கொண்டிருக்க மற்றொரு கையை குழந்தையை நோக்கி நீட்டி எழ முயன்றாள். 

அவளுக்கு காய்ச்சல் இரத்த அழுத்தம் பரிசோதிக்க வந்த செவிலியர், “என்ன செய்றீங்க, படுங்க. குழந்தை எல்லாம் இப்போ தூக்க முடியாது” என சொல்லி படுக்க வைத்து, கர்ணாவை பார்த்து, “குழந்தையை ஹாஸ்பிடல்ல வச்சுக்க வேணாம்” என அறிவுறுத்தினார்.

“இதோ போய்டுவோம் சிஸ்டர்” என கர்ணா சொல்லிக் கொண்டிருக்க மீண்டும் “ம்மா…” என தேம்பிக் கொண்டே தன் தாயிடம் தாவியது குழந்தை. 

“அம்மாக்கு ரொம்ப காய்ச்சல், நீ போனா உனக்கும் வந்திடும், ஊசி போடுவாங்க. அங்கிள்கிட்டேயே இருப்பியாம்” என பொறுமையாக கர்ணா சொல்ல அவன் தோளில் சாய்ந்து கொண்டு அம்மாவை ஏக்கமாக பார்த்தாலும் அதன் பின் அடம் செய்யவில்லை குழந்தை. 

தன் குழந்தையை பார்த்த ஐஸ்வர்யாவுக்கு வார்த்தைகள் எதுவும் வராமல் போக தொண்டை அடைத்துக் கொண்டது. உதடு கடித்து அழுகையை அடக்க முற்பட்டாலும் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆண்கள் இருவருக்கும் அவளின் கோலம் கண்டு மனது பிசைந்தது. 

 கண்களில் அப்பட்டமாக தெரிந்த பயம், அடிக்கடி மகளை தொட்டு மீளும் பார்வை, இவர்கள் விட்டு சென்று விடுவார்களோ என்ற சந்தேகம் என நொடிக்கொரு பாவம் காட்டிய அவளை பார்த்திருந்த அஷ்வின், “நாங்க இங்கதான் இருக்கோம், நாங்க பார்த்துக்கிறோம், கவலை படாம ரெஸ்ட் எடுங்க” என்றான். 

குரலை செருமிக் கொண்டவள், “தேங்க்ஸ், பாப்பாக்கு பாம்பர்ஸ் போட்டு விடணும்” என தயங்கிய குரலில் சொன்னாள். 

உடனிருந்த செவிலியருக்கு ஓரளவு இந்த பெண் அனாதரவாக இருக்கிறாள், இவர்கள் உறவுகள் இல்லை, மனிதாபிமானத்தோடு உதவுகிறார்கள் என்பது புரிய, “வாங்கிட்டு வாங்க, நான் ஹெல்ப் பண்றேன்” என்றார். 

அஷ்வின் சென்று டயபர் வாங்கி வர குழந்தைக்கு அணிவித்தவர் அவளது முடியையும் கொஞ்சம் சீர் படுத்தி கர்ணாவிடம் ஒப்படைத்தார். 

 மருந்துகளாலும் உடல் அயர்வாலும் ஐஸ்வர்யா உறங்கி போயிருக்க தோளில் உறங்கியிருந்த குழந்தையோடு கர்ணாவும் வெளியில் வந்தான். 

படுக்கையில் கிடந்த ஐஸ்வர்யா, அஷ்வினுக்கு அவனது கடந்த காலத்தை நினைவு படுத்தி விட்டாள். அவனது மனதிலும் கலக்கம் சூழ்ந்து கொண்டது. ஆனால் அவன் கண் அசைவுக்கு ஓடி வர அருமையான சொந்தங்கள் அமையப் பெற்றவன், இவளோ கை குழந்தையுடன் தனியாக அல்லாடுகிறாள். அஷ்வினுக்கு இந்த ஆதரவற்ற பெண் மீது அளவுக்கதிகமாக இரக்கம் சுரந்தது. 

கண்டிப்பாக இவளுக்கு ஏதாவது உதவி செய்து பாதுகாப்பான சூழலில் வைக்க வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு அஷ்வினும் வெளியேறினான். 

குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு வராண்டாவில் நடந்து கொண்டிருந்த கர்ணா, அஷ்வினை கண்டதும் “என்னடா  அச்சு இது? நீ அரவிந்துக்கு கூப்பிட்டு சொல்லு” என்றான். 

“அது சொல்லலாம், அவன் வந்தாலும் இங்க ஏதாவது பண்ணனும்தானே, அதான் யோசிக்கிறேன்”

“குழந்தையை வேணும்னா வீட்டுக்கு அழைச்சிட்டு போலாம், பாட்டி பார்த்துக்குவாங்க” என்ற கர்ணா உடனேயே, “இல்லையில்லை, தாமினி வந்திடுவா. அவ ஒத்துக்க மாட்டா” என்றான். 

“இருடா யோசிப்போம்” என்றான் அஷ்வின்.

“நாம ஒண்ணு நினைச்சு வந்தா இதென்னடா நமக்கே வம்பா ஆவுது? காலைலதான் டா என் பொண்டாட்டி என் கூட கொஞ்சம் நல்லா பேசினா, அதை நினைச்சு அரை நாள் கூட சந்தோஷ பட முடியலை. நானும் இந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்றேன்னு தெரிஞ்சா என்ன செய்வாளோ?” என புலம்பினான் கர்ணா.

“சரி அப்போ கிளம்பு நீ” என எரிச்சலாக சொன்னான் அஷ்வின். 

“டேய் புலம்ப கூட உரிமையில்லையா எனக்கு? நீயும் கல்யாணம் பண்ணி பாரு, அப்போதான் குடும்பஸ்தன் கஷ்டம் எல்லாம் உனக்கு புரியும்” என கர்ணா சொல்ல ஏகத்திற்கும் முறைத்தான் அஷ்வின். 

“சரி, முறைக்காம நீயே வழி சொல்லு” என சொல்லி நாற்காலியில் அமர்ந்து தோளில் கிடந்த குழந்தையை வசதியாக மடியில் படுக்க வைத்துக் கொண்டான். 

“பாப்பாவை வேறெங்கேயும் படுக்க வைக்கலாமா கர்ணா?” என அக்கறையாக கேட்டான் அஷ்வின். 

“வேணாம் டா, கோழிக் குஞ்சு மாதிரி இத்துனூன்டு இருக்கு, ரெண்டு வயசு மாதிரியே இல்லை. எனக்கு சிரமம் இல்லை, என்னவோ என்கூட ஒட்டிக்கிட்டா. நான் வச்சிக்கிறேன்” என குழந்தை முகத்தை வாஞ்சையாக பார்த்துக் கொண்டே சொன்னான் கர்ணா. 

“ரெண்டு வயசு முடிஞ்சிட்டுன்னுதான் அரவிந்த் சொன்னான், நல்ல ஊட்டம் இல்லாம இப்படி இருக்கு போல” என அஷ்வின் சொல்ல, பாவமாக அந்த குழந்தையை பார்த்துக் கொண்டே அதன் தலையை கோதி விட்டான் கர்ணா. 

ஐஸ்வர்யாவுக்கு ஏதோ மருந்துகள் வாங்கி வர சொல்ல அஷ்வின் மருந்தகம் சென்று வந்தான், அதற்குள் குழந்தை விழித்து மிரட்சியான பார்வையோடு சுற்றிலும் பார்த்திருந்தது. 

பாட்டி அழைத்து பேச அவரிடம் எல்லாம் சொன்னான் கர்ணா. 

“முதல்ல சாப்பிடுங்கடா, அந்த குழந்தைக்கும் ஏதாவது வாங்கி கொடுங்க. வேணும்னா நான் இருக்கவா அவ கூட?” எனக் கேட்டார்.

“ப்ச் உன்னால முடியாது பப்பி, நாங்க பார்த்துக்கிறோம்” என்ற கர்ணா மதிய உணவுக்காக குழந்தையோடு அஷ்வினையும் அழைத்து சென்றான். இத்தனை நேரம் கர்ணாவோடேயே இருந்ததில் அவனை போல இலகுவாக அஷ்வினிடம் செல்ல மறுத்தது குழந்தை. 

“பாப்பா உங்க பேர் என்ன?” என கர்ணா கேட்க மழலையில், “மலர்” என செப்பு வாய் திறந்து அழகாக சொன்னாள். 

ஓட்டலில் அவளுக்கு தனியே தட்டில் சாதம் வைத்து ரசம் ஊற்றி பிசைந்து அழகாக ஊட்டி விட்டான் கர்ணா. மலருக்கு அவனை பிடித்து விட அவன் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டாள். 

“டேய் நல்லா ட்ரைனிங் எடுத்துக்கோ, பின்னால யூஸ் ஆகும்” என கிண்டல் செய்தான் அஷ்வின். 

சிரித்த கர்ணா, “மலர் பாப்பாக்கு இன்னும் கொஞ்சம் சாதம் ஊட்டவா?” என குழந்தையிடம் கேட்டான்.

வேகமாக வேண்டாம் என தலையசைத்த மலர் வயிற்றை தடவிக் கொள்ள, “பேபிக்கு வயிறு நிறைஞ்சு போச்சாம், நீயும் சாப்பிடுடா” என்றான் அஷ்வின்.

கர்ணாவும் சாப்பிட வேடிக்கை பார்த்துக் கொண்டு சமத்தாக அமர்ந்திருந்தாள் மலர். 

சாப்பிட்ட பிறகு மூவருமே தெம்பாக உணர்ந்தார்கள். இங்கு துணைக்கிருக்க தாமினியை வர சொல்லலாமா என யோசனை கேட்டான் கர்ணா. 

“வம்பை விலைக்கு வாங்காத, நான் எங்க ஃபேக்டரில லேபரா வேலை செய்ற அக்காகிட்ட கேட்டு பார்க்கிறேன். என் ஃப்ரெண்ட்கிட்ட  பேசுறேன், கேட்டுட்டு சொல்வான்” என்ற அஷ்வின் அதையே செயல் படுத்தினான். 

மாலை போல அஷ்வின் சொன்ன அந்த பெண்மணி வந்தார். அவரிடம் விவரம் சொல்லி ஐஸ்வர்யாவிடம் அழைத்து சென்று விட்டனர். மாற்றுடைகள் இல்லாததால் அந்த அக்காவையே அழைத்துக் கொண்டு ஐஸ்வர்யா வீடு சென்றான் அஷ்வின். அம்மா, மகள் இருவருக்குமான உடைகள் தனித்தனி பைகளில் எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டி புறப்பட்டனர். 

வரும் வழியிலேயே மேலோட்டமாக ஐஸ்வர்யா பற்றி அந்த அக்காவிடம் சொல்லி, “யாருமில்லாத பெண்ணுக்கா, கொஞ்சம் ஃபேக்டரிக்கு லீவ் போட்டு பார்த்துக்கோங்க” என்றான் அஷ்வின்.

“என்ன தம்பி, ஒரு நாளுன்னுதானே சொன்னாங்க அந்த தம்பி? பேக்டரில சம்பளத்துல புடிச்சுப்பாங்க” என கவலையாக சொன்னார் அந்த அக்கா. 

“அங்க என்ன பிடிக்கிறாங்களோ நான் தந்திடுறேன் க்கா, இங்கேயும் ஒரு நாளுக்கு எவ்ளோன்னு சொல்லுங்க, பணம் விஷயமில்லை” என அஷ்வின் சொல்ல சரியென ஒத்துக் கொண்டார். 

மருத்துவமனை வந்த பின் அந்த அக்காவின் கையில் இப்போதைக்கு செலவுக்கு பணம் கொடுத்து விட்டு, குழந்தையை தாங்கள் பார்த்துக் கொள்வதாக ஐஸ்வர்யாவிடம் சொல்லிக் கொண்டிருக்க அரவிந்த் வந்து சேர்ந்தான். அவனுக்கு மதியமே விஷயம் தெரிந்தாலும் இவர்கள் இருப்பதால் வேலை முடித்து இப்போதுதான் வந்தான். 

அரவிந்தும் அவளிடம் ஆறுதலாக பேசி விட்டு சகோதரர்களுடன் வெளியில் வந்தான். 

“நீங்க ஏன் இங்க வந்தீங்க?” என மதியம் கேட்க நினைத்த கேள்வியை இப்போது கேட்டான் அரவிந்த். 

அஷ்வின் மறைக்காமல் உண்மையான காரணத்தை சொல்ல அரவிந்த் முகம் கோவத்தில் சிவந்தது. 

“இப்போ என்ன… நாங்க வந்தது நல்லதா போச்சு. உன் லைஃப் சரி பண்ணத்தானே பார்த்தோம் அந்துபி?” என சமாதானம் செய்தான் கர்ணா. 

“எப்படி இந்த பொண்ணை துரத்தி விட்டா?” கோவப்பட்டான் அரவிந்த். 

“கண்டிப்பா அப்படி நினைக்கல, நல்ல விதமா சொல்லி நாங்களே ஏதாவது உதவி செஞ்சு உன்னை விட்டு தள்ளி நிறுத்த நினைச்சோம் அவ்ளோதான். அந்த பொண்ணுக்கு தேவை உதவி, யார் செஞ்சா என்ன?” என்றான் கர்ணா. 

“இப்போ உனக்கும் தாமினிக்கும் சண்டை வரப் போகுது” என கவலையாக அரவிந்த் சொல்ல, அந்த பயம் கர்ணாவுக்கும் இருந்ததால் ஆமோதிப்பது போல நின்றான். 

“டேய் சும்மா இப்படி அப்படின்னு நீங்களா பேசிக்கிட்டு…” என பொதுவாக சொன்ன அஷ்வின், தன் அண்ணனை பார்த்து, “நீ கூட முன்னாடியே உங்களை தப்பா பேசுறாங்கனு அண்ணிகிட்ட சொல்லியிருக்க, அதனால பயந்து போய் இப்படியும் பேசலாம்னு அவங்க சொல்லியிருப்பாங்க. உடனே அடக்கி வாசிக்குற உனக்கு வீரம் வந்திடுச்சு” என காட்டமாக கூறினான். 

தம்பி சொன்னதை அரவிந்த் யோசிக்க கர்ணாவை பார்த்த அஷ்வின், “எல்லாம் தாமினிகிட்ட சொல்ற விதத்துல சொன்னா புரிஞ்சுக்கும், நீயாவே இப்படிதான்னு முடிவு பண்ணிக்கிறதை முதல்ல நிறுத்துடா” என்றான். 

“சரி இப்போ மலரை என்ன செய்றது? நாம அழைச்சிட்டு போலாமா? பொதுவா பக்கத்துல க்ரட்ச்ல விட்டுட்டு போகும் அந்த பொண்ணு, பகல்ல மட்டும்தான் பார்த்துப்பாங்க” என விவரம் சொன்னான் அரவிந்த். 

“பாட்டி பார்த்துப்பாங்க, இப்போதைக்கு நம்ம கூடவே இருக்கட்டும்” என கர்ணாவும் சொல்ல, “தாமினி?” என்றான் அரவிந்த். 

“பயம் இருக்குதான், ஆனா குழந்தை விஷயத்துல அப்படி ஒண்ணும் புரிஞ்சுக்காம போய்ட மாட்டா. நான் பேசிக்கிறேன்” என்றான் கர்ணா. 

“அதுக்கு ஏன் டா தொடை நடுங்குது?” என கிண்டல் செய்தான் அஷ்வின். 

“ஓவரா போறடா அச்சு, அப்புறம் என் பொண்டாட்டி முன்னாடி உன்னை கட்டி புடிச்சு முத்தம் கொடுத்திடுவேன், கொதிக்க கொதிக்க சுடு தண்ணி எடுத்து உன் மூஞ்சு மேல ஊத்தி விட்ருவா பார்த்துக்க” என கர்ணா சொல்ல மற்ற இருவரும் சிரிக்க மலர் பாப்பாவும் சிரித்தாள். 

ஓய் வாண்டு உனக்கு என்ன புரிஞ்சதுன்னு இவ்ளோ சிரிப்பு, ஹ்ம்ம்?” மலரின் கன்னம் கிள்ளி கேட்டான் கர்ணா

அதற்கும் குழந்தை சிரிக்க கர்ணா ரசிக்க, “கிளம்புங்க கிளம்புங்க தாமினிகிட்ட நீங்க வழியறதையும் வாங்கி கட்டுறதையும் பார்க்க ஆவலா இருக்கோம்” என சீண்டலாக சொன்னான் அஷ்வின். 

“இவனுக்கு சுடு தண்ணி கன்ஃபார்ம்!” கர்ணா பதிலுக்கு சொல்ல, “நிலைமையோட சீரியஸ்னெஸ் தெரியாம ஏன் டா? கிளம்புங்கடா” என அதட்டி அவர்களை கிளப்பினான் அரவிந்த். 

இப்படியாக மூவரும் குழந்தையுடன் அங்கிருந்து புறப்பட்டனர். 

வேணுவிடம் எல்லாம் சொல்ல வேண்டும் என்பதால் அரவிந்த் அவன் வீடு சென்று விட மலரோடு மற்ற இருவரும் கர்ணா வீட்டுக்குள் நுழைய மூவரையும் எதிர் கொண்டாள் தாமினி. 

Advertisement