Advertisement

பார்வையில் மதுச்சாரல் -15

அத்தியாயம் -15

காலையில் கர்ணா காபி குடித்துக் கொண்டிருக்க பத்மினி பாட்டி தாமினியுடன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். தீபிகா பற்றி விசாரித்து விட்டு பொதுவாக இரவில் என்ன சாப்பிட்டார்கள் இப்போது என்ன சமையல் என சென்ற பேச்சு அப்படியே இன்று சங்கடஹர சதுர்த்தி, மாலை கோயில் செல்ல வேண்டும் என சென்றது. 

தாமினியுடன் சிரித்து பேசிக் கொண்டே இங்கும் அங்குமாக பாட்டி நடை போட கர்ணாவின் காதில் புகைச்சல் வயிற்றில் எரிச்சல். 

அரை மணி நேரம் அவர் கதை பேசி விட்டு பேரனிடம் கைபேசியை நீட்டியவர், “இந்தாடா உன்கிட்ட பேசணுமாம் அவளுக்கு” என்றார். 

“அப்புறம் பேசிக்கிறேன்” என்றான் கர்ணா. 

அவனை முறைத்தவர் கைபேசியை காதில் வைத்து, “என்னடியம்மா உங்க சண்டை இன்னும் தீரலையா? அவன் அப்புறம் பேசுறேன்னு சொல்றான்?” என அப்படியே தாமினியிடம் கேட்டார். 

“இல்லை பாட்டி, நேத்து கிளம்பும் போது சமாதானம் பண்ணிட்டுதானே போனார்?” என தாமினி யோசனையாக சொல்ல, “அப்போ சண்டை நடந்திருக்கு?” என்றார் பாட்டி. 

லேசாக சிரித்த தாமினி, “அது என்னமோ எங்க ஜாதகம் பொருந்தி போகலையோ என்னவோ? ஒண்ணு போனா இன்னொன்னு வந்திட்டே இருக்கு பாட்டி” என்றாள். 

“சரி இப்போ நீ அவனை சமாதானம் பண்ணனுமா இல்லை அவன் முறையா?” என விளையாட்டாக பாட்டி கேட்டாலும் ‘சமாதானமாக போங்க’ என்ற செய்தி அதிலிருந்தது. 

“நானே பேசுறேன் உங்க கோவக்கார பேரன்கிட்ட” 

“ஆமா இவ பெரிய பதுவுசு, போடி!” 

சிரித்த தாமினி, “வைக்கிறேன் பாட்டி” என சொல்லி வைத்து விட்டாள். 

இப்போது அறையிலிருந்த கர்ணாவின் கைபேசி சத்தமிட சாவகாசமாக எழுந்து சென்றான். அவன் எதிர்பார்த்த படி அவளேதான். சின்ன சிரிப்புடன் அழைப்பை ஏற்றான். 

“அப்புறம் பேசுற அளவுக்கு அவ்ளோ பிஸியா நீங்க?” எடுத்த உடன் பட படத்தாள் தாமினி. 

“முன்னாடியே சொல்லியிருக்கேன் உன்கிட்ட, என்கிட்ட பேசணும்னா என் நம்பருக்கு கூப்பிட வேண்டியதுதானே?” கர்ணாவும் பட படத்தான். 

“அது… நீங்க தூங்குவீங்கனு நினைச்சு பாட்டிக்கு கூப்பிட்டேன், அவங்கதான் நீங்க எழுந்திட்டீங்கனு சொன்னாங்க, அப்படியே உங்ககிட்ட பேச நினைச்சேன்” 

“ம்… எங்கேர்ந்து தூங்க?” உள்ளே போன குரலில் கேட்டான். 

“பத்து நாள் முன்னாடி தூங்கவே இல்லையா நீங்க?” 

“சும்மா என்ன பத்து நாள் கணக்கு சொல்ற? பத்து நாள் பழகியிருக்கேன் உனக்கு நான். இனிமேல்லாம் பழக்கத்தை மாத்திக்க முடியாது” 

“தெரியுதா நான் எவ்ளோ முக்கியம் உங்களுக்குன்னு?” 

“உனக்குத்தான் மினி தெரியணும் அது” 

“எது சொன்னாலும் பதில் சொல்லாதீங்க”

“கல்யாணம் கட்டி டென் டேஸ் முடிஞ்சும் இன்னும் டைட்டா ஒரு ஹக்  இல்லை, டீப்பா ஒரு கிஸ் இல்லை, இப்போ இப்போதான் கனவுல வர்ற பெட் ரூம் சீன் எல்லாம் கனவாவே போய்டும் போல. அது கூட பரவாயில்லை, கட்டினவன் கல்லு மாதிரி இருக்க எனக்கு பேசணும்னு தோணாம பப்பி கூட மணிக்கணக்கா கடலை வறுக்கிற உன்னை என்ன பண்ணலாம்?” என கர்ணா கேட்க கல கலவென சிரித்தாள் தாமினி. 

“கல்யாணம் பண்ணியும் பொண்டாட்டி வாசம் தெரியாத என் பொழப்பு சிரிப்பா இருக்கா உனக்கு?”

“நான் என்ன பண்ண? எழுந்த உடனே பாட்டிக்குத்தானே என் நினைவு வருது” என இடித்துரைத்தாள். 

“அவங்களுக்கு உன் நினைப்பு வந்துச்சா இல்லை உனக்கு என் நினைப்பு வராம போச்சா? நீதானே பாட்டிக்கு கூப்பிட்ட?”

“ஆமாம், ஆனா அவங்க மிஸ்டு கால் பார்த்திட்டுதான் கூப்பிட்டேன், உங்க மிஸ்டு கால் பார்த்திருந்தா உங்களுக்கு கால் பண்ணியிருப்பேன்” 

“ஏன் நீதான் நான் தூங்குறதா நினைப்பியா, நான் நினைக்க மாட்டேனா?”

“காது வலிக்குதுங்க”

“நீதானே ஸ்டார்ட் பண்ணின?”

“ஷ் ஹப்பா! ஓகே ஃபுல் ஸ்டாப் வைங்க”

“சரி நம்ம கதையை விடு, அண்ணி எப்படி இருக்காங்க?” 

“நைட் சரியா தூங்கலை, இப்போவும் தெளிவில்லாமதான் இருக்கா” என்றாள். 

தீபிகாவை அரவிந்த் ஏன் அடித்தான்  என காரணம் சொன்னான் கர்ணா. 

சற்று யோசித்த தாமினி, “அந்த பொண்ணு தங்கியிருக்க வீட்ல மாமாவையும் அவளையும் தப்பா பேசி காலி பண்ண சொல்லிட்டதா முன்னாடியே சொன்னா. இப்போ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனா இதை மாதிரி பேசுவாங்கனு சொல்லியிருப்பா. மாமாவை தப்பா எல்லாம் நினைக்க கூட மாட்டா” என்றாள். 

“அந்த நேரம் எந்த தொனியில அவங்க சொன்னாங்க இவன் எப்படி எடுத்தான் எல்லாம் இருக்கு மினி, ஒரு விஷயத்துக்கு ஒவ்வொருத்தர் எப்படி ஹர்ட் ஆவாங்க அப்படிங்கிறது வேறுபடும் இல்லையா?” 

“முடிஞ்சது ஒரு பக்கம் இருக்கட்டும்,  இனிமே மாமா அந்த பொண்ணு கூட சுத்தமா காண்டாக்ட் வைக்காம இருந்தா மட்டும்தான் அக்கா அங்க வருவேன்னு இருக்கா” என்றாள் தாமினி. 

“நான் அச்சுகிட்ட பேசிட்டு என்ன செய்யலாம்னு பார்க்கிறேன் மினி”

“ம் சரி” என்றவள் வைப்பதாக சொல்ல “ஒரு நிமிஷம்” என்றவன் ஏதோ சொல்ல வந்து “சரி வை” என்றான். 

“என்ன ஈவ்னிங் வீட்டுக்கு வரணுமா?” 

“ம்…”

“வந்திடுறேங்க, நான் கூட நைட்டெல்லாம் உங்களை நினைச்சேன்” என வெட்கம் கலந்து கூறினாள். 

“ஹப்பா என் காதுல யாரோ மயிலறகு வச்சு வருடற மாதிரி இருக்கு” சிலாகித்தான் கர்ணா. 

“எவ அவ?” பொய் கோவத்தோடு கேட்டாள். 

“கனவுல கூட என் தெத்துப் பல் அழகிய தவிர வேற யாருக்கும் என் பக்கம் நெருங்குற தைரியம் கிடையாது” 

“உளறல் ஸ்டார்ட் ஆகிடுச்சா?” என கிண்டல் செய்தாலும் அவன் பேச்சில் தன் மனம் மழையில் நனைவதை அவளால் உணர முடிந்தது. 

இன்னும் சில நிமிடங்கள் புது மண தம்பதிகளாக இணக்கமாக பேசி ஒரு நாள் பிரிவென்றாலும் பாதிக்க படுகிறோம் என்பதை வெளிப் படுத்திக் கொண்டு இன்னும் கொஞ்சம் முன்னேறி சற்றே அந்தரங்கமாக பேசி தவிப்பை உணர்த்தி யார் முதலில் வைப்பது என செல்ல சண்டை போட்டு ஒரு வழியாக சுகந்த மன நிலையில் கைபேசியை வைத்தார்கள். இருவரது முகங்களும் மலர்ந்து போயிருந்தன, கூடவே கொஞ்சம் வெட்கமும் கலந்து வண்ணம் சேர்த்திருந்தது. 

சற்று நேரம் படுக்கையில் விழுந்து இனிமையை அசை போட்டவனுக்கு அரவிந்த் விஷயம் நினைவு வர உடனே அஷ்வினுக்கு அழைத்து நேரில் வர சொன்னான். 

 அவனும் வர பாட்டியையும் வைத்துக்கொண்டு கர்ணா எல்லாம் சொல்ல, “நாம அந்த பொண்ணை போய் நேர்ல பார்க்கலாம். இப்படி இவங்களுக்குள்ள பிரச்சனை ஆகுதும்மா, நீ தள்ளி இருன்னு அந்த பொண்ணையே கேட்டுக்கலாம், வேணும்ங்கிற ஹெல்ப் நாமளே செய்திடலாம்” என்றான் அஷ்வின்.

“செய்றதை தள்ளி போடாதீங்கடா, இன்னிக்கே செய்ங்க” என பாட்டி சொல்ல அந்த பெண் பற்றிய விவரங்கள் அரவிந்திடமிருந்து பெற சென்றான் அஷ்வின். 

அரவிந்திடம் உண்மையை சொல்லி கேட்க முடியாதே, ஆதலால் பேச்சு கொடுத்து சாதாரணமாக விசாரிப்பது போல எல்லாம் அறிந்து கொண்ட அஷ்வின் தனியே வந்து கர்ணாவுக்கு அழைத்து, “கொஞ்சம் சீக்கிரம் கிளம்பணும், இல்லைனா அந்த பொண்ணு வேலைக்கு போய்டும், ரெடியா இரு” என சொல்லி வைத்தான். 

அடுத்த அரை மணி நேரத்தில் கர்ணாவும் அஷ்வினும் பைக்கில் புறப்பட்டு விட்டார்கள். கொஞ்சம் புற நகர் பகுதியில் இருந்த காலனி ஒன்றுக்கு வந்தார்கள். முதல் தளத்துக்கு படிகளில் ஏறும் போதே குழந்தை அழும் சத்தம் கேட்டது. அந்த பெண்ணின் வீட்டை நெருங்க அங்கிருந்துதான் சத்தம் வருவது புரிந்தது. 

கதவு உள் பக்கமாக பூட்டியிருக்க  குழந்தை அழும் சத்தம் கேட்பதால் வேறு வழியின்றி ஜன்னல் திறக்க முடிகிறதா என பார்த்தார்கள். வெறுமனே சாத்தியிருந்த ஜன்னல் திறந்து கொள்ள அதன் வழி உள்ளே பார்த்தார்கள். தரையில் பாயில் ஒரு பெண் படுத்திருக்க அவளருகில் ஒரு குழந்தை “ம்மா ம்மா…” என தேம்பி அழுது கொண்டிருந்தது. 

பக்கத்தில் இருந்த வீடுகள் பூட்டியிருக்க, “அந்த பொண்ணு கான்சியஸ்ல இல்லாம இருக்குதா… இல்லை வேற எதுவுமான்னு தெரியலை. சின்ன குழந்தைடா, அழறது பார்க்க சகிக்கல, டைம் இல்லடா கதவை உடைக்கலாம்” என கர்ணா சொல்ல அஷ்வினுக்கும் அதுவே சரியெனப் பட்டது. 

பழைய வீடு என்பதால் இருவரும் சேர்ந்து பலத்தை பிரயோகிக்க சில நொடிகளிலேயே தாழ்ப்பாள் கழண்டு கதவு திறந்து கொண்டது. வெகு நேரம் அழுதிருக்கும் போல குழந்தை, முகமெல்லாம் சிவந்து பரிதாபமாக காணப் பட்டது. 

விரைந்து சென்ற கர்ணா அந்தக் குழந்தையை தூக்கி கைக்குட்டை எடுத்து முகம் துடைத்து சமாதானம் செய்ய முயல, படுத்திருந்த அந்த பெண் உயிரோடு இருப்பதை உறுதி செய்து நிம்மதியாக மூச்சு விட்டான் அஷ்வின். 

“நல்ல காய்ச்சல்டா, மயக்கமா இருக்கா, உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்” என்றான் அஷ்வின். 

Advertisement