Advertisement

பார்வையில் மதுச்சாரல் -1(2)

அத்தியாயம் -1(2)

“பப்பி!” பல்லைக் கடித்தான் கர்ணா.

“ஏன் டா நல்லா இல்லையா? உனக்கு பிடிக்கலையா? உனக்கு டேஸ்ட் போறாது…” பாட்டி பேசிக் கொண்டிருக்க, “இங்க உன் பக்கத்துலதான் இருக்காங்க அந்த பொண்ணு” என்றான் கர்ணா.

“ஹான்… ஹா ஹா… எங்க… யம்மா தாமினி இங்கேயா இருக்க? உன் அம்மா எங்கம்மா?” ஒன்றும் நடவாதது போல பேச்சை மாற்றினார் பாட்டி.

“டாக்டர் பார்க்க போய்ட்டாங்க பாட்டி, என்னை உள்ள விடல” என்றாள் தாமினி.

“ஏன் உன் அம்மாவுக்கு என்னை மாதிரி கண்ணுல மருந்தெல்லாம் ஊத்தி பார்க்கலையா?”

“இல்ல பாட்டி, அது போன வாரமே பார்த்தாச்சு, ஸ்பெக்ஸ் போட்ருக்காங்க, அப்பவும் ஹெட்டேக் சொல்லிட்டே இருக்காங்க, அதான் பார்க்க வந்தோம்” என விளக்கினாள் தாமினி.

“அது கண்ணாடி போட்ட கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும், உன் அம்மாவை சீரியல் பார்க்கிறதை கொஞ்ச நாள் நிறுத்த சொல்லு, சரியாகிடும்” என பாட்டி சொல்ல அவர் சொன்ன விதத்தில் தாமினி புன்னகைத்தாள்.

“பப்பி நீயே டாக்டர் வேலை பார்த்தா பாவம் அவர் தொழில் பாதிச்சு போய்டும், கொஞ்ச நேரம் சும்மா இரேன்”என்றான் கர்ணா.

“இவன் வேற நொய் நொய்னு” என பேரனை கடிந்து கொண்டவர், “நீ என்னம்மா செய்ற? படிக்கிறியா வேலைக்கு எதுவும் போறியா?” என தாமினி பற்றி விசாரிக்க அனிச்சையாக தாமினியின் கண்கள் கர்ணாவை பார்த்தன.

“ஷ் ஷூ… அமைதியா இரு பப்பி” என பாட்டியின் காதில் சொன்னான் கர்ணா.

“பொழுது போவலடா, நிம்மதியா வாய போட்டு சலம்ப கூட விட மாட்டியா நீ?” என சத்தமாகவே மீண்டும் பேரனை கடிந்து கொண்டவர், “என்ன படிக்கிறேன்னு சொன்னம்மா?” என தாமினியிடம் தாவினார்.

இயலாமையோடு தாமினியை பார்த்த கர்ணா, ‘என்னால இவங்கள சமாளிக்க முடியாது, கேட்கிறதுக்கு பதில் சொல்லு, இல்லேன்னா இங்கேர்ந்து எழுந்து போய்டு’ என்பதாக பார்வையால் சொன்னான்.

“நான் மேத்ஸ் M.Sc பண்ணிட்டு இருக்கேன் பாட்டி” என்றாள் தாமினி.

“ஓ மேத்ஸா? இவன் தாத்தா கணக்கு வாத்தியார்தான், இவன் அப்பா கூட கணக்குல ரெண்டு பட்டம் வாங்கினான். இவனுக்கும் கணக்கு நல்லா வரும்…” பாட்டி பேசிக் கொண்டிருக்க செவிலியர் வந்து கண்களை திறக்கலாம் என சொல்லி பரிசோதனைக்கு அழைத்தார்.

கண்களை திறந்த பாட்டி பேரன் பக்கம் பாராமல் தாமினி பக்கம் பார்க்க தாமனி என்ன செய்வதென தெரியாமல் சிரித்தாள்.

“அட தெத்து பல்லு, அழகா இருக்கே”

“கண்ணுல மருந்து ஊத்தினா எல்லாம் மங்கலா தெரியும்னு சொல்வியே… இப்போ மட்டும் நல்லா தெரியுதா?” கர்ணா எரிச்சல் பட, “பத்மினி பாட்டி வாங்க” என சத்தமாக அவர் பெயரை சொல்லி அழைக்க பாட்டி எழுந்து சென்று விட்டார்.

கர்ணாவும் தாமினியும் தவிப்பாக உணர, “எப்படி இருக்க?” என உரையாடலை கர்ணாவே துவக்கி வைத்தான்.

“ம்ம்… நீங்க?”

“ம்… குட்” என்றான்.

அதற்கு மேல் என்ன பேசுவதென இருவருக்குமே தெரியவில்லை. வத்சலா வந்து விட்டவர், “சொட்டு மருந்து எழுதி தந்திருக்காங்கடி, வா வாங்கிட்டு கிளம்பலாம்” என்றார்.

கர்ணா பக்கம் திரும்பாமல் ஜாக்கிரதையாக தாமினி எழுந்து நிற்க, “உங்க பாட்டிகிட்ட சொல்லிடுங்க தம்பி, நாங்க கிளம்பறோம்” என கர்ணாவிடம் சொல்லிக் கொண்டு மருந்தகம் நோக்கி நடந்தார் வத்சலா.

கர்ணாவை பார்க்க வேண்டும் என எண்ணம் எழுந்தாலும் தன்னை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வெகு கவனமாக அம்மாவுடன் நடந்தாள் தாமினி.

கர்ணாவுக்கு அவனால் என்னவென உணர முடியாத உணர்வுகள் சூழ்ந்து கொண்டன. வெறும் பழைய நினைவுகள் என அசட்டையாக சொல்லி விட முடியாது, ஏனென்றால் எப்போதும் அவளை நினைக்கிறான், மனதால் வெகுவாக அவளை தேடுகிறான், யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் உள்ளுக்குள் வைத்து தவிக்கிறான். ஆனால் எதற்காகவும் அவளிடம் சென்று முயல மனம் வரவில்லை.

சரி இப்படியே விடு எனவும் இக்கணம் உதற முடியவில்லை அவளை, அவள் தாமினி… கர்ணாவின் மினி…

பத்மினிக்கு பரிசோதனை முடிந்து மருத்துவரை பார்த்து விட்டு கண்ணாடியும் மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்புகையில் மதிய உணவு நேரம் வந்து விட்டது.

“உனக்கு பசிக்கலையா?”

“டேய் நான் கஷ்டப்பட்டு புளியோதரை செஞ்சு வச்சிட்டு வந்திருக்கேன், மரியாதையா வீட்டுக்கு விடு பைக்கை” என்றார் பாட்டி.

“சரி, அப்போ ஜுஸ் மட்டுமாவது குடிச்சிட்டு போலாம் பப்பி”

“வேணாம் வழில செவ்விளநீர் விற்கும், அங்க போலாம்” என்றார் பாட்டி.

கர்ணா வண்டி எடுக்க, “வயசான காலத்துல கொல்றான் என்னை” சலித்துக் கொண்டே ஏறி அமர்ந்தார்.

கர்ணா மிதமான வேகத்தில் வண்டியை செலுத்த, “அவங்ககிட்டேர்ந்து நம்பர் வாங்கியிருக்கலாம் நீ, ப்ச் ஹாஸ்பிடல்ல கேட்டா போன் நம்பர் எல்லாம் தர மாட்டாங்களா?” எனக் கேட்டார் பாட்டி.

“சும்மா வா பப்பி, அந்த பொண்ணை எனக்கு பிடிக்கல” மனமறிந்து பொய் உரைத்தான்.

“உன் கண்ணையும் அங்க காட்டி செக் பண்ணியிருக்கணும் டா” என்றார் பாட்டி.

“நீ வாய மூடலைனா இப்போ பைக் பறக்க ஆரம்பிக்கும்” மிரட்டினான் கர்ணா.

“அடேய் கடங்காரா! வீட்டுக்கு போய் பேசிக்கிறேன் உன்னை” என்ற பாட்டி அமைதியாகி விட கர்ணாவும் வேறு பேசவில்லை.

வழியில் செவ்விளநீர் பருக கர்ணா வாகனத்தை நிறுத்த அவனே எதிர்பாராத வண்ணம் தாமினி அவள் தாயோடு நின்று கொண்டிருந்தாள்.

பாட்டியை பார்த்து விட்டு வத்சலா சிரிக்க தாமினியும் கர்ணாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை தவிர்த்தார்கள்.

“என்ன இங்க நிக்குறீங்க? முன்னாடியே கிளம்பிட்டதா சொன்னானே என் பேரன்” எனக் கேட்டார் பத்மினி.

“என் தங்கச்சி வீடு இங்க பக்கம்தான், அங்க போயிட்டு கிளம்பினோம். இளநீர் பார்சல் வாங்கிட்டு போலாம்னு இங்க நிறுத்தினோம்” என்றார் வத்சலா.

“உன் வீடு எங்க?” விசாரித்தார் பாட்டி.

சொன்ன வத்சலா, “அங்க பெருமாள் கோயில் ரொம்ப விஷேஷம் மா, அங்க வரும் போது கண்டிப்பா வீட்டுக்கு வாங்கம்மா” என அழைப்பு விடுத்தார்.

“அப்படியா! நிறைய முறை கோயில் வந்திருக்கேன், இப்போ கொஞ்ச வருஷமா அவ்ளோ தூரம் எல்லாம் தனியா போக முடியாம பக்கமா உள்ள கோயில் குளம்னு மட்டும் இருக்கேன்” இவர்கள் பேசிக் கொண்டிருக்க தண்ணீர் பாட்டிலில் இளநீர் பார்சல் வாங்கிக் கொண்ட தாமினி, “ம்மா கிளம்பலாம்” என்றாள்.

தனியாக என்றால் இவரின் மகன் மருமகள் எங்கே என்ற கேள்வியை இப்படி அவசர கதியில் கேட்க முடியாமல் பாட்டி கேளாமலே தன் கைபேசி எண் கொடுத்த வத்சலா இன்னொரு முறை கோயிலுக்கு வரும் போது வீடு வர வேண்டும் என சொல்லி விடை பெற்று மகளின் ஸ்கூட்டர் பின்னால் அமர்ந்து கொண்டார்.

இந்த முறை அங்கிருந்து கிளம்புவதற்கு நொடி நேரம் முன் கர்ணாவை பார்த்தாள் தாமினி, அவனும் அவளை பார்த்தான்.

தாமினியின் ஸ்கூட்டர் அவனை தாண்டி தூரமாக போய் கொண்டிருக்க, “டேய் இளநீர் பிடி” என்ற பாட்டியின் குரல் அவனை கலைத்தது.

கர்ணா இளநீர் பருக, “என்ன அந்த ஊதா கலர் உன்னை ஏதோ செய்றாளா?” என பாட்டி கேட்டார்.

இளநீர் விற்பவர் கேட்டு விட்டாரா என அவசரமாக அவரை பார்த்து விட்டு, அவரின் சிரிப்பில் கேட்டுத்தான் விட்டார் என தெரிந்து பல்லை கடித்து பாட்டியை முறைத்தான் கர்ணா.

“சும்மா சொல்லுடா, இந்த வாரம் சனிக்கிழமை பெருமாள பார்க்க போவோமா?” என தன் வேலையில் குறியாக இருந்தார் பாட்டி.

“வேண்டாம், வீட்டுக்கு பக்கத்துல இருக்க ஆஞ்சநேயர் பார்ப்போம், அவர் போதும்” பட்டென சொன்ன கர்ணா இனி பாட்டி சொல்லும் எதற்கும் எதிர்வினை ஆற்றாமல் இருக்க தள்ளிப் போய் நின்று கொண்டான்.

இளநீர் விற்பவருக்கு பணம் கொடுத்து விட்டு இருவரும் வீட்டுக்கு புறப்பட பத்மினி அமைதியாகவே இருக்க கர்ணாவின் உள்ளமெங்கும் அந்த ஊதா கலர் மினி… மின்மினியாக….

Advertisement