Advertisement

பார்வையில் மதுச்சாரல் -1(1)

அத்தியாயம் -1(1)

திருச்சி மாநகரின் பிரபலமான கண் மருத்துவமனைக்கு வெளியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திய கர்ணா, “இறங்கு பப்பி” என கூறினான்.

“ஒரு ஆட்டோ புடிக்காம வண்டியில ஏத்தி என் உசுர வாங்குறியேடா…” கர்ணாவின் முதுகில் பலமாகவே ஒரு அடி கொடுத்த அவனின் பத்மினி பாட்டி இறங்கி நின்று இடுப்பை வளைத்து அசைத்து ஆசுவாசமாக மூச்சு விட்டார்.

“திரும்ப போறப்போ வண்டிய பறக்க விடுறேன் பார் பப்பி” சிரிப்பை அடக்கிக் கொண்டே குறும்பாக பேரன் சொன்ன விதத்தில் பாட்டிக்கு முறுவல் பூத்தாலும் அடக்கிக் கொண்டே முயன்று முறைத்து வைத்தார்.

“நீ உள்ள போ, நான் வண்டியை நிறுத்திட்டு வர்றேன்” என கர்ணா சொல்ல பாட்டி உள்ளே சென்றார்.

பத்மினி பாட்டி வாடிக்கையாக வரும் கண் மருத்துவமனை என்பதால் அங்குள்ள நடைமுறைகள் நன்றாகவே தெரியும். எனவே பேரனுக்காக காத்திராமல் அவரே டோக்கன் எண் சொல்லி பரிசோதனை செய்யும் இடத்திற்கு சென்று விட்டார்.

வண்டியை நிறுத்தி விட்டு வந்த கர்ணா வரவேற்பில் பாட்டியை காணாமல் தேட அவன் கைபேசிக்கு அழைத்த பாட்டி வழி சொல்லி தான் இருக்குமிடம் வர சொன்னார்.

அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த பாட்டி அதற்குள் அவர் குடும்ப விவரங்களை சேகரித்து விட்டார் போலும். ஆறுதலாக ஏதோ சொல்ல அந்த பெண்மணி பாட்டியை பாசமாக பார்த்தார்.

இந்த காட்சியை பார்த்துக்கொண்டே கர்ணா வர அந்த பெண்மணி அவர் கணவரை அழைத்துக் கொண்டு பரிசோதனைக்காக அங்கிருந்து நகர்ந்தார்.

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ண மாட்டியா பப்பி? டூ வீலர்ல வர மட்டும் சீன் போடுற, இப்போ பாப்பா மாதிரி என்கிட்ட ஹைட் அண்ட் சீக் விளையாடுறியா?” செல்லக் கோவத்தோடு கேட்ட கர்ணா பாட்டி அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

“ஆமாம் இந்த வயசுல என்னோட விளையாடு, போடா போய் கல்யாணத்தை கட்டி ஒரு புள்ளையும் பெத்து அவங்க கூட விளையாடு” என்ற பாட்டி வேடிக்கை பார்ப்பதில் மும்முரமாக கர்ணா பற்களை நெறித்தான்.

“ஏ காமாட்சி போன முறை கண்ல பூச்சி பறக்குதுன்னு சொன்னியே… இப்போ பரவாயில்லையா?” யாரையோ பார்த்து பாட்டி கேட்க கர்ணாவும் அங்கே பார்த்தான்.

அந்த காமாட்சி யாரென கர்ணாவுக்கு தெரியவில்லை, ஆனால் அவரோ பாட்டியின் அருகில் வந்து நலம் விசாரித்து தன் நலன் பற்றி கூறி இன்னும் பேச்சை வளர்த்தார்.

இறுதியாக, “இவர்தான் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்க உங்க பேரனா?” என இவனை பற்றியும் கேட்டு அவருக்கு தெரிந்த இடத்தில் பெண் இருப்பதாகவும் கூற, தனியே செல்வேன் எனக் கூறிய பாட்டியுடன் வலிந்து துணைக்கு வந்த தன் மடமைத்தனத்தை எண்ணி மானசீகமாக தனக்கு தானே கொட்டு வைத்துக்கொண்டான் கர்ணா.

காமாட்சியின் பெயர் சொல்லி அழைக்கப் பட அவர் சென்று விட்டார்.

“பப்பி! என்ன செய்திட்டு இருக்க நீ? அவங்க யாரு எதுக்கு என்னை பத்தி சொல்ற?” மெல்லிய குரலில் கேட்டான் கர்ணா.

“நாலு இடத்துல சொல்லி வச்சாதான் உனக்குன்னு பொறந்தவளை கண்டுபிடிக்க முடியும். யாருக்கு தெரியும் இங்க கூட அவ இருக்கலாம்” என்றார் பத்மினி பாட்டி.

“இத தவிர பேச உனக்கு வேற விஷயமில்லையா, யார பார்த்தாலும் ஏதாவது பேசி வைக்கிற. நான் இங்க வரும் போது யார்கிட்டேயோ பேசிட்டு இருந்தியே, அவங்ககிட்ட என்ன சொல்லி வச்ச?”

“ஓ அந்த பொண்ணா? பாவம் அவ புருஷன் டிரைவராம், சுகர் வந்து கண்ணு பாதிச்சு போய்ட்டாம், புள்ள குட்டி கூட இல்லை. அதான் நல்லா ஆகிடும் கவலை படாதன்னு சொன்னேன்”

“ஹ்ம்ம்… நீ சொன்னதும் சரி ஆகிடும் எல்லாம்!”

“டேய் எவன் டா நீ? நல்லதே நினைச்சா பேசினா நல்லதுதான் நடக்கும். உனக்கு போர் அடிச்சா வெளில போய் நின்னு வேடிக்கை பாரு, உன் கண்ணுக்கு பிடிச்சா போல பொண்ணு எதுவும் பார்த்தா சொல்லு” என பத்மினி விளையாட கர்ணா முறைத்தான்.

“சரி சரி நானே என் கண்ணுக்கு பிடிச்சா போல பார்க்கிறேன், அதான் கண்ணை சரி பண்ணிக்க வந்திருக்கேன்” என சொல்லிக் கொண்டே பாட்டி சுற்றியிருந்த மனிதர்களை வேடிக்கை பார்க்க கர்ணா முகத்தில் விரிந்த சிரிப்பு.

பாட்டியின் பெயர் சொல்லி அழைக்கப் பட அவர் எழுந்து சென்றார். கைபேசியில் லயித்திருந்த கர்ணாவின் மனதில் ஏதோ தோன்ற சுற்றிலும் பார்த்தான். நொடிப் பொழுதில் அவன் முகம் மாறிப் போனது, அவஸ்தையான உணர்வு, இங்கிருந்து சென்று விடலாம் என அவன் நினைக்கையில் பாட்டியும் அவர் பின் செவிலியர் ஒருவரும் வந்தனர்.

பாட்டி அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டவர், “கண்ணுல மருந்து போட போறாங்களாம் கர்ணா, அப்புறம் திரும்ப டெஸ்ட் பண்ணனுமாம்” என விவரம் சொன்னார்.

பாட்டியின் கண்களில் சொட்டு மருந்து போட்டு விட்டு, கண்களை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தி விட்டு நகர்ந்தார் செவிலியர். இப்போது பாட்டியை தனியே விட்டு செல்ல மனமில்லாமல் அங்கேயே இருந்த கர்ணா மீண்டும் அங்கே பார்க்க அவள் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.

வெள்ளை நிறத்தில் பளிச் என ஊதா வண்ணப் பூக்கள் சிதறியிருந்த நீள டாப், கரு ஊதா வண்ண ஜீன்ஸ், உயர்த்தி போடப்பட்ட போனி டெயில், பேசும் பொதெல்லாம் எதிராளியை வசீகரிக்கும் தெத்து பல்… கர்ணா அவளை அளவிட்டுக் கொண்டிருந்தான்.

அவள் நெருங்கி வர கர்ணாவுக்குள்ளிருந்த சிறு பதட்டம் அதிகரிக்க தொடங்கியது. பத்மினி கண்களை மூடியிருந்ததால் அவரால் பேரனின் மாற்றங்களை கண்டு கொள்ள முடியவில்லை.

கர்ணாவின் திடீர் பதட்டத்திற்கு காரணமானவளும் அவனை பார்த்து அதிர்ந்து அப்படியே நின்றாள்.

“மினி என்னடி என்ன?” என அவளது தாய் வத்சலா அவள் தோளை தொட்டு உலுக்க, “ஒண்ணுமில்லம்மா” என்றவள் இயல்பாக இருப்பது போலவே காட்டிக் கொண்டு முன்னேறினாள்.

வத்சலா இயல்பாக பத்மினி அருகில் போய் அமர்ந்து கொள்ள அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டாள் தாமினி.

“டோக்கன் முன்னாடியே போட்டாச்சு இன்னும் வெயிட் பண்ண சொல்றாங்க பாரு, அதுக்கு ஏன் முன்னாடியே டோக்கன் போடணும் சொல்லு?” மகளிடம் அலுத்துக் கொண்டார் வத்சலா.

“முன்னாடியே டோக்கன் போட்டாலும் அவங்க கூப்பிடற நேரத்துக்கு இல்லைன்னா நாலு பேர விட்டுதான் கூப்பிடுவாங்கமா, இங்க அப்படித்தான் ஃபாலோவ் பண்றாங்க. கொஞ்ச நேரம் அப்படியே வேடிக்கை பார்த்தா சரியா போகுது” என கண்களை மூடிய படியே யாரென தெரியாத வத்சலாவிடம் சமாதானமாக சொன்னார் பத்மினி.

“எங்கம்மா… நேரத்துக்கு வாடின்னா என் பொண்ணு லேட் பண்ணிட்டா, இதுக்கு நானே தனியாவே வந்திருந்தா இந்நேரம் பார்த்திட்டு கிளம்பியிருப்பேன்” என்றார் வத்சலா.

“யாரு உங்க பொண்ணு கூட வந்தீங்களா?”

“ஆமாம் மா, வயசுல ரொம்ப பெரியவங்களா தெரியறீங்களே… நீ வா போ ன்னு பேசுங்கம்மா” என வத்சலா சொல்ல இரு இளம் மனங்கள் படும் பாடு தெரியாமல் அவர்களுக்கு இடையில் அமர்ந்து கொண்டு பேச்சை வளர்த்தார்கள் அந்த பெண்மணிகள்.

இடையில் பத்மினி பாட்டிக்கு இன்னும் இரு முறை சொட்டு மருந்து போட்டு விட்டு சென்றார் செவிலியர். வத்சலாவின் முறை வர அவர் பாட்டியிடம் சொல்லிக் கொண்டு செல்ல தாமினியும் உடன் சென்றாள்.

கர்ணாவுக்கு ஹப்பாடா என இருந்தது, ஆனாலும் அவள் சென்ற திசையை ஏக்கமாக பார்த்தான்.

“கர்ணா டேய் கொஞ்சம் தண்ணி கொடு” என பாட்டி கேட்டும் பதில் சொல்லாமல் கர்ணா இருக்க, “டேய் இருக்கியா?” எனக் கேட்டு அவன் தொடையில் தட்டினார் பாட்டி.

“என்ன பப்பி? எதுக்கு இப்போ சுள்ளுன்னு அடிக்கிற?” கோவமாக கேட்டான் கர்ணா.

“அது சரி, என்ன போனை நோண்டிட்டு இருக்கியா நீ? தண்ணி கொடுடா தடியா, தொண்டை வறண்டு போயிட்டு”

“அதுக்குத்தான் கம்மியா பேசணும்” அலுத்துக் கொண்டே தண்ணீர் கொடுத்தான் கர்ணா.

“ஆமாம் இப்ப இங்கேர்ந்து போனிச்சே ஒரு பொண்ணு, அதோட பொண்ணு பேர் என்னமோ சொல்லிச்சே… ஹான் தாமினி… நல்ல பேரு, ஏன் டா பார்க்க எப்படி இருந்தா?” சின்ன குரலில்தான் கேட்டார் என்றாலும் கர்ணா அதிர்ந்து விட்டான்.

அம்மாவுடன் சென்ற தாமனி இப்போதுதான் அவள் முன்னர் அமர்ந்த இருக்கையிலேயே அமர்ந்து கைபேசி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் காதில் விழுந்திருக்கும் என்பது சர்வ நிச்சயமே.

Advertisement