Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 12

                      துருவன் அன்னையை அணைத்துக் கொண்டு அப்படியே சில நிமிடங்கள் நின்றுவிட்டான். வாழ்வில் முதல் முறையாக என்னவோ ஒரு இனம்புரியாத உணர்வு முழுமையாக ஆட்டி வைத்தது அவனை. விஷயம் அவனை வைத்து என்றால், கண்டுகொள்ளவே மாட்டான் அவன்.

                       ஆனால், அவனை அடையாளப்படுத்துவதே பரமேஸ்வரன் மகன் என்று தானே. அந்த வார்த்தைக்காக தான் அஞ்சுகிறான் அவன். பெற்றவர்களைவிட மேலாக தன்னை வளர்த்தவர்களுக்கு தன்னால் களங்கம் வந்துவிடக் கூடாதே என்று தான் அவன் மனம் துடித்தது.

                      ரேகா மகனின் குழம்பிய முகத்தைக் கண்டவர்துருவ் என்னம்மா…” என்று அவன் கன்னம் தட்ட 

                       “அம்மாநான் அப்பாகிட்ட கொஞ்சம் பேசணும்.. நீங்க இருங்க வர்றேன்.” என்றவன் பின்னால் நின்றிருந்த தந்தையிடம்என்னோட வாங்கப்பா..” என்று கூறிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். தந்தையின் அலுவலக அறைக்குள் நுழைந்து அங்கிருந்த சோஃபாவில் தலையை கைகளில் தாங்கிக்கொண்டு அவன் அமர்ந்துவிட, பரமேஸ்வரன் அந்த அறைக்குள் வந்து சேர்ந்தார்.

                         மகன் அமர்ந்திருந்த நிலை அவரையும் லேசாக அசைத்துப் பார்க்க, அவன் அருகில் அமர்ந்து அவன் தோளை தொட்டவர்என்ன துருவா.. என்ன விஷயம்..” என்று மெதுவாக கேட்க

                        அவரை ஏறிட்டு பார்க்கவே முடியவில்லை துருவனுக்கு. இன்னும் சற்று சுதாரிப்பாக இருந்திருக்க வேண்டுமோ என்று இப்போது தோன்றியது அவனுக்கு. கண்களை ஒரு முறை இறுக மூடித் திறந்தவன் தந்தையை நேராக பார்த்து நேற்று இரவு முதல் நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவரிடம் கூறிவிட்டான்.

                    பரமேஸ்வரனுக்கும் அதிர்ச்சிதான். ஆனால், மகனின் வாடிய முகம் கண்டவர்இதெல்லாம் ஒரு விஷயமா துருவ். அதோட நீ இப்படி பயந்து என்ன ஆகப் போகுது. எது வந்தாலும், எதிர்த்து நில்லு. உன்மேல துளிகூட தப்பில்லையே. பிறகு ஏன் கவலைப்படணும்…” என்று மென்மையாக அவர் கூற 

                    துருவனுக்கு அவரது பாசத்தில் கண்கள் கலங்கியது. “அப்பா.. நான் எந்த தப்பு…” என்று அவன் தொடங்கும் போதே 

                     “எனக்கு என் பிள்ளைகளை தெரியும் துருவா.. நீ இதைப் பத்தி கவலைப்படாத.. அடுத்து என்ன செய்யலாம் ன்னு நான் பார்க்கிறேன்..” என்றவர் கையில் அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட, கையில் எலுமிச்சை சாறுடன் அந்த அறைக்குள் வந்தார் ரேகா.

                      மகனிடம் ஜூஸ் டம்ளரை நீட்டியவர் அவன் குடித்து முடிப்பதற்காக காத்திருக்க, துருவன் டம்ளரை டீப்பாயின் மீது வைத்துவிட்டு அன்னையின் மடிமீது படுத்துக் கொண்டான். ரேகா மகனின் செயலில் சிரித்துக் கொண்டே அவன் தலையை கோதிவிட, ஆர்த்தி சற்றே பதட்டத்துடன் அந்த அறைக்குள் நுழைந்தாள்.

                      அவள் உள்ளே வந்த நேரம், பரமேஸ்வரனும் அலைபேசியில் பேசி முடித்து உள்ளே நுழைய, மருமகளின் பதட்டமான முகம் உடனே பிடிபட்டது அவருக்கு. “என்னம்மா..” என்று மெல்லிய குரலில் கேட்க, தன் அலைபேசியை அவரிடம் நீட்டினாள் ஆர்த்தி.

                        அவளது கண்கள் அதீத பதட்டத்தை காண்பிக்க, ரேகாவும் பயத்துடன் இவர்களைத் தான் பார்த்திருந்தார். கணவரின் முகமும் சட்டென மாறவேஎன்னங்க..” என்று கொஞ்சம் சத்தமாகவே அவர் கேட்க, துருவனும் எழுந்து தந்தையைப் பார்த்தான்.

                       பரமேஸ்வரனின் அமைதியில்என்னப்பா..” என்று அவன் அருகில் வர, அலைபேசியை மருமகளிடம் கொடுத்துவிட்டார் அவர். “ஒன்னும் இல்ல துருவ். நீ கொஞ்ச நேரம் படு.. அப்புறம் பேசுவோம்.” என்று அவனை சமாளிக்கப் பார்க்க 

                         “என்னப்பா போன்ல…” என்று கூர்மையாக கேட்டவன் தன் அலைபேசியை சென்று எடுத்தான். “துருவா..” என்று பரமேஸ்வரன் அதட்ட, “இருங்கப்பா..” என்றவன் தன் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தை முதலில் திறந்து பார்க்க, மொத்தமும் இவனும் திஷாவும் தான் நிறைத்து இருந்தனர்.

                           திஷாவுடன் ஒட்டி, உரசிக் கொண்டிருந்த துருவனின் புகைப்படங்களைத் தான் சமூக வலைத்தளங்கள் வைரலாக்கிக் கொண்டிருந்ததுஇசை நாயகனும், சினிமா நாயகியும்…. தயாரிப்பாளர் குடும்ப வாரிசின் லீலைகள்…. இரண்டெழுத்து நடிகையுடன் உல்லாசம்என்று அவர்கள் கற்பனைக்கு தோன்றியதெல்லாம் போஸ்ட்டாக மாறிக் கொண்டிருந்தது அங்கே.

                           இதற்குள் விஷயம் செய்தி நிறுவனங்களுக்கும் தெரிந்து விட்டிருக்க, அத்தனை சேனல்களிலும் தலைப்பு செய்தியாகிப் போயிருந்தான் துருவன். அதுவும் இரவு நேரத்தில் அவனை காரிலிருந்து திஷா இறக்குவதும், மீண்டும் காலையில் அவன் காரில் ஏறி கிளம்புவதும் தெளிவான வீடியோ பதிவாகவே வெளியிடப் பட்டு இருந்தது.

                           துருவன் தன் அலைபேசியை வெறித்து கொண்டே நிற்க, இதற்குள் அபிநந்தனும், சர்வாவும் வந்து விட்டிருந்தனர். ரேகா மகனின் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கிப் பார்த்தவர் அதில் இருந்த காட்சிகளை காண சகியாமல் அலைபேசியை தூர எறிந்து விட்டார்.

                           துருவன் பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருக்க, அவனை நெருங்கி அணைத்துக் கொண்டார் ரேகா. தன் கணவரையும் ஒரு குற்றம் சாட்டும் பார்வை பார்க்க, “நான் பார்த்துக்கறேன் ரேகா.. நீ இவனைப் பார்த்துக்கோ.” என்று அவர் வெளியேற முற்பட 

                          “என்ன பார்ப்பீங்க.. என் பிள்ளையோட பேரை திட்டம் போட்டு கெடுத்துட்டு இருக்காங்க.. நீங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களா..” என்று கண்ணீருடன் ரேகா கத்த 

                            “அம்மா..” என்று சர்வாவும், அபியும் அவரை நெருங்க, “தள்ளிப் போங்கடா ரெண்டு பேரும்.” என்று அவர்களையும் திட்டினார் ரேகா

                   தன் கணவரிடம் கோபத்துடன் திரும்பியவர்நீங்க என்ன செய்விங்களோ தெரியாது எனக்கு. இது அத்தனையும் ஒண்ணுமில்லாம ஆகணும். இதுக்கு காரணமானவங்க யாரையும் சும்மா விடக்கூடாது..” என்று கட்டளையாக கூறியவர், தளர்ந்து அமர்ந்திருந்த மகனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார்.

                     ரேகா துருவனின் கையை பிடிக்கவுமேசாரிம்மா..” என்று அவன் உடையத் தொடங்க, “தப்பு செஞ்சவங்க தான் மன்னிப்பு கேட்கணும் துருவா.. நீ என்ன தப்பு செஞ்ச…”என்றவர் மகனின் கையை பிடித்துக் கொள்ள, அவர் கையில் முகத்தை புதைத்துக் கொண்டான் துருவன்.

                    பரமேஸ்வரனுக்கு அதற்குமேல் அங்கே நிற்க முடியாமல் போக, கண்களில் துளிர்க்க இருந்த நீரை உள்ளிழுத்துக் கொண்டே வெளியில் கிளம்பிவிட்டார் அவர். ஆர்த்தி கணவனை சுரண்ட, அவனும் தந்தைக்கு துணையாக பின்னால் ஓடினான்.

                       துருவன் எதையும் யோசிக்க முடியாதவனாக அமர்ந்து இருக்க, அவனை விட்டு ஒரு நொடிக்கூட நகராமல் அமர்ந்து இருந்தார் ரேகா. அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீகாவும் வீட்டிற்கு வந்துவிட, விஷயம் கேள்விப்பட்டு படப்பிடிப்புத் தளத்தில் அவசரமாக ஓடி வந்திருந்தாள் அவள்.

                       சோர்ந்து அமர்ந்திருந்த துருவனைக் காணவும்,விரைந்து அவனை நெருங்கினாள் ஸ்ரீகா. அவனின் அருகில் சென்று அமர்ந்தவள்ஏன்டா முகத்தை இப்படி வச்சிருக்க??” என்று அவனை அதட்ட 

                      துருவன் நிலையில் இன்னமும் மாற்றமில்லை. ஸ்ரீகா அவன் கைக்குள் தன் கையை கோர்த்துக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொள்ள, அப்போதும் பேசவில்லை அவன்.

                       ஸ்ரீகாவிற்கு அவனின் இந்த நிலை கண்ணீரை கொடுக்க, “என்னை மன்னிச்சுடு துருவா.. நான் அவளை அடிச்சிருக்க கூடாது அன்னைக்கு.. என்னால தானே..” என்று கூறும்போதே 

                       “லூசு மாதிரி உளறாத ஸ்ரீகா..” என்று அதட்டினான் துருவன்.

                        ‘இல்ல துருவா.. நீ சொல்றதை கேட்டு இருக்கணும் நான். இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கணும்..” என்று அவள் தன்னையே குற்றம் சாட்டிக் கொள்ள 

                       அவள் தோளைச் சுற்றி கையை போட்டு அணைத்துக் கொண்டவன் அன்னையிடம் திரும்பி, “பாருங்கம்மா இவளை. சின்னப்பிள்ளை மாதிரி பண்ணிட்டு இருக்கா… ” என்றுவிட்டு, ஸ்ரீகாவிடம்இந்த விஷயம் உன்னால இல்ல ஸ்ரீகா. அதோட இது நீ நினைக்கிற அளவுக்கு பெரிய விஷயமும் இல்ல. நம்மால மேனேஜ் பண்ண முடியும்..” என்று தன் கவலை மறந்து ஸ்ரீகாவை தேற்றிக் கொண்டிருந்தான் துருவன்.

                     அவன் சற்றே இயல்புக்கு திரும்ப, “நேற்று என்ன நடந்தது துருவ். நீ எப்படி திஷாவோட.. ” என்றாள் ஸ்ரீகா. துருவன் தந்தையிடம் சொன்னது போலவே, அவளிடமும் தான் அறிந்தவரை நடந்தது அனைத்தையும் கூற

                   “அதெப்படி ரெக்கார்டிங் தியேட்டர்ல இருந்து கிளம்பினா, நேரா நம்ம வீட்டுக்கு தானே வரணும்எப்படி திஷாவோட வீட்டுக்கு போவ.” என்றாள் அவள்.

                        “அதுதான் எனக்கும் சந்தேகம். ஆனா, நான் ரோட்ல விழுந்து கிடந்ததா அவ சொல்றா. போதையில இருந்தேன்னும் சொன்னா..” என்றவன் ரேகாவை பார்க்க முடியாமல் தலை குனிய 

                    “நீயா ட்ரிங்க்ஸ் எடுக்க எல்லாம் வாய்ப்பே இல்லை துருவா. ஒரு அம்மாவா எனக்கு என் பசங்களை தெரியும். நீ தலைகுனிய எல்லாம் அவசியம் இல்ல. என்ன நடந்தது ?? இன்னொரு முறை யோசி. கொஞ்சம் தெளிவா ஏதாச்சும் யோசிக்க முடியுதா பாரு..” என்றார் ரேகா.

                   துருவன் எத்தனை முறை யோசித்தாலும், அவன் அலுவலகத்தில் இருந்து கிளம்பியது வரை தான் நினைவில் இருந்தது அவனுக்கு. அதன்பிறகு நடந்தது அனைத்துமே தெளிவில்லாத காட்சிகளாகவே இருக்க, தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் சில நிமிடங்கள்.

                 பலமுறை முயற்சித்தும் அவன் சிந்தனை காரில் கிளம்பியது வரை மட்டுமே தெளிவாக இருக்க, இறுதியாக தான் அருந்திய காஃபியில் வந்து நின்றது அவன் மனம். அதுவரை இந்த மயக்கமோ, மிதப்போ எதுவும் இல்லை. அதன்பிறகே அத்தனையும் அல்லவா.

                   ஒரு முறைக்கு பலமுறை தனக்கு தானே உறுதிப்படுத்திக் கொண்டவன் விழிகளில் ரௌத்திரம் பெருகியது. வெறி கொண்டவன் போல் எழுந்தவன்நீ அம்மாவோட இரு.” என்று ஸ்ரீகாவிடம் உரைத்துவிட்டு வெளியே வர, அறிவன் படிகளில் ஏறிக் கொண்டிருந்தான்.

                      பரமேஸ்வரன் ஒரு வேலையாக அவனை பெங்களூர் அனுப்பி இருக்க, இங்கே விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிறகு தான் விவரம் தெரிந்தது அவனுக்கு. அடித்து பிடித்து வீட்டிற்கு வந்தவன் கண்டது கோபத்துடன் படிகளில் இறங்கி கொண்டிருந்த துருவனைத் தான்.

                        “துருவா..” என்று அவன் நெருங்க, “காரை எடுடா..” என்று அவனிடம் கூறி நேராக சென்று காரில் அமர்ந்தான் துருவன். எதற்கு என்று தெரியாமல் போனாலும், துருவன் தவறமாட்டான் என்று மற்றவர்களை போலவே அறிவனும் நம்பியதால், எதுவும் பேசாமல் காரை எடுத்தான் அவன்.

                         கார் நேராக துருவனின் ரெக்கார்டிங் தியேட்டருக்கு செல்ல, காரிலிருந்து இறங்கி நிதானமாக உள்ளே நடந்தான் துருவன். ரிசப்ஷனில் ராகவி சோர்ந்த முகத்துடன் அமர்ந்திருக்க, அவளின் முகம் வாடி இருந்தது சாதாரண பார்வைக்கே தெரியும்படி தான் இருந்தது.

                           அவளை நெருங்கியவன்என் ரூம்க்கு வா..” என்று அழுத்தமான குரலில் கூறிவிட்டு, தனது ரெக்கார்டிங் அறையை நோக்கி நடந்தான். அங்கே இருந்த அவனது இருக்கையில் அவன் அமர்ந்த நிமிடம், உள்ளே நுழைந்தாள் ராகவி. முகம் இன்னும் வாட்டமாகவே இருக்க, “சொல்லுங்க சார்..” என்று மரியாதையாக வந்தது குரல்.

                       துருவன் எதுவும் பேசாமல் அழுத்தமாக அவளைப் பார்வையிட, அவன் பார்வையின் பொருள் விளங்கவில்லை அவளுக்கு. அவனின் அழுத்தமான பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவள்என்ன சார்..” என்று சிறு குரலில் கேட்க 

                       “என்ன கலந்த என்னோட காஃபியில…” என்றான் அமைதியாக. அவன் கேள்வி கேட்ட நேரம் அறிவனும் அந்த அறைக்குள் நுழைய, அவன் கேட்டதே புரியவில்லை அவளுக்கு.

                     “சார்.. என்ன கேட்கறீங்க.. எனக்கு புரியல..” என்று அவள் தடுமாற, “ஏய்..” என்று தான் அமர்ந்திருந்த நாற்காலியை பெரும் சத்தத்துடன் உதைத்து தள்ளி எழுந்துவிட்டான் துருவன். அவன் சத்தத்தில் பயந்தவள் பின்னால் நகர, அறிவன் அவன் கோபத்தை நன்கு அறிந்தவனாக, “துருவா..” என்று அதட்டலுடன் அவன் கையை பிடித்திருந்தான்.

                      ஆனால், அந்த நிமிடம் யாருக்கும் கட்டுப்படுவதாக இல்லை துருவன். அறிவனை முறைப்பாக ஒரு பார்வை பார்த்தவன்என்னடா இப்போவெளியே போ.. வெளியே இரு அறிவா.. நான் கூப்பிட்டா மட்டும் உள்ளே வா..” என்று அவனை துரத்த, அறிவன் அசையாமல் நின்றான்.

Advertisement