Advertisement

                     அதோடு அவளின் உடன்பிறப்புகளுக்கும் அவளே அழைத்து கூறிவிட, இவர்கள் சென்ற நேரம் மொத்தமாக வாசலில் கூடியிருந்தனர் அவர்கள். பார்த்துப் பல வருடம் ஆனது போல், ஸ்ரீகா ரேகாவை அணைத்து கொள்ள. பரமேஸ்வரன் ஜெய்யை வரவேற்றார்.

                      சகோதரர்கள் நால்வரும் ஸ்ரீகாவுடன் சேர்ந்து கொள்ள, வழக்கமான அரட்டை தொடங்கியது. அறிவன், சர்வா ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை கூற, துருவன் அவன் புதிதாக இசையமைத்த பாடலை ஸ்ரீகாவிடம் காண்பிக்க, அபி அவன் பங்கிற்கு ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

                        ஜெய் பரமேஸ்வரனுடன் பேசிக் கொண்டே அவர்களை பார்வையிட்டவன், பின் அவனும் ஜோதியில் கலந்துவிட, மேலும் கலகலத்தது அந்த இடம். அதிலும் அறிவனும், ஜெய்யும் கூட்டு சேர்ந்து கொண்டு மற்றவர்களை கலாய்க்க, சொல்லவும் வேண்டுமா…

                       ரேகா சாப்பிட அழைக்கவும், அனைவரும் வந்து டைனிங் டேபிளில் அமர, ஆர்த்தியும்,ரேகாவும் மட்டுமே பரிமாறினர். ஸ்ரீகா தங்கள் வீட்டில் திணறுவதற்கான காரணம் இதுதான் என்று புரிந்தாலும், எதுவும் செய்ய முடியாமல் நின்றான் ஜெய்.

                       உணவு முடிந்தும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர் இளைய பட்டாளம். இறுதியில் ஜெய் “கிளம்பலாமா..” என்று கேட்க, அவனிடம் தலையசைத்தாலும், ஸ்ரீகாவின் முகம் லேசாக வாட்டம் கொண்டது. ஜெய் “என்ன கிளம்ப மனசு வரலையா…” என்று அதட்ட

                       “நான் ஏதாச்சும் சொன்னேனா… வாங்கப் போகலாம்..” என்றாள் ரோஷமாக

                       ஜெய் சிரிப்புடன் எழுந்து கொள்ள, “நான் கிளம்புறேன் அபிண்ணா.. நேரமாச்சு..” என்று ஸ்ரீகா எழ, ஜெய் சிரிப்பு மாறாமல் படிகளில் ஏறினான்.

                         “எங்கே மேலேப் போறாங்க..” என்று அவள் பார்த்து நிற்க, துருவ் அவள் தோளைத் தட்டியவன் “இன்னிக்கு இங்கேதான் ஸ்ரீ. மாமா வந்த உடனே சொல்லிட்டாங்க..” என்றான் அவளிடம். கணவனின் கள்ளத்தனத்தில் மெல்ல சிரிப்பு எட்டிப் பார்த்தது ஸ்ரீகாவுக்கு.

                         அவன் தன்னிடம் கூறாததில் கோபம் கொண்டவள், மீண்டும் அதே இடத்தில அமர்ந்து கொண்டு பேச்சைத் தொடர, ரேகா வேலையை முடித்து கிச்சனை விட்டு வெளியே வரும் வரை தான் அதெல்லாம். வந்தவர் கையில் இருந்த பால் டம்ளரை ஆளுக்கு ஒன்றாக நீட்டினார்.

                       ஸ்ரீகா தன் டம்ளரை வாயில் வைக்க, “ஜெய் எங்கே…” என்றார் அவளிடம்.

                       “அவர் ரூமுக்கு போய்ட்டாரம்மா…” என்றவளை முறைத்து

                      “அவரை விட்டுட்டு நீ இங்கே கதை பேசிட்டு இருப்பியா ஸ்ரீ. பிடி.. இந்த பாலை அவர்கிட்ட கொடு..போ.” என்று மகளைத் துரத்த

                        “நான் குடிக்க வேண்டாவா..” என்று சின்னப்பிள்ளையாக தன் டம்ளரை காட்டினாள் பெண்.

                        “எடுத்துட்டு உன் ரூமுக்கு போ.. ஜெய்யோட குடிச்சிக்கோ.. கிளம்பு..” என்று அவளை விடாப்பிடியாக அவர் துரத்திவிட

                          “ரொம்ப ஓவர் இது..” என்று வாய்க்குள் முனகிக் கொண்டே, தன்னறைக்கு வந்து சேர்ந்தாள் பெண். ஜெய் அவளை எதிர்பார்த்தவனாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்க, அவனிடம் பால் டம்ளரை நீட்டினாள் அவள்.

                                                 “என்ன ஸ்ரீகுட்டி சீக்கிரமா வந்துட்டிங்க… வரமாட்டிங்க ன்னு நினைச்சேனே..” என்று அவன் வியந்துபோக

               “அதுதான் ஹெவி பெர்பாமன்ஸ் பண்ணி என் அம்மாவை  வச்சிருக்கீங்களே.. துரத்தி விட்டுட்டாங்க..” என்றாள் சோகமாக.

                 “தெய்வம் என் அத்தை.. அவங்க இருக்க தைரியத்துல தானே உன்னை விட்டுட்டு வந்தேன்..” என்று ஜெய் மேலும் பேச

                   “இப்போ தெய்வம் என்ன பண்ணிடுச்சு…  படுத்து தூங்குங்க.. எனக்கு தூக்கம் வருது…” என்று பாலை மொத்தமாக குடித்து முடித்து அவன் அருகில் படுத்து மொத்தமாக இழுத்து போர்த்திக் கொண்டாள் ஸ்ரீகா.

                    ஸ்ரீகாவுக்கு உறங்கும் எண்ணமெல்லாம் இல்லை. கொஞ்சமாக அவனை அலைய விட அவள் ஆசை கொள்ள, “கெஞ்சட்டும்..” என்றுதான் படுத்துக் கொண்டது.. ஆனால், பத்து நிமிடங்கள் கடந்த பின்னும் அவன் நெருங்காமல் இருக்க, “என்ன பண்றான்.” என்று  லேசாக போர்வையை விளக்கி, தலையை வெளியே நீட்டினாள் அவள்.

                       ஜெய் அவள் அருகில் அலைபேசியை பார்த்துக் கொண்டு படுத்திருக்க, வந்த கோபத்தில் மீண்டும் அவள் போர்வையால் மூடிக் கொள்ள, இப்போது சிரிப்புடன் அவள் மீது சற்றே வேகமாக விழுந்து வைத்தான் ஜெய்.

                      “ஐயோ..” என்று சத்தம் போட்டவள் “சாப்பிட்டதெல்லாம் வெளியே வந்திடும்.. வெய்ட்டா இருக்கீங்க… ராம்..” என்று கத்த

                         “சத்தம் போடாதடி..” என்று அவள் இதழ்களை மூடினான் அவன். அதில் திணறியவள் அவன் பின்னந்தலையை கையால் பற்றிக் கொண்டு அவன் தலைமுடியை வேகமாக இழுக்க,அதெல்லாம் வலிக்கவே இல்லை அவனுக்கு.

                       அவள் மூச்சுக்கு திணறவும், லேசாக அவன் இடைவெளி கொடுக்க, அந்த நேரத்தில் இதழ்களை உள்ளுக்குள் மடித்துக் கொண்டாள் ஸ்ரீகா. ஜெய் கடுப்புடன் அவளை முறைக்க

                     “வலிக்குது எனக்கு.. இப்படி இவ்ளோ பெருசா இருந்துட்டு என் மேல வந்து விழுந்தா.. நகருங்க..” என்றாள் மீண்டும்.

                      “சரி ஓகே.. நான் நகர்ந்தால், நீ என்னை மாதிரி என்மேல விழணும்.. ஓகே வா…அப்படின்னா, தள்ளிப் போறேன்..” என்றான் காரியத்தில் கண்ணாக

                       “ராம்… முடியல என்னால..”

                      “அதுதான் சொல்றேன்.. என்மேல விழு.. நான் குடும்ப பாரத்தை சுமக்கிறேன்…”

                      அவன் பேச்சில் சிரிப்பு வர, “உங்களை தள்ளி விடக்கூட முடியல என்னால.. இனி ஜிம்முகுள்ள போங்க சொல்றேன்..” என்று அவன் தோளில் அடித்தாள் மனைவி.

                     ஜெய் அதற்குமேல் அவளை வாட்டாமல் புரண்டு படுத்து, மனைவியை தன் மீது இழுத்துக் கொண்டான். அவள் கழுத்தில் இருந்த தாலி அவன் நெஞ்சில் உறுத்த, “ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுதுடி..” என்று அவள் சுடி டாப்புக்குள் இருந்த தாலியை அவன் வெளியே எடுக்க, அவன் என்ன செய்ய போகிறான் என்று புரிந்தவளாக, அவன் கையை தட்டிவிட்டாள் ஸ்ரீகா.

                      “ஏய் என்ன இப்போ.. எடுக்க மாட்டியா..” என்று ஜெய் அதட்ட

                      “அதெல்லாம் எடுக்க முடியாது.. போங்க..” என்று முகம் திருப்பினாள் பெண்.

                      ஜெய் அவளை வம்பிழுக்கவென்றே, மீண்டும் அவள் கழுத்து அருகே கையை கொண்டு செல்ல, அவன் கையை தன் கையால் பிடித்தவள், நெஞ்சோடு அணைத்து கொண்டே அவன் மீது இன்னும் சுகமாக அழுந்திக் கொண்டாள்.

                        அதற்குமேல் அங்கே பேச்சு வார்த்தைக்கெல்லாம் இடமில்லாமல் போக, தடைகள் எல்லாம் தானாகவே தகர்ந்து போனது. இருவருமே மற்றவரின் அருகாமையில் தங்களை மறக்க, காதல் மீறும்போது காமமும், காமம் மீறும்போது காதலும் அழகாக உயிர்பெற்றது அங்கே…

—————————————-

                                                      மேலும் ஒரு வாரம் வேகமாக கடந்து போக, அன்று காலையிலேயே பரபரப்புடன் தயாராகிக் கொண்டிருந்தார் சீதா. அவரின் அண்ணி பார்கவி அவரை கோவிலுக்கு வர சொல்லி இருக்க, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார் அவர்.

                     வெகுநாட்கள் கழித்து பிறந்த வீட்டில் இருந்து அழைப்பு. அண்ணனோ, தந்தையோ அழைக்கவில்லை. அண்ணிதான் அழைத்து இருக்கிறார். அதுவும் கோவிலுக்கு என்பதெல்லாம் அவர் கவனத்தில் பதியவே இல்லை.

                     எட்டுமணிக்கு பார்கவி வருவதாக சொல்லியிருக்க, ஏழு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி இருந்தார் சீதா. பார்கவி சொன்ன நேரத்திற்கு வந்து சேர, சீதா நிறைந்த சிரிப்புடன் வரவேற்றார் தன் அண்ணியை.

                      “எப்படி இருக்கீங்க அண்ணி.. வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா.. அப்பா எப்படி இருக்காங்க..” என்று அவர் விசாரிக்க

                       “எல்லாம் நல்லா இருக்காங்க சீதா.. நீ எப்படி இருக்கே.. பார்க்கவே சோர்ந்து தெரியறியே..” என்று பார்கவி வருத்தம் கொள்ள

                       “என்ன செய்றது அண்ணி.. எல்லாம் நாம வாங்கி வந்த வரம்.. ” என்று சலித்தார் சீதா.

                        “ஏன் சீதா.. எதுக்கு இப்படி கலங்கி போற.”

                        “என்ன சொல்றது அண்ணி. அவரை காதலிச்சு கல்யாணம் செஞ்சதால, பிறந்த வீட்டு சொந்தமும் விட்டுப் போச்சு. பிள்ளைகள் தான் எல்லாமே ன்னு நினைச்சா, அவங்க வளர்ந்து அவங்க வாழ்க்கையை அவங்களே முடிவு செஞ்சுட்டாங்க… எதுக்கு வாழ்ந்தோம்.. யாருக்காக வாழ்ந்தோம் ன்னு புரியவே இல்ல அண்ணி..” என்று விரக்தியாக கூறினார் சீதா.

                         “ஏன் ஜெய் கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லையா…”

                         “என் விருப்பமெல்லாம் ஒரு பொருட்டே இல்ல அண்ணி.. அவன் நாலு வருஷமா, அவளைத்தான் கட்டிக்குவேன் ன்னு பிடிவாதம் பிடிச்சு சாதிச்சுட்டான்…என்ன செய்ய முடியும் என்னால.. இதுல பீஷ்மா வும் அவ விஷயத்துல தலையிட, அவனுக்கு இன்னும் வசதியா போச்சு..” என்று புலம்பினார் சீதா.

                           எதிரில் இருப்பவரின் மனநிலை குறித்தெல்லாம் கவலை கொள்ளவே இல்லை அவர். தன் அண்ணி என்பதே போதுமாக இருக்க, மனம் திறந்து தன் உள்ளக்கிடக்கைகளை அவரிடம் கொட்டிக் கொண்டிருந்தார் சீதா.

                             பார்கவி சீதாவை ஆறுதல்படுத்துவது போல் “விடு சீதா.. யாருக்கு என்ன விதிச்சிருக்கோ, அதுதானே நடக்கும். ஸ்ரீகா உனக்கு மருமகளா வரணும்ன்னு இருந்து இருக்கு போல.. “என்றார்.

                          சீதா சோகமாகவே அமர்ந்திருக்க, “நேத்து உன் அப்பாவை பார்க்க போயிருந்தேன் சீதா.” என்று மெல்ல தொடங்கினார். சீதா அறிவுள்ளவராக இருந்தால் மாமா என்று குறிப்பிடாமல் “உன் அப்பா..” என்றதிலேயே பார்கவியை புரிந்து கொண்டிருப்பார்.

                           ஆனால், அந்த நிமிடம் அவர் மொத்தமாக தன் வசம் இழந்திருக்க, “என்னசொன்னார் அண்ணி.. எப்படி இருக்கார்..” என்று அவரிடமே கேட்டு வைத்தார்.

Advertisement