Advertisement

அவரோ “என்ன சார் சொல்லுங்க”, என்று கேட்டார்.

“ஒரு வீடு பார்க்க போறேன்” என்று சொன்னான்.

“வாங்க சார் போலாம்” என்றார்.

“இல்ல நீங்க எல்லாம் ஆபீஸ்ல இருந்து வந்திருக்கீங்க, நீங்க எல்லாம் ஜீப்ல போங்க, நான் ஆட்டோ புடிச்சு போய் பாத்துட்டு, நான் கோர்ட்ரஸ்க்கு போறேன்” என்று சொன்னான்.

“என்ன சார் இது வாங்க”, என்று சொல்லி அனைவரும் சேர்ந்து கிளம்பினர்.

அனைவரும் சேர்ந்து வீடு இருக்கும் இடத்திற்கு செல்லும் போது அங்கு அவன் நண்பர்கள் இருவரும் காத்திருந்தனர். கீழே முழுவதும் கார் பார்க்கிங்கே இருக்க, முதல் ப்ளோரின் ஆறு வீடுகளும், அதற்கு மேல் உள்ள ப்ளோரில் நான்கு வீடுகள் சற்று பெரியதாகவும் இருந்தது. அதை தான் பார்க்க சென்றனர். அதில் ஏற்கனவே மூன்று வீட்டில் ஆள் இருக்க ஒரு வீடு மட்டும் ஆள் இல்லாமல் பூட்டி கிடந்தது.

இதைப் பற்றி உடன் வந்த பெண் போலீஸ் கேட்கும் போதே, புரோக்கர் சொன்னது “இந்த ப்ளோர்ல முதலில் இரண்டு வீடு கட்டும் போதே புக் பண்ணி வாங்கிட்டாங்க ., அதுல பிள்ளைங்க எல்லாம் ஃபாரின்ல இருக்காங்க., பெரியவங்க ரெண்டு பேரு தான் இருக்காங்க, இங்க எல்லாமே லிஃப்ட் வசதி இருக்கிறதனால பெரியவங்களா இருந்தாலும் நிம்மதி தான், இந்த ரெண்டு வீடு பிரண்ட்ஸ் ரெண்டு பேரும் சேர்ந்து வாங்குறதுக்காக பிளான் பண்ணி கட்டிருக்காங்க, வீடு உள்ளே எல்லாமே ஒரே மாதிரி தான் கட்டி இருக்காங்க, இதுல ஒரே ஒரு மைனஸ் பாயிண்ட் என்ன ஆயிடுச்சுன்னா ரெண்டு வீட்டுக்கும் பால்கனி ஒரே பால்கனியாயிருச்சு., பெரிய பால்கனியா போட்டு கிரில் சுத்தி வச்சி, நடுவுல ரெண்டு வீட்டுக்கும் பொதுவா கிரில் கேட் ஒன்னு வச்சிருக்காங்க, அது ரெண்டு வீட்டுக்கும் பிரண்டு பேமிலி தானே அவங்க எதுக்கும் யூஸ் பண்ணிக்கலாம் அப்படின்னு பிளான் பண்ணாங்களா, என்னன்னு தெரியல, ஒருத்தருக்கு வாங்க முடியாத சூழ்நிலை வந்த உடனே ரெண்டு பேருமே வீடு வேண்டாம் என்று சொல்லிட்டாங்க, அதனால வீடு விக்காம அப்படியே இருந்து போச்சு, அதுக்கப்புறம் இந்த வீட்டை இப்போ ஐடியில் ஒர்க் பண்ற ஒருத்தங்க ஒரு வீட வாங்கி இருக்காங்க”, என்று சொன்னார்.

“ஓகே அப்ப நடுவுல இருக்க அந்த கிரில் மட்டும் அப்படியே இருக்கோ., எடுத்துட்டு சுவர் கூட கட்டி இருக்கலாம் இல்ல” என்று கேட்கும் போதே,

“அப்படி கட்டினா பால்கனியோட அழகே போயிரும் ன்னு தான் சார் கட்டல” என்றவர்.

“அந்த கிரில் ஒட்டி, இந்த வீட்டை வாங்குனவங்க சின்னதா ஒரு படி அளவுக்கு நாலு செங்கலை வைத்து கட்டிக்கிட்டாங்க, ஏன்னா இங்கே உபயோகிக்கும் தண்ணி, இல்லாம குப்பைகள் அங்கேயும் இங்கேயும் போய் அதனால பிரச்சினை வந்து விடக்கூடாது, அப்படின்னு சொல்லி கட்டிருக்காங்க, அவங்க அந்த பால்கனியில சின்னதா கார்டன் மாதிரி வச்சிருக்காங்க, அது மட்டும் இல்லாம துணி காய போடுற இடம் அந்த மாதிரி எல்லாம் செட் பண்ணி இருக்காங்க, நீங்க பாருங்க பாத்துட்டு நீங்க முடிவு சொல்லுங்க”., என்று சொன்னார்.

“சரி பார்க்கலாம்” என்று சொல்லி மேலே இரண்டாவது தளத்திற்கு சென்றனர். அதில் பெரியவர்கள் ஜோடியாக இருக்கும் வெளி கிரீல் வீட்டில் பூட்டப்பட்டு இருக்க, வீட்டில் உள்ளே டிவி ஓடும் சத்தம் மட்டுமே கேட்டது.

கீழே செக்யூரிட்டி இருப்பதால் யாரும் அவ்வளவு எளிதில் மாடிக்கு எல்லாம் வர முடியாது என்பது தெரிந்ததே, கொஞ்சம் பாதுகாப்பாக உணர்ந்தான்.

அருகில் உள்ள வீட்டில் கிரீல்லும் திறந்து இருக்க, கதவும் திறந்து தான் இருந்தது, உள்ளே ஆட்கள் பேச்சு சத்தமும் சத்தமாக கேட்டது, அவர்கள் வீட்டை திறந்து உள்ளே பார்க்க தொடங்கினர்.

அப்போது தான் பால்கனியை பார்த்துக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டை லேசாக எட்டிப் பார்க்க படி அளவிற்கு கல் வைத்து கட்டியிருந்தாலும், அந்த பக்கம் தரையெல்லாம் செயற்கை புண் தரை போல சீட் விரித்து அதற்கு மேல் அழகுஅழகாகச் செடிகள் வைத்திருப்பது பார்த்தவுடன் தெரிந்தது, பின்பு ஒரு புறம் அனைத்தும் கிரில் போடப்பட்டிருந்தாலும் அதை ஒட்டி துணி காய போடுவதற்கான கொடி போல கட்டப்பட்டிருப்பதும் தெரிந்தது,

ப்ரோக்கரோ “சார் நீங்களும் அந்த மாதிரி கூட பண்ணிக்கலாம்” என்றார்.

“அம்மாக்கு மெயின்டெயின் பண்ண முடியுமான்னு தெரியாது, அம்மா எப்படி நினைக்கிறார்களோ அப்படி பண்ணிக்கட்டும், அவங்க செய்து இருப்பது அழகா தான் இருக்கு” என்று சொன்னான்.

“வீடு எனக்கு ஓகே, நான் அம்மாவை கூட்டிட்டு வரேன் அப்ப பாத்துக்கலாம், ஒரு நாள் அம்மா அப்பா வர சொல்றேன் அவங்க பார்த்துட்டு ஓகே சொன்னாங்கன்னா, நம்ம பேசி முடிச்சுக்கலாம்” என்று சொல்லி விட்டு அவர்கள் வெளியே வரும் போது அவர்களுடன் அந்த பெண் போலீசும் அங்கே தான் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அதே நேரம் அருகில் உள்ள வீட்டிலிருந்து ராதா வெளியே வர பார்த்த பெண் போலீஸ் அடையாளம் அறிந்து கொண்டு “நீங்க அன்னைக்கு கார்ல லைசென்ஸ் இல்லாமல் வந்தவங்க தானே” என்று சொல்லவும்

யோசனையோடு ராதா குழப்பமாக அவர்களை பார்த்த படி தலையாட்டினாள்,

“உங்களுக்கு ஞாபகம் இல்லையா, உங்க ஐடி கார்டு எல்லாம் போட்டோ எடுத்தோமே, உங்க பிரண்டு கூட காலில் அடிபட்டு இருக்குன்னு சொன்னீங்களே, என்று சொன்னார்.

“ஆமா, அன்னைக்கு இருந்த டென்ஷன் ல உங்கள சரியா கவனிக்கலை, எத்தனையோ பேர் பார்த்து இருப்பீங்க, எங்கள எப்படி உங்களுக்கு ஞாபகம் இருக்கு”., என்று கேட்டாள்.

“அய்யோ அதெல்லாம் நல்லவே உங்கள மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருந்துச்சு, அன்றைக்கு அவசர அவசரமா பார்த்தோம், நீங்க லைசென்ஸ் இல்லாம யோசிக்கும் போது உங்க பிரண்ட் ம், நீங்களும் பேசிக்கிட்டே இருந்தீங்க, உங்க பிரண்டு தான், டல்லா இருந்தாங்க”, என்று சொன்னார்.

அருகில் இருந்த மற்றொரு போலீஸ்காரரும் “எப்படி இவர்களை மட்டும் இவ்வளவு ஞாபகம் இருக்கு” என்று கேட்டார் .

அதற்கு பெண் போலீஸோ “இல்ல இவங்க ஐடி கார்டு போட்டோ எடுக்குறதுக்காக வாங்கும் போது, அவங்க பிரண்டு டேஷ்போர்ட்ல இருந்து அவசரமா ஸ்கெட்ச் எடுத்து, முகத்தை லேசா கிறுக்கி கொடுத்தாங்க, அது நீங்க தான் ன்னு எப்படி நான் கண்டுபிடிக்கிறது என்று கேட்கும் போது, அட்ரஸ் இருக்குல்ல வந்து கன்பார்ம் பண்ணிடலாம் இல்ல, அப்படி ஒரு பிரச்சனை ன்னா அட்ரஸ் வச்சு கன்ஃபார்ம் பண்ணுங்க, அட்ரஸ் இருக்கு போன் நம்பர் இருக்கு, போட்டோ வேண்டாம் என்று சொல்லிக் கொடுத்தாங்க, அவர்களை பார்த்து சிரிப்புதான் வந்தது, அதனால் எனக்கு இருவரையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கவில்லை, உங்க பேரு ராதா சரியா”என்றார்.

“அப்போ உங்க பிரண்டு அவங்க என்று சொல்லி விட்டு இப்பதான் ரீசண்டா ஒரு வாரத்துக்கு முன்னாடி பழைய போட்டோஸ் எல்லாம் டெலிட் பண்ணும் போது கூட உங்களோடதை பார்த்து சிரிச்சிட்டே டெலிட் பண்ணினேன்” என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தார்.

அதே நேரம் உள்ளிருந்து கதிரவன் வரவும் கதிரவனிடம் சொன்னதும், ஓ என்று லேசான விசாரிப்போடு அவன் நிறுத்திக் கொண்டான்.

“தெரிஞ்சவங்க சார், அன்னைக்கு செக்கிங் ல பார்த்தோம்” என்று மட்டுமே சொன்னார். வேறு எந்த அறிமுகமும் கொடுக்கவில்லை, அப்போது தான் பெண் போலீஸ் “இதுதான் உங்க வீடா” என்று கேட்டார்.

“இல்லை இல்லை இது என் பிரண்டோட வீடு, அவ ஊருக்கு போய் இருக்கா, கம்பெனி விஷயமா ஆன்சைட் போயிருக்கா அவ வீடு தான் இது, வீக்லி ஒன்ஸ் கிளீன் பண்ண மெய்ட் வருவாங்க, கிளீன் பண்ணுவாங்க, இப்ப அவ இல்லாததுனால தான் வீக்லி ஒன்ஸ், இன்னைக்கு வந்து கிளீன் பண்ண வந்தோம்” என்று சொன்னாள்.

அதே நேரம் நந்தனும் வெளியே வர, நந்தனை அறிமுகப்படுத்தி வைத்தாள், போலீசும் அப்படியா என்று கேட்டுக் கொண்டனர்.

இந்த வீட்டினை எப்ப வாங்குனீங்க, எவ்வளவு என்று விலை விசாரித்துக் கொண்டிருந்தனர். அவளோ எனக்கு முழு டீடைல் தெரியாது, என்றாள்.

“உங்க பிரண்டு தான வாங்கி இருக்காங்க, உங்களுக்கு டிடெயில்ஸ் தெரியும் இல்ல” என்று பெண் போலீஸ் கேட்க,

இவளோ “என் ஃப்ரெண்ட் வீடு தான், ஆனா என் பிரண்டோட அண்ணன் இவர்தான்”., என்று சொன்னாள்.

Advertisement