Advertisement

4

    ஜெர்மன் வந்து இறங்கியவளுக்கு அங்குள்ள கால சூழ்நிலைக்கும்,  வேலைகளுக்கும் தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆகியது.

       ஆனாலும் யாரிடமும் எதையும் காட்டிக் கொள்ளாமல் தன்னை பழக்கப்படுத்திக் கொண்டாள்.

    தினமும் நந்தனும் ராதாவும் அவளை வீடியோக்காலில் பார்க்கும் போதெல்லாம் ராதா தான்,  “ஏண்டி ஒரு மாதிரி இருக்க” என்று கேட்பாள்.

     “ஒன்னும் இல்லையே நார்மலா இருக்கேன், உனக்கு அப்படி தெரியுதுன்னு”, சொல்வாளே தவிர தனக்கு அங்கு பழக நாள் ஆகிறது என்பதை தெரியப்படுத்தவே இல்லை,  ஆனால் அதை புரிந்து கொண்ட நந்தன் தான் “சீக்கிரம் செட் ஆயிருவா” என்று ராதாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

  மற்றபடி வேலைகளை அவள் தொடங்கிய பிறகு அவ்வப்போது நந்தனுக்கு அழைப்பது வழக்கம் தான்.

       அவள் அழைக்கிறாள் என்றாலே ராதாவை அருகில் வைத்துக் கொண்டு தான் அவனும் போனில் பேசுவான்,  வேண்டுமென்றே இவளோ டீம் லீட் என்று சொல்லி அழைத்து ஆபீஸ் விவகாரங்களை மட்டுமே கேட்பாள்.

அவள் ஆபீஸ் விவகாரங்கள் கேட்டு முடித்து விட்டாள் என்று தெரிந்த ராதா போனை எடுத்துக்கொண்டு “ஆமா இது என்னடி எப்ப பாத்தாலும் இப்படியே பேச முடியுமா” என்று அதட்டினாள்.

       “நீ எங்க இங்க., உன் சீட்ல வேலை இல்ல” என்று கேட்டாள்.,

“இருக்கு இருக்கு, ஜஸ்ட் பிரேக்” என்று சொல்லிக் கொண்டாள்.

‘உன் ட்ட தனியா பேச முடியாது ன்னு உங்க அண்ணன் துணை நான் வந்தேன் னா சொல்ல முடியும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

“நல்லா சாப்பிடுறியா, ஹாஸ்பிட்டல் போனீயா., டாக்டர் என்ன சொன்னாங்க என்று கேட்டு அவளிடம் பதில் பெற்ற பின்பே போனை கட் செய்தாள்.

ஜெர்மன் அலுவலகத்தில் அவளுடைய ப்ராஜெக்ட் வொர்க்கில் அவளுக்கான வேலைகள் வேகமாக நடந்தாலும், அழகாக சமாளிக்க கற்றுக் கொண்டாள்.

சந்தேகங்களை நந்தனிடம் கேட்பதோடு நிறுத்தி விடாமல், இங்கிருக்கும் ஜெர்மன் நபர் மார்ட்டின் என்பவரிடமும் தன்னுடைய சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக் கொண்டே வேலையை செய்ய தொடங்கினாள்.

அவளுடைய வேகமாக வேலை செய்யும் திறனை பார்த்த மார்டின் தான், அவளை அடிக்கடி பாராட்டிக் கொண்டிருப்பார், சிரித்துக்கொண்டே நன்றி சொல்வாளே அன்றி அவரிடம் அதிகமாக வாயடிக்க மாட்டாள்.

அப்போது அடிக்கடி நினைத்துக் கொள்வாள், ‘நம்மூரில் தான் மேல் நிலையில் இருக்கும் அலுவலர்கள், தங்களுக்கு கீழே இருப்பவர்களை அதிகமாக பாராட்டுவதில்லை போல, இங்கு யாரும் பாராட்ட தயங்குவதே கிடையாது’ என்று நினைப்பாள்.

அவருடைய பாராட்டை எப்போதும் இன் முகத்தோடு ஏற்றுக் கொள்வாள் , ஒரு முறை மதிய நேரம் வேலை முடியும் போது எழுந்து ஃபுட் கோர்ட்டுக்கு சென்றவளுக்கு ஒரு புதிய நட்பின் அறிமுகம் கிடைத்தது.

அந்த பெண்ணோ இவளை பார்த்ததும் வேகமாக வந்து, “ஹாய் நீங்க தமிழா “., என்று கேட்டாள்.

இவளும் “ஆமா” என்று தலையசைக்கவும்,

“ஹய்யோ எவ்வளவு நாள் ஆச்சு,தமிழ் பீப்பிள் பார்த்து, தமிழ்ல பேசியே நாளாச்சு” என்று தமிழில் பேச தொடங்கினாள்.

“மகிழ்வாகவே நீங்கள் இங்கே இருக்கிறீர்களா?” என்று கேட்டபடி எந்த டீம் என்று பேசிக் கொண்டிருந்தாள்.

அலுவலக விஷயமாக பேசிவிட்டு, கிளம்ப பார்க்கவும், அந்த பெண்ணோ, “நான் தமிழ்நாட்டில் தான் படிச்சேன், அங்க தான் பேமிலி இருக்காங்க, என்னோட பேரு சாரா, நீங்க” என்று இவளை பற்றி விசாரித்துக் கொண்டாள்,

இவளும் லேசான அறிமுகத்தோடு தன்னைப் பற்றி நிறுத்திக் கொண்டாள்.

சாரா என்ற அந்த பெண்ணும் இவளை முதல் முதலாக கண்டவுடன், தனக்கு பேச அருகில் ஆள் கிடைக்காமல் கிடைத்த உடன் இத்தனை நாள் பேசாதது எல்லாம் சேர்த்து பேசுவார்களே, அதுபோல பேச., இவளோ சாராவிடம் ம்ம் ம்ம் என்று சொன்னதோடு அப்படியா என்பதை தவிர வேறு எதுவும் பேசவில்லை.,

தன் கல்லூரி பற்றியும் தன் கல்லூரியில் படித்த நண்பர்கள் பற்றியும் தன் குடும்பம் பற்றியும் எல்லாம் சொன்னவள், கடைசியாக உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்றேன்” என்று சொல்லவும்,

‘அம்மாடியோ இந்த பொண்ணு என்ன இவ்வளவு பேசிட்டு இருக்காங்க, நம்மை யாருன்னு தெரியாம எல்லா விஷயத்தையும் சொல்லுது’ என்று நினைத்தவள் ‘தமிழ் பேச ஆள் இல்லாமல் பேசுறாங்க போல’ என்று நினைத்துக் கொண்டாள்.

அது உண்மைதான் தமிழ் பேச ஆள் கிடைக்காமல், தன் மனதில் இருப்பவற்றை சொல்ல ஆள் கிடைக்காமல், இன்று தமிழ் பேசும் நபரை பார்த்தவுடன் மொத்தமாக பேச தொடங்கி இருந்தாள் சாரா.

  சற்று நேரத்திலேயே நேரம் ஆவது உணர்ந்த யாழினி, “பேக் டு ஒர்க் பை, இன்னொரு நாள் பார்ப்போம்”, என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டாள்.

அப்போது இவளும் யோசித்துக் கொண்டாள். ‘நம்மளும் இப்படித்தான் வளவளன்னு பேசுறோமோ, என்று யோசித்தவள், தெரிந்தவங்க ட்ட மட்டும் தானே பேசுவோம், யாருனே தெரியாத நபரிடம் பேச மாட்டோம் இல்ல’ என்று நினைத்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாலும்,

‘இனி பேசுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

சற்று நாட்களிலேயே அங்கே நல்ல நட்போடு சாரா பழக முயற்சி செய்து கொண்டிருந்தாள். ஆனால் யாரோ என்று தான் அவள் பழகினாள், நாம் வந்த வேலையை முடித்துவிட்டு செல்ல போகிறோம்., எதற்கு பழக வேண்டும் என்று யோசிக்கும் அளவிற்கு சாரா பேச தொடங்கி இருந்தாள்.

அப்போது தான் ஒரு நாள் சாரா ‘தன் கல்லூரியில் தன்னுடைய சீனியரை விரும்பியதாகவும், சீனியருக்கு அதில் விருப்பமில்லை’ என்றும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘ஆனால் என் சீனியர் இன்னும் திருமணம் செய்யாமல் காத்திருக்கிறார், ஒருவேளை எனக்காகத்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது இவளுக்கு தான் சந்தேகம் வந்தது.

“ஏன் அப்படி சொல்றீங்க, ஆமா இவ்வளவு டீடெயில்ஸ் உங்களுக்கு எப்படி தெரியும்”, என்று கேட்கும் போது தான் அவள் சொன்னாள்.

“சீனியர் ஓட பிரண்ட்ஸ் இருக்காங்க இல்ல, அவங்க ஒருத்தங்களை நான் ப்ரண்டு பிடித்து வைத்திருக்கிறேன், அப்போ , அப்போ சீனியர பத்தின டீடெயில்ஸ் எல்லாம் கேட்டுக்குவேன். சீனியர் எக்ஸாம் எழுதி வேலைக்கு போயிட்டாரு”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

இவளோ ‘செத்தாண்டா அந்த மனுஷன்’ என்று மட்டும் நினைத்தாள்.

யாழினியோ அப்போது தன்னை நினைத்துக் கொண்டாள். ‘ நானே வாயடிப்பேன், ஆனா நானே இவங்க வாயடிக்கிறதை பார்த்து பயப்படுறேன், அந்த மனுஷன் நிலை என்ன’ யோசித்துக் கொண்டவள்,

‘மேபி அவருக்கு செட் ஆகுமா இருக்கும், நமக்கு என்ன இது தேவை இல்லாத வேலை’ என்று நினைத்துக் கொண்டவள் அவளோடு லேசான பேச்சு வார்த்தையோடு நிறுத்தினாலும், அவள் இவளை விடுவதாக இல்லை.

‘சரி இங்கு இருக்கும் வரை ஒரு ஆள் பேச பழக வேண்டுமே’ என்று இவளும் அவளோடு நட்பாக இருக்க தொடங்கினாள்.

     அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை கதிரவன் தன் டீமோடு முக்கிய விசாரணைக்காக வெளியே சென்றிருந்தான், அதே நேரம் அவன் நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது.

       முதல் அழைப்பை எடுக்காமல் விடவும், அடுத்து மீண்டும் அழைத்தான். ‘திரும்பத் திரும்ப கூப்பிடுறாங்க, என்ன விஷயமா இருக்கும்’ என்று யோசனையோடு கதிரவன் அழைப்பை ஏற்றான்.

நண்பனோ “டேய் வரீயா வீடு கேட்டிருந்த இல்ல, இங்க ஒரு வீடு சொன்னாங்க வந்து பாக்குறியா”, என்று கேட்டவன் ஏரியா பற்றி சொன்னான். “நீ சொன்ன மாதிரி அப்பார்ட்மெண்ட் தான் கிடைச்சிருக்கு, வில்லா கிடைக்கல” என்று சொன்னான்.

“எதுவா இருந்தாலும் ஓகே டா , வொர்க்கிங் ல இருக்கேன், முடிஞ்சிடுச்சா என்னன்னு பார்க்கிறேன், முடிஞ்சிடுச்சினா ஸ்டாப் அனுப்பிட்டு, நான் வரேன்” என்று சொன்னான்.

“ஏண்டா வந்து சும்மா எட்டி பார்த்துட்டு போயேன், இந்த பக்கம் உன்னோட ஸ்டாப்ஸ் க்கு தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இருக்கு இல்ல, பாரு பிடிச்சிருந்தா பேசுவோம், இல்லாட்டி வேற பார்க்க சொல்லுவோம்”, என்றான்.

“சரிடா இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வாரேன்” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

பின்பு கதிரவன் தன் கீழே வேலை பார்ப்பவர்களிடம் “முடிஞ்சிடுச்சுன்னா நீங்க கிளம்புங்க., எனக்கு ஒரு ஆட்டோ மட்டும் பிடிங்க” என்று டிரைவரிடம் சொன்னான்.

Advertisement