Advertisement

கதிரவன் 10 மணி போல வந்தவன், “என்ன இங்க சாப்பாடு, அவ செய்யலையா”,  என்று கேட்டான்.

“ஏன்டா அந்த பிள்ளையே டயர்டா இருக்கு, இன்னைக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி போல, வந்த உடனே பார்த்தாலே தெரிஞ்சது, என்ன உனக்கு அவ செய்யணும்னு சொல்லாத”,என்றார்.

“நீங்க இன்னைக்கு செஞ்சிருக்கீங்க, அப்புறம் அய்யய்யோ அத்தை செய்றாங்க, நாளைக்கு நான் செய்றேன்னு நிப்பா, அதுக்கு தான்” என்று சொன்னான்.

“அதெல்லாம் நாங்க பேசிக்கிறோம், நீ ஒன்னும் தலையிட வேண்டாம்”, என்று சொன்னவர் அவன் ரெஃப்ரெஷ் செய்து வரவும் உணவை வைத்து கொடுத்தார்.

    “என்னம்மா அதுக்குள்ள தூங்கிட்டாளா”, என்று கேட்டான்.

    “அவ சாய்ந்திரமே தூங்கிட்டா, எழுப்பி தான் இடையில் சாப்பாடு கொடுத்து தூங்க சொல்லி இருக்கேன், கொஞ்சம் நல்லா தூங்கி எந்திரிக்கட்டும், நீயும் பார்த்துக்கோ”, என்று அழுத்தமாக சொன்னார்.

    இவனோ ‘இவங்க என்ன நக்கல் அடிக்கிறாங்களா, இல்ல கிண்டலா சொல்லுறாங்களா’ என்று நினைத்து கொண்டான்.

    அவன் அம்மாவோ, வேண்டுமென்றே அவன் காதில் விழ வேண்டும் என்றே, அவன் அப்பாவிடம் “அந்த பிள்ளையை, உங்க புள்ள தொந்தரவு பண்ணாம இருந்தா சரி தான், அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்,  உங்க பிள்ளை கிட்ட சொல்லி வைங்க” என்று சொன்னார்.

   அவரும் “இதை போய் நான் எப்படி அவன் கிட்ட சொல்ல முடியும்”, என்று சொல்லிக் கொண்டிருக்க,

    அவனும் சிரித்தபடி “ம்மா அவ தூங்கட்டும், எனக்கும் தெரியும், உடனே ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பிளேம் பண்ணாதீங்க”, என்று சொல்லிவிட்டே வீடு நோக்கி சென்றவன்,  “நீங்களும்  தூங்குங்க, எதுக்கு இன்னைக்கு இவ்வளவு நேரம் முழிச்சிட்டு இருக்கீங்க”, என்றான்.

   “அவ அந்த பக்கம் கதவை பூட்டி இருக்கா, நீ எப்படி வருவேன்னு தெரியாது, சாவி வச்சு பூட்டி இருந்தால் பரவாயில்லை”,  அதனால தான் என்று சொல்லி எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு அவர்கள் படுக்க போவதை உறுதி செய்த பின்னே,

   “சரி பால்கனி கதவையும் சாத்திக்கோங்க” என்று சொல்லிவிட்டு அவன் வீட்டிற்குள் நுழைந்தான்.

    கதவை சாத்தியவன் அறைக்கு சென்று பார்க்க ஆழ்ந்த தூக்கத்தில் அவள் இருப்பதை பார்த்தவன்,  ‘என்ன இப்படி தூங்குறா’ என்று யோசித்து விட்டு தலையை கோதி கொடுத்தான்.

  அவன் தொடுவதை உணர்ந்து கொண்டவள், “வந்துட்டீங்களா”, என்று மட்டும் கேட்டு விட்டு அவன் கையைப் பிடித்துக் கொண்டு மீண்டும் தூங்க துவங்கி விட்டாள்,

   ‘என்ன ஆச்சு இவளுக்கு, லேசா டச் பண்ணாலே முழிச்சுக்குவா’,  என்று யோசித்தவன்,  ‘சரி தூங்கட்டும்’ என்று கையை அவள் பிடிக்குள்  கொடுத்து விட்டு அவனும் படுத்து தூங்கிவிட்டான்.

அன்றைய வேலை அலைச்சல், அவனை எதுவும் பேசவிடாமல் செய்திருக்க, அவனும் படுத்து கொஞ்ச நேரத்திலேயே உறங்கிவிட்டான்.

காலையில் சீக்கிரம் எழுந்தவள் அவனை தூங்க விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தாள்.

அவளை இழுத்து தன் மேல் சாய்த்து கொண்டவன், “தூங்கவிடுமா” என்றான்,

அவன் மேல் சாய்ந்து அவன் மீசையை பிடித்து இழுக்கவும்,

      “நீ இன்னைக்கு ஆபீஸ் போகவில்லையா” என்று கேட்டான்.

     “இல்ல ஒர்க் ப்ரம் ஹோம் வாங்க போறேன்”, என்று சொன்னாள்.

     “ஏன்”, என்று கேட்டான்.

     “அது தான் உங்களை எழுப்பிட்டு இருக்கேன்”, என்று சொன்னாள்.

“என்ன விஷயம், நானும் லீவு போடணுமா”, என்று கேட்டான்.

   “பிச்சு பிச்சு, ஒழுங்கா உங்க வேலைய பாத்துட்டு ஓடிப்போங்க”, என்று சொல்லி அவனை கலாய்த்து கொண்டிருந்தாள்.

   “அப்புறம் ஏம்மா நீ ஒர்க் ப்ரம் ஹோம் வாங்குற” என்று கேட்டான்.

    “வீட்ல உட்கார்ந்து வேலை பார்த்தா, ஒரு மணி நேரமாவது இடையில தூங்குறதுக்கு டைம் கிடைக்கும், அப்படி டயர்டா இருக்கு”, என்று சொன்னாள்.

     “அப்படி என்ன டயர்ட் இப்படி தூங்கி தூங்கி விழுந்துட்டு இருக்க”, என்று கேட்டான்,

     “என்னோட டயர்ட் பற்றி  தெரியும் போது சொல்லுங்க” என்று சொல்லி விட்டு அவனை “எந்திரிங்க எந்திரிங்க” என்று சொல்லி எழுப்பிக் கொண்டே இருந்தாள்,

     “ஒரு ஹாப் அன் ஹவர் ல  வர்றேன்” என்று சொன்னான்.

      தூங்கி கொண்டு இருந்தவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து விட்டு வெளியே வந்தாள்.

     பின்பு காலை உணவை தயாரிக்க தொடங்கியவள், கதிரவன் அம்மாவிடம் “காலை சாப்பாடு நான் பண்ணியிருவேன்,  குழம்பு நான் வச்சிடுறேன் உங்களுக்கு சேர்த்து வைத்து விடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே சமைக்க துவங்கியிருந்தாள்.

அவர் இங்கு வந்து இவளுக்கு காய் வெட்டி உதவி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது தான் கதிரவன் எழுந்து வந்தவன், “என்ன கிச்சன், ஒரே கிச்சனா மாறுதா”, என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

    கதிரவனின் அம்மா தான், “உனக்கு ஏன்டா இந்த வேலை, நீ சாப்பிட்டோமா, தூங்கினோமா, வேலைக்கு போனோமா, ன்னு இரு, ஒரு கிச்சனா இருந்தா என்ன, ரெண்டு கிச்சனா இருந்தா உனக்கென்ன”, என்று கேட்டார்.

    “எனக்கு ஒன்னும் இல்ல, நீங்களே செய்யுங்க”, என்று சொல்லிவிட்டு காபியை மட்டும் வாங்கிக்கொண்டு ஹாலில் சென்று அமர்ந்து எப்போதும் பார்க்கும் செய்திகளை பார்க்க  தொடங்கி இருந்தான்.

    சமையல் முடிந்தவுடன் கதிரவனின் அம்மா, “சரிம்மா நீ சாப்பிட்டு கிளம்பு” என்று சொன்னார்.

     “இல்லை ஒர்க் ப்ரம் ஹோம் வாங்கி இருக்கேன், அப்புறமா வரேன்”, என்று சொல்லி விட்டு குளிக்க செல்லும் போது தான், அவர் போய்விட்டாரா என்பதை பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டு,

நியூஸ் பார்த்து கொண்டிருந்தவனின் அருகில் வந்தவள்,  அவன்

டீ சார்ட் இழுத்து “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் வாங்க” என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“சொல்லுங்க என்ன மேடம், திடீர்னு வா ங்குறீங்க, பேசணும்ங்கறீங்க”, என்று சொல்லவும்,

அவனேயே பார்த்துக் கொண்டிருந்தவள், “கையை பிடித்து உள்ள வாங்க” என்று கூப்பிடவும், அவள் பின்னால் உள்ளே சென்றவுடன்,

அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்,  அவனும் சேர்த்து பிடித்தபடி “என்ன மேடம் இந்த ஹக்கை வெளிய வச்சு நீங்க பண்ணி இருந்திருக்கலாம், நியூஸ் பார்க்கிற என்னை கட்டாயப்படுத்தி உள்ள கூட்டிட்டு வந்திருக்க வேண்டாம்” என்று சொன்னவன்,

  அவளை கிண்டல் செய்து கொண்டிருக்க, இவளோ அவன் முடியை பிடித்து இழுத்து, “பேசக்கூடாது வாய மூடுங்க” என்று சொன்னாள்.

    “சரி” என்று சொன்னவன் வாயில் விரலை வைத்துக் கொண்டு அவளைப் பார்த்து கண்ணடித்தபடி “வேற என்ன செய்யணும்னு கரெக்டா சொன்னீங்கன்னா, நான் கரெக்டா செஞ்சுடுவேன்” என்று சொன்னான்.

“புத்தி போறத பாரு, பேச்ச பாரு” என்று சொன்னவள்.

“கண்ணை மூடுங்களேன்” என்று சொன்னாள்.

   உடனே கண்ணை மூடிக்கொண்டவன், “சரி பேசலாமா” என்று கேட்டான்.

“விரலை எடுத்துட்டு, தேவையானது மட்டும் தான் பேசணும், தேவையில்லாதது பேசக்கூடாது”, என்று சொன்னவள்.

    முதல் நாள் பார்த்த பிரக்னன்சி டெஸ்ட் கீட் ஐ எடுத்து அவன் கையில் கொடுத்தவள்,  “இப்ப கண்ணை திறந்து பாருங்க” என்று சொன்னாள்.

   கண்ணை திறந்து பார்த்தவனுக்கு முதலில் அது என்ன என்று புரியாமல், பின்பு புரிந்தவன் அவளை ஆராய்ச்சியாக பார்க்க, அவளும் அவனேயே பார்த்துக் கொண்டிருந்தாள்.

     அவனிடமிருந்து விலகி நின்றவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன், “இதுதான் மேடம் நேத்து ரொம்ப டயர்டா இருந்தீங்களா”, என்று கேட்டான்.

இவள் நிமிர்ந்து அவன் முகத்தையே பார்க்க, அவனும் அவள் முகத்தையே பார்த்தபடி இருந்தவன், நெற்றியில் முத்தம் வைத்து பின்பு மெதுவாக முகம் முழுவதும் முத்தமிட்டவன், ஒவ்வொரு முத்தத்திற்கும் தேங்க்ஸ் இசை, தேங்க்ஸ் இசை, என்று மட்டுமே சொன்னான்.

Advertisement