Advertisement

போட்டோ எடுப்பதற்கு முன்பே பெரியவர்கள் முடிவு செய்து விட்டார்கள், அவன் எடுத்தது தான் நிறைவாக இருப்பதாக, அதுபோலவே அது அத்தனை அழகாக அவளுக்கு பொருந்தி இருந்தது, எனவே அனைவருடைய சம்மத்ததோடு அவன் தேர்வு செய்த சேலையே எடுக்கப்பட்டது.

    சற்று விலை அதிகம் என்றாலும், அவன் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை, அதற்கான பணத்தை மட்டும் அவன் தான் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டான்,

மற்ற உடைகளுக்கு நீங்கள் கொடுங்கள், புடவை மட்டும் என்னுடைய சம்பளத்தில் எடுத்ததாக இருக்க வேண்டும், என்பதில் பிடிவாதமாக நின்று அதற்கு மட்டும் அவன் பணம் செலுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

   “மற்றவற்றை நீங்கள் எடுங்கள், நான் கிளம்புகிறேன், ஒர்க் இருக்கு”, என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்ப,

  “ஏண்டா சாப்பிட்டு போலாம் இல்ல”, என்று அவன் அக்கா கேட்டவுடனே,

“நான் புடவை எடுக்குறதுக்காக மட்டும் தான் வந்தேன், வேற எதுக்காகவும் வரல, எனக்கு ஒர்க் இருக்கு, ஜஸ்ட் ஒன் ஹவர் பெர்மிஷன்ல தான் வந்து இருக்கேன், கிளம்புறேன்”, என்று சொல்லிவிட்டு,

அவள் அருகில் வந்து, “போயிட்டு வரேன், உனக்கு பிடிச்சிருக்கு இல்ல” என்று கேட்டான்.

சிரித்தபடி தலையாட்டினாள். “இப்படி தலையாட்டிட்டே இரு” என்று கதிரவனின் அக்கா அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

“எப்ப பாத்தாலும் தலையாட்டாத யாழினி, அவன் கடைசில எதை சொன்னாலும் உன்னை தலையாட்ட வைத்து விடுவான்”, என்று சொன்னாள்.

அதற்கும் சிரித்தபடியே “சரி” என்றாள்.

  அதை இப்போது நினைத்துக் கொண்டவள், அவன் எடுத்துத் தந்த உடையில் தயாராகி வர, கீழே காரும் ரெடியாக இருந்தது.

இரண்டு குடும்பங்களும் வேனிலும் காரிலும் ஆக கிளம்பி செல்ல, இவளும் அவனும் தனித்தனியாக தான் கிளம்பி கோவிலுக்கு வந்திருந்தனர்.

அதற்குள் அவன் அலுவலகத்தில் இருந்த போலீஸ்காரர்கள் உதவியோடு, ஏற்கனவே கோயிலில் சொல்லி வைத்திருந்தார்கள்.

முதலில் இவர்கள் வந்தவுடன் இவர்களுக்கான திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அங்கேயே திருமணத்தை பதிவு செய்யவும் தயார் நிலையில் இருக்க,  கடவுள் முன்னிலையில் இசையை தன் வாழ்க்கையின் இசையாக மாற்றிக் கொண்டான்.

  அவளால் பரிதி என்று சொல்லப்பட்டவன், அவள் வாழ்க்கையின் முக்கியமான பகுதியாக மாறிப் போனான்.

அதன் பிறகு மண்டபத்திற்கு சென்றவர்கள், அங்கு நடந்த வரவேற்பையும் சிறப்பாக நடத்தினர்.

வந்தவர்கள் இவர்களை வாயார வாழ்த்தி, மனதார வாழ்த்த இவர்களும் அவர்களுக்கு வயிறு நிறைய மனம் குளிர உணவளித்து அனுப்பி வைத்தனர்.

உணவு வகைகளை நிறைவாக ஏற்பாடு செய்திருந்தான் கதிரவன்.

ஒவ்வொரு உணவும் ருசி பார்த்து, அதன் பிறகு அதை தேர்வு செய்து எடுத்திருந்தான், திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் உணவின் வகைகளையும் அதன் ருசியையும் பாராட்டாமல் செல்லவில்லை,அந்த அளவிற்கு அத்தனை சிறப்பாக அமைந்தது திருமண விருந்து.

நேரம் செல்ல அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, இரு வீட்டிலும் பால் பழம் அருந்த வைத்து கதிரவன் வீட்டிலே விட்டு வர அவளோ ஏதோ போல அமர்ந்திருந்தாள்.

அவனுக்கும் ரிலாக்ஸாக தூங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது,

   இவள் அருகில் இருந்தால் நிச்சயமாக எதுவும் நடக்காது, நாளை நாம் நினைத்தபடி வெளியே செல்ல முடியாது என்ற எண்ணத்தோடு, கதிரவன் அக்காவை அழைத்தான்.

     “அந்த பின்னாடி இருக்க பால்கனி க்ரீலை திற” என்று சொன்னான்.

“ஏன்டா” என்று கேட்டாள்.

     “இசையை இப்படி கூட்டி கொண்டு போய், அவங்க வீட்ல விட்டுறலாம்”, என்று சொன்னான்.

       “டேய் அப்படிலாம் விடக்கூடாது” என்று சொன்னாள்.

    “அக்கா புரிஞ்சுக்கோ, ஃபுல் டயட், இங்க இருந்தா புது இடம் தூங்க கஷ்டமா இருக்கும், இங்க தூங்குவதை விட, அவங்க வீட்ல போய் தூங்குனா, இன்னும் நல்லா தூங்குவா, அவளோட ரூம், அவளோட பெட், அப்படின்னு இருக்கும் போது அதுல தூக்கம் நல்லா வரும், எல்லாருக்கும் அப்படித்தானே”, என்று சொன்னான்.

கதிரவனின் அம்மாவோ, “அப்படி போக கூடாது” என்று சொன்னார்.

      “முன் வாசல் வழியா தான் போக கூடாது, பின் வாசல் வழியா வெளியே போகலாம்” என்று சொன்னான்.

    “இவன் என்னடி புதுசு புதுசா கதை சொல்லுதான்”, என்றார்.

    “அவன் வச்சது தான் ரூல்ஸ்” என்று சொல்லி விட்டு பின்பக்கமாக சென்று பால்கனியில் இரு வீட்டிற்கும் இடையே இருந்த க்ரீலை திறந்து அந்த பக்கம் போய் சத்தம் கொடுத்தார்.

    ராதா வந்து கதவை திறந்து, “என்ன அக்கா இந்த நேரத்தில்” என்று கேட்டாள்.

கதிர்வன் சொன்னதை சொல்லவும்,

அவளோ “என்னது இது” என்று கேட்டாள்.

“அவ நல்ல தூங்கனும் தான் சொல்லுறேன் ன்னு  சொல்லிட்டான்”என்றார்.

“அப்போ கல்யாண சாரியோட இங்க வர வேண்டாம்,  ட்ரெஸ்ஸை மாத்திட்டு வர சொல்லுங்க”, என்று பேசி முடிவெடுத்தனர்.

இவளுக்கு இங்கிருந்து ஒரு செட் டிரஸ் எடுத்துக் கொண்டு கதிரவனின் அக்காவோடு சென்றாள்.

    “முதலில் நீ  அவன் ரூமுக்கு போய் டிரஸ் எல்லாம் மாத்திட்டு, அப்புறமா இப்படி போய், அங்க போய்  உன்னோட ரூம்ல தூங்கு”, என்று சொன்னாள்.

இவளும் கதிரவனை தான் பார்த்தாள், அவனோ “போய் நிம்மதியா தூங்கி எந்திரி, நாளைக்கு மத்தியானம் நம்ம ரெண்டு பேரும் வெளியே கிளம்புறோம்”,என்று சொன்னான்.

    “டேய் எல்லாமே உடனே தானா” என்று கேட்டவர், அவன் பதில் சொல்ல வருவதற்கு முன், கதிரவனின் அக்காவோ, “நீ எதுவும் பேசிடாதடா,நாங்களே முடிவு பண்ணிக்கிறோம், நீ அடுத்து என்ன சொல்ல வருவேன்னு எனக்கு புரிஞ்சிருச்சு” என்று சொன்னார்.

     பால்கனி வாசலில் நின்றிருந்த ராதாவும், கதிரவனின் அக்காவும், ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு “நீ என்ன சொல்ல வர்ற ன்னு எங்களுக்கு நல்லா புரிஞ்சிருச்சு, ராதா உனக்கு புரிஞ்சிடுச்சு தானே”, என்றார்.

“புரிஞ்சிட்டீங்கனா ஓகே தான்”, என்று சொல்லிவிட்டு அவன் பேசாமல் அமர்ந்திருந்தான்.

     உடைமாற்ற சென்றவளோ கல்யாண புடவையை மாற்றி வேறு உடை மாற்றிக் கொண்ட பின், புடவை மடித்து ஹேங்கரில் போட்டு விட்டு, எல்லாவற்றையும் அவன் அறையிலேயே வைத்து விட்டு வெளியே வந்தாள்.

    அவள் வரவும், உள்ளே சென்றவன், “என் ரூம்மை அழுக்காக்கலையே” என்றான்.

“இல்லை” என்று இவளும் சொன்னாள்.

பின்பு அங்கு தொங்க விட்டிருந்த அவள் புடவை வகையறாக்களை எடுத்து ஃபேன் ஏசி காற்று வரும் இடத்தில் தொங்க விட்டவன், காலையில் எடுத்து கபோர்ட்  உள்ள வச்சிக்கலாம், நீ போய் உன் ரூம்ல தூங்கு”, என்று சொன்னவன்,

   “குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று அவளை அனுப்ப,

“உனக்கு இதே பொழப்பு டா, குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் தான்”, என்று திட்டிக் கொண்டே “நீயும் போய் தூங்கு டா” என்றவள். நீயும் போய் தூங்கு மா”, என்றார்.

ராதா அவளை அழைத்துக்கொண்டு சென்றாள்,

வீட்டிற்கு சென்றவுடன் “குட் நைட் “என்று ராதாவிடம் சொல்லிவிட்டு அவள் அறைக்கு சென்று படுத்தவள்,  பால் எடுத்துக் கொண்டு ராதா செல்வதற்குள் இவள் தூங்கி இருந்தாள்.

  கொண்டு போன பாலை ராதா திருப்பிக் கொண்டு வருவதை பார்த்த நந்தன் தான், “என்ன ஆச்சு” என்று கேட்டான்.

“தூங்கிட்டா” என்று சொல்லவும்,

    வீட்டில் உள்ளவர்கள் தான் அதிர்ச்சியாக முழித்தனர், “அதுக்குள்ளே தூங்கிட்டாளா, இப்ப தானே வந்தா”, என்றனர்.

   “அவ்வளவு டயட்”, என்று சொல்லவும் நந்தன் தான், “அவளை பார்த்த உடனே புரிந்து கொள்ளும் கதிரவன் அவளை நன்றாக பார்த்துக் கொள்வார்,அந்த நம்பிக்கை இருக்கிறது, இப்படி அடித்துப் போட்டது போல் தூங்குபவள்,  நிச்சயமாக அங்கே இருந்தால், புது இடம் என்ற எண்ணத்தில் தூக்கம் வந்து இருக்காது, அதற்காக தான் அவர் இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்”, என்று பேசிக் கொண்டிருந்தனர்.

அனைவருக்கும் அந்த திருமணத்தில் மனம் திருப்தியே என்பது போல தான் தோன்றியது.

   காலையில் அங்கே வருவதை பற்றி சொல்வதற்காக யாழினியை தேடி வந்த கதிரவனின் அக்காவும், அவள் தூங்கி விட்டாள் என்பதை அறிந்து “அதற்குள்ளாகவா” என்று சொன்னவர், “சரிதான் அதனால தான் அவன் அனுப்பி இருக்கான், போய் தூங்கட்டும்ன்னு”, என்று சொல்லி விட்டு அவரும் “சரி காலையில் பார்க்கலாம், தூங்கட்டும், காலையிலும் அவளை இப்படியே எழுந்து வர சொல்லுங்கள்”, என்று சொன்னார்.

“சரி” என்று பேசிக் கொண்டிருந்தனர், “க்ரீல் கதவ பூட்டணுமா என்ன” என்று கதிரவன் அக்கா கேட்டார்.

“அது பேசாம இருக்கட்டும், இனிமேல் அந்த கதவுக்கு என்ன வேலை”, என்று பேசிக்கொண்டனர்.

Advertisement