Advertisement

3

அந்த  நட்சத்திர ஹோட்டலில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த டேபிளில் நண்பர்களோடு அமர்ந்திருந்தான் கதிரவன்.

அவர்கள் அனைவரும் அவ்வப்போது பார்த்துக் கொள்வது தான் என்றாலும், கதிரவனோ இப்போது தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பர்களை பார்க்கிறான். ஒவ்வொருவரும் “ஆளே மாறி போயிருக்கிறீர்கள்” என்று சொன்னான்.

நண்பர்களோ, “டேய் எங்க வயசு தானடா உனக்கும், அப்படியே இருக்கிற, இன்னும் காலேஜ் ல பார்த்த மாதிரி இருக்கிற” என்றனர்.

அவனும் சிரித்துக் கொண்டே, “ஏன் எதுக்கு இந்த வம்பு, இப்படி கிண்டல் செய்யுறீங்க, உங்களுக்கு என்னடா நீங்களும் நல்லாத்தான் இருக்கீங்க”, என்றான்.

“நல்ல கெத்தான போஸ்ட் என்னா மரியாதை ” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,

“அடேய் , நீங்க நல்ல ஜாலியா வாழ்க்கைய ரசிச்சு வாழுறீங்க, எனக்கு எதையும் ரசிக்க கூட முடியாது, நேரமும் கிடையாது” என்றான்.

“நீ தானே எக்ஸாம் எழுதி போன”, என்று நண்பன் கேட்டான்.

“ஹே அது ஒரு சேலஞ்சுகாக எழுதினேன், ஆனா அது கிளியர் ஆகும், நான் டிபார்ட்மெண்ட் உள்ளே போவேன் ன்னு நானும் நினைக்கல, யோசிக்கவும் இல்லை” என்று சொன்னவன்,

“ஞாபகம் இருக்கா காலேஜ் காலத்துல நம்ம பண்ணதெல்லாம்” என்று நண்பன் ஒருவன் கேட்கவும்,

சிரித்துக் கொண்டே “நிறைய வம்பு பண்ணி இருப்போம்” என்று பழைய விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

அதே நேரம் அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவுகள் வர சாப்பிட்டு கொண்டே பேசிக் கொண்டிருக்கும் போது பக்கத்து டேபிளில் இருந்த பெண்களின் சத்தம் அதிகமாக இருந்தது.

யாருக்கோ பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது, அதிலிருந்த ஒரு பெண் மட்டும் இங்கு உள்ள ஆட்களை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருப்பதை அனைவரும் கவனிக்க தான் செய்தனர்.

பார்த்த உடனே தெரிந்தது இவர்கள் அனைவரும் ஐடியில் வேலை பார்ப்பவர்கள் என்பது, பேச்சுவாக்கில் நண்பன் ஒருவர் அதை பற்றி சொல்லவும்,

மற்றவர்களோ சிரித்துக் கொண்டே “நம்ம எல்லாம் கல்யாணம் ஆன ஆட்கள், இவன் ஒருத்தன் தான் ஆகாதவன்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

இவனும் சிரித்துக் கொண்டே “அந்த பொண்ணு இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வரும், என்கிட்ட பேசாது உங்க யாரையோ ஒருத்தர தான் பாத்துட்டு இருக்கு”, என்றான்.

” அடப்பாவி நீ எப்படா நோட் பண்ண” என்று கேட்க,

“டேய் போலீஸ்காரன் ன்னு ஆயிட்டா முகத்துல ரெண்டு கண்ணு இருக்க கூடாது., நம்மள சுத்தி கண்ணா தான் இருக்கனும், கொஞ்ச நாளில் அப்படி தான் இருக்க முடியும்” என்றான்.

“ஆனாலும் அநியாயத்துக்கு பண்ற டா, எப்படி இப்படி மாறிப்போன, நீ எப்படி ஜாலியா இருந்த, உன்னைய எப்படி கிண்டல் பண்ணுவோம், நீ என்ன எல்லாம் லூட்டி அடிச்சிருக்க, என்றான் அருகில் இருந்த நண்பன்.

“டேய் பழசெல்லாம் ஞாபகப்படுத்தாதீங்க, அப்புறம் என்னைய பார்த்த எனக்கு எரிச்சல் வரும், சில பழைய விஷயங்களை இப்போ நினைக்கும் போது, நானா அப்படி பண்ணேன் அப்படின்னு யோசிக்க தோணுது, அதிலிருந்து வெளியே வரதுக்காக தானடா, இந்த சேலஞ்ச் எக்ஸாம் எழுத போனேன்”என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

“டேய் உனக்கு ஒன்னு தெரியுமா” என்று நண்பன் ஆரம்பிக்க,

“என்ன” என்று கேட்கும் போதே “நம்முடைய ஜூனியர் ஒரு பொண்ணு இருந்தாளே, உன் பின்னாடி கொஞ்ச நாள் சுத்திட்டு இருந்தாளே, நீ கூட அசிங்க அசிங்கமா திட்டி அனுப்புனீயே” என்று சொல்லவும்.

“ஆமா இப்ப என்ன” என்றான்.

அவளைப் பற்றிய சில விவரங்களை சொல்லிக் கொண்டிருந்தான்.,

“இப்ப மேடம் ஜெர்மன்ல போய் செட்டில் ஆயிட்டா, தெரியும்ல, ஆனா கல்யாணம் ஆகல,ஆறு மாதம் கழித்து வர்றதா சொன்னாங்க, வரும்போது உனக்கு இன்ட்ரோ கொடுக்கிறேன் டா, என்றான்.

“ஏன் தேவையில்லாத வேலை எல்லாம் பாக்குறீங்க, நான் நானா இருந்துட்டு போறேன்” என்று சொன்னான்.

“பின்னே எப்ப தாண்டா கல்யாணம் பண்ணுவ” என்று நண்பர்கள் கேட்டனர்.

அவனும் “பார்த்தவுடன் பிடிக்கனும் டா” என்று சொன்னவன். “அப்படி ஒரு பெண்ண பார்த்தா, நான் சொல்றேன். எனக்கு இப்போதைக்கு பெருசா வேற எதுவும் தோணல, பார்க்கலாம் அப்பாவும் சொல்லிக்கிட்டே தான் இருக்காங்க, என்னவோ மனசு கல்யாணம் ன்னு வரும் போது பொண்ணுங்கள ரொம்ப ஆராய்ச்சியா தான் பார்க்க சொல்லுது, லேடிஸ் எல்லாம் முன்னாடி மாதிரி இல்லடா, மாறி போய்ட்டாங்க, எவ்வளவு கேஸ் பாக்குறேன்”,என்றான்.

“அப்ப நீ வயசான லேடி தாண்டா கல்யாணம் பண்ணனும்”, என்று நண்பர்கள் கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

ஆள்ஆளுக்கு பேசி சிரித்துக் கொண்டே உணவை முடித்து அமர்ந்திருக்கும் போது, பக்கத்து டேபிள் பொண்ணு கதிரவன் சொன்னது போலவே அவன் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவனிடம் தேடி வந்து “ஹாய்” என்று சொல்லிய படி

” எங்க பிரண்டுக்கு பர்த்டே” என்று சொல்லவும் மற்றவர்கள் அவள் சொல்வதை பார்த்து கொண்டிருந்தனர்.

நண்பர்கள் எல்லோரிடமும் அவள் கொண்டு வந்து நீட்டிய கேக் துண்டை ஒரு பீஸ் எடுத்து அனைவரும் வாயில் வைத்துக் கொண்டாலும்., கதிரவனோ “நோ தேங்க்ஸ்” என்ற வார்த்தையோடு நிறுத்திக் கொண்டான்.

மீண்டும் அப்பெண் தன் நண்பர்களிடம் வழிவதை கண்டவன், வேண்டுமென்றே தன் நண்பனிடம் “அடுத்த தடவை வரும் போது பொண்டாட்டி பிள்ளையோட வாங்கடா” என்று சொன்னான்.

அந்த பெண் இவர்களை பார்த்து ஒரு மாதிரி முழிப்பதை கண்டவுடன், “போ மா, இங்க எல்லாம் கல்யாணம் ஆன பசங்க, எல்லாருக்கும் குடும்பம் இருக்கு, நீ புதுசா வேலைக்கு வந்து இருக்க அப்படித்தானே, இந்த மாதிரி பசங்கள பார்த்த உடனே இப்படி எல்லாம் பார்த்து ஏமாறாதே, புத்திசாலித்தனமா இரு மா, இப்ப உள்ள புள்ளைங்க எல்லாம் பார்த்த உடனே ஆள் நல்லா இருக்கானா, நம்மள மாதிரி ஐடி ல ஒர்க் பண்றா ன்னு நினைச்சுட்டு பேசப் போகாதீங்க”., என்று சத்தம் போட்டான்.

“நான் சும்மா ஃப்ரெண்ட்லியா தான் கேக் கொடுக்க வந்தேன்” என்று அந்த பெண் சொல்லிக் கொண்டு வந்த வழியே செல்வதை பார்த்தவனோ தலையில் அடித்துக் கொண்டான்,

இந்த பொண்ணுங்க எந்த காலத்துலடா இருக்கு, போற போக்க பாத்தா வேற மாதிரி போயிரும் போல, டேய் நீங்களாவது வழியிறத நிப்பாட்டுங்கடா”., என்றான்.

“அடேய் அதை நீ சொல்லக்கூடாது” என்று கிண்டலாக சத்தம் போட்டனர்.

“டேய் காலேஜ் படிக்கும் போது பெண்களை பார்த்தால் வழியுறது அது வேற விஷயம், இப்போ வயசு என்ன, வேலை என்ன ன்னு மறந்துடாதீங்க”, என்று இவன் ஒரு அதிகாரியாக அறிவுரை வழங்க தொடங்கி விட்டான்.

உடனிருந்த நண்பனோ “நீ தாண்டா வயசுக்கு தகுந்த மாதிரி இல்ல, உட்கார்ந்து அங்கிள் மாதிரி அட்வைஸ் பண்ற, ஆனா எங்களுக்கெல்லாம் இப்ப டவுட் வருது உனக்கு கல்யாணம் நடக்குமா, நடக்காதா ன்னு தான், எப்படிடா இப்படி இருக்க” என்று கேட்டனர்.

“வேலை என்னைய அப்படி மாற்றி இருக்கு., நான் சோ அன் சோ என்ற அடையாளத்தோடயே இருப்பதால் என்னால அதை விட்டுட்டு மாற முடியல, மே பி எனக்குன்னு நான் எதிர்பார்க்கிற மாதிரி ஒருத்தி வந்தான்னா, நான் என்னோட அடையாளங்கள் எல்லாம் அவளை பார்க்கும் போது மறந்தா, அப்ப நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்”, என்று சொன்னான்.

“டேய் இது புதுசா இருக்கு” என்று நண்பன் ஒருவன் சொல்லவும்.

கண்டிப்பா லைஃப் பார்ட்னர் ன்னு இருந்தா, நாம யாரு அப்படிங்கறத மறக்க வைக்கிற அளவுக்கு நம்மட்ட பிரண்ட்லியா, அதே நேரம் நம்மள ஒரு நல்ல கேரக்டரா மாத்துற மாதிரி இருக்கனும், அப்படி இருந்தால் பெட்டராக இருக்கும்”, என்று சொன்னான்.

“சரி சரி நீ எதிர் பாக்குற மாதிரி பொண்ணு கிடைப்பது கஷ்டம், சரி நம்ம கூட்டத்தில் ஒரு சன்னியாசி” என்று நண்பர்கள் சொல்லி, சிரித்துக் கொண்டிருக்க இவனும் அவர்களோடு சேர்ந்து சிரித்தானே தவிர சற்றும் கோபப்படவில்லை.

  அன்றைய தினம் நண்பர்களோடு கழித்து விட்டு வந்தவனுக்கு சந்தோஷமாகவே இருந்தது, அதே நேரம் தன் கல்லூரி காலங்களையும் நினைத்துக் கொண்டிருந்தான்,

நண்பர்கள் சொல்லிய ஜூனியர் பெண்ணான ஜெர்மனியில் இருப்பவள் இவனை மாற்றுவாளா என்று நண்பர்கள் கடைசியாக பேசிக்கொண்டிருந்ததை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான்,

அவளைப் பார்த்தாலே டென்ஷன் தான் வரும், வித்தியாசமான அவதாரம் அந்த பெண் என்று சிரித்துக் கொண்டிருந்தான்.

“நீ எதிர்பார்க்கிற மாதிரி இல்லைன்னு நீ எப்படி முடிவு பண்ணுவ” என்று கேட்டனர்.

“அது மனசுல தோணும்” என்று இவனும் சொல்லிக் கொண்டிருந்தான்.

நந்தன் ராதாவோடு அவர்கள் வீட்டிற்கு சென்ற பின்போ, இவள் அம்மா எங்கே பேசி விடுவார்களோ என்று பயந்து போய் படுத்து தூங்கியவள் தான் மாத்திரையின் வீரியத்தாலும், முதல் நாள் இரவு சரியாக தூங்காது போல ஒரு உணர்விலும், பகலில் நன்றாக தூங்கி எழுந்தாள்.

மாலை நந்தனும் ராதாவும் வீட்டிற்கு வர அப்போது தான் எழுந்து அமர்ந்தவள் எப்போதும் போல வம்பு செய்து கொண்டு இருந்தாள்.

Advertisement