16,

    யாழினி வீட்டிற்குள் வரவும், அவள் அம்மா கத்தி பேச தொடங்கினார்,

      “சித்தி தேவை இல்லாம பேசாதீங்க, அவங்க முடிவு என்னன்னு சொல்லிட்டாங்க, இனிமேல் முடிவெடுக்க வேண்டியது நம்ம தான், அவங்க இல்ல, இப்ப நீங்க பேசுறதுனால எந்த பிரயோஜனமும் கிடையாது, இனிமேல் அத பத்தி பேசாதீங்க”, என்றான்.

      அவள் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்ளவும்,  ராதாவை போ என்று செய்கை காட்டினான்.

     அவள் அறைக்குள் சென்ற பிறகு, அவன் அம்மா, சித்தி,  ராதாவின் அம்மா என இருக்கும் போது,  போன் செய்து யாழினி அப்பாவிடம் பேசினான்.

     “சித்தப்பா” என்று சொல்லி விவரங்களை எடுத்து சொல்லியவன்,  “நீங்களும் அப்பாவும் கிளம்பி வாங்க, நாம பேச வேண்டியது பேசிட்டு, முறைப்படி கல்யாணம் பண்ணி கொடுப்பது தான் நமக்கு மரியாதை”, என்று சொல்லிக் கொண்டிருக்க,  யாழினி அம்மாவும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

  அவரிடம் பேசி முடித்த பின் யாழினி அம்மாவை பார்த்து பேச தொடங்கினான். “இங்க பாருங்க சித்தி, நம்ம சொந்தத்துல மாப்பிள்ளை பாத்தாலும் படிச்ச பையனை பார்ப்போம்,  நல்ல இடம் தான் பார்ப்போம், நல்ல வேலை இதை தான் பார்த்திருப்போம் இல்லை”, என்று கேட்டான்.

     “இவங்களும் ஒன்னும் எதிலும் குறைந்தது கிடையாது, கண்டிப்பா நல்லா பார்த்துப்பாரு, நம்பி பொண்ணு கொடுங்க, நாங்களும் பக்கத்துல தான் இருக்க போறோம்”, என்று சொன்னான்.

   அதற்கு யாழினி அம்மாவோ “போலீஸ் வேலை எப்போ எந்த பிரச்சனை வரும் எப்படி மாறும் ன்னு எப்படி நந்தா தெரியும், அது மட்டும் இல்லாம அவங்க அம்மா என்ன பேச்சு பேசுதாங்க பார்த்த இல்ல”, என்று சொன்னார்.

    “நீங்களும் தான் சித்தி பேசினீங்க, அதே மாதிரி அவங்க பேசுனாங்க, இருந்துட்டு போட்டுமே விடுங்க, எந்த வீட்ல கல்யாணம் பண்ணி கொடுத்தாலும் மாமியார் நாத்தனார்னு ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும், அது மாதிரி ஏதோ ஒன்று இருந்துட்டு போட்டுமே,  அவர் நல்லா பார்த்துப்பாரு”, என்று சொல்லும் போதே,

    “அவங்களுக்கு ட்ரான்ஸ்பர் ஆயிட்டே இருக்கும்”, என்றார்.

     “அவ எந்த ஊர்ல இருந்தாலும் பாத்துக்கலாம் சித்தி, இப்ப அமெரிக்காவே அடுத்த நாள் போற அளவு தூரம் தான் என்கிற மாதிரி ஆகிப்போச்சு, இவருக்கு இந்தியாக்குள்ள தானே போஸ்டிங் இருக்கும், எந்த ஊர்ல போட்டாலும் பிளைட் ல போனா, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் போய் சேர போறோம், அப்புறம் என்ன விடுங்க”, என்று சொன்னவன்,

    “ரொம்ப யோசிக்காதீங்க சித்தி, அவளுக்கு என்ன செய்யணும், என்ன பண்ணனும்னு மட்டும்  யோசிங்க,  உங்களுக்கு அவகிட்ட பேச பிடிக்கலைன்னா பேசாதீங்க,  அதை விட்டுட்டு கோபத்தை காட்டாதீங்க, அமைதியா இருங்க, இங்க இருக்க பிடிக்கலைன்னா வாங்க அங்க போவோம்”, என்று சொன்னான்,

     “அது எப்படி இவளும் அந்த பையனும் லவ் பண்றாங்கன்னு தெரிஞ்சதுக்கப்புறம், பக்கத்து பக்கத்து வீட்ல விட்டுட்டு எப்படி போக சொல்லுத” என்று சொன்னார்.

     “சித்தி அவங்க ஒன்னும் சின்ன பிள்ளைகள் இல்லை, தப்பு பண்ணிடுவாங்க அப்படின்னு சொல்றதுக்கு, அப்படியேனாலும் இத்தனை நாள் இருந்திருக்காங்க, அவங்க  பேசி கூட யாரும் பார்த்ததில்லை, அப்படி இருக்கும் போது நீங்க ஏன் இப்படி பயப்படுறீங்க”, என்று சொன்னான்.

    நந்தன் அம்மாவும் “இல்லடா பேசி முடிக்குறதா இருந்தா, நாங்க இங்கேயே இருக்கோம், ராதாவும் எங்க கூட இங்கேயே இருக்கட்டும்”, என்று சொன்னார்.

   “சரி என்னமோ பண்ணுங்க” என்று சொன்னவன்,

     கிச்சனுக்குள் நுழைய ராதாவின் அம்மா தான், “என்ன தம்பி வேணும்” என்றார்.

“இல்ல அவ காபி குடிக்க தான் வீட்டுக்குள் போயிருப்பா, அதுக்குள்ள அவரு வந்து கூப்பிட்டு போயிட்டாரு, நான் இப்போ அவளுக்கு ஒரு டம்ளர் காபி கலந்து கொடுத்துட்டு, அவளிடம் பேசிட்டு வரேன்”, என்று சொல்லி யாழினிக்காக காபியை கலந்து எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றான்.

    அவளும் ராதாவின் மடியில் படுத்து அவள் வயிற்றை கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்து இருந்தாள்.

    ராதா எதுவும் சொல்லாமல் அவள் தலையை கோதிக் கொண்டிருக்க, இவனோ அவளை பார்த்து “என்ன” என்று கேட்டான்.

ஒன்றும் இல்லை என்னும் விதமாக தலையாட்டினாள்.

   அவன் பேசிவிட்டு வருவதற்குள் அவள் தூங்கி இருப்பதை கண்டவன், “என்னாச்சு” என்றான்.

“டென்ஷன் ல தூங்கி இருப்பா” என்று சொல்லி மெதுவாக அவள் தலையை நகர்த்தி தலையணையில் வைத்தவள்.

அவளிடம் இருந்து மெல்ல நகர்ந்து எழுந்து வெளியே வந்தால் “காபி கூட குடிக்கலையே” என்று அவன் சொல்ல,

    “ஏன் உங்களுக்கு வருத்தமா இருக்கா, குடுங்க நான் குடிக்கேன்”, என்றாள்.

“நீ அதிகமா குடிக்க கூடாது” என்று சொல்லி வெளியே வந்து அவனே  குடிக்க தொடங்கினான்.

     ராதா தான் நந்தனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், “வளைகாப்புக்கு முன்னாடியே என்கிட்ட சொன்னா, இப்பவும் அதுதான் சொன்னா,  நான் உன்கிட்ட சொன்னேன்ல என் காலேஜ்ல இருந்து எனக்கு ஒரு லவ் இருக்கு அப்படின்னு சொல்லும் போது நீ சிரிச்ச, பொய் சொல்லாத ன்னு சொன்ன, ஆனா அது தான் உண்மை, நீ நம்பல, உன்கிட்ட எப்படி சொல்லி புரிய வைக்கணும் தெரியல, நீ சிரிச்ச அதனால தான் நான் அதோட சொல்றதை விட்டுட்டேன், அப்பவும் அவ என்னிடம் சொல்ல தான் செஞ்சா, நான் அவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன், அவரை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு,  ஆனா இவ கிண்டலுக்கு சொல்றா ன்னு நினைச்சேனே ஒழிய, நானும் பெருசா சீரியஸா எடுக்கல,

உங்ககிட்ட சொல்லும் போதும், இல்லையே அப்படி இருந்தா காலேஜ்ல  எனக்கு தெரிஞ்சிருக்கும் ன்னு நீங்க சொல்லிட்டீங்க, அதனால நானும் அதை பெருசா எடுக்கல”, என்று சொன்னாள்.

அவனும்  “வேற காலேஜ் ல இருப்பார் ன்னு எனக்கு எப்படி தெரியும், நான் அதே காலேஜா இருந்தா  நமக்கு தெரிஞ்சிருக்குமே ன்னு தான் நினைச்சேன்”, என்று சொல்லி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

   அது போலவே கதிரவன் வீட்டில் கதிர்வனின் அக்கா தான், அவன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“எப்படி பொண்ணு பார்த்தாலும், ஓரளவுக்கு படிச்ச பொண்ணா பார்ப்பீங்க, ஓரளவுக்கு நல்ல குடும்பமா இருக்கணும்னு நினைப்பீங்க, பொண்ணு அழகா இருக்கணும்னு நினைப்பீங்க, இது எல்லாமே இந்த பொண்ணுட்ட  இருக்கு இல்ல அப்புறம் என்ன, அவனுக்கு புடிச்ச பொண்ணு, அவன விரும்புகிற பொண்ணு, இதைவிட என்ன வேண்டும் ன்னு நினைக்கிறீங்க, அவனும் அவளை தவிர வேற யாரையும் பண்ண மாட்டேங்குறான், இதுக்கெல்லாம் மூஞ்சி தூக்கிட்டு இருந்தா ஒன்னும் நடக்காதுமா, பேசாம பேசி முடிக்கிற வழிய பாருங்க, அவங்க வீட்லயும் அதான் பேசிட்டு இருப்பாங்க, இப்ப நானும் அதைத்தான் சொல்றேன், பேசி முடிங்க அப்பா தான் சரின்னு சொல்லிட்டாரே”, என்று சொன்னாள்.

   “என்னமோ பண்ணுங்க” என்று சொல்லி விட்டு கதிரவனின் அம்மா அவரின் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார்.

கதிரவன் தான் பெருமூச்சு விட்டான், அவன் அக்காவோ “நீ நிறைய சமாளிக்க வேண்டியது இருக்கும்டா, அந்த பொண்ண இவங்க வாய் வார்த்தையிலிருந்து காப்பாத்துறதே  உனக்கு பெரிய வேலையா இருக்கும்”, என்று சொன்னாள்.

    அவன் அப்பா தான், “கல்யாணம் முடிச்ச உடனே தனி குடித்தனம் போயிடனும், இங்க எல்லாம் இருக்காத, உங்க அம்மா கூட இருந்தா ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பா”, என்று சொன்னார்.

   அவனும் சிரித்தபடி “உங்களுக்கு சம்மதமா ப்பா” என்று கேட்டான்,

    “நீ நல்லா இருந்தா போதும்டா”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

    கதிரவன் அக்கா அவள் கணவனுக்கு அழைத்து சொல்லிக் கொண்டிருந்தாள்.