Advertisement

 நந்தன் அம்மா சத்தம் போட்டார், போனை வாங்கி மீண்டும் யாழினி அப்பாவுக்கு போன் செய்து, “அவசரம் இல்லாம மெதுவா வாங்க” என்று சொல்லி விட்டு நந்தனிடம் நீ பேசேன்டா, நீயேன்  அமைதியா நிக்கிற”, என்றார்.

    “நீங்க எல்லாம் தப்புன்னு குதிக்கும் போது, நான் என்னம்மா பேச, என்ன கேட்டா மேரேஜ் பண்ணி வைங்க ன்னு தான் சொல்லுவேன்,  அவ ஒன்னும் சின்ன புள்ள இல்ல, அவளுக்கு 26 வயசு ஆயிடுச்சு, இதெல்லாம் மனசுல வச்சுட்டு தான் இவ்வளவு நாள் வந்த அலைன்ஸ் எல்லாம் பார்க்க கூட வரவிடாமல் இருந்து இருக்காங்கறது புரியல யா,  இப்ப தெரிஞ்சிருச்சு இல்ல, இதுக்கு அப்புறமும் நீங்க உங்க பிடிவாதத்தில் இருந்தா ஒன்னும் பண்ண முடியாது, யோசித்து முடிவு பண்ணுங்க”, என்று அவன் அம்மாவிடம் தொடங்கி அவன் சித்தியிடம் பேச்சை முடித்தான்.

    ராதாவின் அம்மாவோ “இப்படித்தான் ராதா எங்க வீட்டுல வந்து சொல்லும் போது முதல்ல எங்களுக்கும் டென்ஷனா தான் இருந்துச்சு, அதுக்கப்புறம் சரி அவ விரும்பற லைஃப அமைச்சு கொடுத்துடுவோம்னு சொல்லி தான் முடிச்சு விட்டோம்,  என்ன நல்லா வாழாமலா போய்ட்டாங்க, எல்லாம் சரியாகும் விடுங்க”, என்று யாழினி அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

      யாழினி அம்மாவோ அவளை முறைத்து பார்த்துக் கொண்டே இருந்தார்.

   அதே நேரம் சாரா மீண்டும் சத்தமிட தொடங்கியிருந்தாள்,  “நான் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன், எனக்கு ஒரு முடிவு தெரியணும்”, என்று சொல்ல,

    ‘இவ யாருடா சம்பந்தமே இல்லாம’ என்பது போல தான் மற்றவர்களின் பார்வை இருந்தது.

 கதிரவனோ தன் நண்பர்களிடம் திரும்பி “நீங்க தான் கூட்டிட்டு வந்தீங்க, நீங்களே ஹேண்டில் பண்ணுங்க, இதுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது” என்று சொல்லும் போது,

 அவளோ “அப்படி என்ன லவ், அஞ்சு நாள் தான் பார்த்திருக்கீங்க, உங்க கதையை இப்ப சொன்னாங்க, அஞ்சு நாளுக்கு  அப்புறம் ஆறு வருஷம் பார்க்கவே இல்லை, இதுக்கு இடையில எப்படி லவ்,  சப்போஸ் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர் பார்க்கவே இல்லாமல் இருந்தீங்கன்னா,  கண்டிப்பா வேற யாரையோ ஒருத்தர கல்யாணம் பண்ணி இருக்க தானே செய்வீங்க”, என்று கேட்டாள்.

அப்போது கதிரவன் பேச தொடங்கினான், “அஞ்சு நாள் சொல்லாதீங்க, உண்மையான அன்புக்கு அஞ்சு நாள் இல்ல அஞ்சு நிமிஷம் போதும், எங்களுக்கு அஞ்சு நாள் அதிகம் தான், பார்த்தோம் பிடிச்சிருச்சு,  கேட்டீங்களே கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி இருந்தா அப்படின்னு,  கண்டிப்பா பண்ணி இருக்க முடியாது,  அவளோட நினைப்பு இருக்கிற வரைக்கும் தான்  நான் இருந்திருப்பேன்,  எனக்கு தெரியும் அதே மாதிரி தான் அவளும், என்னால புரிஞ்சுக்க முடியும், இதெல்லாம் உங்களுக்கெல்லாம் சொன்னா புரியாது,

    மறுபடியும் கேட்கலாம், நீ ஆம்பள கல்யாணம் பண்ணாம கடைசி வரைக்கும் காலத்தை தள்ளிடுவ,  வேலை கடமைன்னு சொல்லி தள்ளி இருப்ப ன்னு அதுதான் உண்மை,  அப்படி நீ தள்ளி இருந்தாலும் இவளுக்கு பிடிச்சு கல்யாணம் பண்ணி வச்சிருக்க தானே செய்வாங்க அப்படின்னு நினைக்கலாம்,  கண்டிப்பா இல்ல அவளை மீறி கல்யாணம் நடந்திருக்காது,  அதையும் மீறி கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி இருந்தா,  கல்யாணம் பண்ணனும்னு நினைச்சிருந்தா கூட அதுக்கு மேல அவ இருக்க மாட்டா,  அது எனக்கு தெரியும்”, என்று சொன்னான்.

  தோளில் கை போட்டு பிடித்திருந்தால் அப்படியே அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

அவளை சேர்த்து பிடித்தபடியே மீண்டும் பேசத் தொடங்கியவன்,  “ஒருவேளை என்னோட வேலை காரணமா எனக்கு ஏதாவது”,  என்று முழுமையாக சொல்வதற்குள் அவன் வாயை தன் கை கொண்டு அடைத்து இருந்தால், அப்படியே  அவனை நிமிர்ந்து பார்க்க.,

 அவனோ  அவள் கையை எடுத்துவிட்டு “நெருப்புனா வாய் சுடாது” என்றான்.

 “அப்படி சொல்லக்கூடாது அவ்வளவு தான்” என்றாள் அழுத்தமாக,

 “சரி சொல்லல, போதுமா”, என்றவன்,

 “எங்க ரெண்டு பேருடைய லைஃப் எப்படி இருக்குன்னு எங்க ரெண்டு பேருக்கும் தெரியும், இதுல மத்தவங்க யாரும் தலையிட வேண்டாம்”, என்று சொன்னான்.

   அவன் அம்மா தான், “என்னை மீறி நீ கல்யாணம் பண்ணிடுவியோ” என்று கேட்டார்.

    திரும்பிப் பார்த்தவன்,  “நான் உங்ககிட்ட பெர்மிஷன் கேட்கலை, இன்பர்மேஷன் தான் சொன்னேன்,  நீங்க பண்ணி வைக்க விருப்பப்படலைன்னா அது உங்க சாய்ஸ்,  நான் என்னோட முடிவு சொல்லிட்டேன், இதுக்கு மேல உங்களுடைய இஷ்டம்”, என்று சொன்னான்.

     அவள் ஏற்கனவே வீட்டில் உள்ளே வைத்து அடைத்து விடுவார்களோ என்று சொன்னதால்,  அவளிடம் மீண்டும் கேட்டான், “லேப்டாப் போன் வேணுமா”, என்றான்.

  அவளோ ‘வேண்டாம்’ என்று தலையாட்ட,  “சரி வா போலாம்” என்று சொல்லி அவளை தன்னோடு சேர்த்து பிடித்தபடி கிளம்ப தொடங்கினான்.

  நண்பர்கள் தான், “அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாமே, கொஞ்சம் பேசி பார்க்கலாமே” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நந்தன் வந்தவன்,  அவர்கள் முன்னால் நின்றான்.

 “ஒரு நிமிஷம் நான் பேசலாமா”, என்று கேட்டான்.

   கதிரவனும் “சொல்லுங்க நீங்க என்ன சொல்ல போறீங்க,  அவனோ யாழினியை பார்க்க, யாழினி பிடிவாதமாக நின்றாள்.

 அவளது பிடிவாதத்தை அறிந்தவன் என்பதால் கதிரவனிடம் “நான் மேரேஜ் பண்ணி வைக்கிறேன், நம்புங்க, என்ன நம்பி அவளை எங்க வீட்ல ஒப்படைங்க”, என்று சொன்னான்.

    அவனும் திரும்பி பார்த்து “இவங்களையெல்லாம் எப்படி சமாளிப்பீங்க”, என்று கேட்டான்.

     “அது என் பொறுப்பு”, என்று சொன்னவன், “ஆனா கொஞ்சம் வெயிட் பண்ணனும்,  ஏன்னா ஒரு வாரத்துக்குள்ள என் வொய்ப் க்கு டெலிவரி இருக்கும், டெலிவரி முடிஞ்ச உடனே கண்டிப்பா உங்க மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணலாம், அது வரைக்கும் டைம் கொடுங்க, நானும் அதுக்குள்ள எங்க வீட்ல உள்ளவங்க கிட்ட பேசணும்”, என்றான்.

    “சரி உங்களை நம்பி இவளை நான் ஒப்படைக்கிறேன், ஆனா இவ மேல யாரோட சுடு சொல்லோ,  இல்ல கை நீட்டுவதோ, இருக்கக் கூடாது, எனக்கு அதுதான் முக்கியம்”, என்று சொன்னான்.

 அவளை அழுத்தமாக பிடித்திருந்தான்,  அவனது அழுத்தமான பிடியை பார்த்த நந்தன் “அவளை பார்த்துக்கொள்வது என் பொறுப்பு, கண்டிப்பா அடிக்க மாட்டாங்க, தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை அடிக்கிற பழக்கம் எங்க வீட்டுல கிடையாது, ஆனா பெத்தவங்க கோபத்துல திட்ட தான் செய்வாங்க, ஒரு நாலு வார்த்தை  திட்டுவாங்க அதனால எதுவும் குறைந்து விடாது, இவ குறையவும் மாட்டா”, என்றான்.

 இவனும் நந்தனைப் பார்த்து “அப்போ நீங்க எதுக்கும் உறுதி கொடுக்க மாட்டீங்க”, என்று கேட்டான்.

    “ஹலோ பொறுங்க, இப்படி பேசினா எப்படி,  அடிக்க மாட்டாங்க,  ஏன் எங்ககிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாமே, அது எல்லாருக்கும் இருக்கிற வருத்தம் தானே, டெலிவரி முடியட்டும் நான் பேசுறேன் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறேன், அதுக்கு மட்டும் நான் பொறுப்பேற்றுகிறேன்,

    யாழினிய  இப்ப எங்க கிட்ட ஒப்படைங்க, நான் அப்படியே பத்திரமா உங்ககிட்ட திருப்பி தரேன்”, என்று சொன்னான்.

 அவனும் சற்று யோசனைக்கு பிறகு சரி என்றான்.

  யாழினி தோளைத் தட்டி கொடுத்தவன், “நான் இருக்கேன் பாத்துக்குறேன், தைரியமா இரு,  என்னை மீறி உன்னை எதுவும், யாராலயும் பண்ண முடியாது, சரியா”, என்று சொன்னவன்,

   பின்பு மெதுவாக  உன் ட்ட நல்ல பேசுவாங்களே அந்த லேடி இன்ஸ்பெக்டர், அவங்க பெயர் சந்திரா, அவங்க நம்பர் அனுப்பி வைக்கிறேன், சப்போஸ் என்னை காண்டாக்ட் பண்ண முடியாத நேரத்தில், எதுவும் அவசரம்னா அவங்கள காண்டாக்ட் பண்ணு”, என்றான்.

     நந்தன் இடுப்பில் கையை வைத்தபடி கதிரவனை பார்த்தான், “என்ன பண்றீங்க நீங்க, அவ என் தங்கச்சிங்க, அந்த அளவுக்கு எல்லாம் நாங்க விட மாட்டோம், நீங்க ஏன் இப்ப லேடி போலீஸ்  நம்பர் எல்லாம் கொடுக்கணும்”, என்று கேட்டான்.

 “உங்க தங்கச்சி தாங்க, இவ்ளோ நேரம் உங்க சித்தி பேசும் போது நீங்க சும்மா தானே பாத்துட்டு இருந்தீங்க, அப்புறம் இப்ப நான் உங்களை நம்பி அனுப்புறேன், நாளைக்கு அவளுக்கு ஏதும் பிராப்ளம் வந்துச்சுன்னா, சோ அதனால தான்”, என்றான்.

    கதிரவனின் அக்கா தான், “டேய் இது உனக்கே ஓவரா தெரியலையா, அவங்க தான் சொல்றாங்க இல்ல,  வீட்ல பேசி சம்மதம் வாங்குறேன்னு, நீ ஏன் இப்படி எல்லாம் பேசுற”, என்று சொல்லியவர்,

   “தப்பா எடுத்துக்காதீங்க தம்பி”, என்று நந்தனிடம் பேசிவிட்டு,

     “நீ வீட்டுக்குள்ள வா, முதல்ல நம்ம பேசி முடிப்போம்”, என்று சொன்னார்.

    “என்னத்த பேசி முடிக்க போற, நான் வெளிய போறேன்”, என்று சொன்னான்.

    “வெளியே எல்லாம் போக வேண்டாம், முதல்ல வந்து பேசு”, என்றார்.

    போலீஸ்காரர்களும் “சார் நீங்க பேசுங்க சார், அதுக்கு மேல அவங்க எதுவும் முடிவு சொல்லல னா,  நீங்க சொல்லுங்க,  நான் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல எல்லாம் ரெடி பண்றோம்,  வடபழனி கோயில்ல பேசலாம் சார்”, என்று சொன்னார்கள்.

    அவனும் “சரி எதுவா இருந்தாலும் நான் போன் பண்றேன்”, என்று சொல்லிவிட்டு அவர்கள் கொண்டு வந்திருந்த ஃபைலில் கையெழுத்து போட்டு அவர்களிடம் கொடுத்து விட்டான்.

  ‘எப்படியும் இன்னும் சற்று நேரத்தில் டிபார்ட்மெண்டில் அவனுக்கு கீழே இருப்பவர்களில்  பாதி பேருக்கு தெரிந்து விடும்’ என்பது அவன் அறிந்தது.

   அவளை போ என்று சொல்லி நந்தனோடு அனுப்பி வைத்து விட்டு அதன் பிறகு தான் வீட்டுக்கு சென்றான்.

நந்தன் பேசி முடிக்கும் போதே சாராவை கட்டாயப் படுத்தி நண்பர்கள் அழைத்து சென்றனர்.

Advertisement