Advertisement

  “அப்படி எல்லாம் என்னால பேசாம இருக்க முடியாது.,  உங்க பொண்டாட்டி என்னைக்காவது பேசாம இருந்திருக்கா.,  நொய் நொய்யின்னு அது பேசிட்டே தானே இருக்கு,  அதை என்னைக்காவது பேசாதன்னு சொல்றீங்களா,  அவ்வளவு பயம் உங்களுக்கு,  என்னை மட்டும் பேசாத பேசாதன்னு சொல்றீங்க”,  என்று ஏதோ வம்பு இழுக்க வேண்டும் என்பதற்காக பேசிக்கொண்டே இருந்தாள்.

      “இப்ப உனக்கு என்னதான் செய்யணும்” என்று அவளுடைய அப்பா கேட்டார்.

    “எனக்கு இப்போதைக்கு நீங்க மாப்பிள்ளை பார்க்க கூடாது,  நான் எப்ப சொல்றேனோ அப்ப பாருங்க,  அதுவும் எனக்கு பிடிச்ச மாதிரி பாக்கணும்,  அப்படின்னா மட்டும் தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்” என்று சொன்னாள்.

     “உனக்கு பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை நான் எப்படிம்மா தேடுறது”, என்று கேட்டார்.

   “அது நானே சொல்லுவேன், எப்படி மாப்பிள்ளை பிடிக்கும், எப்ப பார்க்கனும் ன்னு நானே சொல்லுவேன்” என்று சொல்லும் போதே,

அவளுடைய அப்பா “ஒரே பொம்பள புள்ள வச்சிருக்கேன்.,  உன்ட்ட பேச என்னால முடியல.,  பையன்  கூட அவ்வளவு அடக்கமா இருக்கான்.,  நீ ஏம்மா இந்த வரத்து வர்ற”, என்று கேட்டார்.

    “ஓஹோ நான் அடக்கம் இல்லாத பிள்ளைன்னு சொல்ல வரீங்களா”,  என்று சொல்லி மீண்டும் ஒரு வம்பை இழுக்க தயாராக.,

       “உன்னை ஒன்னுமே சொல்லல மா,  உன்ன பத்தி பேசவே இல்ல விடு,  நீ எப்ப சொல்றீயோ,  அப்ப மாப்பிள்ளை பார்ப்போம்”.,  என்று அவளுடைய அப்பா சொன்னார்.

      ” இந்த வார்த்தையை கொண்டு வருவதற்கு நான் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இருக்கு, எவ்வளவு பேச வேண்டியது இருக்கு,  அடியே ராது, இப்ப போய் ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு கொண்டு வா,  பார்ப்போம்”, என்று அவளை வேலை ஏவிக் கொண்டிருந்தாள்.

       “இவளுக்கு திமிர பாத்தீங்கள, அடியே ராதுவா நீ எந்திரிச்சி போய் உனக்கு வேணுனா நீயே போட்டுக்கோ” என்று அதட்டினார்.

“அதெல்லாம் நானே போட்டுக்குவேன் , அவதான் அப்பயே காப்பி கலக்கி தரட்டா ன்னு கேட்டா., அதனால தான் அவளை போட்டு கொண்டு வா ன்னு சொன்னேன்., அப்படி தானடி” என்று ராதாவை பார்த்து கேட்டாள்.

அவளோ சிரித்துக் கொண்டே காபி போட செல்லவும், யாழினி அம்மா தான் “இங்க பாருமா நீயும் சேர்ந்து அவ சொல்றதுக்கு ஆமா சாமி போடாத, வேணாம் அவள போய் காபி போட்டு குடிக்க சொல்லு” என்றார்,

“அத்தை விடுங்க இன்னைக்கு ஒரு நாளைக்கு போட்டு கொடுப்பேன்., நீங்க வந்து இருக்கீங்கன்னு தான் நானும் வந்தேன், இல்லன்னா அவளே தனியா சமைச்சு சாப்பிட்டு விடுவா., தனியா எல்லாம் செஞ்சுக்குவா, நாம என்ன பக்கத்துல இருந்து தினமும் போட்டா கொடுக்கிறோம், வான்னு சொன்னாலும் வீட்டுக்கு கூட வரமாட்டா” என்று சொன்னாள்.

இவளோ “அது நீ மட்டும் இருக்கிற வீடா இருந்தா வருவேன், உன் புருஷன் கூட இருக்கு தானே, அதனால வரமாட்டேன்”, என்று சொன்னாள்.

அருகில் சற்று தள்ளி அமர்ந்திருந்த நந்தனோ இவள் தலையில் ஓங்கி அடித்து விட்டு “எரும மாடு” என்று திட்டி விட்டுப் போனான்.

“மண்டையில் தட்டுறான் மரமண்டைக்காரன், அறிவு கெட்டவன்”, என்று அவனையும் சேர்த்து திட்டிக்கொண்டே, ராது உன் புருஷனுக்கு அறிவே இல்லடி என்னை மண்டையில் மண்டைல அடிக்கிறான் மண்டைல அடிச்சான்னு வை, நான் உன் பிள்ளையை மண்டையிலேயே கொட்டுவேன், பாத்துக்கோ” என்று சொன்னாள்.

“ஏண்டி உனக்கும் உங்க அண்ணனுக்கும் சண்டைனா, அது நீங்க ரெண்டும் பேரும் பேசி தீர்த்து இருக்கணும், இதுல நீ என் பிள்ளையை வேற வந்து கொட்டுவியா, உனக்கு காபில உப்பு போட்டு கொடுத்துடுவேன்” என்று ராதா சொன்னாள்.

“உப்பு போடுவியா நீ உப்பு மட்டும் போட்டு பாரு., இன்னைக்கு நீ எப்படி இந்த வீட்டை விட்டு வெளியே போறேன்னு நானும் பாக்குறேன்”, என்று அவளிடம் சண்டைக்கு கிளம்பினாள்.

யாழினி அம்மா தான், “சத்தியமா உன்ன கட்டிக்க போறவன் உண்மையிலேயே பாவம் பண்ணி இருக்கணும், என்ன வரத்து வர்ற, கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா, உனக்கு சும்மாவே இருக்க முடியாதா?” என்று கேட்டார்.

“அது பொறந்ததுல இருந்து நீங்க ட்ரைனிங் கொடுத்து இருக்கணும்., சும்மா இருக்குறது எப்படி ன்னு, எப்ப பாத்தாலும் பேசிக்கிட்டே இருந்தீங்க, நானும் பதிலுக்கு பேசிக்கிட்டே இருந்தேன், பழகிப்போச்சு” என்று சொன்னாள்.

“உன் வாயை அடைக்கிறதுக்கு ஒருத்தன் வராமலா போயிற போறான்”, என்றார்.

சற்று நேரம் திரு திரு என முழித்தவள், “வரும் போது வருவான், பேசாம இருங்க” என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்க முயற்சி செய்தாள்.

காபி கலந்து கொண்டிருந்த ராதாவிடம் சென்ற நந்தன் “இங்க பாரு அவளுக்கு எதுவும் லவ் ப்ரொபோசல் இருக்கா, இல்ல அவ யாரையும் விரும்புகிறாளா, அந்த மாதிரி எதுவும் இருந்துச்சுன்னா கொஞ்சம் விசாரி” என்றான்.

அவனைத் திரும்பி பார்த்தவள் “இத நான் விசாரிச்சா மட்டும் சொல்லிடுவா பாருங்க உங்க தங்கச்சி, முதல்ல அப்படி இருந்திருந்தால் இதுக்குள்ள எனக்கு தெரிந்து இருக்கும் பா., அவ அந்த மாதிரி எல்லாம் கிடையாது, ஜாலியா பேசுவா, மற்றபடி எனக்கு தெரிஞ்சு லவ் பண்ற அளவுக்கு எல்லாம் உங்க தங்கச்சி ஒர்த் கிடையாது,

இவ பேசுற பேச்சுல எவனும் லவ் ப்ரொபோஸ் பண்ணா கூட, ஒரு வாரத்தில் விட்டுட்டு ஓடிப்போயிடுவான்,

இதுக்குள்ள பிரேக்கப் வேணும் னா ஆகியிருக்கும்” என்று சொன்னாள்.

“லூசு மாதிரி பேசாத, ஏதாவது இருக்கான்னு விசாரி, என்று தானே சொன்னேன்” என்று சொன்னான்.

“அடே அப்பா தங்கச்சிக்கு பிரேக்க் அப் இருக்கலாம் ன்னு சொன்ன உடனே கோவம் வருதோ, அதெல்லாம் ஒன்னும் ஆகாது, உங்க தங்கச்சி பிரேக்கப் ஆனா கூட பின்னாடியே போய் இழுத்துட்டு வந்துருவாள். இல்ல னா நாலு அடிய போட்டுட்டு வந்துருவா, கவலைப்படாதீங்க”., என்று சொன்னாள்.

“மட சாம்பிராணி, நான் என்ன கேட்டுகிட்டு இருக்கேன், நீ என்ன பதில் சொல்லிட்டு இருக்க” என்று அவளிடம் நந்தன் கோபப்பட்டாலும், அவள் சொல்லியதை நினைத்து ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது.

இவள் செய்யக் கூடியவள் தான், ‘நீ எப்படிடா என்ன விட்டுட்டு போவேன்னு’ சொல்லி அவன் கிட்ட ஒரு சண்டை போட்டாலும் போடுவா, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை அவளிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டான்.

“நிஜமா தெரியுமா, அவளுக்கு லவ் அந்த மாதிரி எதுவும் இல்ல ன்னு”, என்றான்.

“எப்பா சாமி உங்க தங்கச்சி லவ் பண்ணா கண்டிப்பா இதுக்குள்ள என்கிட்ட ஓட்ட வாய் உளறி இருப்பா., இப்பதிக்கு லவ் எதுவும் இல்ல, ஒருவேளை லவ் பண்ணின்னா, அது எனக்கு தெரிஞ்சுச்சுன்னா, முதல்ல உங்ககிட்ட சொல்லிடுருவேன் போதுமா”, என்று சொன்னாள்.

அவனும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றான், தற்செயலாக கிச்சன் வாசல் வரை வந்தவள், இதையெல்லாம் கேட்டுவிட்டு ‘லூசுங்க நம்மளே லவ் பண்ணாட்டி கூட, இதுங்க ரெண்டும் சேர்ந்து, நம்ம லவ் பண்ண வச்சிடும் போலயே’ என்று யோசித்துக் கொண்டே நகர்ந்து சென்றாள்.

சென்னையின் மத்தியில் இருக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னுடைய அறையை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

அதே நேரம் அவன் அலைபேசி அழைக்க அப்பா அழைக்கிறார், என்பது தெரிந்தவுடன் அழைப்பை ஏற்க நினைத்த நொடியில் ‘அறைக்கு சென்ற பிறகு பேசிக் கொள்ளலாம்’ என்று நினைப்போடு போனை சைலண்டில் போட்டபடி எதிரில் வரும் காவல்துறை அலுவலர்கள் சொல்லும் வணக்கத்தை சிறு தலையசைப்போடு அதை ஏற்றவன் தன்னுடைய அறைக்கு வந்தான்.

அமரும் முன்பு டேபிளில் இருந்த அவனுடைய பெயர் பலகையை பார்த்தவன் உதட்டை வளைத்து சிறு சிரிப்பு மட்டும் உதிர்த்து விட்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்தபடி அலைபேசியை உயிர்ப்பித்தான். அவன் கதிரவன் ஐபிஎஸ்,

சிறுவயதிலேயே பரிட்சை எழுதி முதல் அட்டம்ட் ல் பாஸ் செய்து ஐபிஎஸ் ஆனவன்.

அவனுடைய அதிரடி நடவடிக்கைகள் வெகு சீக்கிரமாக எஸ் பி யாக மாற்றி இருந்தது.

இத்தனை ஆண்டுகளாக வட மாநிலங்களிலேயே வேலை பார்த்தவன், தற்போது தான் முதல் முதலாக தமிழ்நாட்டிற்குள் வந்திருக்கிறான்.

“சொல்லுங்கப்பா எதுக்காக இந்த நேரத்துல கூப்பிட்டீங்க”, என்று கேட்டான்.

” இல்லடா தம்பி, நீ ஒரு வார்த்தை சரின்னு சொன்னா” என்று தயங்கி பேச்சை நிறுத்தி வைக்கவும்,

“அப்பா நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேன்ல, எனக்குன்னு சில எதிர்பார்ப்புகள் இருக்கு, என்னுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏத்தாப்புல அமையாம, நான் சரி சொல்லவே மாட்டேன்” என்றான்.

“தம்பி என்னப்பா இப்படி சொல்லுற” என்றார்.

“தயவு செய்து இப்பதிக்கு எதுவும் பேசாதீங்க, பாத்துக்கலாம்” என்று சொல்லும் போதே

“டேய் சீக்கிரமா நீ கல்யாணம் பண்ணிக்கிட்டனா, நாங்க உன் கூட வந்து இருப்போம், இல்ல நீ ட்ரான்ஸ்ஃபர் ட்ரான்ஸ்பர்னு ஒவ்வொரு ஊரா போகும் போது, நாங்க எப்பவும் அக்கா கிட்டயே வந்து இருக்கிற மாதிரி இருக்கு., சொந்த ஊருக்கு போறேன்னு சொன்னாலும் நீயும் விட மாட்டிக்கிற, உங்க அக்காவும் விடமாட்டீக்கா,

நானும் அம்மாவும் எப்படா எங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை வாழுறது, எப்பவும் உங்க பின்னாடியே சுத்த முடியுமா” என்று கேட்டார்.

“இப்ப இதுதான் உங்க பிரச்சனையா, கவலை விடுங்க, இதுவரைக்கும் என்னோட சேலரி அப்படியே சேவ் ஆயிட்டே தான் இருக்கு, ஒரு லோன் போடுவோம் சென்னையில் ஒரு வீட்டை வாங்கி தரேன் பேசாம அந்த வீட்ல வந்து செட்டில் ஆகுங்க, நான் ட்ரான்ஸ்ஃபர் ட்ரான்ஸ்பர்னு போனாலும் நீங்க சென்னையிலேயே இருக்கலாம் , உங்களுக்கு பாதுகாப்புக்கு ஆள் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு போறேன் போதுமா” என்று சொன்னான்.

“டேய் நான் என்ன சொல்றேன், நீ என்னடா சொல்ற” என்று கேட்டார்.

“நீங்க சொல்றதெல்லாம் புரியுதுப்பா, ஆனாலும் இந்த காலத்துல உள்ளவங்கள யாரையுமே இப்படித்தான் இருப்பாங்க, அப்படித்தான் இருப்பாங்கன்னு பார்க்க முடியாது, நான் எவ்வளவு கேஸ் பார்க்கிறேன் எனக்கு தெரியாதா, வேற எதுவும் பேசாதீங்க பா”., என்று சொன்னவன் “அப்புறம் பேசுறேன் பா, இப்பதான் ஆபீஸ்க்கு வந்து இருக்கேன், வேலை நிறைய இருக்கு” என்று சொல்லியபடி அவர் பதில் பேசும் முன்பே வைத்து விட்டான்.

இப்போதுள்ள சூழ்நிலைகளில் யாரையும் முழுதாக அவன் மனது நம்ப மறுத்தது., அதே நேரம் அவனுடைய எண்ணங்கள் தன் கல்லூரி காலத்திற்கு சென்று வந்தது, இப்படி ஒரு வேலைக்கு வருவோம் ன்னு அவன் நினைச்சு கூட பார்த்ததில்லை., எக்ஸாம் எழுதணும்னு அவன் கனவுல கூட நினைச்சது இல்ல, ஆனா சூழ்நிலை எழுதிட்டு வந்து இப்படி உட்கார்ந்து இருக்கேன், சும்மா ஒரு சேலன்ஜ்காக தானே எழுத வந்தேன். ஒருவேளை இதுதான் நமக்கான வேலையோ, என்னவோ,

கூட படிச்சவன் எல்லாம் ஜாலியா ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்துட்டு, ஹாய்யா ஃபேமிலி ரன் பண்ணிட்டு இருக்கான், நமக்கு பாரு ஊர் ஊரா சுத்துற வேலை என்று நினைத்துக் கொண்டே தலையை கோதி கொண்டான்.

நண்பர்களை பற்றி யோசித்து சிரித்துக் கொண்டான், இந்த ஊரில் வேலையில் சேர்ந்து ஒரு வாரமே ஆகி இருக்க, இப்போது இரண்டு நாட்களாக நண்பர்களிடமும் தினமும் பேசிக் கொண்டிருப்பதாலோ என்னவோ, அவன் மனது சிறிது சந்தோஷமாக உணர்ந்தது.

இல்லையெனில் எப்போதும் முகத்தில் முள்ளை கட்டிக்கொண்டு சுற்றுவது போலவே ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். அது போலவே உடன் பணிபுரி பவர்களும் தன்னை பார்த்து பயந்த வண்ணமே இருப்பார்கள்.

இங்கு வந்து வேலையில் சேர்ந்த போது கூட அப்படித்தான் நினைத்திருந்தார்கள் போல, இப்போது எல்லாம் தன்னிடம் எதுவும் சொல்ல வேண்டும் என்றால் உடன் பணிபுரிபவர்கள் சொல்கிறார்கள், வந்த புதிதில் அவனிடம் சொல்ல தயங்கியதையும் எட்டி நின்றதையும் நினைத்து பார்த்த போது தான் ஏன் அப்படி மாறிப்போனோம் என்ற யோசனையோடு சிரித்துக் கொண்டிருந்தான்.

பின்பு அவனுடைய வேலை அவன் நேரத்தை மொத்தமாக இழுத்துக்கொள்ள வேலையில் மூழ்கிப் போனான்.

அடுத்த வாரம் நண்பர்களோடு ஒரு கெட் டூ கெதர் இருப்பதை யோசித்துக் கொண்டிருந்தவன், இனியாவது அடிக்கடி நண்பர்களை சந்திக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

நண்பர்களை காண போகும் அந்த நாளுக்காக காத்திருந்தான் கதிரவன்.

Advertisement