Advertisement

14.

       மறுநாள் தனியே தான் அலுவலகம் சென்றாள், அப்போது தான் புயல் மழை எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும், அன்று மதியத்திற்கு மேலே கனமழை இருக்கக் கூடும் என்று சொன்னதாகவும் தகவல் சொல்லப்பட்டது, இவள் அலுவலகம் வந்த வேகத்திலேயே திரும்பி விட்டாள்.

    கதிரவனின் அம்மா என்னவென்று கேட்க,  “ஆன்ட்டி மழை அறிவிப்பு சொல்லி இருக்காங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் கட் பண்ணிடுவாங்க”,

     “இப்ப தான் செக்யூரிட்டி கிட்ட சொல்லிட்டு வர்றேன், தண்ணி மேலே ஏத்துவாங்க எல்லாம் புடிச்சு வச்சுக்கலாம்” என்று சொல்லி விட்டு எதிர்வீட்டினர்க்கும் சொன்னவள்,   “பக்கெட், டப் எல்லாம் புடிச்சு வச்சுக்கோங்க” என்று சொன்னாள்.,

   “அக்வா வும் போட்டு வைச்சிக்கோங்க, நான் எக்ஸ்ட்ரா ஒவ்வொரு கேன் னும்  குடிப்பதற்கு  சொல்லி வைக்கிறேன்” என்றாள்.

   அவளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் எல்லோர் வீட்டிலும் தண்ணீர் பிடித்து நிரப்பப்பட்டிருந்தது, அவர்களின் அப்பார்ட்மெண்டில் எப்போதும் மழை நேரத்தில்  அனைவருமே அதைத்தான் செய்வார்கள் என்பதால், மாடியில் உள்ளவர்களும் அதையே செய்து வைக்க, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக மோட்டார் போட்டு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது.

அவள் வீட்டில் சிலிண்டர் எல்லாம் இருக்கிறதா என்று சோதித்தவள் வீட்டிற்கு தேவையான சமையலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் இருக்கிறதா என்பதையும் சோதித்து வைத்து விட்டு நந்தனுக்கு அழைத்தாள்,

இதுவரை அழைக்காதவள் அவனுக்கு அழைக்க, அவனும் உடனே எடுத்தான்.

    “வீட்டில் எல்லாம் இருக்கிறதா”, என்று கேட்டாள்.

   அவனோ “ஏன் இருக்கு” என்றான்.

    “முதல்ல வீட்டுக்கு போ, போய் தண்ணி பிடிச்சு வை” என்று அவனுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தாள்.

“நான் இப்போ வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன், வந்து பிடித்து வைத்துவிடுகிறேன்”, என்று சொன்னான்.

“சமையலுக்கு திங்க்ஸ் எல்லாம் இருக்கா” என்று கேட்டாள்.

     “இருக்கு, அவ ஊருக்கு போறதுக்கு முன்னாடி எல்லாம் வாங்கி வச்சுட்டு தான் போனா”, என்று சொன்னான்.

    “வண்டியை எங்கேயாவது சேஃப்பான இடத்துல விட்டுட்டு போ”, என்று சொன்னாள்.

” நான் ஆட்டோவில் தான் போயிட்டு இருக்கேன், வண்டி ஆபீஸ்ல விட்டுட்டு வந்துட்டேன்”, என்று அவன் சொல்லவும்,  “சரி வீடு போய் சேரு” என்று உத்தரவு பிறப்பித்தாள்.

அவனோ “கொஞ்சமாவது மதிக்குதா பாரு, எருமை” என்று திட்டி விட்டே போனை வைத்தான்.

ராதாவும் போன் செய்து கேட்க இவளோ “கவலை படாதே, உன் புருஷன் மூணாவது ப்ளோர்ல தான் இருக்கான், பத்திரமா இருப்பான்” என்று சொன்னாள்.

     “வீட்டிற்கு தேவையான திங்ஸ்  தான் நீ வாங்கி வச்சுட்டு போயிட்டியே, தண்ணி மட்டும் தானே அதுவும் ரெடி பண்ணிடுவான்”, என்று சொன்னாள்.

     “கொஞ்சம் மரியாதையா பேசினா என்ன” என்றாள்.

” உன் புருஷனுக்கு இந்த மரியாதை போதும், நீயும் போய்  தண்ணி எல்லாம் பிடித்து வைக்க சொல்லு”, என்று சொன்னாள்.

   “நீ போன வைடி சொல்றேன்”, என்று போனை வைத்தான்.

   மழை நன்கு பிடிப்பதற்குள் முன்னேற்பாடாக அனைத்து வேலையும் செய்து முடித்தவள், இதற்கிடையே கதிரவனுக்கு போன் செய்து அவனை விசாரிக்கவும் தவறவில்லை,

     அவனும் “கண்டிப்பா என்னால வீட்டுக்கு வர முடியாது, ஒர்க் இருக்கும் ஒர்க் எல்லாம் முடிச்சிட்டு நான் வருவேன், நீ கொஞ்சம் அப்பப்ப எங்க வீட்டையும் எட்டி பாத்துக்கோ”, என்று சொன்னான்.

“அதெல்லாம் பாத்துக்குவேன்”, என்று சொன்னவள், “வீட்ல எல்லா திங்ஸ் ம் இருக்கா”,என்று கேட்டாள்.

    “இருக்கும் ன்னு நினைக்கிறேன், மெடிசின்ஸ் எல்லாம் வாங்கி கொடுத்துட்டேன், அவங்க எப்பவும் ரெகுலரா போடுற மெடிசன் தான் இருக்கும், என்றான்.

    “நார்மல் மெடிசன் என்கிட்ட கொஞ்சம் வச்சிருக்கேன், பாத்துக்குறேன்”, என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

   அதை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்க, அதே நேரம் மழையும் சூடு பிடிக்க தொடங்கியிருந்தது.,

  மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க, எப்போதும் பெய்யும் கனமழை  இருந்தாலும், ‘பாவம் எத்தனை சேதங்கள் வரப்போகிறதோ’ என்று எண்ணத்தோடு பார்த்திருந்தாள்.

   வீட்டில் தேவையான பிரட் பால் என முட்டை என அனைத்தும் வாங்கி வைத்திருந்தாள்.

     இவளோ சமாளித்து விடலாம் என்று நினைத்திருந்தாள்,

    ஒரு நாள் முழுதாக முடிந்து, இரண்டாவது நாளும் மழை தொடர்ந்து கொண்டிருந்தது. அதுவரை வீட்டை விட்டு வெளியே வராதவள், அன்று தான் வெளியே வந்தவள் எதிர்த்து வீட்டில் பாட்டியிடமும் அதற்கு  பக்கத்து வீட்டு ஆன்டியிடமும் நலம் விசாரித்து விட்டு,  கதிரவன் வீட்டை தட்டினாள்.,

      அவன் அம்மா தான் கதவை திறந்தார், “எல்லாம் ஓகேவா ஆன்ட்டி, வேற  எதுவும் வேணுமா” என்று கேட்டாள்.

   “ஒன்னும் பிரச்சினை இல்ல மா, மழை இப்படி பெய்தே” என்றார்.

    “மழை நிற்பதற்கு நேரம் எடுக்கும் ன்னு சொன்னாங்க”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

   அவர்களுக்கு தைரியம் சொல்லியவள், எதுவும் வேண்டும் என்றால் தன்னை அழைக்கும் படி சொல்லிவிட்டே  வந்தாள்.

     அவர்கள் தான் பேச ஆள் கிடைத்த உடன், சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்தவர், “அவனிடம் இருந்து ஒரு போன் கூட இல்லையேமா” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

    ” நீங்க கூப்பிட்டு பாருங்க ஆன்ட்டி” என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தவள்,

     இவளும் அவனுக்கு அழைத்து கேட்டாள்.

    “ஓகேவா இருக்கேன்” என்று சொன்னான்.

    “வீட்டுக்கு ஒரு வார்த்தை கூப்பிட்டு பேசுங்க”, என்று சொன்னாள்.

   “அம்மா தான் மூஞ்ச தூக்கிட்டு இருக்காங்களே, பேச மாட்டாங்களே”, என்று சொன்னான்.

     இவளோ “அம்மா பேசாட்டி என்ன, நீங்க பேசுங்க” என்று சொன்னாள்.

    இவனும் “ஏன் நான் பேசனும்”,என்று கேட்டான்.

     “அவங்க பயந்து போய் இருக்காங்க, நீங்க கூப்பிட்டு பேசுங்க” என்று  தயங்கி சொன்னாள்.

    அவனோ “அவங்க கூப்பிட்டு பேசினாங்களா, இவ்வளவு மழை பெய்தே என்ன ஆனா ன்னு, எங்க இருக்கான், எப்படி இருக்கான்னு ஏதாவது கேட்டாங்களா”, என்று கேட்டான்.

    “சரி ஏதோ கோபத்தில் இருப்பாங்க, நீங்க பேசுங்க” என்று சொன்னாள்.

      அவனோ “இல்ல நான் பேசினா,  அப்ப நாம என்ன சொன்னாலும் இவன் கேட்பான் அப்படிங்குற ஒரு மைண்ட் செட் வந்துரும், வேண்டாம் நான் பாத்துக்கிறேன்”, என்று சொல்லும் போதே,

    “சரி உங்க அப்பாக்கு கூப்பிட்டு பேசுங்க” என்று  சொன்னாள்.

       அது போல அப்பாவுக்கு மட்டும் அழைத்து பேசியவன், அத்தோடு முடித்து விட்டான்.

     வேலை இருப்பதாக சொல்லி மறுபடியும் இவளுக்கு மெசேஜ் செய்துவிட்டு முடிந்த நேரம் அழைக்கிறேன் என்று சொல்லி விட்டான்.

   மழை நாட்களை ஒருவித பயத்தோடும், ஒரு வித சலிப்போடும் கழித்தாலும், அனைவருமே பத்திரமாக இருந்தனர்,

மழை வெரிக்க தொடங்கிய அன்று எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என்று வெளியே வந்து பேசிக் கொண்டிருக்கும் போது தான் கதிரவனின் அப்பா வெளியே வந்தார்.

     “எப்படி இருக்கீங்க, இந்த நேரத்தில் எங்க கிளம்புறீங்க”,  என்று  எதிர் வீட்டு அங்கிள் கேட்கும் போது தான், “வொய்ப் க்கு நல்ல தலைவலி அவளுக்கு எந்திரிக்கவே முடியல, ஜலதோஷம் பிடித்த மாதிரி இருக்கு” என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தார்.

எதிர் வீட்டு ஆன்ட்டி தான், யாழினியை கதவைத் தட்டி அழைத்தவர். விஷயத்தை சொன்னார்.

  தன்னிடம் இருந்த மாத்திரையை எடுத்து கொடுத்தாள். “இதை போட சொல்லுங்க அங்கிள் சரியாயிடும்”, என்று சொன்னாள்.

அவரும் மாத்திரையை வாங்கியவர், “வெளியே கடை திறந்திருக்குமா” என்று கேட்டார்.

     “அங்கிள் எங்க போறீங்க,  மழை இன்னும் முழுசா கூட வெரிக்கல, அங்கங்க தண்ணீர் தேங்கி கிடக்கு”, என்று சொன்னாள்.

“தண்ணிய முழுசா இன்னும் கிளீன் பண்ணல, இப்போ எங்க போறீங்க” என்று எதிர் வீட்டு ஆன்ட்டியும்  கேட்டுக் கொண்டிருந்தார்.

“அவங்க உடம்பு சரியில்ல, டிபன் செய்வதற்கு எனக்கு முடியல,  அதனால கடையில போய் வாங்கிட்டு வரலாம் ன்னு தான் போறேன்”, என்றார்.

“என்ன அங்கிள் இதை சொல்ல மாட்டீங்களா, நான் செஞ்சு தாரேன் போங்க”, என்று சொல்லி விட்டு இரவு தனக்கு உணவு தயாரிக்கும் போது அவர்களுக்கும் சேர்த்து தயாரித்துக் கொடுத்தாள்.

  இரவு உணவை கொடுக்கும் போதே, “நாளை காலைக்கும் நானே செய்து தருகிறேன்” என்று சொல்லி இருந்தாள்.

“வேறு ஏதும் வேணும்னா கூப்பிடுங்க”, என்று சொல்லி இருந்ததால் அவர்களும் தைரியமாக இருந்தனர்.

  செல்போன் டவர் இல்லாமல் சில அலைபேசிகளை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது, அதில் ஒன்று அவனுடையதும்.

   அதனால் எதற்கும் இருக்கட்டும், என்று காய்ச்சல் மாத்திரையும், தலைவலி மாத்திரையும், கையில் கொடுத்து வைத்திருந்தாள்.

Advertisement