Advertisement

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்த நந்தன் “உனக்கு எது எதுல விளையாடுறது ன்னு இல்லையா,  வேலைய பாரு”, என்று சொன்னான்.

    “ராது  நீ வேணா பாரு ஒன்னு அவங்க வீட்ல இருந்து பொண்ணு கேட்டு வருவாங்க, இல்ல அவரே உங்க கிட்ட வந்து பேசுவாரு, அப்ப தான் நீங்க எல்லாம் நம்புவீங்க”, என்று சொன்னாள்.

    “சரி சரி வர சொல்லு, வர சொல்லு”, என்று சொல்லி விட்டு நந்தன் அவளை “வேலையை பார்” என்று சொன்னான்.

ராதாவை பார்த்து “இரண்டு பேரும் நம்ப மாட்டீங்க இல்ல, பாரு”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

சரியாக வளைகாப்பு நாளும் நெருங்க,  நந்தனின் வீட்டார் இவள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களையும் அழைத்து இருந்தனர்.

அனைவரும் வருவதாக சொல்லி இருந்தனர். நந்தனின் வீட்டில் நண்பர்கள், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எனக் கூடியிருக்க, தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என அக்கம் பக்கம் உள்ளவரும் வந்திருக்க,  வளைகாப்பு சிறப்பாக நடந்தது.

   அன்றே அவர்கள் ஊருக்கு கிளம்புவதாக இருக்க,  நந்தன் நான் அவள் இங்கே இருக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தான்.

     அப்போது தான் அவர்கள் “ஒரு பத்து நாள் ஒரு கூட்டிட்டு போயிட்டு, அதுக்கப்புறம் இங்க அனுப்புறோம்”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மழைக்கால அறிவிப்பும் வந்தது.

  புயல் உருவாகி இருப்பதாகவும், இன்னும் ஒரு வார காலத்திற்கு மழை இருக்கும் என்றும்,  புயல் கரையை கடப்பது அநேகமாக சென்னையை ஒட்டிய பகுதியாக இருக்கும் என்று அறிவிப்பு வந்திருந்ததால்,  அதை காரணம் காட்டி ராதாவின் அம்மாவும், நந்தனின் அம்மாவும் ராதாவை ஒரு பத்து நாளுக்காவது ஊருக்கு அழைத்து செல்லலாம் என்று பேச தொடங்கி இருந்தனர்.

“இல்ல இப்ப இங்க மழை காலம் தானே, ஏற்கனவே புயல் மழை  அறிவிப்பு கொடுத்திருக்கான், இந்த நேரத்துல அவ இங்க இருந்தான்னா, எதுவும் ஆத்திர அவசரம் னா  என்ன செய்ய,  அதனால் ஊர்ல இருக்குறது தான் நல்லது” என்று சொன்னார்கள்.

    ராதாவின் அம்மா அப்பாவும் அதையே சொல்லி “ராதாவை ஒரு 10 நாளாவது அழைத்துக் கொண்டு செல்கிறோம்”, என்று சொன்னார்கள்.

அவள் செல்வது யாருக்கு வருத்தமோ இல்லையோ, யாழினிக்கு தான் மிக வருத்தம், யாழினி அவள் கையை அழுத்தமாக பிடித்துக் கொள்ள,

    ராதாவும் அவள் கையை தட்டிக் கொடுத்து, “எல்லாம் ஒழுங்கா நடக்கும்னு நினைக்கிறேன், ஆனா நான் சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல”, என்று கேட்டாள்.

   தலையே ஆட்டிக் கொண்டாள், “பத்திரமா இருந்துக்கோ” என்று சொல்லிவிட்டே கிளம்பிச் சென்றாள்.

நந்தனின் அம்மா அப்பாவும் யாழினி அம்மா அப்பாவும் கிளம்பும் போது நந்தன்தான் ஒரு டிரைவரை வைத்து அவன் காரை கொடுத்து அனுப்பி விடுவதாக சொல்ல,

யாழினி தான் “ராதா உன் புருஷன் காரை நீயே எடுத்துட்டு போ,  நீ ஊருக்கு எப்படி போவ, உங்க அம்மா அப்பாவோட போறதா இருந்தாலும், அந்த கார்ல நீ போ”, என்று சொன்னவள்.

தன்னுடைய கார் சாவியை கொடுத்து அவள் அம்மா அப்பாவிடம் கொடுத்து அனுப்பினாள், நந்தன் இவர்களுக்கும் ஒரு டிரைவரை ஏற்பாடு செய்தான்.

     “எனக்கு இப்போ கார் இப்ப அவசரமே இல்ல, ராது டெலிவரிக்கு  வருவீங்களா, அப்ப கொண்டு வாங்க போதும், இப்போதைக்கு எனக்கு கார் தேவைப்படாது”, என்று சொல்லியே கொடுத்துவிட்டாள்.

    “அது மட்டும் இல்லாம மழை காலம் ன்னு தானே அங்கு கொடுத்த அனுப்ப  பாக்கறடி”, என்று ராதா கிண்டல் செய்ய,

அவளோ “என்னோட செப்டிமென்ட்ல என் கார் சேஃப்டியும் சேர்த்து தான் பார்க்கிறேன்”,என்றவள்.

       “உன் புருஷன் பத்து நாள் கார் இல்லாம வண்டியில வருவான்,  நீ கெளம்பு”, என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

   அனைவரும் அவரவர் வீடு நோக்கி கிளம்ப,  இவள் நந்தனுக்கு வீட்டை க்ளீன் செய்ய உதவி விட்டு, தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

ஏற்கனவே கதிரவன் அம்மா ஃபங்ஷனில் வைத்தே பார்த்திருக்க, இவள் எல்லாம் முடிந்து மாலை நேரம் வீட்டிற்கு வரும் போது அவர்கள் எல்லோரும் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

    இவளும் வந்து சேர “என்னம்மா முடிஞ்சு கிளம்பிட்டாங்களா”, என்று கேட்டார்.

   “ஆமா ஆன்ட்டி ஒரு 10 டேஸ், அவங்க அம்மா வீட்ல இருந்து வருவா, அது மட்டும் இல்லாம இங்க மழை அறிவிப்பு பண்ணி இருக்காங்க இல்ல அதனால மெதுவா வருவா”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

     “நீ என்னம்மா நடந்து வந்த மாதிரி இருந்துச்சு”, என்று எதிர் வீட்டு அங்கிள் அப்போது தான் வாக்கிங் முடித்து வந்திருந்தவர் கேட்டார்

        “கார் ஊருக்கு எடுத்துட்டு போயிருக்காங்க, அடுத்து டெலிவரிக்கு வரும் போது கொண்டு வந்து விட்டுட்டு போவாங்க”, என்று சொன்னாள்.

    “அதுவும் சரி தான் இப்ப மழை காலத்துல, நீ எங்க எடுத்துட்டு போக போற”, என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தனர்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கதிரவன் லிப்ட்ல் வந்து இறங்க, பொதுவான தலையசைப்போடு உள்ளே செல்லப் போனவன், இவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்து விட்டு சென்றான்.

     ‘லூசு பாக்குறத பாரு, அவங்க அம்மாகிட்ட இதுவே மாட்டிக் கொடுத்திடும் போல’ என்று நினைத்துக் கொண்டு இவள்  “ஓகே ஆன்ட்டி நாளைக்கு ஆபீஸ் போகணும், பார்க்கலாம்”, என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்று கதவை சாத்திவிட்டாள்.

   இவள் எதிர்பார்த்தது போலவே வீடியோ காலில் அழைப்பு வர எடுத்தவள். “என்ன” என்று கேட்டாள்.

    “மேடம் சேலையில் சூப்பரா இருக்கிறீங்களே”, என்று அவன் அங்கிருந்து சொன்னான்.

    சிரிப்போடே “அப்படியா, ஆனா சரி ஏன் அப்படி பார்த்துட்டு போனீங்க, உங்க அம்மா பார்த்து இருந்தாங்கன்னா, கதை கந்தலாகி  இருக்கும் இன்னைக்கே”, என்று சொன்னாள்.

“ஆமா நீ ராதா கிட்ட சொன்னியா இல்லையா”, என்றான்.

“சொல்லிட்டேன், ஆனா அவ தான் நம்ப மாட்டேங்குற, அப்பவும் சொன்னேன்”, என்று சொல்லி அலுவலகத்தில் நடந்தவற்றை சொன்னாள்.

   நந்தனும்  அப்படித்தான் சிரிச்சிட்டு, “அப்படியா சரி மாப்பிள்ளை கேட்டு வந்தாங்கன்னா, அதுக்கப்புறம் நான் சம்மதம் இல்லைன்னு சொல்லிடுறேன், அப்படின்னு சொல்லி அவனும் ராதா கூட சேர்ந்து கிண்டல் பண்ணிட்டு இருக்கான், நெஜமாவே சீரியஸா நம்ப மாட்டேங்கறாங்க”, என்று சொன்னாள்.

“ஏன் நம்ப மாட்டிக்கிறாங்க”, என்று இவன் கேட்டான்.

“அதுவா நான் சொன்னேன் பழிவாங்குறதுக்காக நான் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணுவேன்” என்று சொன்னதையும், தான் அவர்களிடம் வளர்த்த வம்புகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க,

அவனும் சிரித்தபடி “நீ இவ்வளவு வேலை பார்க்கிறாயா? அப்ப அவங்க எப்படி நம்புவாங்க”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

    “பின்ன எப்படி தான் நம்ப வைக்கிறது”, என்று கேட்டாள்.

    ” நான் ஒரு நாள் உங்க அண்ணனிடம் போய் பேசுறேன், அப்போ உங்க அண்ணன் நம்புவாரு இல்ல”, என்று சொன்னான்.

“நிஜமாவா சொல்றீங்க” என்று கேட்டாள்.

“ஏன் எனக்கு என்ன பயம், நெஜமா தான் சொல்றேன்”, என்று சொன்னான்.

ஆனால் இவன் பேச வாய்ப்பு கிடைக்க போவது இல்லை என்று அவர்களுக்கு தெரியாமல் போயிற்று.

Advertisement