அவளோ ராதாவின் வயிற்றை தொட்டு காட்டி, “இப்படி இருக்க நேரத்துல உன்னை கூட்டிட்டு அலைய முடியாதுன்னு தான், நான் தனியாவே போறேன்னு சொன்னேன், இல்லாட்டி உன்ன விட்டுட்டு என்னைக்கு நான் போயிருக்கேன்”, என்று சொன்னவள், “நீ ரெஸ்ட் எடு உன் பேபியை மட்டும் நல்லா பார்த்துக்கோ”, என்று சொன்னாள்.
நந்தனுக்கு அவள் சொல்வதில் சிறிதளவு கூட சந்தேகம் வரவில்லை, ஏனென்றால் தோழியின் பெயர் எல்லாம் இவள் முன்பே சொன்ன பெயராகவே அவனுக்கு நினைவிருந்ததால், அதை அப்படியே நம்பினான்.
ராதாவிற்கு இவள் நேற்று இருந்த சந்தோஷம் எல்லாம் நினைத்துப் பார்க்கும் போது ‘வேறு ஏதும் இருக்குமோ என்று தோன்றியது, இருந்தாலும் நம்மிடம் மறைக்க மாட்டா, எதுவா இருந்தாலும் சொல்லிருவா’ என்று நினைத்துக் கொண்டாள்.
‘இருந்தாலும் ஜெர்மன் ல இருந்து வரும் போது நம்மகிட்ட சேலஞ்ச் பண்ணினாலே, அதனால ஏதும் இருக்குமோ’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ‘இருக்காது இருக்காது’ என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
அந்தக் கேடி எஸ் பி கூட சேர்ந்து இவளும் கேடியா மாறினது பாவம் ராதாவுக்கு தெரியாம போயிடுச்சு.
ராதாவை அருகில் வைத்துக் கொண்டு நந்தனிடம் விடுமுறை பெற்றதும், அவன் விடுமுறை அளித்ததே அவன் சம்மதம் தெரிவித்ததற்கு நிகர் என்பதை அறிந்து கொண்ட யாழினி,
மெதுவாக அவளுடைய எஸ்பி க்கு மெசேஜில் சொன்னாள்,
அவனும் “ஆஹா என்னைய விட ஸ்பீடா இருக்கியே” என்று சொல்லி சிரித்தான்.
அதே நேரம் அவன் நண்பனுக்கு அழைத்தவன், “டேய் ஒரு கேஸ் விஷயமா வெளியே போறேன், எனக்கு ஒருநாள் மட்டும் பைக் வேணும், இங்கே உள்ளவங்க யார் பைக்கிலும் போனா தெரிஞ்சிடும், உன்னோட பைக்ல போனா வெளியே தெரியாது”, என்று சொன்னான்.
“ஓகே எடுத்துட்டு போ” என்று நண்பன் சொல்லவும்,
“தேங்க்ஸ் டா, அப்புறம் ஹெல்மெட் இரண்டு வேணும், எனக்கு ஒன்னு, என்கூட வர இன்னொரு போலீசுக்கு ஒன்னு”, என்றான்.
அவன் நண்பனோ கிண்டலுக்கு, “போலீஸ் ஆம்பள போலீஸா, பொம்பள போலீஸா”, என்று கேட்டான்.
“டேய் நான் ரொம்ப நல்ல பையன் டா”, என்றான்.
“தெரியுது தெரியுது” என்று சொன்னவன், “சரி அடுத்த மீட் எப்போ வச்சுக்கலாம்”, என்று கேட்டான்.
இவனும் அந்த வாரத்திலேயே ஒரு நாளை சொல்ல, இவர்கள் வெளியே செல்வதற்கு முதல் நாள் மாலை அனைவரும் சந்திப்பதாக இருந்தது,
ஏனென்றால் அன்று மாலை தான் இவன் அவனிடம் இருந்து வண்டியை வாங்கி வருவதாக இருந்தது.
அதுபோல அவர்கள் நண்பர்கள் ஒருவரை ஒருவரை சந்தித்துக் கொண்ட போது அனைவரும் அவன் முகத்தைப் பார்த்தபடியே, “கதிர் உன்கிட்ட ஏதோ ஒரு வித்தியாசம் தெரியுது, நல்ல டிஃபரென்ட் அப்படி ஒரு பூரிப்பு முகத்துல, முக்கியமான கேஸ் ஏதும் சக்சஸ் பண்ணிட்டியா”, என்று கேட்டனர்.
அவனும் “இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்”, என்று சொல்லிக் கொண்டவன், தன் பர்சனல் ஃபோனை அடிக்கடி பார்த்துக்கொள்ள,
“டேய் அது உன் பர்சனல் போன் தானே, ஆபீஸ் போனயாவது அடிக்கடி பார்த்தா சரி, ஏதும் ஆபீஸ்ல இருந்து மெசேஜ் வருதான்னு பார்க்கான் ன்னு சொல்லலாம்., பர்சனல் போன்ல அப்பப்போ எட்டி பார்த்துட்டு இருக்க, ஏதும் விசேஷமாடா”, என்று நண்பன் ஒருவன் கேட்டான்.
அவனும் “அப்படி எல்லாம் இல்ல, விசேஷம் வந்தா சொல்றேன்” என்று சொல்லி விட்டு நண்பர்களோடு அரட்டை அடித்தபடி பேசிக் கொண்டிருந்து விட்டு மறுநாள் செல்வதற்கு தேவையான வண்டியை வாங்கி வேறு ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு அங்கேயே ஹெல்மெட்டையும் வைத்து விட்டு வீடு வந்து சேர்ந்தான்.
அதை அவளிடமும் சொல்லி பேசிக் கொண்டிருந்தான்.
ஆனால் அங்கு நண்பர்களோ “இவன்ட்ட ஏதோ ஒரு பெரிய மாற்றம் இருக்கு, ஆனா இவன் நம்மட்ட எதையும் மறைக்கிறான்”, என்று சொல்லி இவனைப் பற்றிய ஆராய்ச்சியை நண்பர்கள் செய்து கொண்டிருந்தனர்.
அவனும் “பேசாம இரு, அவ ப்ரண்ட் பாக்க போறேன்னு சொல்லி இருக்கா இல்ல, போயிட்டு வரட்டும், ஒருவேளை பழைய பிரெண்ட்ஸ் கூட எல்லாம் பேசினதால அப்படி இருந்திருக்கலாம், நீ ஏன் தப்பாவே நினைக்கிற”, என்று சொன்னான்.
“சரி சரி நீங்க நம்புங்க, நானும் நம்புறேன்”, என்று சொல்லிக் கொண்டாள்.
கதிரவன் வீட்டிற்கு வந்தவுடன் எப்போதும் போல மூன்று நாட்களாக உணவை எடுத்து வைத்துவிட்டு கதிரவனின் அம்மா தள்ளி சென்று விடுவது வழக்கமாகி இருந்தது,
இதற்கு முன்பு அவன் சாப்பிட வந்தால், அவனுக்கு பரிமாறி விட்டு அவன் அருகில் உட்கார்ந்து ஏதாவது வீட்டு விஷயங்களை சொல்லிக் கொண்டிருப்பார்.
அவன் அப்பா எப்போதும் தள்ளியமர்ந்து டிவி பார்ப்பது போல இவர்களை பார்த்துக் கொண்டிருப்பது தான் வழக்கம், ஆனால் இப்போது மூன்று நாட்களாக சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு அவன் அம்மா தள்ளி செல்வது இவனுக்கு பழகி இருந்தது.
காரணம் அவர்கள் ஊரில் இருந்து வந்த அன்றே சொல்லி இருந்தான், “நான் ஒரு பெண்ணை ஆறு வருடமாக காதலிக்கிறேன், அவளை தான் திருமணம் செய்து கொள்வேன், நீங்க வேற பொண்ண பார்த்து ஏமாந்து போகாதீங்க, அப்புறம் நீ முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல, நாங்க பார்க்காமல் இருப்போம் ல ன்னு, நீங்க என்னை சொல்லக்கூடாது சொல்லிட்டேன், அவளை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்”, என்றான்.
“பொண்ணு யாரு” என்று கேட்கும் போது,
“கூடிய சீக்கிரம் தெரிவிக்கிறேன்” என்று சொல்லியிருந்தான்.
அதிலிருந்து அவன் அம்மா அவனோடு சரியாக பேசுவதில்லை, இவனோ அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையிலும் இல்லை,
ஏனெனில் அவன் வீட்டில் சொல்லியிருந்த மறுநாள் காலை, அவன் அலுவலகம் கிளம்பி கொண்டிருக்க,
இவளும் மெய்டுக்கு வேலைகளை சொல்லிக்கொண்டு பால்கனியில் நின்று இருந்தாள்.
அதே நேரம் அவனுடைய அம்மா பால்கனியிலிருந்து போன் பேசிக் கொண்டிருந்தார்.
அவனும் பால்கனி வாசலின் அருகில் இருப்பது இங்கிருந்து பார்த்தாலே தெரிய தான் செய்தது,
அவன் அம்மாவோ “அவன் யாரையோ ஒரு பொண்ணு விரும்புகிறானாம், ஆறு வருஷமா விரும்புகிறானாம் யாரு அந்த ஆள் மயக்கின்னு தெரியல, இந்த பையன் இப்படி மயங்கி போய் கிடக்கான், கேட்டா, நான் ஆறு வருஷமா அவளை லவ் பண்ணுறேன் அவளை தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லுறான்”, என்று அவன் அக்காவிடம் கம்பளைண்ட் செய்து கொண்டிருப்பதை கவனித்தாள்.
‘சொல்லிவிட்டான் போல’, என்று நினைத்துக் கொண்டாள்,
‘ஆனா அவங்க அம்மாக்கு பிடிக்கலை போலயே’, என்றும் நினைத்துக் கொண்டாள்.
கதிரவனோ உள்ளே கிளம்பி கொண்டிருந்தவன், வேகமாக வெளியே வந்து போனை புடுங்கி தன் அக்காவிடம் “இங்க பாருக்கா, நல்ல கேட்டுக்கோ, இவங்க தேவையில்லாம அவளை பத்தி பேசக்கூடாது, நான் என்ன சொன்னேன், நான் ஒரு பெண்ணை ஆறு வருஷமா விரும்பறேன்னு சொன்னேன், அவ என்னை மயக்கினானு சொன்னேனா, ஆள் மயக்கினு எல்லாம் சொல்றாங்க, என்ன பேச்சு இது?”, என்று சத்தம் போட்டவன் “பார்த்து யோசிச்சு பேச சொல்லு”, என்று சத்தம் போட்டுவிட்டு போனை கட் செய்து விட்டு போய் விட்டான்.
அதை அவளும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள், ஆனால் இதைப் பற்றி அவனிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை, அவனும் அவளிடம் எதுவும் சொல்லவில்லை,
எப்படியும் காதல் திருமணம் என்றால் எதிர்ப்பு வரும் என்று தெரியும், அது எத்தனை வயதானாலும் எதிர்ப்பு இருக்கும் என்பது இப்போது தான் அவளுக்கு புரியத் தொடங்கி இருந்தது.
ராதா ட்ட விஷயத்தை ஓபன் பண்ணிர வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
அதையெல்லாம் இப்போது யோசித்துக் கொண்டிருந்த கதிரவன்,
தன் தந்தையிடம் “காலையிலே நான் வேலை விஷயமாக வெளியே போறேன், வருவதற்கு மாலையாகிவிடும், என்னை எதற்கும் எதிர்பார்க்க வேண்டாம்”, என்று சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
பின்பு அவளுக்கு அழைத்தவன் காலை எங்கே எத்தனை மணிக்கு வர வேண்டும் என்பதை மட்டும் சொல்லி விட்டு ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்லி அவளிடம் பேச்சை முடித்துக் கொண்டான்.
இவளும் சிரித்துக் கொண்டே தன் படுக்கையில் விழுந்தவள், இனி தான் போராட்டங்களை சந்திக்க வேண்டும் என்பதை யோசித்துக்கொண்டாள் ஏனெனில் ‘ராதாவிடம் அடுத்த வாரம் சொல்லும் போது, நிச்சயமாக அது அம்மா அப்பாவின் காதுக்கும் போகும், என்னென்ன எதிர்ப்புகள் வரப்போகிறதோ, ஆனால் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் என்னோடு பரிதி இருந்தால் போதும் அத்தனை எதிர்ப்பையும் சமாளித்து விடுவேன்’, என்ற எண்ணத்தோடு மலர்ந்த முகத்தோடு உறங்கிப் போனாள்.