Advertisement

2

        ராதாவும் யாழினியும் சேர்ந்து சமையலை முடிக்கும் வரை யாழினியின் ஆடலும் பாடலும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

       ராதா தான் “ஒரு காலு இப்படி ஆகியும் இன்னும் ஆட்டம் குறையல,  பேசாம இருடி,  இப்போ உங்க அம்மா அப்பா வந்தால் அதுக்கும் சேர்த்து திட்டு விழும்” என்று சொன்னாள்.

       “நானே ஹேப்பி மூடுல குதிச்சிட்டு இருக்கேன், பேசாம இரு” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்.

     ராதாவோ “அப்படி என்னம்மா ஹேப்பி மூடு” என்று கேட்டாள்.

” அதான் உனக்கு தெரியுமே” என்றாள்.

      “இப்போ என்ன ஊருக்கு போற புரோகிராம் கேன்சல் ஆயிடுச்சு, ஆனா எல்லாரும் படிச்சவங்க தெரியுமா, யாரும் படிக்காதவங்க கிடையாது, சும்மா கீழே விழுந்ததெல்லாம் யாரும் சகுனம் பார்க்க மாட்டாங்க” என்று சொன்னாள்.

” பார்ப்பாங்களே பாப்பாங்களே” என்று ராகத்தோடு  சொல்லி மீண்டும் ஆடிக் கொண்டிருந்தாள்.

      அவளை இழுத்து பிடித்து சோபாவில் அமர வைக்க முயற்சித்து கொண்டே, “சமையல் எல்லாம் முடிஞ்சிடுச்சி, எல்லாரும் வந்து சாப்பிட்டதுக்கு அப்புறம் பாத்திரத்தை ஒதுக்கி போடலாம், அப்புறம் உங்க மெயிட் வந்து எப்பவும் கிளீன் பண்ற மாதிரி உனக்கு கிளீன் பண்ணி குடுப்பாங்க.,  இப்ப கொஞ்ச நேரம் உட்காரு” என்று அமர வைத்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் காலிங் பெல் சத்தம் கேட்கவும்,  ராதா தான் போய் கதவை திறக்க, இவளோ தலையை மட்டும் திருப்பி எட்டிப் பார்த்தாள்.

       அங்கு யாழினி அம்மா அப்பாவுடன் நந்தனும் நின்றான்.

      முதலில் அவளுடைய பெற்றவர்கள் உள்ளே வர வேகமாக எழுந்தவள், அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு “எப்படி இருக்கீங்க ப்பா” என்று மகிழ்வாக கேட்டாள்.

   அவரோ “என்ன பாப்பா இது? இன்னும் சின்ன பிள்ளையா நீ,  இப்படியா கீழ விழுவ,  அது என்ன எப்ப பார்த்தாலும் டான்ஸ் ஆடிட்டு சுத்துறது,  இப்ப பாரு உன்னோட வலியை யார் வாங்க முடியும்,  நீதான அனுபவிக்கணும்” என்று பொறுமையாக பேசிக் கொண்டிருந்தார்.

     அவளுடைய அம்மாவோ “இப்படி செல்லம் கொடுத்து கெடுக்கிறதே நீங்க தான்,  இந்த வயசுல என்ன டான்ஸ் கேக்கு அப்படின்னு சொல்லி நாலு அடியை போட்டு வச்சீங்கன்னா, டான்ஸ் ஆடுவதை நிறுத்துவா,  எப்ப பாரு எனக்கு ஆபீஸ்ல ஸ்ட்ரெஸ் அப்படின்னு சொல்லி ஆடிட்டே சுத்துறது” என்று சொல்லி அவளை தோளில் வேகமாக தட்டியவர் “இனிமேல் எப்பவாவது ஆடுற ன்னு கேள்விப்பட்டேன்” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே.,

      “ம்மா அது தான்  ஸ்ட்ரெஸ் ஃப்ரீ,  யோசிச்சு பாருங்க வேலையில எவ்வளவு டென்ஷன் தெரியுமா , பசங்களா இருந்தா வீக்லி ஒன்ஸ் தண்ணி அடிச்சு டென்ஷனை போக்கிக்குவாங்க” என்று சொல்லி வேண்டுமென்றே நந்தனை பார்த்து கொண்டு சொன்னாள்.

        நந்தனோ ராதாவை பார்த்து முறைக்க, யாழினி அம்மாவோ “ஏண்டி லூசு மாதிரி பேசாத, நம்ம நந்தன் எல்லாம் என்ன தண்ணியா அடிக்கான்”., என்று கேட்டார்.

         “ஆமாமா ரொம்ப நல்ல பையன் தான், உங்க பையன்” என்று பாராட்டு பத்திரம் கொடுத்தவள் நந்தனை பார்த்து முறைத்துக் கொண்டே “உங்களுக்கு தெரியாது மா, எல்லாரும் அப்படித்தான், ஆபீஸ்ல பொண்ணுங்கல்ல கூட தண்ணி அடிக்கிற பொண்ணுங்க இருக்காங்க தெரியுமா,  ஆனால் பாருங்க நான் வெறுமனே பாட்டு போட்டு டான்ஸ் மட்டும் தான் ஆடுறேன்,  ஆனால் என் நேரம் அன்னைக்கு ஆபீஸ்ல யாரோ ஜூஸ் கொட்டி இருக்காங்க.,  அதனால தான் நான் கீழ விழுந்துட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

      “வாய் அடிக்காதடி, இவ்வளவு வாய் அடிக்காத,  முதல்ல உன் வாயை குறை” என்றார்.

       “ம்மாவ் இந்த வாய் மட்டும் இல்லைன்னு வைங்க,  இந்த ஊர்ல நம்மள நாய் கூட மதிக்காது போயிரும்., நம்ம எல்லாம் பேசினா மட்டும் தான் இங்க எல்லாம் வாழ முடியும்”, என்று சொன்னாள்.

         ” உனக்கு வர வர வாய் ஜாஸ்தியாவது, முதல்ல சீக்கிரமா கல்யாணத்தை முடிக்கணும்” என்றார்.

      ‘அய்யய்யோ இந்த அம்மா பாயிண்ட்டுக்கு வந்துருச்சு’ என்று யோசித்துக் கொண்டே  “ம்மா கல்யாணம் பண்ணினா பேசக் கூடாது ன்னு ரூல்ஸ் இருக்கா என்ன?, அப்போ எப்படி நீங்க இவ்வளவு பேசுறீங்க” என்றாள்.

         அவளுடைய அம்மாவோ முறைத்து பார்த்த படி தலையில் கொட்ட வரவும்., தலையை நகர்த்தி அப்பாவின் அருகே சென்றாள்.

      அவளுடைய அப்பா தான் “ஏன் பாப்பா இப்படி பண்ற,  அன்னைக்கு மட்டும் கால் ஸ்லிப் ஆகாம இருந்துச்சுன்னா,  இன்னைக்கு நீ இங்க இருந்து அங்க கிளம்பி இருப்ப , பாரு உன்னால பெண் பார்க்க வர்ற ப்ரோக்ராமை கேன்சல் ஆயிடுச்சு”, என்று சொன்னார்.

      நந்தன் தான் “ஏன் சித்தப்பா கால்ல அடிபட்டா பொண்ணு பாக்குறத, கேன்சல் பண்ணனுமா என்ன”  என்று வேண்டுமென்றே யாழினியை பார்த்துக் கொண்டே சொன்னவன்,

      அவள் முறைப்பதை கண்டு கொள்ளாமல் “ஒன்னு பண்ணுங்க சித்தப்பா, அவங்களை  இங்க வர சொல்லுங்களேன்” என்று சொன்னாள்.

          “இல்ல நந்தா,  நான் டீடைல்ஸ் முழுசா கேட்டுக்கல, முதல்ல ஜாதகம் பார்ப்போம், நாங்க வந்து பொண்ண பாத்துக்கிறோம் ன்னு,  பையனோட அம்மா அப்பா சொல்லியிருந்தாங்க, ஜாதகம் செட் ஆனா பையன் வந்து பார்க்கட்டும்,  நாம முதலில் பேசி முடிச்சுட்டு அதுக்கப்புறம் அவங்க இரண்டு பேரும் முடிவு பண்ணட்டும் ன்னு சொல்லிட்டு இருந்தாங்க.,  நம்ம வீட்ல இவளும் அப்படித்தானே சொல்லிட்டு இருந்தா, அதனால முதல்ல பார்த்துக்கலாம் அப்படின்னு நினைச்சிருந்தோம்,  இவ இந்த வாரம் வந்தான்னா அவங்கள பாத்துட்டு போக சொல்லிடலாம்னு தான் நினைச்சிருந்தோம், இவதான் இப்படி பண்ணிட்டாளே,  அப்புறம் எங்க வரச் சொல்ல, அவளுக்கு கால்ல அடிபட்டு இருக்குன்னு சொல்லிட்டு நாங்க கிளம்பி இங்க வந்துட்டோம்” என்று சொன்னார்.

     அவளும் ‘அப்பாடா’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவள் அம்மா தான் “நானும் இப்போதைக்கு ஸ்டாப் பண்ணி வைப்போம்,  அப்புறமா ஜாதகம் பார்ப்போம் ன்னு சொல்லி  இருக்கேன்,  முதல்ல இவளை வழிக்கு கொண்டு வருவோம்,  இவ என்ன நெனச்சிட்டு இருக்கான்னு கேட்போம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ராதா தான்.,

      ” அத்தை முதலில் நீங்கள் பிரஷ் ஆயிட்டு வாங்க,  சாப்பிட்டு அதுக்கப்புறம் உக்காந்து பேசுங்க” என்று சொன்னாள்.

      நந்தனோ ராதாவை பார்த்து முறைக்க.,  ராதாவும் “இப்ப தானே வந்து நிக்கிறாங்க,  ஒரு டம்ளர் காபி கூட குடிக்க வேண்டாமா” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

      பிறகு பேசிக்கொண்டே அவர்கள் ரெப்ரஷ் ஆகி வர ராதா தான் அனைவருக்கும் காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள்.

        “உனக்கு செகண்ட் டோஸ் வேண்டுமா” என்று யாழினியிடம் கேட்டாள்.

       யாழினியோ  “இல்ல வேண்டாம், அப்புறமா நானே கலந்துக்குவேன்” என்று சொல்லி விட்டு சற்று அமைதியாக யோசிக்க தொடங்கினாள்.

      ‘இவர்களின் பேச்சு எதுவும் சரி இல்லையே,  அப்படி என்றால் அவர்கள் பார்க்க வேண்டும் என்று சொன்ன மாப்பிள்ளை வீட்டாரை மொத்தமாக தடை செய்யவில்லையா’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

      ‘என்ன செய்யலாம், அடுத்து ஏதாவது வாய்ப்பு கிடைக்குதான்னு பார்க்கணுமே’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளோ,  ‘அடுத்து பேசினா பாத்துக்கலாம்,  இப்போதைக்கு ஸ்டாப் பண்ணி இருக்காங்க இல்ல,  இதை எப்படி கிளோஸ் பண்ணலாம்னு பார்க்கணுமே ஒழிய, வர்றதை பற்றி யோசிச்சு இப்பவே டென்ஷன் ஆக கூடாது’ என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.

       நந்தனோ ‘ஆஹா இவ ஏதோ பிளான் பண்றாளே’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.  இவளை அறிந்தவனாக.,

         யாழினி அம்மா தான் பேசிக்கொண்டே இவளது தலையை எல்லாம் எண்ணை தேய்த்து வாரி பின்னலிட்டார்

       “என்ன புள்ள நீனு,  26 வயசு ஆகுது,  கல்யாணத்தை பேசி முடிப்போம் னா ஒவ்வொரு தடவையும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிக்கிட்டே இருக்க” என்று புலம்பிக்கொண்டே அவள் தலையை சரி செய்ய இவளோ அமைதி காத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.

       ‘சரி இப்ப பேசக்கூடாது’ என்று அமைதியாக இருக்க, மதிய சமையலுக்காக ராதா ஏதாவது செய்யலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

          நந்தன் தான் “இல்ல இன்னைக்கு மத்தியானம் வெளியே ஆர்டர் போடுறேன்.,  நாளைக்கு சண்டே ஏதாவது வீட்ல செய்யலாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

       இவளோ ‘நீ போடு எனக்கு  சாப்பாடு கிடைச்சா ஓகே தான்’ என்று மனதிற்கு நினைத்துக்கொண்டு ராதாவை பார்த்தாள்.

        ராதாவும் “என்னடி” என்று கேட்டாள்.

          “உன்  சம்பாத்தியமும் சேர்ந்து  தான் உன் புருஷன் கிட்ட இருக்கு,  ஆர்டர் போடட்டும் சாப்பிடுறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

       “அது என் சம்பாத்தியம் இல்லை, என் புருஷன் சம்பாத்தியம்”, என்றாள்.

        “அதெல்லாம் இல்ல, அது உன் சம்பாத்தியமும் மிக்ஸ்ட் தான்”,என்று சொல்லி அவளிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தாள்.

      “ஏண்டி நீ எப்ப தான் திருந்த போற”, என்று அவள் அம்மா அவள் தலையில் கொட்டு வைத்தார்.

      “சின்ன பிள்ளை மாதிரியே ட்ரீட் பண்ணாதமா, தலையில் கொட்டிக்கிட்டு,  நொய் நொய்ன்னு பேசிகிட்டு.,  உன்கிட்ட இருந்து தான் எனக்கு இந்த பேசுற பழக்கம் வந்திருக்கும் நினைக்கிறேன்”,  என்றாள்.

  ” ஆமாடி இதுக்கு மட்டும் என்ன குறை சொல்ல வந்திரு” என்று சொன்னார்.

    “பின்ன என்னம்மா, சின்ன பிள்ளை மாதிரி ட்ரீட் பண்ற” என்றாள்.

      “அப்ப நீ சின்ன பிள்ளை இல்ல,  பெரிய பிள்ளை தானே,  நான் சொல்ற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டு” என்று சொன்னார்.

       “அதெல்லாம் முடியாது,  நான் மாப்பிளை எப்படி இருக்கணும், எப்படி எதிர்பார்க்குறேனோ, அப்படி மாப்பிள்ளை கிடைச்சா மட்டும் தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்”,  என்று சொன்னாள்.

       “அப்போ உனக்கு எப்படி மாப்பிள்ளை வேணும்” என்று கேட்டார்.

    ராதாவோ “சீக்கிரம் சொல்லுடி” என்று கேட்கும் போதே ராதாவை திரும்பி முறைத்தவள்.

     “நான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட்ட போய் எனக்கு புடிச்ச மாதிரி சொல்லி ஒரு மாப்பிள்ளை பிச்சர் போட்டு கொண்டு வாரேன், அந்த மாதிரி மாப்பிள்ளை தேடுங்க” என்று சொன்னாள்.

        நந்தனோ ராதாவை பார்த்து புருவத்தை தூக்கி விசாரி என்று சைகையில் சொன்னான்.

    அவளோ “போ”  என்று திட்டி விட்டு நகர்ந்துவிட்டாள்.

           “இப்ப வந்திருக்க மாப்பிள்ளை வீடு அவ்வளவு நல்ல குணம், மாப்பிள்ளையோட அம்மாவும் அப்பாவும் தான் பார்த்தோம்,  கூட பிறந்தது ஒரே அக்கா மட்டும் தான் அந்த பொண்ணும் கல்யாணம் ஆகி செட்டில் ஆன பொண்ணு,  உனக்கு பிக்கல் பிடுங்கள் பிரச்சனை எதுவும் கிடையாது.,  பக்கத்துல உக்காந்துட்டு இவள நொய் நொய்யின்னு அறிச்சிட்டு இருக்க பாரு.,  அந்த மாதிரி பக்கத்துல உட்கார்ந்து அறிக்க கூட ஆள் கிடையாது”,  என்றார்.

       இவளோ ராதாவை திரும்பிப் பார்த்து,  ஏன்டி நான் உன்னை நொய் நொய்யின்னு அறிச்சிட்டு இருக்கேனா,  போய் கம்ப்ளைன்ட் பண்ணினீயா” என்று ராதாவிடம் சண்டைக்கு கிளம்பினாள்.

    “நீ என்னடி இப்படி சண்டைக்கு போற” என்று கேட்கும் போதே,

     “ஓஹோ மருமகளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வாரீங்களா., அப்ப நீங்க ஒன்னும் எனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாம், எனக்கு மாப்பிள்ளை இப்போதைக்கு தேவையில்லை”.,  என்று சொல்லி சண்டை இழுக்க தொடங்கினாள்.

     யாழினி அம்மா, அப்பாவிடம் “இவள பாருங்க, மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுறா”என்றார்.

      அவளுடைய அப்பா தான்., “பாப்பா நீ பேசாம தான் இரேன் ம்மா” என்று சொன்னார்.

Advertisement