11

   நேரம் சென்று கொண்டிருப்பது அறியாமல் அப்படியே அமர்ந்திருந்தவள், அதிக நேரம் கடந்து விட்டதை அறிந்து தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.

   ‘ஏன் இப்படி லூசு மாதிரி இருக்கேன்’என்று நினைத்தவள், ‘அதெல்லாம் ஒன்னும் இல்ல, எதுவுமே ஆகாது’ என்று நினைத்தவள் வேலைகளை தொடங்கினாள்

எப்போதும் போல வந்தவுடன் சிறிது நேரத்தில் வேலைகளை தொடங்கி இருந்தால் கிட்டத்தட்ட இந்நேரம் வேலை முடிக்கும் நேரம் ஆயிருக்கும்,

    திடீர் தாக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவே சற்று நேரம் எடுக்க,  ‘டைம் போனது தான் மிச்சம்’ என்று யோசித்துக் கொண்டே அழுக்கு துணிகளை எடுத்து மிஷினில் போட்டு விட்டு ஆன் செய்து விட்டவள் வேலைகளை பார்க்க தொடங்கினாள்.

எப்போதும் போல அலெக்சா தன் வேலையை செய்து கொண்டிருக்க,  இவள் அவள் வேலையை செய்து கொண்டிருந்தாள்.

     காய்கறி வெட்டி எடுத்து பாக்ஸில் போட்டு வைத்தவளுக்கு  பசிப்பது போல இல்லை என்றவுடன்,  கொஞ்சம் பழங்களை மட்டும் வெட்டி எடுத்து வைத்து விட்டு துணி முடிந்து விட்டதா என்று பார்க்க,  அது முடியாமல் இருக்கவும்,  ‘சரி குளித்து விட்டு வருவோம்’ என்று நினைத்தவளுக்கு  பிடித்த பாடல் வர அவள் அறியாமல் கால்கள் தாளம் போடத் தொடங்கியது.

  ஆடுவதற்கும் மனமில்லாமல் இருக்க,  சிறிது நேரம் மட்டும் லேசாக மெதுவாக அசைந்தாடியவள் குளித்துவிட்டு வருவோம் பின்பு பழத்தை சாப்பிட்டு விட்டு படுக்கலாம் என்ற எண்ணத்தில் குளிக்க சென்று விட்டாள்.

அவள் குளித்துவிட்டு வரவும் சாப்பிடலாம் என்று அமரும் போது வாஷிங் மெஷின் சத்தம் கொடுப்பது போல தோன்றியது,  பழத்தை அப்படியே வைத்து விட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்றவள்,  துணி எல்லாம் எடுத்து உதறி காய போட்டுக் கொண்டிருந்தாள்.

சரியாக துணியை காய போட்டு முடிக்கவும், இரண்டு வீட்டிற்கும் இடையில் உள்ள க்ரீல் திறப்பது போல இருக்க வேகமாக திரும்பிப் பார்த்தாள்.

    அவனைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் அவன் அம்மா சொன்னது, நினைவில் வந்து போனாலும் , ‘இவனிடம் எப்படி சொல்வது சொன்னால் நாம் வேண்டும் என்றே சொல்லிக் கொடுத்தது போல ஆகிவிடுமே’ என்று அமைதியாக அவனையே பார்த்து நின்றாள்.

     அவனும் சிரித்தபடியே வந்தான் , “என்ன இசை மேடம் அப்படி பாக்குறீங்க” என்று கேட்டான்.

அவள் வீட்டை எட்டிப் பார்க்க, அவனும் “அம்மா அப்பாவும் திடீர்னு ஊருக்கு போயிட்டாங்க,  அக்கா போன் பண்ணி சொன்னா,  சரி இங்க இருக்க காஞ்சிபுரம் தானே போயிட்டு வரட்டும் ன்னு விட்டாச்சு”, என்று சொன்னான்.

     “ஆள் இல்லாதது வசதியா போச்சுன்னு கிளம்பி வந்துட்டீங்களா” என்று கேட்டாள்.

    “அப்படி எல்லாம் இல்லை ன்னு சொல்ல மாட்டேன்” என்றவன், “நீ ஏன் ஒரு மாதிரி இருக்க, எதுவும் உடம்பு முடியலையா”, என்று கேட்டான்.

    “உடம்புக்கு எல்லாம் ஒன்னும் இல்ல, மனசு தான் கொஞ்சம் சரியில்லை” என்று சொன்னாள்.

    அவனும் “நான் வேணா மனச சரி பண்ணட்டுமா”, என்று சிரித்தபடியே கேட்டான்.

        அவனை பார்த்துக் கொண்டிருந்தவள்,  நேரத்தை பார்க்க அது 9:30 காட்டியது, சிரித்துக் கொண்டே “சீக்கிரம் வந்துட்டீங்க போல” என்றாள்.

   அவன் லேசாக சிரித்த படியே அவளை தான் பார்த்தான்.  அவள் முகத்தில் அந்த சிரிப்பு இல்லை என்பதை உணர்ந்தவன், ‘என்ன பிரச்சனை தெரியலையே கேட்போம்’ என்று நினைத்து கொண்டே அந்த க்ரிலை திறந்தபடியே வைத்தான், “இன்னைக்கு தான் யாரும் இல்ல தானே, திறந்து இருக்கட்டும்”, என்று சொன்னான்.

    அவளும் அவனை பார்த்துக் கொண்டே,  “என்ன ஆச்சு லைட்டெல்லாம் ஆஃப் பண்ணிட்டு வர்றீங்க” என்று கேட்டாள்.

     “எப்படியும் நான் கொஞ்ச நேரம் உன் கிட்ட பேசிட்டு தான் போவேன்,  அதுக்கு எதுக்கு வீணா லைட் எல்லாம் போட்டுவிட்டு,  அதான் ஆஃப் பண்ணிட்டு வந்தேன், வந்த உடனே குளித்து பிரஷ் ஆயிட்டு இங்கே வந்துட்டேன்”, என்றான்.

   அமைதியாக அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் எப்போதும் போல எல்லாத்தையும் ஆப் செய்துவிட்டு உள்ளே செல்லலாம் என்று திரும்பும் போது,  அவள் கைவிரலை பிடித்து நிறுத்தியவன்,  “என்ன பிரச்சனை முகம் ஏன் இவ்வளவு டல்லா இருக்கு,  நீ பேச்சுக்கு சிரிச்சாலும்,   உன் முகத்துக்கு அந்த சிரிப்பு போகல, சொல்லு என்ன விஷயம்”, என்று கேட்டான்.

   “அதெல்லாம் ஒன்னும் இல்லையே” என்று சொன்னாள்.

   அவள் கையை பிடித்த படியே அவளோடு வீட்டிற்குள் வந்தவன்,  சோபாவின் அருகில் இருந்த டீபாயில் பழங்கள் மட்டும் வெட்டி வைத்திருப்பதை பார்த்தவன்,  “என்ன ஆச்சு சாப்பிடலையா, பழத்தை கட் பண்ணி வச்சிருக்க”, என்று கேட்டபடி அந்த பழத்திலிருந்து ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டவன், சோபாவில் அமர்ந்தான்.

இவளோ “பசிக்கல அதுதான்” என்று சொல்லவும்,

    அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,  “ஆனா எனக்கு பசிக்குது, சாப்பிட என்ன இருக்கு”, என்று கேட்டான்,

   “நீங்க சாப்பிடலையா” என்று அவள் கேட்டாள்.

   “இல்ல அக்கா போன் பண்ணி, அம்மா அப்பாவும் காஞ்சிபுரத்துக்கு வராங்க, அப்படின்னு சொன்ன உடனே முடிவு பண்ணிட்டேன், இன்னைக்கு நைட் சாப்பாடு உன் கூட தான் ன்னு,  அதனால் தான் சாப்பிடாம வந்தேன்”,  என்று சொன்னான்.

‘இப்படி சொல்பவனிடம் எப்படி செய்து தர மாட்டேன், என்று சொல்வது’ என்ற எண்ணத்தோடு “பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க, தோசை ஊத்துறேன்” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றாள்.

   பிரிட்ஜில் இருந்து சாம்பார் எடுத்து சூடு செய்ய வைத்தவள்,  தோசை மாவு எடுத்து தோசை ஊற்றும் பதத்திற்கு தயார் செய்து விட்டு தோசை கல்லை அடுப்பில் வைக்கும் போது அவனும் அவளுடைய பழ கிண்ணத்தோடு கிச்சனுக்கு வந்தான்.

      “நீ ஏன் சாப்பிடலை”, என்றான்.

    அவளோ “பசிக்கல” என்று சொல்லவும்,

     அவன் அவள் முகத்தை பார்த்தபடியே “என்ன பிரச்சனை யார் என்ன சொன்னா” என்று மட்டும் கேட்டவன்,

   அவள் எதுவும் சொல்லாமல் சாம்பார் கிண்டி கொண்டிருப்பதை பார்த்தவன்,  அவள் கையில் இருந்த கரண்டியை உருவி கொண்டே “நான் பாத்துக்குறேன்” என்று சொல்லும் போது,

   இவளோ  “நீங்க போய் ஹால்ல உட்காருங்க, நான் எடுத்துட்டு வரேன்” என்று சொன்னாள்.

       “ஏன் நான் கிச்சன் உள்ளே  வரக்கூடாதா, நம்ம வீடு தானே” என்று சொல்லிய படி

    “வேற எதுவும் வேலை இருந்தா நீ போய் பாரு, நானே தோசை ஊத்திக்கிறேன்”, என்று சொன்னான்.

    “நான் செய்து தரேன், நீங்க உட்காருங்க”, என்று சொன்னாள்,

அவனும் ‘என்ன செய்கிறாள் என்பதை பார்க்கலாம்’ என்று, அதை அவளிடமே சொன்னபடி அவள் கைகெட்டும்  தூரத்தில் கிச்சன் திண்டில் ஏறி அமர்ந்திருந்தான்,

      இவர் தோசை ஊற்ற தொடங்கியவுடன்,  தோசை  வெந்து கொண்டிருக்கும் போதே,  இட்லி பொடியையும் எடுத்தவள், அதை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து எண்ணெய் விட்டு கலக்கி வைத்தாள்.

  அவனும் அமைதியாக அவள் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

     சாம்பாரையும் எடுத்து பக்கத்திலேயே வைத்து விட்டு அவனுக்கு தோசை சுட்டு எடுத்தவுடன், தட்டில் வைத்து கொடுக்க,  அதை வாங்கி வைத்தவன்,  “நீ சுடு அதுக்கப்புறம் சாப்பிடலாம்”, என்று சொன்னான்.

“சூடா சாப்பிடுங்க”, என்றாள்.

   அவள் இரண்டாவது  சுட்டு முடித்தவுடன் சாப்பிட தொடங்கியவன்,  அவள் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்,

   இவளோ “என்ன” என்று கேட்டாள்.

     “ஒன்றும் இல்லை” என்று சொன்னவன், பின்பு அவன் சாப்பாட்டிற்கு நடுவே கட்டாயப்படுத்தி அவள் வாயிலும் திணித்துக் கொண்டிருந்தான்.

    இவளோ “எனக்கு வேண்டாம்” என்று சொன்னாள்.

    “கொஞ்சமாக எடுத்துக்கோ, சாப்பிடாமல் இருந்தேனா, நல்லது கிடையாது, எந்த பிரச்சினையாக இருந்தாலும், சாப்பிடாமல் இருப்பதினால் தீர்வு கிடைக்க போறதில்லை”, என்று சொல்லி அவன் சாப்பிடும்போதே அவளுக்கும் ஊட்டி விட்டபடி இருந்தான்.

    ஒரு வழியாக சாப்பாடு முடியவும் இவள் எல்லாவற்றையும் ஒதுக்கிப்போட்டு கிச்சனை சுத்தம் செய்யும் போது, அவனும் உதவ முன்வர “நான் செய்துகொள்வேன் போங்க”, என்று சொல்லிவிட்டு வேலை முடித்து, வெளிய வந்தாள்.

    அவனும் அவள் பழக் கிண்ணத்தை எடுத்து அவள் கையில் கொடுத்தவன், சாப்பாடு நீ சரியா சாப்பிடலை, இதை ஒழுங்கா  சாப்பிட்டு முடி”, என்றான்.

“அப்புறம் சாப்பிடுகிறேன்” என்று சொல்லி வைத்து விட்டாள்.