Advertisement

9

      காலையில் சற்று நிதானமாகவே  எழுந்தாள், கண் விழித்த பிறகும் அப்படியே படுத்திருந்தவளுக்கு ஏதேதோ நினைவுகள்,  ஆனால் முகம் மட்டும் சிரிப்போடு நிறைவாக இருந்தது.

     காலை வேலைகளை முடித்துக் கொண்டு சமையலறைக்குள் செல்லும் போது எப்போதும் போல அலெக்சாவை ஓட விட்டு பாடலைக் கேட்ட படி சமையல் செய்து கொண்டிருந்தாள்,

பாடலோடு சேர்ந்து பாடினாள்.

சில வரிகளை மட்டும்,

“ஏன் எனக்கு மயக்கம்

ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு” என்றவள்,  ஏதோ ஒரு குறுகுறுப்பான மனதோடு, அவள் அறியாமல் சிரிப்பு மட்டும் வந்து கொண்டே இருந்தது, சிறு சிரிப்போடு சமையலை முடித்தவள்.

   குளிக்கலாம்  என்று செல்லும் போது தான் இன்னும் அவள் மொபைலை சார்ஜரில் இருந்து எடுக்காதது நினைவு வர,  அதை எடுக்கும் போதே வாட்ஸ் அப்பில் மெசேஜ் பார்க்க தொடங்கியிருந்தாள்.

அதிகாலை 3:30 மணிக்கே பரிதியிடமிருந்து அவளுக்கு மெசேஜ் வந்து குவிந்திருந்தது,

‘காலங்காத்தால மூன்று மணிக்கு உட்கார்ந்து மெசேஜ் பண்ணி இருக்கு பாரேன்’ என்று சிரித்துக் கொண்டே அவனுடைய வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்தாள்.

அதில் முதலாவதாக ‘ஹாய் இசை’ என்று போட்டிருந்தான்.

பின்பு ‘ஸ்வீட் மார்னிங் இசை’ என்று போட்டிருந்தவன்,

     ‘காலையிலே  என் கடமை அழைக்கிறது, சோ கிளம்பிட்டேன் ஈவினிங் சீக்கிரம் வந்துட்டேனா பார்க்கலாம்’ என்று போட்டிருந்தான்.

     பின்பு ஹார்ட் ஸ்மைலி, கிஸ்ஸிங் ஸ்மைலி, என்று வரிசையாக அனுப்பிவிட்டிருந்தான்.

“ஆனாலும் உன்னை எழுப்பி பார்த்துட்டு போலாம்னு மனசு சொல்லுச்சு,  வேண்டாம் தூங்குற பிள்ளைய  டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு தான் உன்னை எழுப்பி விடாம போறேன்,  நைட் நீ தூங்குவதற்கு எப்படியும் லேட்டாகி இருக்கும் ன்னு எனக்கு தோணுச்சு” என்று அனுப்பி இருந்ததோடு

    “டேக் கேர் இசை,  இடையே முடிஞ்சா கால் பண்றேன்” என்று மட்டும் போட்டதோடு,

     மீண்டும் ஒரு கிஸ்ஸிங் ஸ்மைலியோடு “ஹேப்பி மார்னிங் இசை” என்றும் போட்டிருந்தான்.

    இவளோ சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் வாட்ஸ் அப்  ப்ரொபைலில் இருந்த போட்டோவை பார்த்துக் கொண்டிருந்தாள்,

     யூனிஃபார்மில் இருந்த டி பி யை பார்த்தவள் ‘இஷ்டப்பட்டு வேலைக்கு போனாங்களா, இஷ்ட படாம வேலைக்கு போனாங்களான்னு தெரியல,  ஆனா இப்போ அந்த ஜாப் அவங்களுக்கு ரொம்ப இஷ்டம் ன்னு நினைக்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டு வாட்ஸ் அப் ஐ  க்ளோஸ் செய்தாள்.

      பார்த்ததற்கு ஒரு பதில் மெசேஜ் கூட அனுப்பாமல் க்ளோஸ் செய்யவும்,  மீண்டும் யோசித்தவள் ‘பதில் அனுப்பலாமா, ம்ஹும் வேண்டாம் பாத்துக்கலாம்,  கொஞ்சம் அலைய விடுவோம்’ என்று நினைத்துக் கொண்டே குளித்து கிளம்ப தொடங்கினாள்.

      பின்பு எப்போதும் போல எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது வீட்டு வேலை செய்யும் அக்கா வர அனைத்தையும் ஒதுக்கி கொடுத்தவள், மெதுவாக கிளம்புவதற்குள் அவர்கள் அனைத்து வேலையும் முடித்தார்.

துணியை மட்டும் மிஷினில் சும்மா போட்டு வைத்தாள்,  மாலை வந்து மிஷினை ஆன் செய்து கொள்ளலாம் என்று.

    எப்போதும் போல கதவை பூட்டிக்கொண்டு லிப்ட்டில் ஏற அவன் அருகில் இருப்பது போன்ற ஒரு பிரேமை ஏற்பட்டது,  எப்போதும் அவள் நிற்கும் இடத்திற்கு அருகிலே வந்து நிற்பான்,  ஏதாவது ஆட்கள் இருந்தால்  போனில் பேசுவது போல பேசுவான்,  ஆட்கள் இல்லாவிட்டால் இவளிடம் நேரடியாகவே வம்பு வளர்ப்பான்,  இதையெல்லாம் நினைத்துக் கொண்டவள், சிரித்துக்கொண்டே லிப்ட் நிற்கவும் வெளியே வந்து கேப் நிற்கும்  இடத்திற்கு எப்போதும் போவது போல போனாள்.

     அங்கு ராதாவை பார்த்ததும் “ஹாய் எப்படி இருக்க ஹெல்த் ஓகேவா, நைட் ஒழுங்கா தூங்கினியா”, என்று கேட்டாள்.

      அவளோ இவளை வித்தியாசமாக பார்த்து விட்டு ‘நம்ம  எத்தனை நாள் பார்க்காமல் இருந்தோம், ஹெல்த் ஓகேவா ன்னு  கேட்குறா,  நைட் தூங்குனியா ன்னு கேக்குறா’, என்று நினைத்தவள்,  “என்ன விஷயம் ஏதோ குஷி மூடுல இருக்க போல”, என்று கேட்டாள்.

   “அதெல்லாம் ஒன்னும் இல்ல,  நீ தூங்குனியான்னு கேட்டேன், நல்ல தூங்குனியான்னு கேட்டேன், ஏன்னா ப்ரக்னன்சி சமயம் மந்த் கூட கூட சரியா தூக்கம் வராதுன்னு சொல்லுவாங்களா, அது தான் கேட்டேன்”, என்று கேட்டாள்.

       “ஆமா நீ எத்தனை புள்ள பெத்த, என்னை பார்த்து கேள்வி கேட்டுகிட்டு இருக்க”, என்று கேட்டாள்.

  “இதெல்லாம் கேள்வி ஞானம் தான், பட்டறிவு கிடையாது, வெறும் படிப்பறிவு தான்” என்று சொன்னவள்,

அவளோடு சிரித்தபடி எப்போதும் கேபில் பேசுவது போலவே பேசிக் கொண்டு சென்றாள்,

     ஆனால் ராதாவோ அவளையே பார்த்துக் கொண்டு வந்தாள்.

    யாழினியோ “என்ன” என்று அவளை பார்த்து கேட்டாள்.

     “இல்ல இன்னைக்கு உன்கிட்ட ஏதோ ஒரு வித்தியாசம் தெரியுது டி” என்று சொல்லும் போது

    அவளோ “அதெல்லாம் ஒரு வித்தியாசமும் இல்லை, கண்மை கொஞ்சம் கூட போட்டு இருக்கேனா, அதுதான் உனக்கு அப்படி தெரியுதோ”, என்றாள்.

     “இல்லையே அதெல்லாம் எப்பவும் போல தான் போட்டு இருக்க” என்று சொல்லி விடவும்,

        “அப்ப லிப் பாம் அதிகமா இருக்கா”, என்றாள்.

           “அவளோ இல்லையே அதுவும் சரியாத்தான் இருக்கு” என்றாள்.

     “ஹேர்ஸ்டைல் எதுவும் மாத்தி இருக்கானா”, என்று கேட்டாள்.

     ராதாவோ “எந்த ஸ்டைலும் மாறல, நீ எப்பவும் போல தான் வந்து இருக்க, ஆனா உன் முகம் மட்டும் ஒரு பளிச் பளிச்சுன்னு இருக்கு”, என்று சொன்னாள்.

     இவளோ ஹாஹா என்று சிரித்துக் கொண்டே,  “அது இப்போ உன் கண்ணுக்கு எல்லாம் அப்படித்தான் தெரியும், உனக்கு பார்க்கிற எல்லாம் அழகா தெரியும், காரணம் நீ அழகா இருக்க இல்ல அதுதான்”, என்று சொன்னாள்.

‘இது என்ன இவ புதுசு புதுசா  நம்மை பிரைன் வாஷ் பண்றா’ என்று நினைத்தவள் “ஏன்டி நீ எப்படி  புதுசு புதுசா யோசிக்கிற”, என்றாள்.

     “நெஜமா நான் கூகுள்ல தேடி பார்த்தேன் ஆக்கும்” என்று சொன்னாள்.

    “என்ன பார்த்த” என்று கேட்டாள்,

     “அதாவது ப்ரெக்னென்ட் லேடீஸ் இருக்காங்கல்ல, அவங்களோட மைண்ட் எப்படி இருக்கும், அவங்களோட மன்த் கூட கூட அவங்களோட பிஹேவியர் எப்படி இருக்கும், அவங்க மனநலம் எப்படி இருக்கும் ன்னு தான்,  எல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீ டென்ஷன் ஆகாமல் இரு”, என்று சொன்னாள்.

      “யாரு,  நீ என்னை பார்த்துக்கொள்வ, இதை நான் நம்பனும்”, என்று கேட்டாள்.

     “நெஜமா நான் பாத்துக்குவேன்,  உன் புருஷன விட நல்லா பாப்பேன்” என்று சொன்னாள்.

       “ஆமாடி இவ்ளோ நேரம் அந்த மனுசன வம்புக்கு இழுக்கலைன்னு நினைச்சேன், இழுத்துட்டியா”,என்றாள்.

    “ம்ஹூம், இழுத்துட்டாலும்”, என்றவள்,  “அதெல்லாம் நல்லா பாத்துப்பேன்,  வேணும்னா உன் புருஷன கேட்டு பாரு”, என்று சொன்னாள்.

       “அம்மா தாயே வா, ஆபீஸ் வந்துருச்சு”, என்று சொல்லி இருவரும் இறங்கி நடக்கும் போது கூட,  இவள் மெதுவாக செல்லை பார்ப்பதும் பின்பு சிரித்தபடி நடப்பதுமாக இருக்க,

    “என்னடி ஒரு மாதிரி தனியா சிரிச்சிட்டே வர்ற”, என்று ராதா கேட்டாள்.

    “தனியா சிரிக்கலையே, நீ தான் கூட இருக்கீயே,  உன்ன நெனச்சு சிரிச்சுட்டு வந்தேன், வேற ஒன்னும் இல்ல” என்று சொன்னபடி தன் இடத்தில் வந்து அமரவும்,

     ராதாவும் இவளை பார்த்துக் கொண்டே அவளுடைய கேபினுக்கு சென்று அமர்ந்தாள்,

    பின்பு சற்று இழுத்து மூச்சு விட்ட யாழினி,  ‘அப்பாடி இன்னைக்கு அவட்ட  இருந்து தப்பிச்சிட்டேன், மூஞ்சில என்ன அப்படியா ஏதும் தெரியுது’ என்று யோசித்தவள்,’ம்ஹும் எதுவும் தெரியாது,  எப்பவும் போல தான் இருக்கு வீட்டில் கண்ணாடி பாத்துட்டு தானே கிளம்பினேன்’ என்று நினைத்துக் கொண்டாள்.

      பின்பு அவளது வேலையில் கவனம் செலுத்த,  சற்று நேரத்திலேயே மீண்டும் ராதா வந்து அவள் அருகில் அமர்ந்தாள்.

      இவளோ அவளைப் பார்த்து “என்ன ராது”என்று கேட்டாள்.

      “அவளோ இல்ல உன்ன பக்கத்துல வச்சு பார்த்தாலும் பளிச் ன்னு தெரிஞ்சுச்சா, தூரத்தில் வைத்து பார்த்தால் உன் முகம் அப்படியே பிரைட்டா தெரியுது., அதுதான் எனக்கு தெரியாம என்ன ஃபேஸ் க்ரீம் யூஸ் பண்ணுற ன்னு கேட்க வந்தேன்”, என்று கேட்டாள்.

     “ஒரு ஐஸ்கிரீமும் இல்லை, கொஞ்சூண்டு தயிர் எடுத்தேன், அதுல கொஞ்சூண்டு கடலைமாவு போட்டேன், அப்புறம் ஒரு துளி மஞ்சள் தூள் போட்டேன், எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணுனேன்,   அப்புறம் முகத்தில் அப்ளை பண்ணிட்டேன்,  சமையல் முடிக்கிற வரைக்கும் அதை டிரை ஆக விட்டேன்,  அப்புறமா கழுவினேனா,  அதுதான் முகம் பளிச்சுன்னு இருக்கா இருக்கும்”,என்று சொன்னாள்.

“இல்லையே, இது இன்னும் பளிச்சுன்னு தெரியுதே”, என்றாள்.

      “நம்பு டி”, என்றவள், அவள் முகத்தை பார்க்க, ராதாவோ இவளையே பார்த்த படி அமர்ந்திருந்தாள்,

     கடுப்பான யாழினியோ, “பல்பு பீஸ் ஆகிருச்சி,  அதுதான் புது பல்ப் மாட்டிட்டு வந்தேன்,  அதான் முகம் பளிச்சுன்னு தெரியுது”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்,

     ராதாவோ யோசனையோடு இவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்,

Advertisement