Advertisement

“சரி சரி” என்று சொல்லிவிட்டு அங்கு சற்று தள்ளி நின்ற மேல் அதிகாரிகளிடம் போய் சொல்வதற்காக சென்றனர்.

அருகில் இருந்த போலீஸ்காரர் “வண்டி மூவ் பண்ணிரக்கூடாதுமா, சார் கிட்ட கேட்க போய் இருக்காங்க, கேட்டுட்டு வந்ததுக்கப்புறம் தான் நீங்க போகணும்”., என்று சொன்னார்.

ராதாவோ ‘இன்னைக்கு பாத்தா லைசென்ஸ் எடுக்காம வருவேன்’ என்று புலம்பி கொண்டிருக்க.,

   “ஏன் ராது பொலம்புற, உன் வீட்டுக்காருக்கு போன் போடு, உன் லைசென்ஸ் எங்க இருக்குன்னு சொல்லு, ஒரு போட்டோ எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்ப சொல்லு, முடிஞ்சு போச்சு” என்று சொன்னாள்.

“வாய் மட்டும் இங்க இருந்து அங்க வர பேசு, என் வீட்டுக்காரர் இன்னும் வீட்டுக்கு வந்து இருக்க மாட்டாரு, விடு நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லும் போதே அங்கிருந்து சென்று உயர் அதிகாரியிடம் பேசிவிட்டு போலீஸ் திரும்பி கொண்டிருந்தது.

அருகில் இருந்த போலீஸ்காரர் தான் “சார் என்ன சொன்னாங்க” என்று கேட்டார்.

“சார் எதும் நல்ல மூட்ல இருந்திருப்பார் போல, அவங்க ஐடி கார்டு போன் நம்பர் எல்லாம் நோட் பண்ணிட்டு அனுப்பி விடுங்க அப்படின்னு சொல்லிட்டாங்க”, என்று பேசிக் கொண்டிருந்தனர்.

இதை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இருவரின் ஐடி கார்டையும் கேட்டனர்.

இருவரும் ஐடி கார்டு எடுத்து நீட்ட அவர்களுடைய ஐடி கார்டை தன்னுடைய செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டு அவர்களிடம் மற்ற தகவல்களையும் வாங்கிக் கொண்டு “போங்க” என்று அனுப்பினர்.

காரை மெதுவாக நகத்தினர் அப்போது தூரத்தில் இருந்து பேசிக் கொண்டிருந்த ஒரு வளர்ந்த போலீஸ்காரரும் அவரைச் சுற்றி நிறைய போலீசார்களும் இருப்பது தெரிந்தது.

காரின் ஜன்னல் கண்ணாடிகளை ஏற்றிய பிறகு, இவளோ “இந்த லேடி அங்க ஒரு ஆள் நிக்கிறாரே., வளர்ந்து கெட்டவன் மாதிரி, அந்த ஆள்ட்ட தானே போய் கேட்டுட்டு வந்துச்சு” என்று கேட்டாள்.

“பார்த்துடி கார்ல மைக் செட் பண்ணி வச்சுட்டு போயிருக்க போறாங்க புடிச்சு உள்ள வெச்சிர போறாங்க”., என்றாள்.

“ஆமாமா மைக் செட் பண்றாங்க, இந்த லேடி போய் கேட்டுச்சு, வந்து ஏதோ காரணம் சொல்லுது, அப்ப நல்ல மூடுல இருக்கும்போதே அட்ரஸ் வாங்கிட்டு அனுப்பு, ஐடி கார்டு நோட் பண்ணிட்டு அனுப்புன்னு சொல்லிவிட்டு இருக்காருன்னு சொல்லி போட்டோ எடுத்துச்சே, இந்த ஆளு கெட்ட மூடுல இருந்தா என்ன எல்லாம் கேட்பாரு” என்று கேட்டாள்.

“நம்ம நல்ல நேரத்துக்கு அவர் நல்ல மூடுல இருந்திருக்காரு, நீ வாய மூடிட்டு வா” என்றாள்.

இவளோ காரின் கண்ணாடி வழியாக குனிந்து அந்த போலீஸ் கூட்டத்தையே பார்த்துக் கொண்டு வர, “ஏன் உனக்கு பக்கத்துல போய் அந்த போலீஸ்காரரை பார்த்துட்டு வரணுமா, எப்படி நல்ல மூடுல இருக்காருன்னு, வண்டிய வேணா திருப்பவா”., என்று கேட்டாள்.

“ஏண்டி ராது உனக்கு இந்த கொலவெறி, நான் என்ன பாவம் பண்ணுனேன், வண்டிய நேரா விடு, போய் திட்டு வாங்குறதுக்கு எல்லாம் நான் தயாரா இல்லை சாமி”., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் காலை லேசாக நகட்ட முகம் மாறுவதை கண்ட ராதா தான்., “வலிக்குதா என்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசினாலும், உனக்கு உள்ள வலி இருக்கு அப்படித்தானே” என்று கேட்டாள்.

“வலிக்காத மாதிரி தான் இருந்துச்சு, ஆனா இப்ப லேசா வலிக்குது”., என்றாள்.

“நேரம் ஆக ஆக வலி இருக்கும் தானே” என்று சொன்னவள்.

“மருந்து போட்டுட்டு தூங்கு” என்று சொல்ல “சரி” என்று சொல்லிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

அவளை வீட்டில் விட்டுவிட்டு ராதா அவள் வீட்டிற்கு கிளம்பினாள்.

“உனக்கு ஏதாவது புட் வாங்கிட்டு வர சொல்லட்டா., என் வீட்டுக்காரர் ட்ட”., என்று கேட்டாள்.

” எனக்கு நானே ஆர்டர் போட்டுக்குவேன், உன் புருஷன் சர்வீஸ் தேவையில்ல” என்று சொன்னாள்.

“அது என்னடி எப்ப பாத்தாலும் என் புருஷன் ட்ட வம்பு பண்ணிட்டு இருக்க” என்று கேட்டாள்.

“வாயை மூடிட்டு போயிடு நீ ஃப்ரெண்டா ஆயிட்ட ன்னு உன்கிட்ட அமைதியா பேசிட்டு இருக்கேன், இல்ல உன் புருஷன் கிட்ட வம்பிலுத்தா, என்னிடம் பேச கூடாதுன்னு சொன்னா போ ” என்றாள்.

“வீட்டுக்கு கூட்டிட்டு வருது வரைக்கும் வா வாவாம்., வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் போடியாம், போடி ரெஸ்ட் எடுக்க பாரு., நாளைக்கு காலைல பாக்கலாம்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

“அடியே ராது அப்படியே எங்க அம்மா ட்ட இன்பார்ம் பண்ணதை இன்னொரு தடவை கன்பார்ம் பண்ணிக்கோ”, என்று சொன்னாள்.

“இருந்தாலும் உனக்கு ஓவர் திமிர் தான், இரு காலைல வந்து பேசுகிறேன்” என்று சொல்லிவிட்டு ராதா சென்றாள்.

இவள் கதவை சாத்திவிட்டு கதவில் சாய்ந்து நின்றவள், எதையோ யோசித்த படி பெருமூச்சு விட்டவள். தனக்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்ய துவங்கியிருந்தாள்.

ஆர்டர் செய்த உணவுகள் வருவதற்கு முன் ஸ்டிக் உதவியோடு தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்தாள்.

வந்த உணவை உண்டு விட்டு தன் அறைக்கு சென்று படுத்தவளுக்கு ஏதேதோ நினைவுகள் வந்து கண்ணாமூச்சி ஆடினாலும், எப்போதும் போல கண்ணை மூடியதும் பழைய நினைவுகள் சிறிது நேரம் ஆட்டி படைக்க, சற்று நேரத்தில் அமைதியாக கண் மூடி உறங்க துவங்கியிருந்தாள்.

மறுநாள் காலையில் எழுந்தவளுக்கு காலை நீட்டி பார்க்க லேசாக வலித்தாலும் தாங்கிக் கொண்டு தன் காலை வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, குளித்து உடையை மாற்றியவள்.

பாலை எடுத்து காய்ச்ச வைத்து விட்டு வந்து சோபாவில் அமர்ந்தவளுக்கு ஏனோ மனது சந்தோஷமாக உணர்வது போல தோன்றியது,

சற்று நேரத்தில் எழுந்து சென்று காஃபி கலக்கி எடுத்து வந்தவள், சிரித்துக் கொண்டே காபியே அருந்தினாள், எப்போதும் போல அலெக்ஸா உதவியோடு பாடல்களை ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தாள்.

நேற்று இரவே அம்மாவும் அப்பாவும் ஊரிலிருந்து கிளம்பியது தெரியும். எப்படியும் காலை வந்து விடுவார்கள் அவர்களுக்கும் சேர்த்தே உணவை தயாரிக்கலாம் என்று நினைத்துக் கொண்டே உணவை தயார் செய்ய துவங்கியிருந்தாள்.

பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அவளுக்கு பிடித்த பாடல் வந்தவுடன் பாடிக்கொண்டே ஆடிக் கொண்டிருந்தாள்.

இடது காலை அதிகமாக ஊண்றி விடாமல் கையில் ஸ்டிக்கை வைத்துக்கொண்டு ஆடிக் கொண்டிருக்கும் போது வீட்டின் அழைப்புமணி அழைத்தது. யாராக இருக்கும் என்று யோசனையோடு தான் வாசலுக்கு ஒற்றை காலில் ஆடிக்கொண்டே வந்து கதவை திறந்தாள்.

காலை வேளையிலே ராதா நிற்பதை பார்த்தவள். “இந்த நேரத்துல எங்க” என்று பார்த்தோடு சேர்ந்து சத்தமாக கேட்டாள்.

அவளோ “அடியே ஒத்த கால வச்சிட்டு உனக்கு டான்ஸ் கேக்குதா., மறுபடியும் பல்டி அடித்து அடுத்த காலையும் சொதப்பி வச்சிறாத” என்று சொன்னாள்.

“ஆமா காலையிலேயே என்ன இந்த பக்கம்” என்று கேட்டாள்.

“உங்க அம்மா அப்பா வராங்க இல்ல, அதுக்கு தான்”என்றாள்.

” நீ அவ்வளவு மரியாதை தெரிஞ்சவளா, மாமியார் மாமனார பாக்குறதுக்கு வந்துருக்க” என்று கேட்டாள்.

“உங்க அண்ணனை” என்று தொடங்குவதற்கு முன்,

“அவன அண்ணன் சொல்லாத, எனக்கு தெரியாமல் லவ் பண்ணவங்க தானடி நீங்க ரெண்டு பேரும்” என்று சொன்னாள்.

“அடிப்பாவி உனக்கு கூட பிறந்தது ஒத்த தம்பி, அவன நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது வயசு வித்தியாசம் வேற அதிகம், அதனால உனக்கே நாத்தனாரா வரணும்னு தான் உங்க அண்ணன கல்யாணம் பண்ணது ஒரு குத்தமா” என்று கேட்டாள்.

அவளோ “ஆமாடி பெரிய குத்தம்”என்றாள்.

“அப்போ நான் உனக்கு அண்ணியா வந்தது பிடிக்கல இல்ல, அண்ணின்னு சொல்லாத” என்றாள்.

” நான் உன்னை அண்ணி ன்னு கூப்பிடவே மாட்டேன், ராதா ராதா ராதா” என்று பெயரை அழுத்தி சொல்லிக்கொண்டே ஆடிக் கொண்டிருந்தவளிடம்

“அலெக்சாவ நிப்பாட்டி போடு” என்று சத்தமாக சொன்னாள்.

அதே நேரம் இவளும் அலெக்சாவிற்கு உத்தரவு கொடுக்க பாடல் ஒலிப்பரப்பு நிறுத்தப்பட்டது., ஆனாலும் இவள் பாடுவதை நிறுத்தவில்லை.

யாழினியின் பெரியம்மா மகனை, அவளுடைய ஒன்றுவிட்ட அண்ணனை தான் ராதா திருமணம் செய்திருந்தாள்.

ஆனால் இருவரும் விரும்பியது வேறு வகை, இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்ய, இவளுடைய அண்ணன் என்று தெரிந்த போது சற்று தள்ளியே இருந்தாலும், இருவருக்கும் பிடித்து போக வேறு வழி இன்றி பெற்றவர்கள் பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது,

அவர்கள் இருவரும் விரும்பியது கடைசி வரை இவளுக்கு தெரியாமல் திருமணம் பேசும்போது தான் தெரியும் என்றதால் யாழினிக்கு கோபம்., “அப்போ நானும் இதே ஆபீஸ்ல தான் ஒர்க் பண்றேன், எனக்கு சொல்லாம எப்படி நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணீங்க” என்று கேட்டு அவர்களுடன் இப்போது வரை சண்டை வளர்த்துக் கொண்டிருப்பவள்,

அதனாலயே ராதாவை அண்ணி என்று கூப்பிடாமல் பேர் சொல்லியே கூப்பிட்டுக் கொண்டிருப்பாள்.

அவள் அண்ணனையும் இவளிடம் பேசும்போது உன்னுடைய வீட்டுக்காரர், உன் புருஷன் என்று சொல்வாளே ஒழிய, அண்ணன் என்று ஒரு நாளும் சொல்ல மாட்டாள்.

இவர்கள் திருமணத்திற்கு பிறகு இதெல்லாம்., அதற்கு முன்பு அண்ணன் என்ற அழைப்பு தான், இப்போது தான் அவனை அப்படி அழைப்பதில்லை. ராதாவின் கணவன் நந்தன், யாழினியின் அண்ணன்.

“ஆமா காலங்காத்தாலே உன் புருஷன் உன்னை இங்க விட்டுட்டு எங்கடி போனாரு”., என்று கேட்டாள்.

அவளோ “அவங்க சித்தியும் சித்தப்பாவும் வராங்களாம், அவர்களை கூப்பிட போயிருக்காரு” என்று சொன்னாள்.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று தன் தோளில் நாடியை இடித்து கொண்டு சென்றாள்.,

அவளும் “பார்த்துடி உழுந்துற போற” என்று சொன்னாள்.

மீண்டும் தான் விட்ட பாடலை பாடத் துவங்கியவள், இடது காலை அதிகமாக ஊண்றாமல் டான்ஸ் ஆட தொடங்கினாள்,

அடுப்பில் இட்லி வெந்து கொண்டிருக்க ஒரு பக்கம் சாம்பார் தயாராகிக் கொண்டிருப்பதை பார்த்த ராதா தான், சட்னி அரைக்க துவங்கினாள்.

அவளோ “என்ன என் வீட்ல வந்து வேலையெல்லாம் செய்ற”, என்றாள்.

“என்ன பண்ண எனக்கு சின்ன மாமியாரும் சின்ன மாமனாரும் வராங்க இல்ல அதனால செய்றேன்”, என்று சொன்னாள்.

“அப்படி ஒன்னும் நீ சலிச்சிட்டு செய்ய வேண்டாமா,” என்று சொன்னாள்.

அவளோ “உனக்காக இங்க யாரும் செய்யலடி, வேலையை பாரு” என்று சொல்லிக்கொண்டு வாயடித்துக் கொண்டே வேலைகள் நடந்தாலும் இவள் மட்டும் பாடுவதை நிறுத்தவில்லை.

எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌
ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌
ரக்கிட்ட‌…..ஊ

Advertisement