Advertisement

“அதான் அவரை எனக்கு மட்டும் டெடியா மாத்த போட்டேன் பக்கா பிளானை. அவர் ரெகுலரா யூஸ் செஞ்ச ஹேர் ஆயில் அப்புறம் ஷாம்பூ எல்லாத்தையும் வாரம் ஒருமுறை என் இஷ்டத்துக்கு சேஞ் பண்ணி வச்சேன். தோணும் போது எல்லாம் வம்புக்கு இழுத்து கடைசியா நான் கண்ல தண்ணி விட்டேன். சமாதானம் ஆகும் போதெல்லாம், நல்லா நாட்டுக் கோழியா சமச்சி போட்டு, சில்லி சிக்கனா வறுத்து கொடுத்தேன். பலன் கை மேல ஒரே வருசத்துல கிடைச்சது. லேசா தொப்பையும், முன் மண்டை வழுக்கையும், ஜன்னலோட, கதவையும் இழுத்து பூட்டிருச்சி. காலேஜ் படிச்ச அவங்க அக்கா பொண்ணு  ‘அங்கிள்னு’ கூப்பிட்டப்ப எனக்கு வந்துச்சே ஒரு ஆனந்தம் அதையெல்லாம் வார்த்தையில வடிக்க முடியாதுடி முடியாது.’’ என்றவள் நன்றாக சாய்ந்து அமர்ந்தாள். 

“அடிப்பாவி…! என்ன ஒரு சதி திட்டம். இரு இரு அடுத்த முறை உங்க வீட்டுக்காரரை பார்க்கும் போது வத்தி வைக்குறேன். ஆனாலும் சொந்த புருஷரை அங்கிள் ஆக்கி பாக்க ஆசைப்பட்ட ஒரே பொண்ணு நீயா தாண்டி இருப்ப.’’ என்ற மல்லி பொங்கி சிரிக்க, வேணியின் சிரிப்பொலியும் அவளோடு இணைந்தது. 

“அதெல்லாம் என் டிசைன். உனக்கு புரியாது. நீயும் வேணா உன் விருமாண்டி வீட்டுக்காரரை சீக்கிரமா ரசகுண்டா மாத்திரு. ஒருவேளை அதுக்கு அப்புறமாச்சும் விறைப்பு குறையுதா பார்ப்போம்.’’ என்றாள் மதி. 

தன் கணவன் குறித்த பேச்சில் மல்லியின் முகத்தில் இருந்த சிரிப்பு துணி கொண்டு துடைத்தார் போல அப்படியே மறைந்தது. வேணிக்கு மல்லியை இதற்கு முன் அறிமுகம் இல்லையென்றாலும், இத்தனை நேரம் குறும்பாய் மலர்ந்திருந்த முகம் வேதனையில் சுருங்குவதை அவளால் அனுமதிக்க முடியவில்லை. 

ஆக பேச்சை மாற்றும் விதமாய், “சாப்பிடலாமா…? எனக்கு பசிக்குது.’’ என்றாள். உடனே மதி, “ஆமா உங்ககிட்ட பேசின பேச்சுல… என் தொப்பையே லேசா வத்தின மாதிரி இருக்கு. சாப்பிட்டு ஏத்துவோம்.’’ என்றவன் தன் தோள் பையிலிருந்த உணவு டப்பாவை வெளியே எடுத்தாள். 

மூவரும் கை கழுவி வந்து, உணவினை உண்டு முடித்ததும், மல்லி வேணியை பார்த்து, “தல யாருன்னு நீ எனக்கு இன்ட்ரோ கொடுக்கவே இல்லையே மதி. ஆமா சிஸ்டர் யாரு…?’’ என்றாள் மதியிடம். 

“இவ பேரு மகிழ் வேணி. என் கூட கார்ப்ரேசன்ல தான் இவளும் வொர்க் பண்றா. சரியான மூளைக்காரிடி. ஆபிஸ் வேலை மொத கொண்டு பார்ப்பா. எங்க சேலரில இருந்து, இன்கிரிமென்ட் வரை எல்லாம் போட்டது இவ தான்னா பார்த்துக்கோ.’’ என்றாள் மதி பெருமையாய். 

உடனே மல்லி ‘அப்படியா…?’ என்று ஆச்சர்யமாய் பார்க்க, கூச்ச உணர்வு உந்த வேணி மல்லியிடம், “பெருசா எதுவும் செய்யல சிஸ்டர். எல்லாம் சென்னையில கயிடன்ஸ் வாங்கி எல்லாரும் சேர்ந்து தான் செஞ்சோம்.’’ என்றாள் சமாளிப்பாய். 

“என்ன பார்மலா சிஸ்டர்… பிளாஸ்டர்னு கூப்பிட்டுகிட்டு. அதான் மத்தவங்க எல்லாரும் நம்மளை அப்படித் தானே கூப்பிடுறாங்க. என் பேரு மல்லிகா. நீங்க என்னை மல்லி, மல்ஸ் எப்படி வேணா கூப்பிடுங்க. அதே மாதிரி இனி நீங்க எனக்கு மகிழ். டீல் ஓகே வா…? பிரண்ட்ஸ்…’’ என மல்லி கை நீட்ட அதை பற்றி குலுக்கியவள், “கண்டிப்பா மல்ஸ்…!’’ என்றாள் நட்பின் புன்னகையோடு. 

மகிழ் சட்டென நினைவு கொண்டவளாய், “மதி ரேணு வரேன்னு சொன்னாளே. மறுபடி போன் போட்டு கிளம்பிட்டாளான்னு கேட்டியா…?’’ என்றாள். 

மதி உடனே, “கேட்டாச்சு கேட்டாச்சு. நாளைக்கு காலைல அவளும் அவ சொந்தக்காரி யாரோ சங்கரியாம். அவளோட சரியா பத்து மணிக்கு ஓமந்தூரார் வந்துடுறேன்னு சொல்லிட்டா. நைட்டு எட்டு மணிக்கு தூத்துக்குடில பஸ் ஏறிட்டா. அதெல்லாம் சரியா வந்திடுவா.’’ என சொல்லி முடிக்க, ‘யார் இந்த புது பீஸ்…’ என்பதை போல மல்லி முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு இருவரையும் பார்த்திருந்தாள்.

மகிழ் மல்லிக்கு பதில் சொல்லும் விதமாய், “ரேணுவும் எங்க கூட கார்ப்ரேசன்ல வொர்க் பண்ற ஸ்டாப் தான்.’’ என்றாள். உடனே மல்லி குறுஞ் சிரிப்போடு, “அப்ப சேலம் கார்ப்ரேசன்ல இருந்து ஒரு கேங்கா தான் கிளம்பியிருக்கீங்க போல.’’ என்றாள். 

“பின்ன இல்லையா…! இந்த முறை நாம சேர்ந்து கும்தலக்கா கும்மாவா பாட்டு பாடுறோம்.’’ என்றாள் மதி. உடனே பெரிதாய் சிரித்த மல்லி, “பாடுறதோட நிப்பாட்டு தெய்வமே… ஆடி கீடி காலேஜ் பில்டிங்கை டேமேஜ் செஞ்சிறாதா.’’ என்றாள். 

“போடி….! இவ பெரிய ஒல்லி பெல்லி இலியானா. என்னை விட இடுப்புல ஒரு டயர் கம்மியா இருக்கு. அதுக்கு இவ்ளோ பில்டப்பா.’’ என்றாள் மதி.  

“பெர்த் மேல ஏறிப்படுன்னு என்கிட்ட தான கேட்டு வருவ. அப்ப பதில் சொல்றேன்… நான் இலியானாவா இல்ல இட்லி குண்டானான்னு.’’ என்றவள் மதியுடன் ஒரு சொற் போருக்கு தயாராக, மகிழ் தான் இருவருக்கும் இடையில், வெள்ளை கொடி காட்டி பேச்சை வேறு திசைக்கு மாற்றி வைத்தாள். 

ஒரு வழியாய் மூவரும் பேசி பேசியே சோர்ந்து உறங்க தயாராக, அந்த நேரம் மல்லி வேணியிடம், “நீங்க எந்த காலேஜ்ல டிப்ளோமா முடிச்சீங்க…?’’ என்றாள். வேணி குரலில் பெருமித்ததுடன், “மதுரை’’ என்றாள். 

“சூப்பர்… அப்புறம் இன்னும் யாரோ ஒருத்தரை சொன்னீங்க இல்ல… ரேணுகா… அவங்க…?’’ என்றாள். 

“ரேணுவும்… அவ கூட வர பொண்ணும் எம்.எம்.சி ல டிப்ளோமா முடிச்சவங்க.’’ என்றாள் மகிழ். உடனே மதி பெரிதாய் விரிந்த விழிகளுடன், “வாவ்…! அப்ப சமூகம் பெரிய இடம்னு சொல்லுங்க. மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்… பேரே கெத்து தான் இல்ல. நம்ம நர்சிங் ப்ரோபசனோட மதர் இன்ஸ்டியூட்.’’ என்றாள் ஆர்வத்துடன். 

உடனே வேணி, “உங்களுக்கு எம்.எம்.சி அவ்ளோ பிடிக்கும்னா… நீங்க பேசாம இப்போ போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி அந்த காலேஜ் சூஸ் செஞ்சி படிக்கலாம் இல்லையா…?’’ என கேட்டாள். 

தோழிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கீழ் படுக்கை இருக்கையில் சற்றே சாய்ந்ந்திருந்த மதி, இரயிலின் சுக தாலாட்டில் கண் அயர்ந்து இருந்தாள். மேல் படுக்கையில் எதிர் எதிர்புறம் படுத்திருந்த இருவரும் தாழ்ந்த குரலில் உரையாடிக் கொண்டிருந்தனர்.

உடனே மல்லியின் முகம் இயலாமையில் சுருங்கியது. “எங்க வீட்ல வேற ஊருல தங்கி எல்லாம் படிக்க அலோ செய்ய மாட்டங்க மகிழ். இப்ப கூட எங்க மாமா லெக்சர் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக தான் என்னை மேல படிக்க வைக்கவே எங்க வீட்ல சம்மதிச்சி இருக்காங்க. அதுவும் நான் தனியா சென்னைக்கு ட்ராவல் செய்றது இது தான் பஸ்ட் டைம். படிக்கிறப்போ நடந்த கவுன்சிலிங்க்கு அப்பா கூட வருவார். அதுக்கு அப்புறம் போஸ்டிங் போட்டப்ப நடந்த கவுன்சிலிங்ல எல்லாம் வீட்டுக்காரர் கூட வருவார். பிரண்ட்ஸ் நிறைய பேர் ஒண்ணா சேர்ந்து போறோம்னு மதி தான் எங்க அம்மாகிட்ட போன்ல பேசி கன்வின்ஸ் செஞ்சா. இப்ப கூட சேலம் கிடைச்சா மட்டும் படின்னு சொல்லி தான் அனுப்பியிருக்காங்க.’’ என்றாள் வருத்தம் நிறைந்த குரலில். 

இதற்கு என்ன சமாதானம் சொல்வது என வேணிக்கு தெரியவில்லை. ஆனாலும் மல்லியை உற்சாகப்படுத்த, “நீங்க ஏன் மல்ஸ் பீல் பண்றீங்க. நாம அடிக்கப் போற கூத்துல சேலம் காலேஜ்… சென்னை காலேஜா மாறிடும். கண்டிப்பா உங்களுக்கு சேலம் காலேஜ்ல சீட் கிடைக்கும்.’’ என்றாள் நம்பிக்கையோடு. 

“எனக்கு என்ன எனக்கு…? நமக்குன்னு சொல்லுங்க மகிழ்.’’ என்றவள் காற்றில் ‘ஹை பை’ கொடுக்க, மகிழ் அதை திருப்பி கொடுத்தாள். அடுத்த சில நிமிடங்களில் மல்லியும் இரயிலின் சுக தாலாட்டில் உறங்கியிருந்தாள். 

உறக்கம் கண்களை தழுவாத மகிழ், தான் படுத்திருந்த மேல் இருக்கையில் இருந்து இறங்கி சென்று கழிவறையை பயன்படுத்திவிட்டு திரும்பி வந்தாள். இரயிலின் கதவோரம் வீசிய காற்று அவள் சிகையை கலைத்து விளையாடியது. 

வேகமாய் பாய்ந்த இரயிலின் வேகத்திற்கு மின் கம்பங்கள், ஒளியுடன் பின் நகர, மகிழ் அந்த ஏகாந்த வெளியில் தன் பார்வையை பதித்தாள். பொதுவாய் மேற் கல்வி பயிலும் அனைவருக்கும் அதற்கு ஒரு சரியான நோக்கம் இருக்கும். 

ஆசிரியப் பணியில் விருப்பம், இரவு பணியை தவிர்க்க, அறிவை வளர்க்க… இப்படி ஆயிரம் காரணம் இருக்கும். செவிலியர்கள் மேற்கல்வியை தேர்ந்தெடுக்க. ஆனால் மகிழ் மேற்கல்வி பயில விண்ணப்பிக்க காரணம் ஒன்று தான். 

அவளை அனுதினமும் விடாது துரத்தும் நினைவுகளிடமிருந்து தப்பிக்க, அவள் தேர்ந்தெடுத்த ஒரு வழி தான் இந்த மேற்கல்வி. மகிழ் என்ற அவள் பெயரில் இருக்கும் மகிழ்ச்சி அவள் வாழ்வில் கிஞ்சித்தும் இல்லை. 

பழைய நினைவுகள் பெரும் சுனாமியாய் மேலெழுந்து அவளை சுருட்ட முயல, அதே நேரம் காற்றில் கைகோர்த்து விளையாடிக் கொண்டிருந்த அவளின் துப்பட்டா காற்றுக் காதலனோடு கை கோர்த்து விடை பெற, “அச்சோ…” என அலறியவள் அதை பிடிக்க கரம் நீட்ட, அதுவோ அவளின் எதிர்காலத்தை நோக்கி பறந்திருந்தது. 

அதே நேரம், கடந்து போகும் ரயிலுக்காய் போடப்பட்டிருந்த தடுப்பில் சாலையின் மறுபுறம் எரிச்சலோடு காத்திருந்த அவன் முகத்தில் வந்து மோதியது அந்த நீல நிற மேலங்கி. 

பந்தமாகலாம். 

 

Advertisement