Advertisement

பந்தம் – 1 

“கூ…” வென பெருங் குரல் கொடுத்தபடி அந்த பெருநகர புகைவண்டி நிலையத்திற்குள் நுழைந்தது அந்த தொடர்வண்டி. சுற்றிலும் மனிதக் கூட்டம். பயணிப்பவர்களை விட, வழியனுப்ப வந்தவர்கள், சுமை கூலிகள், தின்பண்டம் விற்பவர்கள் என மனித தலைகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது அந்த இடம்.

“என்ன இன்னும் உன் பிரண்டை காணோம்.’’ என தலை முதல் கால் வரை முகமதியர் முறைப்படி, பர்தா அணிந்திருந்த மதினாவை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் மகிழ்வேணி. தானும் கழுத்தை வளைத்து தோழி வருகிறாளா என எட்டிப் பார்த்தாள் மதினா.  

வந்து நின்ற புகைவண்டி தலை நகரை நோக்கி கிளம்ப இன்னும் சில நொடிகளே இருக்க, அவள் வருவாளோ, மாட்டாளோ என்ற பதட்டம் இருவருக்கும் தொற்றியது. மகிழ்வேணி இருவரின் உடமைகளையும் எடுத்துக் கொண்டு தங்கள் ரயில் பெட்டியை நோக்கி நடந்தாள்.

மதினா மேலும் சில நொடிகள் நின்று பார்த்துவிட்டு, ‘சென்னை சென்ட்ரல் வரை செல்லும் கோயம்பத்தூர் எக்ஸ்ப்ரஸ் இன்னும் சில நொடிகளில் பிளாட் பார்ம் நம்பர் மூன்றிலிருந்து கிளம்ப தயாராக இருக்கிறது .’ என்ற அறிவிப்பு ஒலித்ததும், தானும் ரயிலில் ஏறியவள் வாயிலில் நின்று, எங்கேனும் மல்லியின் முகம் தெரிகிறதா என்று தேடிக் கொண்டிருந்தாள். 

இதோ ரயில் இப்போது புறப்பபட்டு விடும் என்ற நிமிடமொன்றில் சேலம் ரயில் நிலையத்தின் மூன்றாம் எண் நடைமேடையில் காற்றை கிழித்துக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தாள் மல்லி. 

அவளை கண்டதும், உள்ளுக்குள் ஒரு விடுதலை உணர்வு தோன்றினாலும், இதுவரை காத்திருந்த தவிப்பு மதினாவின் முக பாவத்தில் கோபமாய் வெளிப்பட துவங்கியது. இவள் இரயிலின் முதல் படியில் ஏறிய அடுத்த நொடி, அந்த பெரிய புகைவண்டி மெதுவாய் ஊர்ந்து தன் பயணத்தை தொடங்கியது. 

அதுவரை மனைவியின் பின்னே ஓடி வந்து கொண்டிருந்த சுந்தரேசன் அவளின் தோள் பையை அவளிடம் கொடுத்துவிட்டு, அதே இடத்தில் நின்று கொண்டான். சில நொடிகளில் ரயில் வேகம் பிடிக்க, அடுத்த நொடி திரும்பியும் பார்க்காமல் சுந்தரேசன் திரும்பி நடந்தான். 

படியில் நின்று கொண்டிருந்த மல்லியோ, தலை நீட்டி, கணவனின் முதுகு கண் பார்வையில் இருந்து மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ரயில் முழு வேகத்தில் இயங்க தொடங்க, நடை பாதை முழுதுமாய் அவள் பார்வையில் இருந்து மறைந்தது.

அதன் பிறகே மல்லி ரயில் பெட்டியின் உள் நுழைந்தாள். அப்போது அவள் முதுகில் ‘சுள்’ என்று ஒரு அடி கொடுத்து தோழியை வரவேற்றாள் மதினா. “ஆ… ஷப்பா… வலிக்குதுடி எரும. எதுக்கு இப்படி சுளீர்ன்னு அடிக்குற…?’’ என்றாள் மல்லி வலி கொடுத்த எரிச்சல் குரலில். 

“பின்ன லேட்டா வந்த உன்ன கொஞ்ச சொல்றியா…? ஏண்டி டிப்ளோமோ படிக்கும் போது தான் கும்தலக்கா கும்மாவா ட்வன்ட்டி டூன்னா சும்மாவான்னு உங்க ரூம் நம்பரை பெரிய பெருமையா  சொல்லிட்டு ரோல்கால் ஆரம்பிச்சி கிளாஸ், வார்டுன்னு எல்லா இடத்துக்கும் லேட்டாவே வருவீங்க. இன்னும் அந்த பழக்கம் உன்னை விட்டு போகலையா. ட்ரைனை கூட கடைசி நேரம் ஓடி வந்து தான் ஏறனுமா…?’’ என்றாள் தானும் குரலில் எரிச்சலை காட்டி. 

தோழி வருவாளோ மாட்டாளோ என்று அத்தனை நேரம் இருந்த அழுத்தம் அவளுக்கு அப்படியான கடுப்பை கொடுத்திருந்தது. ஏனென்றால் மல்லியின் கணவன் குறித்த மதினாவின் மதிப்பீடு அப்படியானது.  

மதினாவின் சினத்தை கொஞ்சமும் மதிக்காமல், தோழியின் தோள் பையை திறந்து அதிலிருந்த ஒரு ஆப்பிளை எடுத்தவள், “கழுவிட்டியா…?’’ என கேட்க, அதற்கு மதினா பதில் கொடுக்காமல் முறைக்க, தோளை அலட்சியமாய் குலுக்கியவள், அதை கடித்துக் கொண்டே அருகிருந்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். 

மல்லியை, வேணி இதற்கு முன் கண்டதில்லை. மதியும் வேணியும் ஒன்றாக சேலம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்களாய் பணிபுரிபவர்கள். தற்சமயம் மூவரும் தங்கள் மேற் கல்வியை தொடர, சென்னையில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக தலை நகரை நோக்கிய பயணத்தில் இருக்கிறார்கள். 

மதியும், மல்லியும் செவிலிய பட்டயப்படிப்பினை ஒரே கல்லூரியில் முடித்த தோழிகள். செவிலிய கல்வியில் ஏட்டு சுரைக்காயான ஏட்டு அறிவை விட, செயற்கல்வி என்று சொல்லப்படுகின்ற செயல்முறை திறனுக்கே மதிப்பு என்பதால், வருங்கால செவிலிய போதகராகும் தகுதி பெற செவிலியர்கள் குறைந்தபட்சம் செவிலிய பட்டயப்படிப்பை முடித்து, இரண்டு ஆண்டுகள் செவிலியாய் பணிபுரிந்து அனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே அவர்களால் மேற்கல்வியை தொடர முடியும். 

அதுவும் அரசின் கல்லூரியில், அரசின் இட ஒதுக்கீட்டில் படிக்க வேண்டும் என்றால், அரசு செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைய வேண்டும். தற்சமயம் பயணத்தில் இருக்கும் மூவரும், ஒப்பந்த பணியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி அதன் பிறகு நிரந்தரம் பெற்று இரண்டு ஆண்டுகள் தற்சமயம் முடிவடைய, இந்த ஆண்டு தங்கள் கல்வி கனவை நோக்கி அடுத்த அடியை வைத்து இருக்கிறார்கள். 

மதினா தோழிக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவள், “ஒரு அஞ்சி நிமிஷம் முன்னாடி வந்தா குறஞ்சா போயிருவ. எரும…! வழக்கம் போல உன்னோட முசுட்டு மாமா உன்னை அனுப்ப மாட்டாரோன்னு பயந்து போயிட்டேன்.’’ என்றவளின் குரலில் அக்கறை மிகுத்திருந்தது. 

“பால் சொசைட்டிக்கு பால் ஊத்த போன இடத்துல கொஞ்சம் நேரமாயிடுச்சு. இப்ப அதுக்கு என்னவாம். அதான் சரியான நேரத்துல வந்து சேர்ந்துட்டோம் இல்ல.’’ என்றவள் பழத்தில் இருந்த விதைகளை ஜன்னல் வழியே வெளியே துப்பிக் கொண்டிருந்தாள். 

“என்ன உன் புருஷன் இன்னும் அப்படியே கஞ்சி போட்டு துவைச்ச காட்டன் சட்ட மாதிரி உங்க கல்யாணத்தப்ப பார்த்த அதே விறைப்புல இருக்காரு. ஒரு மாற்றமும் இல்லடி அந்த மனுசன்கிட்ட.’’ என்றாள் மதினா அங்கலாய்பாய். 

அதற்குள் முழு ஆப்பிளையும் காலி செய்து முடித்திருந்த மல்லி எழுந்து நின்று, “மாற்றம்னா நீ எதை சொல்ற. கல்யாணத்துக்கு முன்னாடி நீ குட்டியா பார்பி டால் மாதிரி ‘எம்’ சைஸ்ல இருந்த. உங்க வீட்டுக்காரர் ஜெயம் ரவி மாதிரி வெள்ளையா மொழு மொழுன்னு ஹான்ட்சமா இருந்தாரு. ஆனா இப்ப நீ ‘ட்ரிப்பில் எக்சல்’ சைஸ் தாண்டி வளந்துட்டு இருக்க. போதா குறைக்கு உங்க வீட்டுக்காரரை வெள்ளையா இருக்க குண்டு கல்யான் மாதிரி மாத்தி வச்சி இருக்க. இதான் நீ சொல்ற சேஞ்னா அது எங்க குடும்பத்துக்கு வேண்டவே வேண்டாம் போடி.” என்றவள் வேணியை நோக்கி திரும்பி, “சரிதானே சிஸ்டர்…” என கேட்க, இதுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாத மகிழ்வேணி மையமாக தலையை ஆட்டி வைத்தாள். 

சில மணித்துளிகளுக்கு முன்னால், கண்ணில் ஏதோ ஒரு ஏக்கம் அப்பட்டமாய் பிரதிபலிக்க, நடைமேடையை வலியுடன் பார்த்துக் கொண்டிருந்த பெண் இவள் தான் என்று யார் சொன்னாலும் நம்ப முடியாத அளவிற்கு தற்சமயம் அவள் கண்களில் குறும்பு கூத்தாடிக் கொண்டிருந்தது. 

“வெள்ளந்தி குணத்தோட வெள்ளை மனசோட இருந்தா உடம்பு அப்படி தான் வைக்கும். அதுக்கு என்ன செய்ய முடியும். ‘எம்’ சைஸ்ல இருக்கனும்னு பக்ரீத்துக்கு போட்ட முழு ஆட்டு உப்பு கண்டத்தை வச்சு வேடிக்கையா பாக்க முடியுமா…? எங்க நாலு  நாத்தனார் முன்னாடி நிக்கும் போது எனக்கு என்னவோ நான் இன்னும் ‘எம்’ சைஸ்ல இருக்க மாதிரி தான் இருக்கு. திஸ் ஈஸ் நாட் தொப்பை. ஏழு வருசமா மாமியார் வீட்ல சாப்பிட்ட ஆட்டு குட்டீஸ்.’’ என்று மதி தன் தொப்பையை வாஞ்சையாய் தடவி கொடுக்க, வேணியும், மல்லியும் அடக்க மாட்டாது சிரித்தனர்.

இருவரையும் பார்த்து உதட்டை சுளித்த மதி, “உங்களுக்கு எல்லாம் விவரம் பத்தாதுடி பக்கீஸ். ஹான்ட்சமா இருக்க பையனை கல்யாணம் செய்றது தப்பில்ல. ஆனா அவனை ஹான்ட்சமாவே மெயின்டைன் பண்றது ரொம்ப தப்பு. அப்படி இருக்க விட்டோம்னு வையி… ஐயம் சிங்கிலு… ரெடி டூ மிங்கிலுன்னு பேஸ் புக்ல ஸ்டேடஸ் போட்டு காலேஜ் மைனாக்கள்கிட்ட கடலை வறுக்க போயிருவாங்க. சதா கண் கொத்தி பாம்பா அவங்களை வாட்ச் செஞ்சிட்டே இருக்க முடியுமா சொல்லு. அதான் கல்யாணம் முடிஞ்சது ஒரே வருசத்துல தொப்பையும் தொந்தியுமா மாத்தி நாம மெத்து மெத்துன்னு சாஞ்சி தூங்க  ஒரு ப்ரீ பெட்டை ரெடி செஞ்சிரனும்.” என்றவள் நம்பியார் போல கைகளை பிசைந்து கொண்டே,  “எப்படி…?’’ என கேட்டாள். 

“செம ஐடியா…’’ என சொல்லி மல்லி சிரிக்க, வேணியோ ‘சூப்பர் போ…’ என வலது கையின் ஆள்காட்டி விரலை கட்டை விரலோடு இணைத்து அபிநயம் பிடித்துக் காட்டினாள். உடனே இருக்கையில் காலை மடக்கி வசமாக அமர்ந்து கொண்ட மதி, கூடியிருக்கும் பக்த கோடிகளுக்கு அருள்வாக்கும் சொல்லும் மட சாமியார் போல தன் அடுத்த சொற்பொழிவை துவங்கினாள். 

“நிஜமா தாண்டி சொல்றேன். நான் கல்யாணம் ஆகி என் மாமியார் வீட்டுக்கு போன புதுசுல… எதிர் வீட்டு பொண்ணு ஒருத்தி எங்க வீட்டுக்காரர் வேலைக்கு கிளம்ப வண்டி எடுத்தா போதும், என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு பாட்டை போட்ட மாதிரி ஜன்னல் வழியா எட்டிப் பார்ப்பா. போதா குறைக்கு இவரு அத்தை பொண்ணுங்க வீட்டுக்கு வரும் போது எல்லாம், மச்சி மச்சின்னு ஓவரா பேசி பேசியே என் கண்ல புகை வர வச்சாளுங்க.” என்றவள் தன் கடந்த காலதிற்குள் நுழைந்திருந்தாள். 

Advertisement