Advertisement

                                                            பவித்(ரா)ரம் – 1

“காக்க காக்க கனகவேல் காக்க..

நோக்க நோக்க நொடியில் நோக்க..”

 என்று பவித்ரா, தன் மனதின் பதற்றத்தையும் பயத்தையும், மறைக்கவும், குறைக்கவும் எல்லாம் வல்ல முருகப் பெருமானின் சஷ்டிக் கவசத்தை, விடாது உச்சரித்துக்கொண்டே ஒரு ஓரமாய் நின்று இருக்க, தன் பார்வையை அவ்வப்போது அவள் மீது பாய்ச்சிக்கொண்டு இருந்தான் பலராமன்.

பவித்ரா, பலராமன் இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடமும், முழுதாய் நான்கு மாதங்களும் முடிவடைந்துவிட்டது. ஆனால் இருவரும் சேர்ந்து வாழ்ந்தது என்பதோ ஒரு பத்து அல்லது பதினைந்து நாட்கள் மட்டுமே.

பலராமனுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டுமே. கோமதி, சத்துணவில் உத்தியோகம். மகன் சம்பாதனைக்கு வரவும் வேலையை விட்டுவிட்டார். பலராமன், பிஇ பட்டதாரி. மாதம் முப்பதாயிரம் சம்பளம். சொந்த வீடும் உண்டு. அம்மாவும் மகனும் சிக்கனமாய் இருந்ததின் பொருட்டு, சீட்டு அது இதென்று போட்டு சேமித்து, இப்போது பக்கத்து வீட்டையும் விலைக்கு வாங்கி இருந்தனர்.

கோமதி எதார்த்தமான பெண்மணி. குடும்பத்தை எப்படி கொண்டுபோனால் முன்னேற்ற பாதையில் செல்ல முடியும் என்பதை நன்கு அறிந்தவர். அதற்காக அவர் சாம தான பேத தண்ட என்று எதையும் கையில் எடுக்கும் குணம் உண்டு.

பலராமன், பார்த்ததும் அழகன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் லட்சணமான முகம். பார்க்க பார்க்க எந்தவொரு பெண்ணுக்கும் பிடிக்கும் முக அமைப்பு. கவர்ந்து ஈர்க்கும் நிறமெல்லாம் இல்லை. மாநிறம் என்றும் சொல்லலாம்.

கடினமான ஆள் எல்லாம் இல்லை. அதற்காக மிக மிக எதார்த்த பேர்வழியும் இல்லை. அவன் உண்டு, அவன் வாழ்வு உண்டு என்று இருக்கும் ஆள். மிக நெருங்கிய நட்புக்களோ, பழக்கமோ எல்லாம் இல்லை. வேலைக்கு செல்லுமிடத்தில் அனைவரிடத்திலும் நன்றாய் பழகுவான். அவ்வளவே.

வீட்டிற்கு வந்தால், அவனது உலகம் தொலைக்காட்சிப்பெட்டி.. பின் உண்டுவிட்டு உறக்கம்.. இதெல்லாம் பவித்ராவை காணும் வரைக்கும்தான்.      

பவித்ரா, அவளின் புகைப்படத்தையும், ஜாதகத்தையும் தரகர் கொண்டு வந்து கோமதியிடம் தான் கொடுத்துவிட்டுப் போனார்.

மகன் வேலை விட்டு வந்ததுமே “அப்பா அம்மா இல்லையாம்.. அவங்க சித்தப்பா வீட்ல தான் இருக்கு.. சொத்து பத்துன்னு ஒண்ணுமில்லை. அவங்க அம்மா நகை ஒரு இருபது பவுன் இருக்கும்போல.. அவங்க சித்தப்பா தான் படிக்க வச்சிருக்கார்.. டிகிரி முடிச்சிருக்கு.. சித்தப்பா புள்ளைங்க எல்லாம் வெளிநாடுல இருக்குறதுனால இந்த புள்ளைய கூட வச்சிருக்காங்க..” என்று விபரம் சொல்லியபடி, அவளின் புகைப்படத்தைக் காட்ட, பலராமன் நொடிப்பொழுது தான் கூர்ந்து பார்த்தான்.

“ஜாதகம் போய் பார்த்துட்டு வந்தேன்.. நல்லாத்தான் இருக்குன்னு ஜோசியர் சொன்னார்..” என்று கோமதி மேற்கொண்டு பேச,

“பேசி முடிங்கம்மா…” என்றுவிட்டான்.

இதுநாள் வரைக்கும் இப்படி உடனே எல்லாம் மகன் சரி என்று எந்தவொரு பெண்ணுக்கும் சொன்னது இல்லை. புகைப்படத்தை பார்ப்பான், பின் அது இதென்று கேள்வி கேட்பான். கடைசியில்

“பாப்போம் ம்மா…” என்று சலிப்பாய் சொல்லிவிடுவான்.

இன்று பட்டென்று பேசி முடி என்று சொல்லவும் “பலராமா?!!” என்று அதிசயமாய் அதிர்ந்து வேறு கோமதி பார்க்க,

“நீங்க சொன்ன விபரம் எல்லாம் சரி.. போட்டோ பார்த்தேன்.. மனசுக்கு திருப்தியா இருக்கு.. கஷ்ட நஷ்டம் உணர்ந்து வளர்ந்த பொண்ணா இருக்கும்.. அதனால நம்மக்கூட நல்லபடியா ஒத்துப்போகும்..” என்று அவன் ஒரு கணக்கு போட்டு பேச,

“அப்படியா சொல்ற..?” என்றார் யோசனையாய் கோமதி.

“ஏன் ம்மா நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று பலராமன் கேட்க,

“கொஞ்சம் யோசிக்கலாம்னு பார்த்தேன்…” என்று இழுக்க,

“இதுல யோசிக்க என்ன இருக்கும்மா?” என்றான்.

“இல்ல ராமா, நமக்கும் சொந்த பந்தமெல்லாம் கம்மி.. உங்கப்பா போனப்பிறகு உங்கப்பா சைட் ஆளுங்க யாரும் நம்மக்கிட்ட ஜாஸ்தி நெருக்கம் காட்டல.. என் பக்கம் சொல்லவே வேண்டாம். எங்கடா பணம் கேட்டு வந்து நின்னுடுவோமொன்னு ஒதுங்கியே நின்னுட்டாங்க…

இவங்க பக்கமும் ஆளுங்க கம்மி போல.. இந்த பொண்ணுக்கு அப்பாவும் இல்லை அம்மாவும் இல்லை.. சித்தப்பா ஒருத்தர் தான்…” என,

“ம்மா… சொந்தக்காரங்க இருந்து என்ன பிரயோஜனம்.. இல்லைன்னாலும் பிரச்சனை கம்மிதான்.. அதனால இதெல்லாம் யோசிக்கவேண்டாம். பேசி பாருங்க முதல்ல… எனக்கு என்னவோ ஓகேவா இருக்கும்னு தோணுது…” என, மகனுக்கு பவித்ராவை பிடித்து இருக்கிறது என்று கோமதிக்கு புரிந்து போனது.

“சரி ராமா…” என்றவர் தரகரிடம் பேச,

அவரோ “பொண்ணோட சித்தப்பாக்கிட்ட நேர்லயே பேசுங்கம்மா….” என்று பவித்ராவின் சித்தப்பா, மனோகரிடம் அழைத்துச் சென்றார்.

கோமதியும், மனோகரும் ஒரு அம்மன் கோவிலில் தான் சந்தித்துப் பேசினர். 

“பவித்ரா என்னோட அண்ணன் பொண்ணுங்க.. நான் வளர்த்தேன்ங்கிறதுக்காக சொல்லல, பொறுப்பா இருப்பா.. ரொம்பவெல்லாம் நான் செல்லம் கொடுத்து வளர்க்கல. குடும்ப பொறுப்பு புரிஞ்சு நடந்துக்கிற மாதிரி தான் வளர்த்திருக்கேன். நான் இருக்கிற வரைக்கும் எல்லாமே நான் செய்வேன்.. என் காலத்துக்கு அப்புறம் என் பசங்க செய்வாங்கன்னு நினைக்க முடியாது. அதனால இப்போ கல்யாணத்துக்கே சிறப்பா எல்லாம் செஞ்சிடுறேன்…” என்று வெளிப்படையாகவே பேச, கோமதிக்கு அவர் பேசியது மிகவும் மனதிற்கு பிடித்து இருந்தது.

சரியோ தவறோ, வெளிப்படையாய் பேசுகிறார்கள். கள்ளம் கபடம் இருக்காது என்று எண்ணினார்.

“எங்களுக்கும் சொந்த பந்தம்னு சொல்லிக்கிற மாதிரி யாருமில்லைங்க.. நல்லது கெட்டதுன்னு கூப்பிட்டா வருவாங்க. அவ்வளோதான். முன்ன நின்னு பொறுப்பா செய்றதுக்கு எல்லாம் யாருமில்லை. என் மகனை நானும் பொறுப்பா தான் வளர்த்திருக்கேன். ஒரு கெட்ட பழக்கமும் இல்லை.. என்ன கொஞ்சம் சிக்கனம் பார்ப்பான். அவனுக்குன்னு வர்ற பொண்ண, நல்லாவே பார்த்துப்பான். அதுக்கு நான் உறுதி தர்றேன். அதுக்கு மேல ரெண்டு பேரும் மனசு ஒத்து வாழ்ந்தா போதும். எனக்கு வேற எதுவும் பெருசா வேணாம்..” என்று அவரும் சுருங்கச் சொல்லிட, மனோகருக்கும் கோமதியின் பேச்சு திருப்தியாய் இருந்தது.

“ரொம்ப சந்தோசம்.. நான் பவித்ரா கிட்ட சொல்றேன்.. நீங்க எப்போ வர்றீங்கன்னு தகவல் சொல்லுங்க…” என்று முடித்துவிட, அடுத்த ஒரு நல்ல நாளிலேயே இதே கோவிலில் வைத்து பெண் பார்க்கும் படலம்.

பலராமன், கோமதியும் அவர்களோடு தரகரும், பவித்ராவும் மனோகரும் மட்டும் தான்.

ஐவர் மட்டுமே.

எளிமையாய் ஒரு சில்க் காட்டன் சேலையில், தலைக்கு சிறிதளவே மல்லிகைப்பூ வைத்து, கைகளில் மெல்லிசை தங்க வளையலோடு, சேலைக்கு ஏற்றாற்போல் அதே வண்ணத்தில் கண்ணாடி வளையலும் அணிந்து, குடை ஜிமிக்கியும், கழுத்தினில் அளவான நெக்லஸ் ஒன்றும் அணிந்து வந்திருந்தாள் பவித்ரா.

பார்க்கவே அம்சமாய் இருந்தாள்.

அதிக உயரமேல்லாம் இல்லை. பலராமனோடு ஒப்பிடுகையில், கொஞ்சம் ஒல்லி, கொஞ்சம் உயரம் கம்மியும் கூட.

சேலை கட்டி வந்திருந்தமையால், பார்க்க பொம்மை போல இருந்தாள்.

‘பொம்மை…’ என்றுதான் நினைத்தான் பலராமன்.

பவித்ரா ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

மனோகர், கோமதியையும் பலராமனையும் அறிமுகம் செய்து வைக்க அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தாள். சிரித்தாளா இல்லையா என்று யோசிப்பதற்குள் மீண்டும் தலைகுனிந்துகொள்ள,

‘இதென்னடா நிமிரவே மாட்டாளா?’ என்று பார்த்தான் பலராமன்.

புகைப்படத்தில் பார்த்ததை விட, இப்போது நேரில் காணவும், அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது அவளை. பேச வேண்டும் போலவும் இருக்க, அம்மாவின் முகத்தினை கேள்வியாய் பார்த்தான்.

“என்ன ராமா?!”  

“அந்த பொண்ணு என்னை பார்த்துச்சானே தெரியலை…” என,

“அதுக்கு?” என்றார்.

“ம்ம்ச்.. கொஞ்சம் பேசி பார்க்கிறேன்…” என, ‘டேய்…’ என்று கோமதி கண்களை விரிக்க,

“என்னங்கம்மா, தம்பி என்ன சொல்றார்..?” என்று மனோகர் கேட்க,

“அது.. அதுங்க… பொண்ணோட ஒருதடவை பேசணுமாம்…” என்று கோமதி சொல்ல, விலுக்கென்று பவித்ரா நிமிர்ந்து பார்த்தாள் பலராமனை.

பலராமன், நேரடியாய் புன்னகை பூக்க, பவித்ராவிற்கு ஒருவித பதற்றம் ஒட்டிக்கொண்டது.

மனோகர் கேள்வியாய் ‘பேசுகிறாயா?’ என்பதுபோல் பவித்ராவைப் பார்க்க, அவளோ ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..?’ என்று பார்க்க,

‘சரி பேசிட்டு வா…’ என்பது போல் தலையை ஆட்டினார் இவர்.

பலராமன் பல வார்த்தைகள் பேச, பவித்ராவோ அதற்கு ஒரே ஒரு வார்த்தையில் பதில் பேச, சரி கூச்ச சுபாவம் போல என்று எண்ணிக்கொண்டான்.

“எனக்கு உன்னோட போட்டோ பார்த்ததுமே பிடிச்சு இருந்தது பவித்ரா.. உனக்கு ஓகே தானே..” என்று அவளின் முடிவை நேரடியாய் கேட்க,

“அ.. அது.. அது வந்து..” என்று திணற, பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு சங்கடப்படுகிறாளோ என்று எண்ணியவன்,

“சரி சரி.. ப்ரீயா விடும்மா…” என்று சொல்லிவிட்டான்.

இதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல், பலராமன் பெரியவர்கள் இருக்கும் இடம் வந்துவிட, பவித்ராவும் வந்துவிட்டாள்.

கோமதி மகனை கேள்வியாய் பார்த்தார். அதுபோலவே மனோகரும்.

பலராமன் சம்மதம் என்று தலையை ஆட்ட, பவித்ராவோ “உங்களோட முடிவுதான் சித்தப்பா…” என்றாள் மெதுவாய் அவரிடம் மட்டும்.

அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதை கவனிக்கவே, அவளின் இதழ் அசைப்பை உன்னிப்பாய் கவனித்தவனுக்கு, பவித்ராவின் பதில் ஒரு சிறிய ஏமாற்றமே.

ஆனால் பவித்ராவின் பதிலில் மிகவும் திருப்தி அடைந்தது போல், மனோகர் “அப்புறம் என்ன.. அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்கலாம் தானே…” என்று பேச, தரகருக்குத் தான் ஏகபோக சந்தோசம்.

கோமதியோ “உங்க வீட்டுக்கு நாங்க வரணும்.. எங்க வீட்டுக்கு நீங்க ஒருநாள் வந்து பார்க்கணும்…” என,

மனோகரோ “இங்க இருந்து பத்து நிமிஷம் தான் ம்மா.. இப்போ கூட வாங்க எல்லாம் போலாம்…” என,

தரகரும் “ஆமாம்மா இன்னிக்கு நாள்.. போய் கை நனைச்சுட்டு வந்துடலாம்…” என, அடுத்து சில நிமிடங்களில் அனைவரும் மனோகரின் வீட்டினில் இருந்தனர்.

வீட்டினைப் பார்த்ததும், அதை பவித்ரா வைத்திருக்கும் விதத்தினை கணித்து, கோமதிக்கு மனதில் பரவாயில்லையே என்ற சந்தோசம்.

வீட்டிற்கு வந்ததுமே, பவித்ரா தான் அனைவருக்கும் வேக வேகமாய் காபி கலக்க, ஏற்கனவே மனோகர் பலகாரம் எல்லாம் வாங்கி வைத்திருக்க, நிமிடத்தில் வாழக்காய் சீவி பஜ்ஜியும் போட்டுவிட்டாள் பவித்ரா.

“பரவாயில்லையே சூட்டிக்கையான பொண்ணாத்தான் இருக்கா…” என்று கோமதி மெச்ச,

“அவளை பொறுப்பா தான் வளர்த்திருக்கேன்…” என்றார் மனோகரும்.

பவித்ரா பட்டும்படாமல், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருக்க,           

பலராமன் “எனக்கு அதிகமா லீவ் எடுக்க முடியாதுங்க.. மிஞ்சி போனா அஞ்சு நாள் லீவ் கொடுப்பாங்க.. அதனால கல்யாணத்தை சிம்பிளா நெருங்கின ஆட்களை மட்டும் வச்சு கோவில்ல கல்யாணம் நடத்திக்கலாம்.. ரிசப்ஷன் வேணும்னா எல்லாரையும் கூப்பிட்டு பண்ணிக்கலாம்…” என,

கோமதியோ “நீங்க உங்களோட பசங்கக்கிட்டயும் கலந்து பேசணும் இல்லையா?” என்றார் மனோகரிடம்.

“கலந்து பேசுறதுக்கு ஒண்ணுமில்லைங்கம்மா.. லீவ் இருக்கான்னு தெரியலைன்னு ஏற்கனவே சொல்லிட்டாங்க.. அதனால எல்லாமே நான் தான் செய்யணும். தம்பி சொல்றதும் சரியா படுது. அப்படியே பண்ணிக்கலாம்…” என்றுவிட,

கோமதிக்கு முதல்முறையாய் “என்னவோ சரியில்லை…” என்றுபட்டது மனதிற்கு.

பலராமனோ “அதுவும் சரிதாங்க.. எங்க பக்கமிருந்து மிஞ்சி போனா ஒரு ஐம்பது அறுபது பேர்தான் வருவாங்க…” என்று அடுத்த பேச்சினை ஆரம்பித்து இருக்க, இப்படியே பேச்சுக்கள் எல்லாம் பலராமனுக்கும், மனோகருக்கும் இடையில் இருக்க, கோமதி மனோகரின் பேச்சினை உன்னிப்பாய் கவனித்துக்கொண்டு இருந்தார்.

அதே நேரம் பவித்ராவின் பாவனைகளை கவனிக்கவும் தவறவில்லை.

அவள் முகத்தில், புது பெண், திருமணம் முடிவாகி இருக்கிறது என்கின்ற சந்தோசத்தை விட, ஒருவித பதற்றம் தான் தெரிந்தது.

“என்னம்மா டென்சனா இருக்கிற மாதிரி இருக்க… சாதாரணமா இரும்மா…” என்று கோமதி பேச,

“அ..!” என்று திகைத்தவள்,

“சரி…” என்று தலையை ஆட்டிக்கொண்டாள்.

“பயந்த சுபாவமா?” என்று மனோகரிடம் , கோமதி கேட்க,

“இல்ல.. புதுசா யாரோடவும் சட்டுன்னு பேசி பழக மாட்டா.. அதுதான்..” என்றவர்,

“பவித்ரா…” என்று சற்றே அழுத்தம் கொடுத்து அழைக்க,

“சித்தப்பா…” என்று சிறிய முணுமுணுப்போடு நிமிர்ந்து பார்த்தவள், அவரின் கண் ஜாடையில், கோமதியைப்  பார்த்தாள்.      

“தைரியமா இரும்மா…” என்று ஆதரவாய் அவளின் தோளை தட்டியவர், உறுதி செய்யும் விதமாய், அவள் நெற்றியில் குங்குமம் வைத்து, கையில் பூவினைக் கொடுக்க,

“நீங்க வைச்சே விடுங்கம்மா…” என்றார் மனோகர்.

“இல்லைங்க அது நான் எப்படி..?” என்று கோமதி தயங்க,

“நம்ம பிள்ளைங்களுக்கு நம்ம செய்யாம யார் செய்வா?” என்று மனோகர் சொல்லவும், வருங்கால மருமகளுக்கு தலையில் பூ சூடி, தன் மகனுக்கு உறுதி செய்து முடித்தார்.              

              

                                 

   

 

            

 

Advertisement