Advertisement

பவித்ரன். அவனை விட்டிருந்தால் தாடி வளர்த்து தேவதாஸாக சுற்றி இருப்பான். ஆனால் விதி அவனை விடவில்லை. சின்ன கோட்டுக்கு பக்கத்தில் பெரிய கோடு அல்ல ஒரு தார் ரோட்டையே போட்டது விதி.
வீட்டிற்குள் சென்று அவன் அறைக்கு சென்று கதைவடைத்து துக்கம் அனுஷ்டிக்கலாம் என்று அமர்ந்தவனை ஆவுடை வந்து  உடனே சாப்பிட அழைத்தார். அவன் மறுத்தும், விடவில்லை. வெறுப்பாக வந்து சாப்பிட அமர்ந்தான்.
அப்பொழுதது தான் அவனுக்கு பரணியிடம் இருந்து கால் வந்தது.
“என்னடா?” என்றான் உடனே கால் எடுத்து.
“அண்ணா இங்க அரசமரத்து பிள்ளையார் கிட்ட கொஞ்சம் பசங்க உக்காந்துட்டு என்னமோ பண்ணிட்டு இருந்துருக்காங்க. நாங்க வந்ததும் எங்களைப் பார்த்து ஓடிட்டாங்க.  இருட்டுல யாரையும் சரியா பார்க்க முடியல. ஆனால்  அதுல இருந்த ஒருத்தன மட்டும் தீபா அடையாளம் சொல்றா” என்றான்.
“அது யாராம்?”
“ சாமிநாதனோட பொண்ணுக்கு நிச்சயம் பண்ணிருக்க மாப்பிளைன்னு அடிச்சு சொல்றா. எனக்கு அவன் போட்டிருந்த சட்டை டிசைன் மட்டும் லைட்டா தெரிஞ்சது.”
“சாமி மாப்பிள்ளை அந்த வடக்கலூர் தான். அவன் பேரு கூட பிரகாஷ்னு நினைக்கிறேன். நீ வடக்கலூர் போய் அவன் வீட்டை விசாரிச்சு அவனை அங்கேயே அமுக்கு. நான் சாமிய கூட்டிட்டு வரேன்”. பவித்ரனும் உடனே கிளம்பினான்.
பரணி தீபாவையும் கூட்டிக்கொண்டு வடக்கலூர் சென்றான்.
அது ஒரு கட்டுக்கோப்பான ஊர். யாரும் யார் கண்ணிலும் மண்ணை தூவி தப்பு செய்துவிட முடியாது. எட்டு மணிக்கு எல்லாம் ஊர் அடங்கிவிடும். அதன் பிறகு அந்த மரத்தின் பக்கம் போக வேண்டிய வேலை யாருக்கும் இல்லை. நண்பர்கள் கூடி அரட்டை அடித்திருந்தாலும் ஓட வேண்டிய அவசியம் என்ன.
பரணி பதினைந்து நிமிடத்தில் அந்த ஊர் சென்று விட்டான். ஊரில் விசாரித்து அந்த பிரகாஷின் வீட்டையும் கண்டுபிடித்துவிட்டான்.
வீட்டில் சென்று விசாரித்தான். அவன் அம்மாவும் அப்பாவும் இருந்தனர். அவன் எங்கே என்று கேட்டதுக்கு நண்பர்களுடன் வெளியில் சென்றிருக்கிறான். இன்னும் வரவில்லை என்றனர்.
அவர்களிடம் எதுவும் கூறாமல் அவர்கள் வீட்டு திண்ணையிலே அமர்ந்தனர்.
அடுத்த பத்து நிமிடத்தில் பவித்ரன் சாமியுடன் வந்து சேர்ந்தான். பிரகாஷ் இன்னும் வரவில்லை என்று தெரிந்து அவர்களும் திண்ணையில் அமர்ந்தனர்.
பிரகாஷின் அப்பா அம்மா பதட்டம் ஆகினர் என்ன ஆயிற்று என்று.
அதை உங்க பையன் தான் வந்து சொல்லணும் எங்களுக்கும் எதுவும் தெரியாது   என்று பவித்ரன் கூறினான்.
மேலும் இருபது நிமிடம் கழித்து பிரகாஷ் மட்டும் வந்தான். திண்ணையில் இவர்களை பார்த்தவுடன் ஒரு சிறு அதிர்ச்சி அவன் கண்ணில் வந்துபோனது. ஆனால் அதை உடனே மறைத்து மிகவும் தன்மையாக நடந்துகொண்டான்.
அவன் கண்ணில் வந்த அதிர்ச்சியை பவித்ரன் கவனித்துவிட்டான். அவன் முகம் மாற்றியபின்பே மற்றவர்கள் அவனை கவனித்தனர்.
அந்த இருட்டில் ஸ்கூட்டரில் இருந்த வந்த வெளிச்சத்தில் அவள் பார்த்தது இவன் தான்  என்று  தீபாவுக்கு உறுதியாக தெரிந்தது.
பரணிக்கு அவன் சட்டை டிசைன் வைத்து இவன் தான் என்று உறுதியாக தெரிந்தது.
“வாங்க மாமா. வாங்க” என்று சாமியையும் எல்லோரையும் அழைத்தான். அவனும் சென்று திண்ணையில் அமர்ந்தான்.
“என்ன மாமா இந்த நேரத்துல வந்துருக்கீங்க?”
“நீங்க சொல்லுங்க மாப்பிள்ளை. இந்த நேரம் எங்க போயிட்டு வரீங்க?” பவித்ரன் கேட்டான்.
“என் பிரெண்ட்ஸ் கூட பேசிட்டு வரேன் சார்”
“உங்க பிரெண்ட்ஸ் எல்லாரையும் கால் பண்ணி இப்போ இங்க வர சொல்லுங்க”
“ஏன்?”
“நீங்க சொல்லுங்க. ஏன்னு நாங்க அப்புறம் சொல்றோம்”
வசமாக சிக்கிவிட்டோம் என்பது அவனுக்கு புரிந்தது. ஒன்றும் எதிர்த்து வாயாடாமல் அனைவரையும் வரவழைத்தான்.
அனைவரும் வந்தனர். ப்ரகாஷையும் சேர்த்து ஆறு பேர்.
“சொல்லுங்க. அரசமரத்து பிள்ளையார் கோயில் கிட்ட என்ன பண்ணிட்டு இருந்திங்க”
“நாங்க அங்க போகவே இல்லையே”
“சும்மா பேசிகிட்டு இருந்தோம்”
“அத ஏன் நீங்க கேக்குறீங்க”
மேலே கூறிய மூன்றும் வேறு வேறு நபர்களால் ஒரே  நேரத்தில் கூறப்பட்டது.
“பாதி உண்மை வந்துடுச்சு. மீதியையும் நீங்களே சொல்லிட்டிங்கன்னா கேட்டுட்டு நாங்க போயிடுவோம்” பவித்ரன் கூறினான்.
“என்ன உண்மை?” ஒருவன் கேட்டான்
“அங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க? ஏன் பரணியை பார்த்து  ஓடுனிங்க?”
அனைவரும் என்ன கூறுவது என்று அமைதியாக நின்றனர். அவர்கள் சரக்கு அடித்தால் கூட அது ஒன்றும் ஊரில் தடை செய்யப்பட்ட குற்றம் அல்ல. வேறு என்னவாக இருக்கும் என்று பரணியும் பவித்ரனும் யோசித்தனர்.
“சொல்லுங்கப்பா, நீங்க என்ன செஞ்சிருந்தாலும் ஒரு ஆளு வந்ததும் ஏன் ஓடணும்?” சாமி கேட்டார்.
“தப்பு செஞ்சவன் தான் பயந்து ஓடுவான்” பரணி கூறினான்.
“சொல்லுங்க. நீங்க ஏதாச்சும் தப்பு செஞ்சீங்களா? செஞ்சிருந்தா ஒத்துக்கோங்க தம்பிங்களா. ஊரு வழக்கப்படி ஏதாச்சும் தண்டனையை குடுப்பாங்க அதோட முடிச்சிக்கலாம். நீங்க பதில் பேசாம இருந்தா எனக்கு பதட்டம் ஆகுது” சாமி தன்மையாக கேட்டார். அவரின் மாப்பிள்ளை ஆயிற்றே.
“நாங்க எதுவும் பண்ணலைங்க. ஓடுறது எல்லாம் ஒரு குற்றமா? அதுக்கு என்ன எங்களை தூக்குல போட போறிங்களா?”  பிரகாஷ் கேட்டான்.
“அப்போ நாளைக்கு நாங்க உங்க ஊரு பஞ்சாயத்தை கூட்டுறோம். நடந்ததை சொல்லுறோம். நீங்களும் சொல்லுங்க. பஞ்சாயத்து உங்க விளக்கத்தை ஏத்துக்கிட்டா நாங்க அதுக்கு அப்புறம் இதுல எதுவும் செய்யமாட்டோம். சரியா?” பவித்ரன் கிடுக்கி பிடி போட்டான்.
“பஞ்சாயத்தா?” என்று அனைவருமே கொஞ்சம் ஜெர்க் ஆகினர்.
“சார் நாங்க எல்லாம் நல்ல குடும்பத்து பசங்க. எதோ திருடனை விசாரிக்கிற மாதிரி விசாரிக்கிறீங்க?” ஒருவன் எகிறினான்.
நேரம் வேறு கடந்துகொண்டே இருந்தது.
“பரணி இது இப்போ முடியாதா?” என்று சோர்வுடன் கேட்டாள் தீபா. அவள் இன்னும் சாப்பிடவில்லையே. பசி அவள் வயிற்றை கிள்ளியது.
“அண்ணா நீங்க பாத்துக்கறிங்களா? நான் போய் தீபாவை விட்டுட்டு வரேன்” என்று கேட்டான்.
பவித்ரன் சரி என்றான். தீபாவும் வீட்டிற்கு சென்றுவிட்டாள். ஆனால் அடுத்த நாள் அந்த ஊரில் பஞ்சாயத்து கூடியது. அக்கம் பக்கம் ஊர்களில் இருந்து எல்லாம் பெரிய தலைகளும் மக்களும்  வந்து கூடி இருந்தனர்.
அனைவரின் முன்பும் தீபாவை குற்றவாளியாக நிறுத்தினர் அந்த ஆறு பேரும்.

Advertisement