அதே போல அவர்களும் எட்டு மணிக்கு எல்லாம் வந்துவிட… பக்கத்தில் இருந்த உணவகத்திற்குச் சென்று எல்லோரும் சேர்ந்து காலை உணவு அருந்தி முடித்து, ஆர்த்தியின் வீட்டின் அருகே இருந்த பிள்ளையார் கோவிலுக்குச் சென்றனர்.
நல்லநேரம் வரும்வரை காத்திருந்தவர்கள், பிறகு அங்கே பூஜையை முடித்துக் கொண்டு ஆர்த்தி வீடு நோக்கி சென்றனர்.
கோவிலில் வைத்தே சீர் தட்டு எல்லாம் எடுத்து வைத்ததால்… காரில் இருந்து இறங்கும் போதே சீர் வரிசையுடன் தான் இறங்கினர்.
பரவாயில்லையே சரியான நேரத்துக்கு வந்திட்டாங்களே என ஆர்த்தியும் மற்றவர்களோடு சேர்ந்து வந்து சந்தோஷமாக வரவேற்றாள்.
அவளின் அம்மாவின் நினைவாக அவரின் பட்டு புடவையில் ஒன்றை உடுத்தி இருந்தாள். அவளே சென்று ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பழசாரை கண்ணாடி டம்ளரில் எல்லோருக்கும் எடுத்துவந்து கொடுத்தாள்.
சரத் அவன் வீட்டு உறவுகளை எல்லோருக்கும் அறிமுகம் செய்ய… அதே போல நடேசனும் அவர் பக்க உறவினர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை.
ஷ்யமளாவை பார்த்த கோமதி, “நீங்க நேத்தே வந்துடீங்க போல…” என்றதும், “ஆமாம் கோவிலுக்கு எல்லாம் போக வேண்டியது இருந்தது. அதனால ஒருநாள் முன்னாடியே வந்திட்டோம்.” என்றார்.
“நாங்களும் போகணுமுன்னு நினைச்சோம். ஆனா முடியலை.” என்றார் கோமதி சற்றே வருத்தமாக.
சரி நிச்சயம் பேசி முடிச்சிடலாமா என ஆர்த்தியின் மாமா கேட்க… “நீங்க எப்படிப் பண்ணுவீங்க சொல்லுங்க அப்படியே பண்ணிடலாம்.” என்றார் நடேசன்.
“இல்லை… நீங்க உங்க பக்கம் செய்யுற மாதிரியே பண்ணுங்க.” எனக் கோமதி சொல்லிவிட்டார்.
ஹாலின் நடுவே பெரிய ஜமுக்காளத்தை விரித்து, இவர்கள் சீர் வரிசை வைத்தது போல… பெண் வீட்டிலும் சீர் வரிசை வைத்தனர். எல்லோருக்கும் சந்தனம் குங்குமம் கொடுத்து, நிச்சய பத்திரிகை வாசித்துத் திருமணத் தேதி பிறகு முடிவு செய்யப்படும் எனத் திருமணத்தை நிச்சயம் செய்து, முதலில் தாம்புலத்தட்டு பிறகு மற்ற சீர் வரிசைகளையும் மாற்றிக் கொண்டனர். கடைசியாக ஆர்த்தியை அழைத்து அவளுக்கு இவர்கள் புடவை கொடுக்க… அவள் உடை மாற்ற கீழே இருந்த அறைக்குச் சென்று, அவள் அத்தையின் உதவியுடன் புடவையை மாற்றிக் கொண்டு வந்தாள். சரத் அதுவரையில் அவளைச் சரியாகக் கவனிக்கக் கூட இல்லை. அவன் ஒரு பதட்டத்திலேயே இருந்தான்.
அவன் தேர்ந்தெடுத்த புடவை அல்லவா முதலில் அது அவளுக்கு எப்படி இருக்கிறது என்பது மாதிரி தான் பார்வை இருந்தது. நாம் ஒழுங்காகத் தேர்ந்தெடுத்து இருக்கோமா என்பது போலப் பார்த்தவன், பிறகுதான் இது நம்ம ஆளு என்பது போலத் தோன்ற… அவன் பார்வையும் மாற ஆரம்பித்து இருந்தது. இருக்கும் இடத்தை எல்லாம் மறந்து ஆர்த்தி மீதே முழுப் பார்வையும் இருந்தது. ஹாலின் நடுவே வந்த ஆர்த்தியும் அவன் பார்வையைக் கவனித்துவிட்டு லேசாக முகம் சிவந்து போனாள்.
ஆர்த்திக்கு ஒவ்வொருவராக நலங்கு வைக்க… கடைசியில் உறவினரின் கேலி கிண்டலுக்கிடையே, சரத்தும் சென்று நலங்கு வைத்தான். பிறகு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
பெரியவர்கள் எல்லோருக்கும் பொதுவாக இருவரும் விழுந்து வணங்க இருவர் மீதும் மற்றவர்கள் அட்ச்சதை தூவி வாழ்த்தினார்கள். பவித்ரா போல இன்னும் இருந்த சில வாண்டுகள் சென்று அட்சதை எடுத்து வந்து மீண்டும் மீண்டும் இருவரின் மீதும் போட… அவர்கள் ஆசிர்வாதத்தோடும்(இப்போ யாருக்கு ஓட்டு போடனுமுன்னே அவங்க தான் சொல்றாங்க, அவங்க ஆசிர்வாதம் இல்லைனா எப்படி?) எல்லோரின் வாழ்த்துக்களோடு சரத் ஆர்த்தியின் நிச்சயம் நல்லபடியாக முடிந்தது.
பிறகு குடும்பம் குடும்பமாகப் புகைப்படங்கள் எடுத்தனர். எல்லாம் முடிந்து நேரம் அப்போது பதினோரு மணியைத் தான் தாண்டி இருந்தது. எப்போ போவோம் எனப் பவித்ரா கேட்க… உனக்கு அதுக்குள்ள போகனுமா என்றாள் ஆர்த்தி.
“இப்போ பன்னண்டு மணிக்கு சாப்பாடு வந்திடும், சாப்பிட்டு கிளம்பலாம்.” என்றார் நடேசன்.
“நீங்க கோவிலுக்குப் போகணுமுன்னு சொன்னீங்களே அத்தை, இங்க இருந்து கால் மணி நேரம் தான் ஆகும், கோவிலுக்கு வேணா போயிட்டு வந்திடுங்க.” என ஆர்த்திக் கோமதியை பார்த்து சொல்ல…
இப்போது சாப்பிடும் நேரமும் இல்லை என்பதால்… கோவிலுக்குப் போய் விட்டு வந்திடலாம்.” என்றார் கணேசன்.
கோமதி சரத்தை பார்த்து நீயும் வா என, தானுமா எனச் சரத் யோசிக்க… “அவன் இருக்கட்டும் சித்தி, அவங்க பக்கம் சொந்தக்காரங்க வருவாங்க இல்லையா… அவனும் நம்மோட வந்திட்டா நல்லா இருக்காது. நாம எல்லாம் போகலாம்.” எனக் கோமதியின் அக்கா மகன் சரவணன் அழைத்துக் கொண்டு சென்றான். சரத் பக்க உறவினர்கள் அனைவரும் உடன் சென்று விட்டனர்.
ஹாலில் மற்றவர்கள் இருந்ததால்… சரத்தும் ஆர்த்தியும் பேசாமல் இருக்க… அவருக்கு மாடியை போய்க் காட்டிட்டு வா என அவள் அத்தை சொல்ல…
“வாங்க…” என ஆர்த்தியும் உடனே எழுந்து கொண்டாள்.
மாடி படி ஏறும் போதே… “என்ன வாங்கன்னு எல்லாம் சொல்லுற. வாடா போடான்னு தான சொல்லுவ.” என்றான். “ம்ம் இனியும் சொல்லுவேன் தான். ஆனா எல்லோரும் இருக்கும் போது இல்லை.” என்றாள்.
மாடியில் ஹாலும் அதற்கு அடுத்து அறையும் இருக்க…
“இதுதான் என்னோட ரூம்.” என்றாள்.
சரத் உள்ளே சென்றவன், அங்கிருந்த கட்டிலில் உட்காராமல் அங்கிருந்த ஜன்னல் திண்டில் உட்கார்ந்தான்.
ஆர்த்திக் கண்ணாடி முன் சென்று நின்று தனது ஒப்பனையைச் சரி பார்க்க…
“இங்க வா…” எனச் சரத் அழைக்க…
இவளும் சென்று ஜன்னலில் அவன் அருகில் உட்கார செல்ல… அவள் உட்காரும் முன் இவன் சற்று நகர, அதை எதிர்பார்க்காததால் அவனின் மடியில் உட்கார்ந்து இருந்தாள்.
தெரியாமல் என நினைத்து அவள் எழுந்துகொள்ள முயல… சரத் அவளின் இடையோடு அனைத்து, இங்கயே இரு என்றான்.
“என்ன டா நீ இப்படி எல்லாம் பண்ண மாட்டியே. திடிர்ன்னு உனக்கு ரொமான்ஸ் எல்லாம் வருது.” என ஆர்த்திக் கேட்க…
“நம்ம அபார்ட்மென்ட் சுத்தி தான் சிசிடிவி கேமராக்கள் இருக்கே.” என்றான்.
“நம்ம அபார்ட்மென்ட்ல எங்க டா கேமரா இருக்கு? இருக்க ஒன்னு ரெண்டும் வேலை செய்யாதே…”
“அந்தக் கேமரா இல்லை… வத்சலா மாமி, ஷ்யாமளா ஆன்டி, அப்புறம் அங்க இருக்கப் பாட்டிங்க இவங்களை எல்லாம் சொல்லுறேன். இவங்க கண்ணுல இருந்து தப்ப முடியுமா? சும்மாவே எல்லாத்தையும் போய் எங்க அம்மாகிட்ட சொல்லுவாங்க.”
“அடப்பாவி அவங்கலையா சொன்ன… “ எனச் சிரித்தவள், அவன் மீது நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்தாள்.
“செம்மையா இருக்க டி” என்றவன், “நான் எப்படி இருக்கேன்.” எனக் கேட்க…
“நீ சூப்பரா இருக்க.” என்றாள்.
“உங்க வீட்ல எல்லாம் ஒகே தான…”
“ம்ம்… எல்லாம் ஒகே தான்.”
“உனக்குக் கால் வலிக்கும்.” என்றவள் எழுந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள்.
“நான் சொன்னேனா எனக்கு வலிக்குதுன்னு, நீயாவே ஏன் முடிவு பண்ற.” என்றான்.
“ம்ம்… இன்னும் ஏன் வரலைன்னு அவங்க நினைக்கிறதுக்குள்ள… நாமலே கீழ போயிடலாம் வா.” என்றாள்.
“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இந்த ரூம் நல்ல வசதியா இருக்குமுன்னு நினைக்கிறேன்.” என்றவன், அவளைப் பார்க்க…
எதற்கு எனப் புரிந்தததால்… அவள் அவனைப் பார்த்து முறைக்க…
“எதுக்குன்னு கேளு.” என்றவனை, ஒன்னும் தேவை இல்லை வா என அழைக்க…
சரி வா என அவனும் எழுந்து கொண்டான்.
“நான் தூங்க தான் சொன்னேன், நீ வேற எதுக்கோ நினைச்சிட்ட போலிருக்கு.” என்றான்.
“தூங்க தான நான் நம்பிட்டேன். நீ மட்டும் தனியா வந்து தூங்கு.” என்றாள் அவளும் கிண்டலாக.
“எனக்குத் தனியா தூங்க பயம்பா…”
“அடங்கு டா…” என்றவள், அவன் கன்னத்தில் லேசாக இதழ் ஒற்றிவிட்டு, பதிலுக்கு அவனுக்கு வாய்ப்புத் தராமல் கீழே சென்று விட்டாள்.
சரத்திற்கு இதெல்லாம் பத்தவே இல்லை. அங்கிருந்த கண்ணாடியில் பார்த்துக் கொண்டு அவனும் கீழே சென்றான்.
கோவிலில் இருந்து அவர்கள் வர தாமதமாகும் என்பதால்… வீட்டில் இருந்த உறவினர்களுக்கு முதலில் உணவு பரிமாற… அவர்களில் சிலர் சாப்பிட்டதும் கிளம்பிவிட்டனர். ஷ்யாமளா ஈஸ்வர் எல்லாம் உண்டுவிட… மற்றவர்கள் உண்ணாமல் இருந்தனர்.
சரத் வீட்டினர் கோவிலுக்குச் சென்றுவிட்டு இரண்டு மணிக்கு தான் வந்தனர். பிறகு எல்லோரும் உணவு அருந்தி முடிக்க… காலையிலேயே ஹோட்டல் அறையைக் காலி செய்து இருந்ததால்… இங்கயே கோமதி, தேவி இன்னும் மற்றவர்களும் உடுத்தி இருந்த பட்டுப்புடவையை மாற்றிக் கொண்டு, இங்கிருந்து நேராக ஊருக்கு செல்லக் கிளம்பினர்.
கோமதி செல்வதற்கு முன் ஆர்த்தியிடம், “ரொம்ப வருஷமா இந்தக் கோவிலுக்குப் போகணுமுன்னு நினைச்சது. நீ சொன்னதுனால தான் கோவிலுக்குப் போக முடிஞ்சது. நல்ல தரிசனம்.” என்றார்.
“இனிமே அடிக்கடி போகலாம்.” என்றாள் ஆர்த்தியும் புன்னகையுடன்.
ஆர்த்தியின் உறவினர்களிடம், “நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்க.” என நல்லபடியாகவே சொல்லிக் கொண்டு சரத்தின் பெற்றோர் விடைபெற்றனர்.
சரத் வரும் போது இருந்த மனநிலைக்கு இப்போது அப்படியே நேர்மறையாக, இதெல்லாம் நிஜமாகவே நடக்கிறதா என நினைக்கும்படி எல்லாம் நல்லபடியாகவே நடந்து முடிந்தது.