ஈஸ்வரையும் ஷ்யமளாவையும் ஆர்த்தித் தங்கள் வீட்டில் தான் தங்க வைத்திருந்தாள். அருண் கூட எதற்கு அவர்களுக்குச் சிரமம் வெளியே ஹோட்டலில் தங்கும்படி சொல்லி இருக்க… நாங்க பார்த்துக்கிறோம் அவங்களுக்குச் சிரமம் எதுவும் கொடுக்க மாட்டோம் என ஷ்யாமளா சொல்லி இருந்தார். ஆனால் ஆர்த்தி வீடே நல்ல வசதியாகதான் இருந்தது. மாடியில் அவள் வரும்போது பயன்படுத்தும் அறையை இவர்களுக்குக் கொடுத்துவிட்டு, கீழே இருந்த அறையில் அவள் பாட்டியுடன் இருந்து கொண்டாள்.
நடேசனும் கீழே இருக்கும் அறையைத் தான் பயன்படுத்துவார். ஆனால் உறங்குவது ஹாலில் இருக்கும் திவானில் தான்.
காலை உணவுக்கு ஆர்த்தி அவள் பாட்டியோடு நின்று சமைத்துக் கொண்டு இருக்க… அவள் அத்தை அவர் வீட்டில் இருந்தும் பலகாரங்கள் கொண்டு வந்திருந்தார். ஈஸ்வரும் ஷ்யாமளாவும் காலை உணவை உண்டுவிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்குச் சென்றுவிட்டு, அப்படியே தங்கள் உறவினர் வீட்டுக்கும் சென்றுவிட்டு மாலை வருவதாகச் சொல்லி சென்றனர்.
காலை உணவை உண்டுவிட்டு ஆர்த்தியும், அவள் அத்தை மற்றும் பாட்டி மூவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
“என்ன பாட்டி எதுவுமே சொல்ல மாட்டேங்கிற… உனக்கு இந்தக் கல்யாணம் ஓகேவா இல்லையா?” என ஆர்த்திப் பாட்டியை சீண்ட…
“நீ நாங்க சொன்னா அப்படியே கேட்டுடுவியா?” எனப் பாட்டியும் பதிலுக்குச் சீண்டினார்.
“வேண்டாமுன்னு சொல்லவும் நியாமான காரணம் இருக்கணும் இல்லையா பாட்டி.”
“இப்போ எதுக்கு இந்தப் பேச்சு? இந்தக் காலத்துப் பசங்களுக்கு வீட்ல பார்த்து முடிவு பண்றது எல்லாம் சரி வராதுன்னு எங்களுக்கும் தெரியும். அப்படி லவ் பண்ணாம வீட்லையே பார்த்தாலும், அதுவும் இப்போ பசங்களே தான் மேற்றிமோனியில கூடப் பார்த்துக்கிறாங்க. இதெல்லாம் எங்களுக்கும் தெரியும்.” என்றார் அவளின் அத்தை மீனாட்சி.
“உனக்குப் பிடிச்சவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கிற கூடக் குறைய இருந்தாலும் பொருத்து போ… ஒன்னு சரியில்லைன்னு இன்னொன்னு போனாலும், அந்த இன்னொன்னும் சரி இல்லைனா… அதனால ஆரம்பத்தில இருந்தே நல்லவிதமா கொண்டு போக முயற்சி பண்ணு.” பாட்டி சொல்லும்போது கூட ஆர்த்தி அதை அப்போதைக்குப் பெரிதாக நினைக்கவில்லை. தனக்கும் சரத்திற்கும் என்ன பிரச்சனை வரும், கோமதியோடு தான் ஒத்து போவது சிரமம் என்று நினைத்தாள்.
காலை உணவு முடித்துப் பத்து மணிக்கு எல்லாம் கிளம்பி விடலாம் என்று நினைத்தால்…. தேவியின் குடும்பம் பதினொன்று மணிக்கு மேல்தான், அதுவும் நான்கு முறைக்கு மேல் கைபேசியில் அழைத்த பின்னர்தான் வந்தனர். இரவு வெகு நேரம் வேலை பார்த்துவிட்டு உறங்கியதால்… காலையில் எழுந்துகொள்ள முடியவில்லை என்றனர்.
அவர்களுக்குக் காலை உணவு இங்கே என்பதால்… அவர்கள் மூவரும் உண்டு முடித்து, கிளம்பப் பன்னிரண்டு மணி ஆகிவிட்டது.
தேவியின் கணவர் காரை ஓட்ட, அக்காவை அவர் அருகில் முன்புறம் உட்கார சொல்லிவிட்டு, பின் இருக்கையில் அவன் பெற்றோரோடு சரத் உட்கார்ந்து கொண்டான்.
மதியம் போல ஆர்த்தி அழைத்து எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்க… கால்வாசி தூரம் தான் வந்து இருந்தனர்.
‘சாயங்கலாம் பெரிய கோவிலுக்குப் போகணுமுன்னு அத்தை சொன்னதா சொன்ன… இப்படி வந்தா எப்படிப் போவ?” ஆர்த்திச் சொன்னதற்கு, “அது பார்த்துக்கலாம், இந்தமுறை இல்லைனா அடுத்த முறை போயிக்கலாம்.” என்றான். பக்கத்தில் இருந்த கோமதிக்கும் அவன் பேசியது கேட்கத்தான் செய்தது.
நானே வந்திட்டு போன் பண்றேன் என வைத்துவிட்டான்.
இன்னைக்குக் கோவிலுக்குச் செல்ல முடியாத வருத்தம் கோமதிக்கும் இருந்தது, மகளும் மருமகனும் அல்லவா காரணம் அதனால் பேசாமல் இருந்தார்.
இன்று எப்படியும் கோவிலுக்குச் செல்ல முடியாது என்றாகிவிட்டது, ஹோட்டல் அறைக்குப் போய்த் தூங்கத்தானே போகிறோம் என அதன்பிறகு மதிய உணவுக்கு நிறுத்தி, மாலை காபி பலகாரத்திற்கு நிறுத்தி நிதானமாக உண்டுவிட்டு, தஞ்சாவூர் வந்து சேரும்போது இரவு எட்டு மணி ஆகிவிட்டது. இவர்கள் வந்துவிட்டார்கள் என்று தெரிந்ததும், ஆர்த்தியின் அப்பா தனது தங்கையின் மகனோடு வந்து இவர்களைப் பார்த்து பேசிவிட்டு இரவு உணவும் வாங்கிக் கொடுத்துவிட்டு தான் சென்றார்.
ஆர்த்தியின் அப்பா வருகிறார் என்றதும் சரத் வந்ததும் குளித்து உடை மாற்றி இருந்தான். அவர் வந்து சென்ற பிறகு எல்லோரும் சாப்பிட தயாராக, தேவியின் கணவர் தான் குளித்துவிட்டு வெளியில் சென்று உன்ன போவதாகச் சொல்லிவிட்டு அவர்கள் அறைக்குச் சென்றுவிட… அவனை யாரும் தடுக்கவும் இல்லை.
தேவியும் கணவரோடு சென்று உணவு அருந்துகிறேன் என்று சொன்னவள், இவர்கள் உண்ணவும், சிறிது உண்ணலாம் என்று உண்ண ஆரம்பித்தவள், உணவின் சுவையில் நன்றாகவே உண்டுவிட்டாள்.
தேவி அவர்கள் அறைக்கு மகளுடன் கிளம்பும்போது, “இவ்வளவு நேரத்துக்கு அப்புறம் எங்க போய்ச் சாப்பிடுவார்? பேசாம உன் புருஷனை இதையே சாப்பிட சொல்லு.” எனக் கோமதி மகளிடம் உணவை கொடுத்து அனுப்ப, அவர் சாப்பிடுவாரா தெரியாது. எடுத்திட்டு போறேன் என்றுதான் தேவி எடுத்துக்கொண்டு சென்றாள்.
உண்டு முடித்துப் பெற்றோர் உடை மாற்றிப் படுக்கத் தயாராக, அவர்களைப் பெரிய கட்டிலில் படுக்கச் சொல்லிவிட்டு, சரத் அறையில் இருந்து வெளியே வந்து ஆர்த்தியை அழைத்தான்.
“எதுக்கு உங்க அப்பாவை அலைய வச்ச?”
“உங்களுக்கு இந்த ஊர்ல வேற யாராவது இருக்காங்களா என்ன? நாங்க தானே இருக்கோம். அதோட அப்பாவா தான் வந்தாரு.”
“சாப்பிட்டியா?”
“ம்ம்…நீங்க?”
“உங்க அப்பா சாப்பாடு வாங்கிக் கொடுத்திட்டு தான் போனாரு. சாப்பாடு செம்மையா இருந்தது.”
“அது எங்களுக்குத் தெரிஞ்சவங்க ஹோட்டல் தான். நாளைக்குக் கூடச் சாப்பாடு அங்கதான் சொல்லி இருக்கு.
சிறிது நேரம் வேறு விஷயங்கள் பேசிவிட்டு, “பெரியப்பாவும், சித்தப்பாவும், எங்க இருக்காங்கன்னு கேட்கணும், சரி நீ தூங்கு நாளைக்குப் பார்க்கலாம்.” என்றான்.
சரத் அவனின் உறவினர்களைக் கைபேசியில் அழைக்க… அவர்கள் வர நடு இரவாகி விடும் என்று சொல்ல… இவனும் சரி என்று அறைக்குச் செல்ல… அப்போது தான் தேவியின் கணவன் அறையில் இருந்து வெளியே வர, “இங்கதான் சாப்பாடு இருக்கு இல்ல… இதைச் சாப்பிடுங்க.” எனத் தேவி சொல்ல… அவள் கணவன் மறுத்துவிட்டு செல்வது தெரிந்தது.
என்னவோ செய்யட்டும் எனச் சரத் கண்டுகொள்ளாமல் அறைக்குச் சென்று அங்கிருந்த ஒற்றைக் கட்டிலில் படுத்துவிட்டான். அவன் அம்மா உறங்கி இருக்க… அப்பா டிவி தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.
இவனும் சென்று கட்டிலில் படுத்து கைபேசியைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஒருமணி நேரம் சென்று தேவி அழைத்தாள். “உங்க அத்தான் சாப்பிட போனவர் இன்னும் வரலை டா… தெரியாத ஊரு பயமா இருக்கு.”
“அதெல்லாம் வந்திடுவாரு. போன் பண்ணி பார்க்க வேண்டியது தான… “
“இவ்வளவு நேரம் பண்ணாமலா இருப்பேன். கால் பண்ணா எடுக்க மாட்டேங்கிறார்.”
இவன் பேசிய சத்தத்தில் கோமதியும் விழித்துவிட்டார்.
அவர் என்ன என்று கேட்க, இவன் விவரம் சொல்லிவிட்டு அறையில் இருந்து வெளியே வர… “வந்த இடத்தில நிம்மதியா இருக்க விடுறாங்களா பாரு.” எனப் புலம்பியபடி கோமதியும் எழுந்து கொண்டார்.
சரத் அழைத்த போதும், தேவியின் கணவன் அழைப்பை எடுக்கவில்லை.
சரத் தன் அக்காவின் அறைக்குச் செல்ல… கோமதியும் பின்னே வந்தார்.
“நீ போய்க் கொஞ்சம் பாரேன் டா…”
“கீழ எட்டி பார்த்திட்டு தான் வந்தேன். கார் எடுத்திட்டுப் போயிருக்கார். நான் நடந்து போய் எங்க பார்க்கிறது?” என்றான்.
“போன் கூட எடுக்க மாட்டேங்கிறார். சரியான திமிரு.” எனத் தேவி திட்டிக்கொண்டு இருக்கும் போதே… அவள் கணவன் வந்துவிட்டான்.
“கால் பண்ணா எடுக்க மாட்டீங்களா…”
“போனவனுக்கு வர தெரியாதா… கால் பண்ணும் போது வந்திட்டு இருந்தேன். இங்க தானே வரோமுன்னு எடுக்கலை.” என்றான்.
அவன் சொல்லிக்கொண்டு இருந்த போதே… சரத்தும் கோமதியும் அறையில் இருந்து வெளியே வந்துவிட்டனர்.
வெளியில் வந்த பிறகு அக்காவை அழைத்த சரத், அவள் வந்ததும், “நாளைக்குச் சரியான நேரத்துக்கு ரெடி ஆகி வரணும், இப்போ சொன்னா மாதிரி எதாவது மொக்க காரணம் சொன்னா… அதுக்குப் பிறகு நானும் யாரையும் மதிக்க மாட்டேன்.” என்றான்.
“ஆமாம் காலையில எட்டு மணிக்கு எல்லாம் ரெடி ஆகிடனும்.” எனக் கோமதியும் சொல்லிவிட்டு சென்றார்.
மறுநாள் காலை ஆறு மணிக்கு எல்லாம் எல்லோரும் எழுந்து கிளம்ப ஆரம்பித்தனர். எழுந்ததும் சரத் அவர்கள் உறவினர்களுக்கு அழைத்து விசாரிக்க… அவர்களும் கிளம்பிக்கொண்டிருப்பதாகச் சொல்ல… “காலை டிபன் சாப்பிட இந்த ஹோட்டலுக்கு வந்திடுங்க. சாப்பிட்டு இங்க இருந்து சேர்ந்து போயிடலாம்.” என்றான்.