Advertisement

அவளின் ஈர கால்கள் கடல் மண்ணில் புதைந்து தடுமாற வைக்க, ஈரத்தில் நனைந்த உடை உடலோடு ஒட்டிக் கொண்டு இம்சை செய்ய, உடலை சிலிர்த்து புலம்பிக் கொண்டே நடந்தாள் அவள்.

“என்ன சொன்னான்? ராக்சஷின்? அப்படினா? ராக்சஷியா தான் இருக்கணும். என்னைப் பார்த்தா இவனுக்கு ராட்சசி மாதிரி இருக்கா? ஆளும், மண்டையும் பாரு. அன்னைக்கு டிரபுள் மேக்கர் சொன்னான். இன்னைக்கு ராட்சசி சொல்றான். பூனைக் கண்ணன்.” முணுமுணுத்து கொண்டே நடந்தாள். அவளின் கோபமும் அவளைப் போலவே வேகநடைப் போட்டது. 

அவளை கோபமாக முறைத்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தான் விக்ரம். 

அவனின் வேதாளம் கோபமாக சென்றாலும், குழந்தையை பார்த்ததும் சமாதானமாகி விட்டது. 

“குழந்தை என்ன பண்றான் சாந்தாம்மா?” அறை வாசலில் நின்று அவள் கேட்க, “இவ்வளவு நேரம் முழிச்சுட்டு தான் இருந்தேன் மா. இப்ப தான் தூங்கினான்” என்றார் அவர். 

“நான் ட்ரெஸ் மாற்றிட்டு வர்றேன்” என்று தனக்கு கொடுக்கப்பட்ட அறையை நோக்கி நடந்தாள். 

“என்னம்மா சண்டைக்கோழி, இப்போ என்ன சண்டை?” ராகவன் அவள் முன் வந்து நின்று கேட்க, “டேய், ராகவ். செம்ம கோபத்தில் இருக்கேன். பேசாம போய்டு” பல்லைக் கடித்துக்கொண்டு எச்சரித்தாள். 

“விக்ரம், என்ன சொல்றார் சுஹா?” ராகவன் விசாரிக்க,

“என்ன சொல்வார்? நீயும், நானும் முட்டாள்னு சொல்றார். உண்மை தானே?” விக்ரமின் மேலிருந்த கோபத்தை ராகவனிடம் வெளிப்படுத்தி விட்டு அறைக்குள் நுழைந்தாள் அவள். 

கோபத்தை குளித்து களைய தான் நினைத்தாள். ஆனால், முடியவில்லை. அன்று முழுவதும் அதே கோபத்துடன் தான் சுற்றினாள். மற்றவர்களிடம் இயல்பாக இருந்தாலும், விக்ரமிடம் மட்டும் முகம் திருப்பினாள்.

விக்ரம் இயல்பாக இருந்தான். வெங்கடேஷிடன் அமர்ந்து அவர் சொன்ன கதைகளை பொறுமையாக செவிசாய்த்தான். பதில் சொன்னான். அவர் கேளாமலேயே மன்னிப்பை வழங்கினான். ஒருவித எரிச்சலுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுஹாசினி. 

இப்போது ராகவனும் அவர்களுடன் சேர, பல காலம் பழகியது போல பேசிக் கொண்டிருந்த ஆண்களை முறைத்தபடி குழந்தையோடு அறைக்குள் போய் கதவடைத்து கொண்டாள் அவள்.

இரவு உணவு, பேச்சும் உணவுமாக கழிந்தது. சுஹாசினி பெயருக்கு கொறித்து விட்டு எழுந்து கொள்ள, அவளை கவலையாய் ராகவனும், கரிசனத்துடன் விக்ரமும் பார்த்தார்கள். 

அவளோ, ஷ்ரவனுடன் மூழ்கிப் போனாள். வெங்கடேஷிம் அவளோடு அமர்ந்து குழந்தையை கொஞ்சி, அவனோடு கதைப் பேசிக் கொண்டிருந்தார். குழந்தை புன்னகையின் சாயலை காட்டியதும் பூரித்துப் போனார் அவர். நேரம் பத்து மணியை கடக்க, “நீங்க போய் தூங்குங்க ப்பா” என்று அவரை அனுப்பி வைத்தாள் சுஹாசினி.

அன்று என்னவோ ஷ்ரவன் உறங்காமல் அவளுக்கு போக்கு காட்டி கொண்டிருந்தான். கொஞ்சினாள், தாலாட்டினாள், தாயாக மடி தந்தாள், எதற்கும் மசியவில்லை அவன். 

வயிறு நிறைந்த பின்னும் வாய் ஓயாமல் சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான். காலை உதைப்பதும், கையை அடிப்பதும், அழுவதுமாக இருக்க, பயந்துப் போனாள் சுஹாசினி.

“நீங்க போய் படுங்க. நான் பார்த்துக்கறேன்” என்ற விக்ரமை அவள் மதிக்கவேயில்லை. சாந்தாம்மாவின் சமாதானத்துக்கு எல்லாம் இறங்கவே இல்லை குழந்தை. அப்போது மாடிக்கு உறங்க சென்ற ராகவன் குழந்தையின் அழுகை சத்தத்தில் கீழிறங்கி வந்தான். 

“என்னன்னு பாரு ராகவ். விடாம அழுதுட்டே இருக்கான்” சுஹாசினி சொல்ல, குழந்தையை பரிசோதித்தான் ராகவன். 

“ஃபீவர் எதுவும் இல்ல சுஹா. உடம்பு சுடல. உடம்புல ரஷஸ், அலர்ஜி கூட இல்ல. நார்மலா தான் இருக்கான்.” 

“டேய், மயக்க டாக்டர், ஒழுங்கா பாரு டா. ஒன்னுமே இல்ல சொல்ற. அப்புறம் ஏன் குழந்தை அழுதுட்டே இருக்கான்? உனக்கு தெரியலைன்னா சொல்லு. நாங்க வெளில போய் குழந்தை டாக்டர் யாரையாவது பார்த்திட்டு வர்றோம்” அவள் தமிழில் கத்த, விக்ரம் அவளை புரியாமல் பார்த்தான். 

“சுஹா, சின்ன குழந்தைங்க இப்படித் தான் இருப்பாங்க” என்ற அவனின் எந்த சமாதானமும் அவள் முன் எடுபடவில்லை. 

“வாட்ஸ் ராங்?” என்று அவர்களின் வாக்குவாதத்தில் இடைப் புகுந்தான் விக்ரம். அவனை முறைத்து விட்டு குழந்தையோடு ஒன்றினாள் சுஹாசினி. 

“பகல் முழுக்க தூங்கிட்டான் இல்லம்மா. அதான் இப்ப தூக்கம் வரல போல. கத்திட்டு இருக்கான். விளையாடுறான். அவனுக்கு ஒன்னும் இருக்காது” சாந்தாம்மாவும் அவளின் பக்கத்தில் வந்து சொல்ல, “சரிங்க ம்மா” என்றாள். 

அன்று நள்ளிரவு வரை குழந்தை தூங்காமல் சிணுங்கிக் கொண்டே தானிருந்தான். அவளும் தூங்காமல் அவனோடு பேசிக் கொண்டிருந்தாள். அதே அறையில் இருந்த விக்ரமின் கண்கள் இப்போது அவள் மேல் கனிவாக, கேள்வியாக, கோபமின்றி வலம் வந்தது. 

அதிகாலை மூன்று மணிக்கு குழந்தை கண்ணயர அப்படியே அவனோடு படுத்திருந்த சுஹாசினியும் உறங்கி விட்டாள். தன் படுக்கையை ஆக்கிரமித்திருந்த இருவரையும் பார்த்த விக்ரமின் கண்களில் நிச்சயமாய் கோபமோ, வருத்தமோ இல்லை. உதட்டில் சிரிப்பும், கண்களில் ரசனையும், மனதில் இனம் புரியா குழப்பமுமே சூழ்ந்திருந்தது. 

மறுநாள் முக்கியமான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றிருந்தான் விக்ரம்.

பொழுது புலர்ந்த பின்னும் நல்ல உறக்கத்தில் இருந்தான் குழந்தை. வெங்டேஷ் குழந்தையோடு இருக்க, விக்ரம், சுஹாசினி இருவரும் சென்று குளித்து தயாராகினார்கள். 

சந்தன நிற சுடிதாரில் சுஹாசினி வெளியே வர, ஹாலில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்த ராகவன் அவளைப் பார்த்ததும் எழுந்து வந்தான். 

“குழந்தை இப்போ ஓகே தானே சுஹா? நீ ஏன் தேவையில்லாம பயப்படுற? டென்ஷன் ஆகுற?” அவன் கேட்க, தோள்களை ஏற்றி இறக்கி, “தெரியல” என்றாள்.

“ஏன் ஒரு மாதிரி இருக்க சுஹா?”

“அதான் சொன்னேனே, தெரியல ராகவ். மனசே சரியில்ல. ஒரு மாதிரி அப்செட்டா இருக்கு டா” அவள் சொல்ல, அவளைப் பிடித்து நிறுத்தி, “என்ன சுஹா? எதையும் மனசுல போட்டு குழப்பாம, என்கிட்ட சொல்லு” என்றான் ராகவன்.

“எனக்கு கொங்கனி கத்துக்கணும் ராகவ். ஏதாவது ஆன்லைன் டுட்டோரியல் இருக்குமா? இல்லனா, 30 நாட்களில் முழுமையாக கொங்கனி கற்பது எளிது போட்டு புக் இருக்கும் இல்ல? அது கிடைக்குமா?” அவள் பேசிக் கொண்டே நடக்க முற்பட, அவளைப் பிடித்து நிறுத்தினான் ராகவன். 

“இப்போ கொங்கனி கத்துக்க என்ன அவசியம் வந்தது சுஹா?”

“இந்த விக்ரமை பதிலுக்கு திட்ட தான். வேற எதுக்கு?” எதிரே தூரத்தில் தெரிந்த கடலை பார்த்து முணுமுணுத்தாள் அவள். 

“என்னது?” அதிர்ந்து கேட்டான் ராகவன். 

“இவன் கிட்ட இங்கிலீஷ் பேசுறதே கடியா இருக்கு. அதுவும் அவனோட உச்சரிப்பு, பெரிய லண்டன் துரை மாதிரி பேசுறான். போதாததுக்கு அப்பப்போ கொங்கனியில் வேற என்னை திட்டுறான்.” அவள் புலம்ப, “வாட்?” என்ற ராகவனின் குரலில் அடக்கப்பட்ட சிரிப்பிருந்தது.

“என்ன வாட்டு? தமிழ்ல பேசுடா, மக்கு மயக்க டாக்டர்” அவள் கத்த, சிரித்தான் ராகவன். 

“விக்ரம் ஏன் திட்டினார்?”

“ரோஹிணிக்கா கிட்ட நான் பேசலை. பேச டிரை பண்ணல. காண்டாக்ட் பண்ணல, டச்சில் இல்ல. வந்து பார்க்கல, இப்படி என்னை குற்றம் சொல்லி திட்ட, அவருக்கு ஆயிரம் காரணம். என்னை என்னப் பண்ண சொல்ற ராகவ்?” 

“இது அநியாயமா இருக்கே சுஹா. நீ ரோஹிணிக்கா பத்தி ஏன் அவர்கிட்ட எதுவும் சொல்லல. உண்மையை சொல்ல வேண்டியது தானே?”

“உண்மையாவே மக்கு ஆகிட்டியா ராகவ்?” என்று எரிச்சலுடன் கேட்டவள், “அவர் ரோஹிணிக்கா மேல பயங்கர மரியாதை வச்சிருக்கார். அக்கா பத்தி பேசும் போதே அவர் குரல்ல, அன்பும், பாசமும் வந்துடுது டா. அதை எப்படி நானே கெடுப்பேன்?” என்று கோபமாக கேட்டாள். 

“இல்ல சுஹா…”

“உனக்கு புரியலையா ராகவ்? உயிரோடு இருக்க ஒருத்தர் மேல தப்பு சொல்லி குற்றம் சாட்டுறது வேற. உலகத்திலேயே இல்லாதவங்க மேல எப்படி டா? நான் தப்பிக்க அக்கா மேல பழி போடுற மாதிரி ஆகிடாதா? சரி, உண்மையை தானே சொல்லப் போறோம், சொல்லலாம்னா.. விக்ரம் பார்வையில் அக்காவை இறக்கி காட்ட நான் விரும்பல. அது சரியும் கிடையாது. அக்கா அவர் மனசுல உயர்ந்த இடத்துலயே இருக்கட்டும் டா” என்றவளை புன்னகையுடன் பார்த்த ராகவன், “வா, கீழ போகலாம்” என்று அவளின் கைப் பிடித்து முன்னே நடந்தான். 

அங்கே ஹாலில் வெங்கடேஷின் எதிரே அமர்ந்திருந்தாள் இளம்பெண் ஒருத்தி. 

“யாருடா இந்த அழகி?” சுஹாசினி, ராகவனிடம் கேட்க, பதில் சொன்னது என்னவோ, சாந்தாம்மா தான். 

“அவங்க ஸ்ருதி. விக்ரம் தம்பியை பார்க்க வந்திருக்காங்க.”

“ஓ..” என்று பறவையாய் விரிந்தது சுஹாசினியின் இதழ்கள். 

“இந்த பொண்ணு சரின்னு சொன்னா, அடுத்து கல்யாணம் தான்”

“யாருக்கு?” அதிர்ச்சியுடன் கேட்டாள் சுஹாசினி.

“விக்ரம் தம்பிக்கு தான்” சாந்தாம்மா சொல்ல, சட்டென திரும்பி அந்தப் பெண்ணை பார்த்தாள் சுஹாசினி. 

“ஹேய் ஸ்ருதி.. வெல்கம் ஹோம்” என்று ஆர்ப்பாட்டமாய் வரவேற்றபடி அறையில் இருந்து வெளியில் வந்தான் விக்ரம். 

சுஹாசினியின் கண்கள் இருவரின் மேலும் மாறி மாறி பயணித்து, பின் இறுக மூடியது. மெதுவாக அங்கிருந்து நழுவி குழந்தையிடம் சென்றாள் அவள்.

Advertisement