Advertisement

அவனுக்கு எதிரே விரிந்திருந்த கடல் அமைதியாய் இருக்க, அவனுள் சீறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது கோபக் கடல். 

“சாரி” என்றாள் சுஹாசினி. அவளைத் திரும்பியும் பார்க்காமல் கடலை வெறித்துக் கொண்டிருந்தான் விக்ரம். அலைகள் இருவரையும் நனைத்து பின்னோக்கி ஓடி, மீண்டும் அதே வேகத்துடன் ஓடி வந்து இருவரின் கால்களையும் தொட்டு என சிறுபிள்ளையை போல விளையாடிக் கொண்டிருந்தது. 

“வெய்னி, உங்களைப் பத்தி என்கிட்ட அதிகம் பேசினதில்ல. ஆனா, உங்களை மிஸ் பண்ணாங்க. ரொம்ப, ரொம்பவே. அது மட்டும் எனக்கு நல்லாத் தெரியும்” அவன் சொல்ல, சடாரென அவனைத் திரும்பிப் பார்த்தாள் சுஹாசினி. 

“அவங்க கல்யாணத்தப்போ எங்கப்பா சம்மதிச்சு நம்ம கல்யாணம் நடந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் இல்லைனு அண்ணாகிட்ட புலம்பி நான் கேட்டிருக்கேன். கல்யாணத்தப்போ ஆசிர்வாதம் கொடுக்க கூட ரெண்டு வீட்டு பக்கமும் பெரியவங்க யாரும் இல்லைனு அவங்களுக்கு ரொம்ப வருத்தம். என் தங்கை நம்ம கல்யாணத்துக்கு வந்திருந்தா, துறுதுறுனு ஓட்டிட்டே இருப்பான்னு அப்பவும் உன் நினைப்பில் வருத்தப்பட்டுட்டு இருந்தாங்க.”

“ம்ம்.. சாரி”

பார்வையை அவன் மேலிருந்து விலக்காமல் சொன்னாள். அவன் சட்டை செய்யவேயில்லை.

“அண்ணாக்கு கூட வெய்னி ஆசையை நிறைவேற்ற முடியலைன்னு கடைசி வரை வருத்தமும், குற்ற உணர்ச்சியும் நிறைய இருந்தது. அவரை லவ் பண்ணி கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா, வெய்னி வீட்டை விட்டு வெளில வந்திருக்க மாட்டாங்க. உங்களை எல்லாம் நினைச்சு ஏங்கி இருக்க மாட்டாங்க இல்லைனு சொல்லிட்டே இருப்பார். அதனால சென்னை வந்து உங்க வீட்ல பேசணும்னு கூட நினைச்சார். ஆனா, வெய்னி அவரை சென்னை போகவோ, உங்களை காண்டாக்ட் பண்ணி பேசவோ விடல. என்னமோ பிடிவாதம் அவங்களுக்குன்னு நினைச்சேன். அப்புறம் தான் உங்கப்பாக்கு கொடுத்த பிராமிஸை மீறாம இருக்க தான் உங்க கூட தொடர்பில் இல்லைனு தெரிஞ்சது” 

ஆக, ரோஹிணி பற்றி எல்லாம் தெரிந்தே கோபமாக இருந்திருக்கிறான்? எல்லாம் தெரிந்தும் அவள் மீது கோபத்தை காண்பித்திருக்கிறான். அவளின் சூழ்நிலை புரிந்தும், “உங்கப்பா என்ன சொன்னாலும் கேட்கிற பொண்ணு தானே நீ” என்று சீண்டியிருக்கிறான். 

வயதில் மூத்தவரான வெங்கடேஷிடம் காட்ட முடியாத கோபத்தையும், ஆத்திரத்தையும் தன்னிடத்தில் வெளிப்படுத்தி இருக்கிறான் என்பதை நினைக்கையில் அவளுக்கு கோபத்தை மீறிய உணர்வு மெல்ல எட்டிப் பார்த்தது. மனக்கசப்பினால் வந்த வெறுப்பு அது. 

“உன் சொந்த அக்கா அவங்க. என்ன நடந்திருந்தாலும் நீ அவங்ககிட்ட பேசாம இருந்திருக்கக் கூடாது. அவங்க கூட தொடர்பில் இருந்திருக்கணும் நீ” அவன் வார்த்தைகள் மீண்டும் அவளை குற்றம் சாட்ட, பதில் பேசவில்லை அவள். 

அவள் மனம் முழுவதும் ரோஹிணியே வலம் வந்தாள். 

மூன்று வருடங்களுக்கு முன்பு மும்பையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ரோஹிணி, திடீரென்று காதல் என்று வீட்டில் வந்து நிற்கையில், “என்னம்மா இதெல்லாம்?” என்று முதலில் கண்டிக்கவே செய்தார் வெங்கடேஷ். 

ஒரு வாரத்தில் இறங்கி வந்து, “பையன் யாரு? என்னப் பண்றாங்க?” என்று விசாரித்தார். வந்தது வினை. வெடித்தது பிரச்சனை. 

“என்ன கோவா காரனா? நம்ம ஊர் இல்லையா? தமிழ் பையன் இல்லையா?” அவர் ஆட்சேபிக்க, “ஹிந்து தான் ப்பா” என்றாள் ரோஹிணி. 

“இருக்கட்டும் மா. ஆனா, கோவா சொல்றியே? எப்படி மா? அவங்க வீட்ல என்ன சொல்வாங்க? நம்ம சொந்தக்காரங்க என்ன சொல்வாங்க? எனக்கு சரி வரும்னு தோணல மா” கேள்விகளால் புலம்பினார் பெற்றவர். 

அப்போது ரோஹிணி, மலரின் அண்ணன் மனைவியிடம் தான், தன் காதல் கதையை தெளிவாக சொன்னாள். 

“என் காலேஜ் சீனியர் அவர். நாங்க காலேஜில் ரொம்ப பேசிக்கிட்டது கிடையாது. எனக்கு அவர் மேல ஒரு க்ரஷ் இருந்தது, அவ்ளோ தான். ஆனா, இப்போ ஆறு மாசத்துக்கு முன்னாடி மும்பையில் எங்க கம்பனிக்கு ஒரு வேலையா வந்தார். அப்போ பார்த்து பேசி, பிடிச்சு, கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறோம். அப்பா முடியவே முடியாது சொல்றாங்க. என்னப் பண்ணன்னு தெரியல?” ரோஹிணி சொல்ல, “வெயிட் பண்ணுங்க. அப்பா மனசு மாற டைம் கொடுங்க” என்று சொல்லியிருந்தார் மலரின் அண்ணி. ஆனால், சில மாத காத்திருப்பில் ரோஹிணிக்கு தெரிந்துப் போனது, வெங்கடேஷ் ஒரு போதும் சம்மதிக்க மாட்டார் என. 

விளைவு, வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள் ரோஹிணி. தன் சம்மதம் இல்லாமல் நடந்த மகளின் திருமணத்தின் மேல் பெற்றவருக்கும் ஒருவித வீம்பான கோபம் வந்திருந்தது. 

அச்சமயம் சுஹாசினி தான் அக்காவை அதிகம் தேடினாள். கூடவே இருந்த வரை தெரியாத அருமையும், அதுவரை வராத பாசமும் பிரிவின் பின் அவளுக்கு அதிகமாக வந்தது. ஆனாலும், அக்காவிடம் பேச சிறு தயக்கம் அவளுக்கு இருக்கத் தான் செய்தது. அக்காவுடன் பேசக் கூடாதென்று வெங்கடேஷ் அவளை மிரட்டி இருந்தாரே. 

அப்படியும் ஒரு நாள் அக்காவை தொடர்பு கொண்டாள் அவள். அலைபேசியில் அழைத்திருந்தாள். பாசத்தை பரிமாறிக் கொண்டனர். அன்று துரதிஸ்டவசமாக அப்பாவிடம் கையும் களவுமாகப் பிடிபட்டாள் சுஹாசினி. 

“யாரு மா போன்ல?” 

“அது…அது.. ப்பா” என்ற அவளின் தடுமாற்றமும், திணறலுமே அவளை காட்டிக் கொடுத்து விட்டது. 

“யாருன்னு கேட்டேன் இல்ல? போனை கொடு இங்க?” அதட்டி அவளின் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கினார். 

“ஹலோ, யாரு?” அவர் கேட்க, “அப்பா” பாசமும், தவிப்புமாக வந்தது ரோஹிணியின் குரல். 

“எனக்குத் தெரியும். நீயா தான் இருப்பேன்னு எனக்குத் தெரியும். உன் வாழ்க்கையை நீயே முடிவு பண்ணிக்கிட்ட. இப்போ உன் தங்கச்சி வாழ்க்கை? அதை யோசிச்சு பார்த்தியா மா நீ? அவளுக்கு நாளைக்கு கல்யாணம் நடக்க வேண்டாமா? உன்னைப் பத்தி கேள்விபட்டா, அவ வாழ்க்கை என்னாகும்னு கொஞ்சமாவது யோசிச்சியா மா?” அவர் கேட்க, மறுபக்கமிருந்து, “சாரி ப்பா” என்ற கதறல் மட்டுமே பதிலாக வந்தது.

“உன் தங்கச்சி வாழ்க்கை நல்லா இருக்கணும். அவளை நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அதான் என் ஆசை. அதை நீயே கெடுக்க..” அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

அன்று சுஹாசினியை பலமாக கண்டித்திருந்தார் வெங்கடேஷ். 

“இனிமே அக்காக்கு கால் பண்ணேன்னு தெரிஞ்சது. அப்பா என்னப் பண்ணுவேன்னு தெரியாது” அவர் கத்திச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பலமாக மூச்சு வாங்க, மார்பை பிடித்துக் கொண்டு பொத்தென்று இருக்கையில் அமர்ந்து விட்டார், பயந்துப் போனாள் சுஹாசினி. 

“அப்பா.. சாரி ப்பா. இனிமே அக்காகிட்ட பேச மாட்டேன் ப்பா. உங்களுக்கு என்னப்பா பண்ணுது?” மிரண்டு பதறினாள். அப்பாவிற்கு தண்ணீர் கொடுத்து பக்கத்து வீட்டில் இருந்த ராகவனை ஓடிப் போய் அழைத்து வந்தாள். 

மருத்துவ மாணவனான ராகவன் மாரடைப்பின் அறிகுறி போல தெரிகிறது எனச் சொல்ல, உடனே மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார் வெங்கடேஷ். ஆனால், அவருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நலமாகவே வீடு திரும்பினார். அந்த ஒரு நிகழ்விலேயே அரண்டுப் போய் இருந்தாள் சுஹாசினி. 

வீடு, கல்லூரி, படிப்பு, வீட்டு வேலைகள், நண்பர்கள், அப்பா என அவளின் நாட்கள் நகர, வெங்கடேஷ் தான் ஏதோ யோசனையிலேயே இருந்தார். 

ஒரு வாரம் கழிந்திருக்கும். 

 “சுஹா மா, ராகவனை கூப்பிடு. அப்பாவுக்கு என்னமோ பண்ணுது” வியர்க்க விறுவிறுக்க அவர் சொல்ல, “இதோ ப்பா” என்று எழுந்து ஓடினாள். 

ராகவன் இம்முறை பயந்து கை நடுங்க அவரைப் பரிசோதித்துப் பார்க்க, மலரின் அண்ணன்கள் முன்னே வந்து நின்றார்கள். ராகவனின் கண் அசைவில் காலம் தாமதிக்காமல் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றார்கள். 

“மைனர் ஹார்ட் அட்டாக்” என்றார்கள் அவரை பரிசோதித்த மருத்துவர்கள். சரியான நேரத்திற்கு மருத்துவமனை கொண்டு வந்ததால் பயப்படத் தேவையில்லை என்றார்கள். இந்த முறை பல கட்ட பரிசோதனைகள், மாத்திரைகள், சிகிச்சைகள் எல்லாம் கடந்து, ஐந்து நாள்கள் மருத்துவமனை வாசத்திற்கு பின் வீடு திரும்பியிருந்தாரகள் அவர்கள்.

மகள்களின் மேலான அன்பும், அவர்களின் எதிர்காலம் குறித்த கவலையுமே அவரை அந்நிலைக்கு ஆளாக்கி இருந்தது. 

“அப்பா பயமுறுத்திட்டேனா சுஹா?” மகளின் தலைக்கோதி அவர் கேட்க, கண்களில் நீர் மின்ன, “இல்லப்பா” என்று திடமாக சமாளித்தாள் சுஹாசினி. ஆனால், உள்ளுக்குள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தாள். இப்போது அவளுக்கென்று இருக்கும் ஒரே உறவான அப்பாவும் இல்லாது போனால், அவளால் அதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 

அப்பாவை அதன் பின் கண்காணிப்பது ஒன்றே அவளின் முழு நேர வேலையாகிப் போனது. சில மாதங்களில் அவர் முழுதாக தேறி வர, இப்போது அக்காவின் ஞாபகம் அவளுக்கு வந்தது. 

ரோஹிணியின் அலைபேசி எண்ணை அழைக்க, அது உபயோகத்தில் இல்லை என்று வந்தது. அவளின் மும்பை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தால், அவளிடம் இருந்த அதே தொடர்பு எண்ணை தான் அவர்களும் கொடுத்தார்கள். 

அப்போதும் விடா முயற்சியுடன் மாமாவை பற்றி விசாரித்தாள் அவள். அதுவொரு முதலீட்டு நிறுவனம் என்பதால், வாடிக்கையாளரின் தகவல்களை தலையே போனாலும் தர முடியாது என்று விட்டார்கள் அவர்கள். சுஹாசினி சோர்ந்து போனாள். இன்னும் ஒரு முயற்சியாக சமூக வலைதளங்களில் அக்காவை தேடினாள். எங்குமே அவளின் தடமும், தடயமும் இல்லை. 

அதன் பின்னரே அவளுக்கு தொடர் இமெயில் அனுப்பினாள். எதற்கும் பதில் அனுப்பவில்லை ரோஹிணி. 

இதையெல்லாம் இப்போது குற்றம் சாட்டும் விக்ரமிடம் சொல்ல மனம் வராமல் அவள் பெருமூச்சு விட, “இந்த இன்டெர்நெட் யுகத்தில, உலகத்தையே குளோபல் வில்லேஜ்னு‌ சொல்ற காலத்தில, எப்படி ஒருத்தரோட பேசாம, தொடர்பில் இல்லாம உங்களால இருக்க முடிந்தது?” மீண்டும் விக்ரம் அவளை குற்றம் சாட்ட, அவனை முறைத்தாள் அவள். 

“நான் ஷ்ரவனை பார்க்க வந்தப்போ அவன் பதினைந்து நாளே ஆன குழந்தை. அப்ப கூட வெய்னிக்கு உன் ஞாபகம் தான் தெரியுமா?” அவளின் தோளை பற்றிக் கேட்டான். அவன் கையை உதறி விடக் கூட தோன்றாமல் மௌனமாய் நின்றாள் அவள்.

“குழந்தை அப்படியே என் தங்கச்சி போலவே இருக்கான் நீல்ஸ். அவளும் குழந்தையில் இப்படித் தான் இருந்தா, குட்டி குட்டி கை, கால், அதுல பிஞ்சு வெண்டைக்காய் போல விரல்னு, க்யூட்டா இருப்பா. அந்த கோலி குண்டு கண்ணு, ஊரையே கூட்டுற அழுகைன்னு இவனைப் பார்க்கும் போதெல்லாம் அப்படியே எனக்கு சுஹாவை பார்க்கற போலவே இருக்கு. அவளும் பசிச்சா இப்படித் தான் விரலை வாய்க்கு கொண்டு போவா. என் கையை நீட்டினா, அதை இறுக்கமா பிடிச்சு என் விரலை வாயில வச்சுப்பா வாலு” ரோஹிணியின் பேச்சு இப்போதும் அவன் காதில் ஒலிக்க, அப்படியே பகிர்ந்தான் அவளிடம். 

உதடு கடித்து அழுகையை சிரமப்பட்டு அடக்கினாள் அவள். அவனோ இரக்கம் இல்லாமல் தொடர்ந்தான். 

“உன்னை ரொம்பவே மிஸ் பண்ணாங்க. நீ ஒரு முறை அவங்ககிட்ட பேசியிருக்கலாம். இப்போ நீ நினைச்சா கூட பேச முடியாத தூரத்துக்கு போனதுக்கு அப்புறம் அவங்களை பார்க்க வந்திருக்க, என்ன யூஸ் சொல்லு? உங்கக்காவால இப்போ உன்னை பார்க்க முடியுமா? இல்ல, பேசத் தான் முடியுமா? எங்க அண்ணா உன்னை பார்க்க அவ்ளோ ஆசையா இருந்தார். அவருக்கும் உன்னோட பேச, பழக ஒரு வாய்ப்பு கிடைக்காமயே போய்டுச்சு. ஆனா, நீ?” கடுமையாய் குற்றம் சாட்டியது அவன் குரல். அவன் மேல் துளிர்த்த வெறுப்பையும் மீறி, கலவரம் குடியேறியது அவள் மனதில். 

“இப்போ எதுவுமே நடக்காத மாதிரி வந்து நின்னு.. ரொம்ப பாசம் இருக்க மாதிரி குழந்தையை கேட்டா, கண்ணை மூடிட்டு உன்னை நம்பி, நான் அலேக்கா குழந்தையை தூக்கி உன்கிட்ட கொடுக்கணும்னு எதிர்பார்க்கிற இல்ல? நீ எவ்ளோ பெரிய முட்டாளா இருப்ப?” அவனின் வார்த்தைகள் அவளைத் தூண்டி விட,

“உன்கிட்ட பேசுற நான் முட்டாளா இல்லாம, வேற என்னவா இருப்பேன் விக்ரம்?” என்று பதிலுக்கு கடுப்புடன் எதிர்க்கேள்வி கேட்டாள் சுஹாசினி. 

“ஹேய்..” என்று கத்தியவன், “ராக்சஷின்” என்று கொங்கனியில் முணுமுணுக்க, கோபத்தில் விரிந்தது அவள் விழிகள். 

“போடா” ஆத்திரத்துடன் கையை அவன் முகத்துக்கு நேராக வீசி சொல்லி விட்டு, விறுவிறுவென்று அவனை விட்டு விலகி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள் சுஹாசினி. 

Advertisement