Advertisement

“நான் ஓகே சொன்னா தான் கோர்ட் உன்கிட்ட ஷ்ரவனை கொடுக்கும். அது கூட தெரியாம இருக்க?” சுஹாசினியின் கண்களில் இருந்து தன் கண்களை பிரிக்காமல் விக்ரம் சொல்ல, கன்னச் சதை கடித்து கோபத்தை கட்டுப்படுத்தினாள் அவள்.

“நீ என்ன நினைக்கிற? உன்னோட பாசத்தை, இந்த கண்ணீரை எல்லாம் பார்த்து மனசு மாறி, அவனை உன்கிட்ட கொடுப்பேன்னா? நெவர்” அவனது ஆங்கிலமும், அந்த உச்சரிப்பும் அவளின் எரிச்சலை கூட்ட, “நெவர் சே நெவர் விக்ரம். அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு கூட நமக்கு தெரியாதே” என்றாள் அலட்சியமாக. 

“ஹேய்..” என்றான் கோபமாக. 

“நீ குழந்தையை தூக்கி என்கிட்ட கொடுக்கணும்னு, நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்னு நினைக்கிறியா விக்ரம்? உன்கிட்ட இருந்து குழந்தையை வாங்க நான் எல்லா வழியையும் யூஸ் பண்ணுவேன்..” அவள் ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கும் போதே கை நீட்டி அவளின் பேச்சை தடுத்து, சத்தமில்லாமல் சிரித்தான்.

“எதுக்கு சிரிக்கறீங்க?” அந்த சிரிப்பு அவனை மிகவும் கவர்ச்சியாக காட்ட, விழிகளை அவன் தோளில் பதித்து கேட்டாள் அவள். 

“சட்டத்தை எல்லா நேரமும் நமக்கு ஏற்ற மாதிரி வளைக்க முடியாது சுஹாசினி…” அவளது பெயரை அழுத்தம், திருத்தமாக சற்றே இழுத்து அவன் உச்சரிக்க, அவனை கடுமையாக முறைத்தாள். 

“அதுவும் இந்த மாதிரி கஸ்டடி கேஸ் எல்லாம், கேஸ் யார் கொடுத்தா, எவர் கொடுத்தான்னு பார்த்து, அவங்களுக்கு சாதகமா தீர்ப்பு கொடுக்க மாட்டாங்க… குழந்தையின்…” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்களை விலக்கி படுக்கையில் இருந்த குழந்தையை கவனிக்கத் தொடங்கினாள். அவளுக்கு காலையில் ராகவி சொன்னவை அனைத்தும் மடமடவென மனதில் வந்து நின்றது. 

“குழந்தையின் நலனை மட்டும் தான் கோர்ட் பார்க்கும் சுஹா. எங்க குடும்ப வாரிசு, என் அக்கா பிள்ளை, என் அண்ணன் பையன், இந்த பேச்சு எல்லாம் சட்டத்தின் முன்னாடி எடுபடாது. உங்க ரெண்டு பேருக்குமே சமஉரிமை அவன் மேல இருக்கு. ஆனா, யார்கிட்ட வளர்ந்தா குழந்தையோட எதிர்காலம் நல்லா இருக்கும்னு, அதை மட்டும் தான் கோர்ட் பார்க்கும். குழந்தையின் எதிர்காலம், அவனோட வெல்ஃபேர் அது தான் அவங்களுக்கு முக்கியம். அப்படி பார்க்கும் போது விக்ரம், நமக்கு முன்னாடி நிக்கிறார் சுஹா.”

“அவங்க அண்ணாவோட பிசினஸ் இருக்கு. அதில் வர்ற வருமானத்தை, அந்த பணத்தை கணக்கு காட்டினாலே போதும். அதுவும் இல்லாம விக்ரமும் ராஸ் அல் கைமாவில் சொந்த தொழில் செய்திட்டு இருக்கார். அவங்க அண்ணாவோட முந்திரி பருப்பு ஏற்றுமதி பிசினஸ், விக்ரமோட கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி, ரெண்டும் குழந்தைக்கு பிரகாசமான எதிர்காலத்தை நிச்சயம் தரும். சோ, கோர்ட்…” 

“விக்ரம் அங்க வேலை பார்க்கலையா?” சுஹாசினி கேட்க,

“வேலை தான் பார்க்கிறார். ஆனா, சொந்த கம்பெனி. லண்டனில் அவரோட படிச்ச ப்ரெண்ட் கூட சேர்ந்து தொழில் தொடங்கி இருக்கார். அந்த பையன் எமராத்தி, அரபிக். அதாவது அந்த நாட்டு பையன். சோ, பிசினஸ் ரொம்ப நல்லாவே போகுது போல.”

“ஓ…” என்றாள் அதிர்ச்சியுடன்,

“அவங்க வீட்ல இருக்க கேர் டேக்கரை குழந்தையை பார்த்துக்க கூட அழைச்சுட்டு, உடனே துபாய் கிளம்பி இருக்கலாம் விக்ரம். ஆனா, எல்லாத்தையும் ஒரு ஒழுங்கோட முறையா செய்யணும்னு நினைக்கிறார் போல. அவங்க பேர் என்ன சொன்ன? சாந்தாம்மா ரைட்? அவங்களை எவ்வளவு நாள் குழந்தையை பார்த்துக்க சொல்ல முடியும்? அங்க போய் பேபி சிட்டர் வைத்தா கூட.. எல்லாமே டெம்ப்ரவரி சொல்யூஷன் தானே? கல்யாணம் மட்டும் தானே நிரந்தர தீர்வா இருக்க முடியும்?”

“ஓ, அப்படி…” 

“எஸ் சுஹா..” என்று ராகவி, “குழந்தை வளர்ந்த பின்ன ஒரு பெண்ணை அவங்க வாழ்க்கையில் கொண்டு வர்றதுக்கும், இப்பவே கொண்டு வர்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு இல்ல? அதுவே இப்பவேன்னா ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இயல்பா பாசமும், ஒட்டுதலும் வந்திடும், இல்ல?”

“ஆமா, இல்ல?” 

“ஆமாவே தான் சுஹா. அவர் சட்டப்படி முறையா குழந்தையை தத்தெடுக்குறது கூட அதுக்காக தான். இனி இவன் நம்ம குழந்தை அப்படினு அவரோட மனைவி மனசுல அழுத்தமா பதிய வைக்க தான்”

“என்ன இவ்வளவு யோசிச்சு இருக்கார்? நான்.. நான் எதுவுமே யோசிக்காம.. பிள்ளையை கொடுனு வந்து நிக்கறேன் ரா”

“உதய் தான் இதையெல்லாம் எனக்கு சொன்னார் சுஹா. விக்ரமை எதிர்த்து நீ கோர்ட்டுக்கு போனாலும், உனக்கு சாதகமா தீர்ப்பு வர்றதுக்கு வாய்ப்பு ரொம்ப குறைவு.”

“என்ன இப்படி சொல்ற ரா..”

“ரியாலிட்டி அதான். அப்போ அதைத் தானே சொல்ல முடியும்? உனக்கு வேலை இல்ல. அப்பா சீக்கிரம் ரிட்டையர்டாக போறாங்க. விக்ரம் குடும்பம் அளவுக்கு உங்ககிட்ட பணமில்ல, வசதியில்ல. இப்படி நிறைய காரணங்களை உனக்கு எதிராக அவர் வைப்பார். அத்தோட இல்லாம, நாளைக்கு உனக்கு கல்யாணமானா, உன் ஹஸ்பன்ட் குழந்தையை பார்த்துக்க மாட்டார்னு சந்தேகப்படுறேன்னு அவர் சொல்லலாம்..”

“அதெப்படி சொல்ல முடியும் ரா..”

“முடியுமே. இந்த விஷயத்தில் பெண்கள் அளவுக்கு ஆண்கள் பரந்த மனசுள்ளவங்க கிடையாது. நான் பொதுவா சொல்றேன் சுஹா. ஆனா, உன் விஷயத்தில் குற்றம் சொல்லணும்னா… இதுக்காக நீ ஏற்கனவே கல்யாணத்தை நிறுத்தி இருக்க.. அதைச் வச்சு உன்னை கார்னர் பண்ண முடியும்..”

“எப்படி? எப்படி ரா? இவங்களுக்கு நான் கல்யாணத்தை நிறுத்தினது, அது தெரிய வாய்ப்பில்லையே?” அதிர்ச்சியுடன் கேட்டாள் சுஹாசினி. 

“ஒருவேளை தெரிஞ்சுருந்தா..?” என்ற ராகவியின் கேள்வியில் சுஹாசினிக்கு நின்ற இடத்தில் உலகம் சுற்றுவது போலிருந்தது. 

இப்போது அதை யோசித்துக் கொண்டிருந்தவளின் முன்னே சொடக்கிட்டான் விக்ரம். பார்வையை குழந்தை மேலேயே பதித்து, சிந்தனையில் மூழ்கி, நீந்திக் கொண்டிருந்தாள் சுஹாசினி. 

“சுஹாசினி…” அவளின் தோளை ஒற்றை விரலால் தொட்டு, அவன் அழைக்க, திரும்பிப் பார்த்து, “என்ன?” என்றாள் விழிகளால். 

“என் முன்னால நிறைய பிரச்சனைகள் இருக்கு. எல்லாத்தையும் சரி பண்ணிட்டு, என் வேலையை பார்க்க போகணும் நான். ரொம்ப நாளைக்கு இங்க இருந்து என்னால வொர்க் பண்ண முடியாது. குழந்தை வளர்ப்பு ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை. முழு மனசோட பொறுப்பா, ஆழ்ந்த ஈடுபாட்டோட, அளவில்லா பாசத்தோட செய்ய வேண்டிய வேலை. கோர்ட், கேஸ்னு போய் அதை காம்பிளிகேட் பண்ணிக்க வேணாம். வீணா குழந்தை வாழ்க்கை தான் பாதிக்கப்படும். பிளீஸ்” விக்ரம் தணிவாக கேட்க, அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

அவளிடம் இருந்து குழந்தையை அவன் எப்போதோ பறித்து விட்ட உணர்வு. அக்காவின் குழந்தையை இனி இவனது அனுமதியோடு மட்டுமே பார்க்க முடியும் என்ற எண்ணங்கள் மனதில் தோன்ற, உதடு கடித்து உணர்ச்சிகளை கண்களில் இருந்து துடைத்தாள் அவள். 

“ஷ்ரவனை என் வசமாக்க, நான் எந்த எல்லைக்கும் போவேன் சுஹாசினி. சத்தியமா உங்களை மிரட்ட நான் இதை சொல்லல. உண்மையை சொல்றேன். அவ்வளவு தான்” 

“அதையே தான் நானும் சொல்றேன். நாம பேசி நல்லதா ஒரு முடிவுக்கு வரலாம்னு நினைச்சேன். ஆனா, நீங்க ஏற்கனவே ஒரு முடிவோடு தான் இருக்கீங்க. நானும் என் முடிவில் இருந்து மாறப் போறதில்லை. பார்ப்போம்.” 

“உங்க நேரத்தை தேவையில்லாம வீணாக்கறீங்க. அவ்ளோ தான் சொல்லுவேன்” அவன் அலட்சியமாக சொல்ல, தன் கையை விட்டு அனைத்தும் நழுவும் உணர்வில், ஆழ்ந்த மூச்செடுத்தாள் சுஹாசினி. 

அவளை நிறைத்தது அவன் வாசம். தோட்டத்து பூக்களின் வாசத்தை மீறி, வியர்வையும், விலை உயர்ந்த பெர்ஃப்யூமின் மணமுமாக கலந்து அவன் வாசம், அவள் நாசியை நிறைக்க, சட்டென அவனிடம் இருந்து விலகினாள் அவள். அவனை இடித்து விடாமல் நகர்ந்து, வீட்டின் பின் பகுதியை நோக்கி நடந்தாள். 

மனதின் விரக்தி கால்களுக்கு வேகத்தைக் கொடுக்க, நொடிப் பொழுதில் பின் பக்க கேட்டை திறந்து கொண்டு வெளியேறி இருந்தாள். 

அவள் கால்கள் நேராக கடலை நோக்கி சென்றது. அவள் மனதின் இரைச்சலுக்கு நேர்மாறாக சலனமற்று இருந்தது அவள் எதிரே விரிந்திருந்த கடல். 

கடல் நீர் சற்றே உள்வாங்கி, அலைகள் அற்று அப்படியொரு அமைதியாய் இருந்தது. அந்த அமைதி கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதிலும் இடம் மாற, மெல்ல கடலை நோக்கி நடந்தாள். அவள் கால்களுக்குள் ஓடி குறுகுறுக்க வைத்தது குட்டி குட்டி நண்டுகள். காலை உதறி முன்னோக்கி நடந்தாள். 

“சாந்தா ம்மா, குழந்தையை பார்த்துக்கோங்க” என்று கத்தி விட்டு, பந்தய குதிரையை போல கடலை நோக்கி ஓடினான் விக்ரம். 

சுஹாசினி கொஞ்சம் கொஞ்சமாக ஆழத்தை நோக்கி செல்ல, “சுஹாசினி..” கத்தினான். எதிர்காற்றில் அவன் குரலே அவன் காதில் மோதியது. 

“சுஹாசினி…” இரண்டே நிமிடத்தில் அவளை நெருங்கி, “என்ன பண்ற? என்ன பண்ண இருந்த?” என்று அடித் தொண்டையில் இருந்து கத்தியவன், அவளின் கையை இறுக பற்றி இழுத்தான். அவன் மேல் பலமாக மோதி நின்றாள் சுஹாசினி. 

“என்னோட வா…” 

“எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் விக்ரம். என்னை விடுங்க பிளீஸ்.” அவனை உதறித் தள்ளிவிட்டு விலகினாள். 

“தனியா தானே? தாராளமா இரு. யார் வேணாம்னு சொன்னா? அந்த தனிமை ஆபத்தான நடுக்கடலில் தான் இருக்கா என்ன?” கோபமும், நக்கலுமாக கேட்டான் அவன். 

“எனக்கு நீச்சல் தெரியும்” முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னாள் அவள்.

“கடல், உன் வீட்டு ஸ்விம்மிங் ஃபூல் கிடையாது, முட்டாள்” என்றவனை முறைத்து, “தெரியும். எனக்கு அப்போ பதினைஞ்சு வயசு. கடல்ல ஸ்விம் பண்ணும் போது.. மூழ்கி.. மரணத்தை தொட்டு உயிர் பிழைச்சு வந்தேன். சோ..” அவளின் கண்களை வெறித்தவனின் கண்களில் வேட்டை மிருகத்தின் பளபளப்பு. அந்த பழுப்பு கண்கள், புலியின் சாயலை கொண்டிருக்க, பேச்சு மறந்து அவன் விழிகளை உறுத்தாள் சுஹாசினி. 

அவள் மேலிருந்து கண்களை விலக்காமல், அவளின் கையை இரும்பு பிடியாக பிடித்தான். அவசர அவசரமாக அவளை இழுத்துக் கொண்டு கரைக்கு வந்திருந்தான் விக்ரம். 

“கையை விடுங்க விக்ரம். வலிக்குது” கத்தினாள். 

“நம்ம வாழ்க்கை நமக்கு மட்டும் சொந்தமானது இல்ல. உயிரை எடுக்க நமக்கு எந்த உரிமையும் இல்ல. நாம இல்லாம போனா, அது நமக்கு தெரியக் கூட போறதில்ல. ஆனா, நம்மை சுத்தி இருக்கவங்க? நமக்காக அழ போறது அவங்க தான். அவங்க உயிரோடு வாழுற வரைக்கும்.. நமக்காக வருந்துவாங்க. தே வில் மிஸ் அஸ்” அவன் சொல்ல சொல்ல, அமைதியாய் கடலை பார்த்தாள் சுஹாசினி. 

“சாரி. நான் சும்மா கால் நனைக்க தான் போனேன். வேற எந்த நோக்கமும் இல்ல. நிச்சயமா உங்களை பயமுறுத்த நினைக்கல.” என்ற சுஹாசினி திரும்பி அவனை நேராக பார்த்தாள்.

“அம்மாவோட இழப்பு இன்னமும் என்னால ஜீரணிக்க முடியாத ஒன்னு. இப்போ ரோஹிணிக்காவும் இல்ல. அவங்க ரெண்டு பேரோட இழப்பும் என்னை ரொம்ப தடுமாற வைக்குது. நல்லா யோசிச்சு பார்த்தா, எங்க அம்மா தவறினப்பவும் இப்படித் தான் இருந்தேன். ஒரு மாதிரி குழப்பமான மன நிலையோட.. எதையும் சரியா சிந்திக்க முடியாம… சரியான முடிவுகள் எடுக்க முடியாம.. ப்ச், துக்கத்தை கையாளுறதில் நான் ரொம்ப மோசம்னு இப்ப தான் எனக்கே புரியுது” அவள் சொல்ல, மெல்ல தலையசைத்து அவள் பேச்சை கேட்ட விக்ரம், “அம்மா.. எப்போ தவறினாங்க?” என்றுக் கேட்டான்.

“உங்ககிட்ட ரோஹிணிக்கா சொன்னது இல்லையா?” அவள் கேட்க, மறுப்பாக தலையசைத்தான் அவன்.

“வெய்னி..” என்றவனின் குரல் கரகரக்க, தொண்டையை கனைத்து சீர் செய்து, “அவங்க கூட அதிக நாள்கள் நான் இருந்ததில்ல. நாங்க சேர்ந்து இருக்க சந்தர்ப்பம் அமையல. அண்ணாக்கு கல்யாணமாகும் போது தான், நான் படிப்பை முடிச்சு இருந்தேன். வெய்னி என்னை அவங்க சொந்த தம்பியை போல தான் நடத்தினாங்க. ரொம்ப பாசமா இருந்தாங்க. வெரி ப்ரெண்ட்லி. நான் படிப்பை முடிச்சுட்டு வரவும், அண்ணா என்னை ஃபேமிலி பிசினஸ் பார்க்க சொன்னாங்க அப்போ. கிட்டத்தட்ட கட்டாயப்படுத்தினார். 

ஆனா, எனக்கு வேறு விதமான கனவுகள் இருந்தது. அதை எனக்கு சாத்தியப்படுத்தி கொடுத்தது வெய்னி தான். எனக்காக அண்ணா கிட்ட சண்டை போட்டு பெர்மிஷன் வாங்கிக் கொடுத்தாங்க. அதுக்கப்புறம் வெளிநாடு, வேலை, வாழ்க்கைனு ரொம்ப ரொம்ப பிஸியாகிட்டேன். நேரம் கிடைக்கும் போது கோவா வந்தேன். குடும்பத்தோடு இருந்தேன் தான். ஆனா, இட் வாஸ் நாட் இனாஃப். ஐ மிஸ் தெம்” அவன் குரல் உடைய, சட்டென பேச்சை மாற்றினான்.

“வெய்னி அவங்க பெர்சனல் லைஃப் பத்தி, நான் அதிகம் பேசி கேட்டதில்லை. அதாவது, உங்களை எல்லாம் பத்தி..” என்று விக்ரம் நீளமான விளக்கம் தர, “ம்ம்” என்றாள் சுஹாசினி.

“அக்கா என்னை விட அஞ்சு வயசு பெரியவ. சின்ன வயசுல அவ கண்டிக்கும் போதெல்லாம் கோபமும், அழுகையுமா வரும். என் கூட போட்டி போட்டு சண்டை போடும் போதெல்லாம் என்னையும் அறியாம, அவளை வெறுக்க ஆரம்பிச்சேன். எனக்கு நினைவு தெரிஞ்சு நாங்க சண்டை மட்டும் தான் நிறைய போட்டு இருக்கோம். ஆர், மே பீ.. அது மட்டும் தான் என் மனசுல ஆழமா பதிஞ்சு இருக்கோ.. என்னவோ… அக்காகிட்ட இருந்து விலகி என் வயசு பசங்ககிட்ட க்ளோஸ் ஆனேன். என் பக்கத்து வீடு ராகவி, ராகவன், மலர்னு‌ எப்பவும் நாங்க நாலு பேர் தான் ஒன்னா இருப்போம். ஸ்கூல், வீடு, வெளி உலகம்னு எல்லா இடத்துலயும் ஒன்னா தான் இருந்தோம். அதுல மாற்றம் வந்ததுன்னா.. எங்க அம்மா இறந்த நேரம் தான்..” 

“எனக்கு எல்லாத்துக்கும் அம்மா வேணும். அவங்க கூட நான் ரொம்ப க்ளோஸ். நல்லா வளர்ந்த பின்னாடி கூட அம்மா புடவையை பிடிச்சுட்டு சுத்துற அளவுக்கு.. அம்மாவை கட்டிட்டு தூங்குற அளவுக்கு க்ளோஸ்.. சமையல், தோட்ட வேலைன்னு ராகவி, மலர், நான்.. அம்மா பின்னாடியே சுத்துவோம். ஒரு நாள் சட்டுனு அம்மா இல்லனதும்.. எனக்குனு யாருமே இல்லாத ஃபீல். அப்போ அக்காவை அதிகமா தேடினேன். ரோஹிணிக்கா அப்போ பூனேல ஹாஸ்டலில் தங்கி காலேஜ் படிச்சுட்டு இருந்தா. எனக்காக ஒதுக்க அவகிட்ட நேரமில்ல.”

சுஹாசினி கடலை பார்த்தபடி கடந்த காலத்தை பகிர்ந்து கொண்டிருக்க, எப்படி இந்த நிலைக்கு வந்தோம் என்ற வியப்புடன் அவளைப் பார்த்தான் விக்ரம். இருவரும் தற்போதைக்கு எதிரியாக நினைக்கும் மற்றவரிடம் மனம் திறப்பது அவனுக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

வேதனையும், வலிகளும் பொதுவென்று அவனுக்குத் தான் புரியவில்லை. 

“நிறைய முறை அக்காகிட்ட நெருங்க டிரை பண்ணியிருக்கேன். ஒரு கட்டத்தில் சலிப்பாகி ஒதுங்கிட்டேன் போல. அந்நேரம் என் பிரெண்ட்ஸ் கூட ரொம்ப க்ளோஸ் ஆனேன். அதிலேயும் அந்த.. அந்த.. ஆக்ஸிடென்ட்.. “

“இட்ஸ் ஓகே சுஹாசினி. எனக்குப் புரியுது. நீங்க சொல்ல வேணாம்”

ஆனால், தொடங்கிய பின் அவளால் நிறுத்த முடியவில்லை. 

“கடல்ல மூழ்கி போக இருந்தேன் சொன்னேன் இல்ல? அப்போ என்னை காப்பாத்த டிரை பண்ணி ராகவியும் மூழ்கிப் போக இருந்தா…”

“ஓ மை காட்.. தென்?”

“எங்க ரெண்டு பேரையும் கரை சேர்த்த ராகவி அம்மா.. கடல்ல கரைஞ்சு போய்ட்டாங்க. என்னால.. ராகவி அவளோட அம்மாவை இழந்தா…”

ஆறுதல்கள் சொல்லத் தான் நினைத்தான் விக்ரம். ஆனால், வார்த்தைகள் அவனை கை விட்டிருந்தது. மௌனமாய் நின்றான் அவன். 

“அவங்க அம்மா இறப்புக்கு நான் தான் காரணம்னு.. எனக்குள்ள பயங்கர குற்ற உணர்ச்சி.. ராகவி மட்டும் அப்போ என்னை வெறுத்திருந்தா.. நான் என்னவாகி இருப்பேன்னே எனக்குத் தெரியல.. நான் கில்டியா ஃபீல் பண்ண கூடாதுனு எப்பவும் என் கூடவே இருப்பா.. அதுனால நாங்க இன்னும் க்ளோஸ் ஆனோம். அக்காவை அதுக்கு அப்புறம் நான் அதிகம் தேடல. ஸ்கூல் முடிச்சு, காலேஜ்னு என் லைஃப் நகர ஆரம்பிச்சதும் ஒரு காரணம்” சுஹாசினி சொல்லி முடிக்க, “ம்ம்” என்ற விக்ரம், “சாரி” என்றான். 

“ஏன் சாரி?”

“சொல்லணும் தோனுச்சு. அந்த குட்டி சுஹாசினியை பார்க்க பாவமா இருந்துச்சு. அதான். ஆனா, கண்டிப்பா உங்களை பார்க்க பாவமா இல்ல” என்று அவன் சேர்த்துச் சொல்ல, மெலிதாக புன்னகை துளிர்த்தது அவள் இதழ்களில். 

துயரமும், வலியும் எப்போதும் மனிதர்களை இணைக்கும் என்று நம்பினாள் அவள். அதை அக்கணம் யாரும் விளக்கி சொல்லாமலே உணர்ந்தான் அவன். 

“நான் காலேஜ் படிச்சுட்டு இருக்கும் போது, ரோஹிணிக்கா, உங்க அண்ணாவை..” அவன் முறைக்க, “மாமாவை விரும்பறேன்னு அப்பாகிட்ட சொன்னா. உங்களுக்கும் தெரிஞ்சு இருக்கும். அப்பா ஒரேடியா மறுத்துட்டாங்க. ஜாதி, மதம், காதல் இதுக்கெல்லாம் அப்பா எதிரி கிடையாது. ஆனா, சொந்தம், பந்தம், ஊர், உறவு, இவங்களுக்கு எல்லாம் பயந்தார் அப்பா.”

“அவங்க தானே இப்போ உங்களுக்கு சோறு போடுறாங்க. வெய்னி இழப்புக்கு அவங்க ஆறுதல் சொன்னா உங்களுக்கு சரியாகி இருக்கணுமே?” அவன் சுள்ளென்று கேட்க, அவனின் நியாயமான கோபத்தின் முன் மௌனமானாள் சுஹாசினி.

 

Advertisement