Advertisement

காலை பொழுது நன்றாக புலர்ந்து விட, கீழிறங்கி சென்றாள். 

அந்த அதிகாலையில் விழித்து, கையை காலை உதைத்து எவருக்கும் புரியாத மொழியில் எதை எதையோ சொல்லிக் கொண்டிருந்தான் குழந்தை. 

அவனுக்கு பக்கத்தில் படுத்து, அரைத் தூக்கத்தில் கண்கள் சொருக குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தான் விக்ரம். 

“குட் மார்னிங்” என்று சொல்லி, கதவை லேசாக தட்டி விட்டு உள்ளே சென்றாள் சுஹாசினி. 

அவள் குழந்தையிடம் பேச்சுக் கொடுத்து, விளையாட்டும் காண்பிக்க, விக்ரம் நிம்மதியாக உறங்கி போனான். 

அதன் பின் ஷ்ரவனை அவள் மட்டுமே கவனித்துக் கொண்டாள். ராகவன், வெங்கடேஷ் எழுந்து வர, குழந்தையுடன் பொழுது இயல்பாக நகரத் தொடங்கியது. 

சாந்தாம்மா முன் தினம் போல இல்லாமல், அவளிடம் சாந்தமாகவே நடந்துக் கொண்டார்.

காலை உணவு முடித்து அவர்கள் அனைவரும் ஹாலில் ஓய்வாக அமர, அவள் கைகளில் உறங்கி விட்ட குழந்தையுடன் விக்ரமின் அறைக்குள் நுழைந்தாள். குழந்தையை படுக்கையில் விட்டுவிட்டு திரும்பியவளின் பார்வை, தீர்க்கமாக விக்ரமின் மேல் பதிந்தது. 

அவனும் எதிர்பார்த்து காத்திருந்தான் போலும். இதற்கு மேலும் இதை தள்ளிப் போட அவனுக்கும் விருப்பமில்லை. 

“வாங்க” என்று கைக் காட்டி விட்டு வீட்டின் கூடத்தை நோக்கி நடந்தான் அவன். 

சாந்தாம்மாவை சத்தமாக அழைத்து குழந்தையின் பக்கத்தில் இருக்க சொல்லி விட்டு, சோஃபாவை சுஹாசினிக்கு கைக் காட்டினான். 

இருவரும் எதிரெதிராக அமர்ந்தனர். 

வெங்கடேஷ், ராகவன் இருவரும் அவளுக்கு பக்கத்தில் இருக்க, இருவரையும் பார்த்து புன்னகைக்க முயன்றாள். 

“என்னம்மா?” வெங்கடேஷ் கேட்க,

“விக்ரம் பேசணும்னு சொன்னார் ப்பா. எனக்கும்…” தயக்கத்துடன் அவள் பதில் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, “சுஹா” கண்டிப்புடன் ஒலித்தது அந்த பெற்றவரின் குரல். 

மகள் புரியாமல் பேசுகிறாளே என்ற ஆதங்கம் தான் அவருக்கு. பெண்களுக்கு என்று விதவிதமாக வித்தியாசமாக சட்ட திட்டங்களை சமூகம் வரையறுத்து வைத்திருக்கும். 

அதை மீறினால், கடுமையாய் எதிர்ப்பார்கள். அதையும் மூத்த மகள் விஷயத்தில் அவர் தான் கண் கூடாக பார்த்தும் விட்டாரே. ஒரே மதம் என்றாலும், வேறு மாநிலம், வேற்று மொழி, அதுவும் காதல் திருமணம் என்று கேட்டதும், சுஹாசினியை பெண் எடுக்க எத்தனை பேர் மறுத்தார்கள் என்பதை அவர் மட்டுமே அறிவார். அரிதாய் வந்த வரனையும், அவளே அல்லவா வேண்டாம் என்று விட்டு எழுந்து வந்திருந்தாள். 

பெண் அனைத்து தகுதிகளுடன் இருக்கும் போதே அத்தனை குடைச்சல். இதில் குழந்தையுடன் போய் நின்றாள்? மகளை யார் மணப்பார் என்ற கவலை தான் பெற்றவருக்கு. அதற்காக அவருக்கு பேரன் மேல் பாசம் இல்லாமல் இல்லை. 

அதை தெளிவாக விக்ரமிடம் சொல்லவும் செய்தார் அவர். 

“குழந்தையை நீங்க நல்லா பார்த்துப்பீங்கன்னு நம்புறேன் தம்பி. அதுனால, நீங்க அவனை வளர்க்கறதில் எந்த ஆட்சேபனையும் எனக்கு.. எங்களுக்கு இல்ல. ஆனா, அவனை அடிக்கடி பார்க்க எங்களை அனுமதிக்கணும். நீங்க இந்தியா வரும் போதெல்லாம் எங்களுக்கு தகவல் சொன்னா, வந்து பார்த்துப்போம். உங்க துபாய் அட்ரஸ் கொடுத்தா, விசிட் விசா எடுத்து எங்களுக்கு அவன் நினைப்பு வரும் போது வந்து பார்த்துப்போம்..” அப்பா பேச பேச, அவரின் கையை பிடித்து ஆட்சேபித்து அழுத்தினாள் சுஹாசினி. 

“அவனுக்கு ஆசைப்பட்டு, என் வசதிக்கு தகுந்த மாதிரி, நாங்க ஏதாவது செய்தா, நீங்க ஏத்துக்கணும்” வெங்கடேஷ் முடிக்க, “அப்பா..” என்று கத்தினாள் சுஹாசினி. 

“சும்மா இரும்மா.” மகளை அடக்கினார் வெங்கடேஷ். 

அவர்களின் எதிரில் அமர்ந்திருந்த விக்ரமுக்கு, அன்றொரு நாள் இது குறித்து வெங்கடேஷ் பேசும் போதும் சுஹாசினி பின்னால் மறுத்து பேசி கத்தியது நினைவில் வந்தது. 

அவள் பேசிய மொழி புரியவில்லை என்றாலும், அதில் தொனித்த கோபமும், வருத்தமும் அவனுக்கு தெளிவாக புரிந்தது. அன்றே அவளை எதிர்கொள்ள தயாராகி விட்டான் அவன். 

அதனால் இப்போது அவள் முன் திடமாக, தெளிவாக அமர்ந்திருந்தான் அவன். 

“என் மூத்த மகளை நான் சரியா பார்க்கலைன்னு ஏற்கனவே உங்களுக்கு கோபம் இருக்கும். அதை நான் தப்பு சொல்லவும் மாட்டேன். ஒரு அப்பாவா, இப்பவும் என் இளைய மகளுக்காக, இருக்கற மகளுக்காக யோசிக்கிறேன். சுயநலம் தான். என்ன செய்ய, என் வயசு அப்படி? எல்லாத்தையும் யோசிக்க வேண்டியிருக்கு.”

“எனக்கு உங்களை புரியுது அங்கிள்” விக்ரம் புரிதலுடன் சொல்ல,

“இல்ல தம்பி. இன்னைக்கு பாசம், பிணைப்பு, வாரிசு, என் பொண்ணோட குழந்தைன்னு காரணம் சொல்லி, உணர்ச்சி வசப்பட்டு குழந்தையை உங்ககிட்ட இருந்து நான் வாங்கிட்டு போகலாம். ஆனா, என் உடம்பு இருக்கற நிலைமைக்கு நாளைக்கே நான் இருப்பேனா தெரியாது.”

“அப்பா.. ஏன் ப்பா, இப்படி பேசுறீங்க?” மகள் உடைந்த குரலில் குறுக்கிட, அவள் பேசாதது போல பாவித்து, 

“இந்த வயசானவன் எத்தனை நாளைக்கு இந்த பிஞ்சு குழந்தையை வளர்க்க முடியும்? வீம்புக்கு தூக்கிட்டு போய் அவனை கஷ்டப்படுத்த கூடாது. இல்ல? சுஹாசினி நாளைக்கே வேற வீட்டுக்கு போகப் போற பொண்ணு. அவளை கல்யாணம் பண்ணிக்க வர்றவன் குழந்தையையும் சேர்த்து ஏத்துப்பான்னு நாம எதிர்ப்பார்க்க முடியாது, இல்ல?” எல்லாவற்றையும் முன்பே தெளிவாக யோசித்து பேசினார் அவர். 

“எனக்கு கல்யாணமே வேணாம். நான் கல்யாணமே பண்ணிக்க போறதில்ல. ஷ்ரவன் போதும் எனக்கு” மனஅழுத்தத்தை குரலில் காட்டாமல் அழுத்தமாக சொன்னாள் சுஹாசினி. 

விக்ரமின் பழுப்பு கண்கள் பளபளத்து, அவள் மேல் பதிந்தது. 

ஒருவித சுவாரசியத்துடன் அவளைப் பார்த்தான் அவன். 

“பேசாம இரு சுஹாசினிம்மா.” மகளை அதட்டினார் வெங்கடேஷ்.

“நீங்க சட்டப்படி என்ன பண்ணனுமோ அதைப் பண்ணுங்க. எங்க தரப்பில் இருந்து உங்களுக்கு எந்த தடையும், தொந்தரவும் வராது” வெங்கடேஷ் சொல்லி விட்டு மகளின் கைப் பிடித்து எழுப்பிக் கொண்டு வெளியில் நடந்தார். அவள் மேலிருந்த கோபத்தில் அவர் பேசிய பேச்சுக்களை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டாள் சுஹாசினி. 

மதிய உணவுக்கு பின் வெங்கடேஷ் சிறிது நேரம் உறங்க, ராகவன் முக்கியமான அலைபேசி அழைப்பில் மூழ்கி இருந்தான். 

சுஹாசினி அந்த தனிமையை பயன்படுத்தி மெல்ல நழுவி கீழிறங்கி வந்தாள். 

குழந்தை உறங்கிக் கொண்டிருக்க அவன் பக்கத்தில் ஓய்வாக சாய்ந்து அமர்ந்திருந்தான் விக்ரம். அவளைப் பார்த்தும் அப்படியே அமர்ந்திருந்தவனை கடுப்புடன் பார்த்து, “பேசணும்” என்றாள். 

“ஓகே” என்று கைகளை உயர்த்தி, சோம்பல் முறித்து கட்டிலில் இருந்து இறங்கினான். 

அறையை ஒட்டியிருந்த ஃப்ரெஞ்ச் விண்டோவை திறந்தான். அவனைப் பின் தொடர்ந்து அவளும் வெளியேறினாள். ஆனால், குழந்தை கண்ணில் தெரியும் படி திரும்பி நின்றுக் கொண்டாள். அதைப் பார்த்து அவன் முகத்தில் புன்னகையின் சாயல். அது குழியாய் கன்னத்தில் விழ, அவள் கண்கள் அந்தக் குழியில் விழுந்து எழ முடியாமல் தடுமாறியது. 

“சொல்லுங்க” 

“எனக்கு ஷ்ரவன் வேணும். நீங்க அவனை என்கிட்ட கொடுத்துடுங்க விக்ரம். எனக்கு ரோஹிணி கா ஞாபகமா நான் அவனை கேட்கல. அக்கா இருந்தாலும், இல்லைனாலும், நானும் அவனுக்கு அம்மா தானே? எங்களை போல அவனும் ஏன் அம்மா இல்லாம வளரணும்? அவனுக்கு நான் இருக்கேன்” வார்த்தைகள் அவள் மனதின் உணர்ச்சிகளை சுமந்து வர, “இந்த அன்பிலயும், பாசத்துலயும் கொஞ்சத்தை வெய்னி (அண்ணி) இருந்த போது காண்பிச்சுருக்கலாம்” முணுமுணுத்து, கைகளை காற்சட்டை பையில் திணித்துக் கொண்டு, அவளை கூர்ந்துப் பார்த்தான் விக்ரம். 

“நானும், உங்களை போலவே யோசிக்கலாம் இல்லையா?” அவன் மென்மையாக கேட்க, அந்த குரலும், தொனியும் அவளைக் குழப்பியது. 

“உங்க மனைவி.. ஐ மீன், உங்களுக்கு நாளைக்கு வரப் போற மனைவி, குழந்தையை எப்படி பார்த்துப்பாங்கன்னு..” சட்டென அவளை இடைவெட்டி, “இதே கவலை, எனக்கும் இருக்குமே” என்று நிதானமாக சொன்னான் அவன். 

அவனது நிதானத்தை பார்த்து வந்த பதட்டத்தில் எச்சில் கூட்டி விழுங்கினாள் சுஹாசினி. 

“நான்.. நான்..” அவள் தடுமாற,

“உங்கப்பா எனக்கு பிராமிஸ் பண்ணி கொடுத்துட்டார். நீங்க பிரச்சனை பண்ண நினைக்காதீங்க. பிளீஸ்” அவன் குரலில் லேசான சலிப்பு தெரிய, சட்டென அவனை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தாள் அவள். அவனது விழிகளை ஊடுருவினாள். 

அக்கணம் ராகவியின் எச்சரிக்கை அவள் செவியில் எதிரொலிக்க, அதை புறந்தள்ளி விட்டு, “நான் நாளைக்கே கார்டியன்ஷிப் கேட்டு பெட்டிஷன் போடுவேன். கோர்ட் எனக்கு சாதகமா தான் தீர்ப்பு கொடுக்கும். நீங்க ஒருத்தர். ஆனா, எங்க பக்கம், நானும், அப்பாவும் இருக்கோம். எங்களுக்கு தான் வாய்ப்பு அதிகம்” அவள் அவசர அவசரமாக அவன் கண்களை பார்த்துச் சொல்ல, அந்த பழுப்பு கண்களில் பளபளப்பு கூடியது. 

அவன் கண்களும், உதடுகளும் ஒரு சேர பிரிந்தன. கன்னத்துக் குழியை இப்பொழுது கண்டுக்கொள்ளவில்லை அவள். 

அவளை தொட்டு விடும் தூரத்தில் நெருங்கி நின்று, மென்னகை புரிந்தான். அவன் சிரிப்பை கண்களில் தொக்கி நின்ற கேள்வியுடன் விழி விரித்து பார்த்தாள் சுஹாசினி. 

“உனக்கு ஒன்னு தெரியுமா?” என்று அவன் ராகம் இழுக்க, அவனின் ஆங்கிலத்தை எப்போதும் போல பல்லைக் கடித்துக்கொண்டு காதில் ஏற்றினாள் அவள். 

“எம்பிஏ படிச்சு இருக்க இல்ல? உனக்கு பேசிக் லா கூட தெரியாதா?” இப்போது நக்கலாக அவன் கேட்க, அவளுக்கு பதில் தெளிவாக தெரிந்துப் போனது. 

“படிக்காத முட்டாள் மாதிரி பேசுற” அவனது அலட்சியம், உதாசீனத்துடன் இப்போதும் அவமானப்படுத்துவதும் சேர்ந்துக் கொள்ள, அவனை உறுத்து விழித்தாள் சுஹாசினி. 

Advertisement