Advertisement

சுஹாசினி வேகமாக சென்று மதுமிதாவின் கைப் பிடித்து, “ரொம்ப தேங்க்ஸ் மது” என்றாள். 

“ஓய்.. என்ன? நான் நம்ம ரிசார்ட் ஓபனிங்கு நிரஞ்சனை கூப்பிட்டேன். அதுக்கு ஏன் நன்றி எல்லாம் சொல்ற நீ?” என்று பொய்யாக கோபித்தாள் மதுமிதா. 

“பாவிமகளே, அவர் உன் ப்ரெண்ட்னு ஒரு நாளாவது சொல்லியிருப்பியா?” 

“நிரஞ்சன் என்னோட ஸ்கூல் மேட். அதான் அவரைப் பத்தி நான் நிறைய பேசினது இல்ல. அவருக்கு நான் சொல்லி தான் எங்க அப்பாவை தெரியும். சோ, என்கிட்ட எப்பவும் பேசுவார்” புன்னகையுடன் சொன்னாள் மதுமிதா. 

இத்தனை வருடங்களாக மதுமிதா அவர்களிடம் இருந்து விலகியே இருந்த காரணத்தினால் நிரஞ்சனின் நட்பை பற்றி சொல்லும், பேசும் வாய்ப்பு அவர்களுக்கு அமையவில்லை.

“ம்ம். இன்னைக்கு அவர் வந்தது ரொம்ப ஸ்பெஷல். ஷ்ரவன் அவரோட பயங்கர ஃபேன். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி துபாயில் ஐபிஎல் நடந்த போது, அவரைப் பார்த்தே ஆகணும்னு அடம் பண்ணான். விக்ரம் எங்களை கூட்டிட்டு போக டிரை பண்ணார். ஆனா, மீட் பண்ண முடியல.”

“ஓ? அப்போ உங்க ஹீரோ நிரஞ்சனை கூப்பிட்டது, மகனுக்காகவா? உங்களுக்காக இல்லையா?” மது நக்கலாக கேட்க, முறைத்தாள் சுஹாசினி. 

“புருஷன் என்றா அவன் பொசசிவ்வாக தான் இருப்பான். வேற என்ன எதிர்பார்க்கிற நீ?” என்று கிண்டலாக சொன்ன சுஹாசினி, “ஆனாலும், என் ஹீரோ எனக்காக தான் நிரஞ்சனை கூப்பிட்டு இருப்பார். உனக்கு பொறாமை” என்று மதுவின் தோளில் அவள் அடிக்க, “என் சார்பா ரெண்டு அடி சேர்த்துப் போடு, சுஹா” என்றபடி அங்கு வந்தான் ராகவன். 

“என்ன மயக்க டாக்டரே. மப்பு கூடி போச்சா?” மதுமிதா கணவனை முறைக்க, சுஹாசினி ராகவனை பார்த்து, “சத்தம் போடாம அடி வாங்கு ராகவ்” என்று விட்டு போக, சிரித்தான் அவன். 

“சுஹா, சைலேஷ் பசியில் அழுறான். இங்க வா” சக்தி குழந்தையுடன் அவளிடம் வர, தனிமை வேண்டி அறைக்குள் சென்றார்கள். 

குழந்தைக்கு பாலூட்டி, அவனுக்கு லகுவான உடை மாற்றி விட்டு அவர்கள் வெளியில் வர, விக்ரம் நின்றிருந்தான். மனைவியை கூட்டிக் கொண்டு அலுவலக பகுதிக்கு போனான் அவன். 

அங்கே ராஜ் க்ரூப் ஆப் ஹோட்டல் நிர்வாகத்தினர் காத்திருந்தனர். அவர்களுடன் பேசி, சுஹாசினி கையெழுத்து இட வேண்டிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு முடித்தனர். 

இரண்டு மணி நேரங்கள் கடந்திருக்க, அனைவரும் கூடி சிறப்பான காலை உணவை முடித்தனர். 

“ஓகே. மேட்ச் கன்டினியூ பண்ணலாம்” நிரஞ்சன் சொல்ல, மீண்டும் ஆட்டத்திற்கு திரும்பினார்கள். 

சுஹாசினி கைக் குழந்தையை செல்வா வீட்டு பணியாளரிடம் கொடுத்து விட்டு அவளும் ஆட்டத்தில் கலந்துக் கொண்டாள். 

நந்தனா பந்து வீச ஷ்ரவன் பேட்டிங் செய்தான். மகனுடன் விக்ரமும் ஜோடி போட்டு பேட் செய்தான். 

பீல்டிங் செய்ய சம்யுக்தாவின் பின்னே வீரா, சாஹித்யாவின் பின்னே செல்வா நின்றிருந்தனர். சர்வாவின் பின்னே சக்தியும், அவர்கள் மகன் ஆனந்தின் பின்னே மலரும் நின்றிருக்க, குழந்தைகளை கொடுத்து விட்டு ராகவன், மதுவும் பக்கம் பக்கமாக நின்றிருந்தனர். நிரஞ்சன், நிரூபன், நிலவினி மூவரும் கட்டக் கடைசியில் நின்றிருந்தார்கள். 

சுஹாசினி, ஷான்வி இருவரும் எல்லா பக்கமும் சுற்றினார்கள்.

“ஒரு இடத்தில் நில்லுங்க ரெண்டு பேரும்” என்று நிரஞ்சன் எச்சரிக்கை செய்தும் கேட்கவில்லை அவர்கள். 

விக்ரம், ஷ்ரவன் ஆடுகளத்தில் பேட் பிடித்து நிற்க, அவர்கள் நன்றாக அடித்து ஆட, மொத்த பேரின் கவனத்தையும் கலைத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். 

“ஆஸ்திரேலியா காரன் மாதிரி பிகேவ் பண்ணாத சுஹா” கத்தினாள் ராகவி. அவளுக்கு அடுத்து நின்றிருந்த அவளின் பிள்ளைகள் தாரா, நந்தா, மித்ரன் மூவரும் அவளை முறைக்க, நடுவராக நின்ற உதய், “இட்ஸ் ஓகே. இட்ஸ் ஓகே. நம்ம அத்தை. நம்ம ஷான்வி தான்” என்று வெள்ளைக் கொடியை பறக்க விட்டான்.

“ஷோனா..” விக்ரம் கண்டிப்புடன் அழைக்க, “இட்ஸ் ஆல் இன் த கேம் ஹீரோ” கண்ணடித்து சொன்னாள் அவள். கன்னத்தில் குழி விழ சிரித்தான் அவன். 

“என்கிட்ட அடி வாங்க போற..” என்று மிரட்டியபடி ஆட்டத்தை தொடர்ந்தான் அவன்.

ஷ்ரவனுக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பதால், அதில் பயிற்சி இருந்ததால் மிகவும் நன்றாக அடித்து ஆடினான் அவன். 

அவனைத் தொடர்ந்து ஆடிய தாரா மற்றும் நந்தாவும் கூட சிறப்பாக ஆட, “வெல் ப்ளேடு பாய்ஸ்” என்று மனம் திறந்து பாராட்டினாள் அவர்களுக்கு பந்து வீசிய நந்தனா. 

“ஒரு அனலிஸ்ட் கிட்ட இருந்து வர்ற பாராட்டு. எவ்வளவு பெரிய விஷயம். ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் சுஹாசினி. 

“அட, உண்மையை தானே சொன்னேன். மூனு பேரும் நல்லா பேட் பண்ணாங்க. கிரிக்கெட் இன்ட்ரஸ்ட் இருந்தா பயிற்சி கொடுங்க” அறிவுறுத்தினாள் நந்தனா. 

“கண்டிப்பா செய்யறேன்” என்றபடி உடன் நடந்தாள் சுஹாசினி. 

அவர்களின் ஆட்டம் நேரத்தை விழுங்கியிருக்க மதியமாகி இருந்தது. 

அவர்களுக்காக சைவம், அசைவம் என்று தடபுடல் விருந்து சமைக்கப்பட்டிருந்தது. 

ஆண்கள் தங்களுக்கு பரிமாறிக் கொண்டு சாப்பிடத் தொடங்கினார்கள்.

நிரஞ்சன், செல்வா இருவரும் சாப்பிடுவதை பெண்கள் விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தனர். 

அவர்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுத்து தாங்களும் உண்டு முடித்து கடற்கரையோரமாக காற்று வாங்கியபடி காலாற நடக்கத் தொடங்கினார்கள். குழந்தைகள் அவர்களுக்கு முன்னே ஓடிக் கொண்டிருந்தது கவிதையாக இருந்தது. 

அன்று அதிகாலையில் எழுந்திருந்தும் கூட பிள்ளைகள் அனைவரும் சோர்வின்றி உற்சாகமாக சுற்றினார்கள்.

சைலேஷ், மதுமஞ்சரி, மதுரன் மூவரும் இடையிடையே தூங்கியிருக்க இப்போது விழித்து விளையாடிக் கொண்டிருந்தனர். 

“ஓகே. இட்ஸ் டைம் ஃபார் போட்டோ” செல்வா கத்த, புகைப்படம் எடுக்க ஒன்று கூடினார்கள். 

பெண்களுக்கு என்று அரை மணி நேரம் கொடுக்கப்பட, அவர்கள் சென்று ஆடை திருத்தி, அலங்காரம் செய்து வந்தனர். 

பெண் குழந்தைகள் அனைவரும் ஒன்றாக பட்டு கவுனில் ஓடி வர, அங்கே அப்பாக்கள், மகன்களுடன் வேட்டி நுனியை கையில் பிடித்துக் கொண்டு கம்பீரமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். 

பெண்கள் செல்லவும் அவரவர் குடும்பத்துடன் நின்றனர். 

மிகப் பெரிய குடும்பமாக அவர்கள் நிற்க புகைப்பட நிபுணர்கள் திணறிப் போனார்கள். அவர்களே ஐந்து குடும்பங்கள், பனிரெண்டு குழந்தைகள். இப்போது அவர்களோடு நிரஞ்சன் குடும்பமும் நிற்க, ஒரு சட்டத்தில் வரவில்லை அவர்கள். ஆனால், மிக அழகான கூட்டுக் குடும்பம் போலிருந்தார்கள்.

“சக்தி, என் இடுப்பில் கை போடாத.” செல்வா கத்த, பக்கென்று மொத்த பேரும் சிரிப்பில் சிதற, “இவன் எல்லாம் கல்யாணம் பண்ணி.. டேய்..” என்ற வீரா, “நீ என் இடுப்பில் கைப் போடு மலரே” என்று திரும்பி மலரிடம் சொல்ல, 

“என்னய்யா பேசுறீங்க. பசங்க இருக்காங்க” எச்சரித்த உதயின் கரம் தன் பட்டின் இடுப்பில் அழுத்தமாக பதிந்திருக்க, அவனை எட்டிப் பார்த்து, “யோவ், மாம்ஸ்.” என்று நகைத்தான் ராகவன். 

“மக்கு மயக்க டாக்டர்” என்று சலித்து, கணவனை பக்கத்தில் இழுத்து அவனை இடையோடு கட்டிக் கொண்டாள் மதுமிதா. 

“இதைப் பார்த்து கத்துக்கோ நந்து” நிரஞ்சன் மனைவியிடம் கிசுகிசுக்க, அவளோ புரியாமல், “என்ன சொல்றீங்க?” என்று கேட்டாள்.

“ப்ராக்டீஸ்…” என்று ஆரம்பித்தவனின் வாயை அவசரமாக மூடினாள் நந்தனா. கண்களால் சிரித்தான் நிரஞ்சன். 

நண்பர்களின் கலாட்டாக்களை பார்த்து விக்ரம் சிரிக்க, அந்தக் கன்னக் குழியில் எட்டி முத்தம் வைத்தாள் சுஹாசினி. மறுபக்கம் அவன் தோளில் இருந்த ஷான்வி அப்படியே அம்மாவை போலவே செய்தாள். அப்பாவின் மறுகன்னத்தில் முத்தமிட்டாள். 

அந்த கணத்தை அவர்களின் சிரிப்பை, குறும்பை, மகிழ்வை பதிவு செய்தது கேமரா கண்கள். 

“ஓகே. அப்போ, நாங்க கிளம்பறோம். உங்களை எல்லாம் மீட் பண்ணது ரொம்ப சந்தோஷம். பிளீஸ், டச்சில் இருங்க” நிரஞ்சன் குடும்பம், பேசி, அலைபேசி எண் பகிர்ந்து, விடை பெற்று வெளியேறினார்கள். 

உதய், வீரா அவர்களை வழியனுப்பி விட்டு திரும்ப வந்தனர். 

இப்பொழுது பெண்களும், குழந்தைகளும் தனியாக புகைப்படம் எடுத்தனர். அதன் பின்னர் குழந்தைகள் மட்டும் வரிசையாக கைக் கோர்த்து நின்று நிறைய, நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். அவர்களைப் பார்க்க பல வண்ண மலர்க்கொத்துகளை வரிசையாக அடுக்கியது போலிருந்தது. 

அவர்களுக்கு பின்னே நீல வானமும், நீல கடலும் அழகான புகைப்படத்திற்கு அத்தாட்சியாக நின்றது. 

மீண்டும் குடும்பமாக அனைவரும் ஒன்றாக நின்றனர். சுஹாசினி தன் நான்கு மாத குழந்தை சைலேஷின் முகம் தெரியும் படி தூக்கி பிடித்தாள். 

“சிரிங்க.. எல்லாம் சிரிங்க..” சக்தி சத்தம் கொடுக்க, அனைவரின் முகத்திலும் பற்கள் தெரிந்தது. இப்பொழுது அவர்களின் சிரிப்பு புகைப்பட கருவியில் அதன் வண்ணம் மாறாமல் சிறைப் பிடிக்கப்பட்டிருந்தது. 

“True friends are like Diamonds. Bright, beautiful, valuable and always in style.” 

அப்படித் தான் இருந்தது அவர்களின் நட்பு. 

வைரம் போல மிக உறுதியானது அவர்களின் நட்பு. அசாத்திய அழகானது. விலை மதிப்பில்லாதது. இவற்றையெல்லாம் விட அதி அழகானதும் கூட. 

“சார், ஒன் மோர்” புகைப்பட நிபுணர் குரல் கொடுக்க, சிரிப்பை நிறுத்தி, மீண்டும் சீராக நின்றார்கள். 

“ஓகே. சிரிங்க. ஸ்மைல்” என்றதும் புகைப்படம் எடுக்கப்பட, சுஹாசினி லேசாக தலையை முன்னே நீட்டி ஆண்களை பார்த்தாள். 

ஆண்கள் அனைவரும் மகள்களை கையில் தூக்கி வைத்திருக்க, “ஏயப்பா, இந்த அப்பாக்கள் தொல்லை தாங்க முடியல ப்பா” அவள் புலம்ப, அந்நேரம் சைலேஷும் சிணுங்கினான். அங்கே உதவிக்கு இருந்த பெண் வேகமாக ஓடி வந்து அவனை வாங்கிக் கொண்டார்.

மகனை அவரிடம் கொடுத்து விட்டு, “ஹலோ ஜென்டில்மன்ஸ், எல்லோரும் உங்க செல்லத்தை இறக்கி விட்டு, எங்க செல்லங்களை கையில் தூக்குங்க பார்ப்போம்” அவள் சொன்ன நொடி, பெண் குழந்தைகளை கீழே இறக்கி விட்ட ஆண்கள் அதே வேகத்தோடு தங்களின் சரி பாதியை கையில் தூக்கி இருந்தார்கள். 

“உதய்.. போலீஸ் பாக்குற வேலையா இது” கத்தினாள் ராகவி.

“யோவ், மயக்க டாக்டரே” மதுமிதா பதறினாள்.

“வீரா…” என்று மலர் கண்ணை உருட்ட, “அச்சோ, செல்வா…” என்ற சக்தி, கணவனின் குரல் வளையை குறி வைத்தாள். 

“ஐ…யோ.. விக்ரம்.. ஹீரோ” என்று சுஹாசினி கத்த, “எஸ். ஐயோ தான்” என்றான் அவளின் ஹீரோ. 

குழந்தைகள் அனைவரும் அம்மாக்களை தூக்கியிருந்த அப்பாக்களை பார்த்து கைத்தட்டி சிரித்துக் கொண்டிருந்தனர். அந்தச் சிரிப்பில் இப்போது பெரியவர்களும் இணைந்துக் கொண்டனர். 

“ஐயோ தான் ஷோனா. ஐ அண்ட் யூ. ஐ லவ் யூ ஷோனா..” விக்ரம் ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாக, கண் சிமிட்டி சத்தமாக சொன்னான். 

சட்டென்று மிக சத்தமான சிரிப்பலை ஒன்று அங்கே பரவியது. 

அங்கே கடலும், வானும், காற்றும் அவர்களின் நட்புக்கு, அன்புக்கு, காதலுக்கு சாட்சியாக, அவர்களின் சிரிப்பை கனிவுடன் பார்த்து நின்றது. 

அவர்களின் மனங்களை போல வானமும் கனிந்து, மழையை தூறலாக பொழிந்து அவர்களின் இந்தச் சிரிப்பு நிலைக்க ஆசிர்வதித்தது. 

அவர்கள், இன்றும், என்றும்,

நட்பில் இணைந்திருப்பார்கள்!!!

காதலில் மகிழ்ந்திருப்பார்கள்!!!

அன்பில் நிறைந்திருப்பார்கள்!!!

நிறைந்தது!!!

சுபம்!!!

Advertisement