Advertisement

சுஹாசினி அதிர்ச்சியில் உறைந்து நிற்க, “சுஹாசினி” கோர்த்திருந்த விரலில் இறுக்கத்தை கூட்டி அழைத்தான் விக்ரம். 

“ஆ.. விக்ரம்” இப்போதும் கணவனின் மேலிருந்து அகலவில்லை அவள் கண்கள். சக்தி அவர்களுக்கு முன்னே வந்து நின்று சுஹாசினியின் எதிர்வினைகளை புகைப்படங்களாக, காணொளிகளாக எடுக்க சிரித்தான் விக்ரம். 

“சுஹா ம்மா, வாங்க” சிரிப்புடன் அழைத்தான் ஷ்ரவன். அப்போது தான் சுற்றுப்புறம் உணர்ந்து, கலைந்து, சிரிப்புடன் முன்னே நடந்தாள் அவள். 

“தேங்க்ஸ் விக்ரம். நீங்க உண்மையாவே ஹீரோ தான்” அவள் சொல்ல, விக்ரமின் முகத்தை நிறைத்தது மென்நகை.

நிரஞ்சன், நந்தனா இருவரும் அவர்களை புன்னகையுடன் பார்த்தனர். 

விக்ரம் மனைவி மற்றும் பிள்ளைகளை முன்னே விட்டு அவர்களுக்குப் பின்னால் நிற்க, மறுபக்கமும் அதையே செய்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன். 

நந்தனா, சுஹாசினி, ஷான்வி மூவரும் இணைந்து பூக்களால் உருவாக்கப் பட்டிருந்த அந்த திறப்பு விழா ரிப்பனை ஒன்றாக வெட்டினார்கள். மறுகணம் அவர்கள் மேலெங்கும் மலரிதழ்கள் விழ, கிளுக்கி சிரித்தார்கள் பெண்கள். 

சுஹாசினி திரும்பி மலரை பார்த்தாள். அவளுக்கு பக்கத்தில் நின்றிருந்த வீரா சட்டை காலரை பெருமையாக தூக்கி விட்டுக் கொண்டான். 

மலர் அலங்காரம் அவன் வேலை என்று அவளுக்கு புரிந்ததும், புன்னகைத்தாள் சுஹாசினி. 

கணவன் ரிசார்ட்டை வாங்கியது, தன்னைத் தவிர நண்பர்கள் அனைவருக்கும் தெரியும் என்பது அவர்களின் இயல்பான புன்னகை முகங்களிலேயே தெரிய, செல்ல கோபமும், ரிசார்ட் இனி நல்லபடியாக இயங்கும் என்ற மகிழ்வும் ஒருங்கே வந்தது அவளுக்கு. 

கணவனிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் அவளுக்கு இருந்தது. ஆனாலும், தன் வாழ்நாளில் இந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்டை அவள் என்றைக்கும் மறக்கவே மாட்டாள். 

அவர்களின் திருமணம் நடந்தது வேண்டுமானால் ஒருவித கட்டாயத்தினால் இருக்கலாம். ஆனால், அதன் பின்னான வாழ்வு? கணவன் விக்ரமின் அன்பு, அதை விவரிக்க அவளிடம் வார்த்தைகளே கிடையாது. 

அதற்காக அவர்கள் மிக மிக மகிழ்ச்சியாக மட்டுமே வாழ்ந்தார்கள் என்றும் கிடையாது. ஆரம்பத்தில் அவர்களுக்கு நடுவே ஆயிரம் தடைகள், வேறுபாடுகள் மதிலாக மறித்து நின்றது. 

அவர்களே, அவர்களுக்கு தடையாக நின்றனர். மொழி, உணவு, ஊர் என எத்தனை வேற்றுமைகள். ஆனால், அத்தனையையும் ஒற்றுமையாக சேர்ந்து களைந்தார்கள்.

அனுதினமும் சண்டையிட்டார்கள். சில சமயம் காரணத்தோடு, பல சமயம் காரணமே இன்றி. ஒவ்வொரு சண்டைக்குப் பின்னும் சமாதானமாகும் வழிகள் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. 

திருமணத்தின் அடிப்படையான புரிதல் மெல்ல மெல்ல புரிபட காதலும், அன்பும் பெருகியது. 

இப்போதும் அடிக்கடி எதிரெதிரே நிற்கிறார்கள். ஆனால், ஒருநாளும் எதிர்த்து நின்றதில்லை.

அவர்கள் அன்பின் மொழி பேசுபவர்கள். அதனால் அவர்கள் வாழ்வில் அன்பு நிறைந்திருந்தது.

“கங்கிராஜுலேஷன்ஸ்” நிரஞ்சன் அவர்களை வாழ்த்த, “தேங்க்யூ” என்றாள் சுஹாசினி. 

ஷ்ரவன் பதட்டமும், ஆர்வமும் மிக நிரஞ்சனிடம் பேசினான். விக்ரம் ஒரு நன்றியுடன் பேச்சை முடித்துக் கொண்டான். 

அவர்கள் அனைவரும் ஒன்றாக நிற்க, சமூக வலைத்தளங்களில் வெளியிட, செய்திகளுக்கு கொடுக்க என்று எண்ணற்ற புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. 

அரை மணி நேரம் கழித்து சுஹாசினி, விக்ரம் இருவரும் விலகி வர, “வாழ்த்துகள் சுஹா செல்லமே. வாழ்த்துகள் விக்ரம்” ஒட்டு மொத்த நண்பர் கூட்டமும் ஒன்றாக கத்தியது. அவளுக்கு சட்டென கண்கள் கலங்க, கணவனின் கையை அணைவாக பிடித்துக் கொண்டாள். 

“தேங்க்யூ ஹீரோ” அவள் சொல்ல, பழுப்பு கண்கள் அவளை கனிவாக பார்த்தது. ஒன்றுமே சொல்லவில்லை அவன். 

“இது நம்ம ரிசார்ட். சோ, நமக்கு வாழ்த்துகள்” அவள் அனைவரையும் பார்த்து சொல்ல, அவர்களின் முகங்களில் மகிழ்ச்சி புன்னகை மின்னியது. 

“இது எப்படி நடந்தது? யார் கொடுத்த ஐடியா?” கணவனை பார்த்து, பின் நண்பர் கூட்டத்தை பார்த்து அவள் கேட்க, அவர்கள் பதில் சொல்லும் முன், ரிசார்ட்டின் முந்தைய உரிமையாளர் சஞ்சயா நாயக் அங்கு வந்தார். 

“காட் பிளஸ் யூ மை சைல்ட்” சுஹாசினி, விக்ரம் இருவரின் தலையிலும் அவர் கை வைத்து வாழ்த்த, மனம் நெகிழ கண்கள் நிறைந்து போனது அவர்களுக்கு. 

“உங்க அன்புக்கு நன்றி” என்று விக்ரம் கொங்கனியில் சொல்ல, கணவனை விலுக்கென்று திரும்பிப் பார்த்தாள் சுஹாசினி. 

சஞ்சயா நாயக் மங்களூரை பூர்வீகமாக கொண்டவர். அவர்கள் பேசுவதும் கொங்கனி தான் என்று அவளுக்கு அப்போது தான் புரிந்தது. கணவனின் வேலை எப்படி எளிதானது என்பது இப்போது புரிய அவனை ஓரக் கண்ணால் முறைத்தாள் அவள். ஆனால், பெரியவர் வேறு கதை சொன்னார். 

“உன் குடும்பம் தான் இந்த ரிசார்ட்டை வாங்குதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான், இதை முழு மனசா நான் விக்க சம்மதிச்சேன் மகளே” அவர் கொங்கனியில் அவளிடம் சொல்ல, “நாங்க உங்களோட இந்த சொத்தை, சேதாரம் பண்ணாம ரொம்ப நல்லா பாரத்துப்போம்.” என்று அவருக்கு உத்திரவாதம் தந்தாள் சுஹாசினி. 

இருவரிடமும் சிறிது பேசிக் கொண்டிருந்தார் பெரியவர். அவர்களோடு நண்பர்களும் இணைந்து பெரியவருக்கு நன்றி சொன்னார்கள். அவர்களிடம் விடை பெற்று அங்கிருந்து கிளம்பினார் அவர்.

வயது மூப்பின் காரணமாக அவரால் இந்த விடுதியை முன்பு போல நடத்த முடியவில்லை. அவரின் பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் இருக்க, அவர்களுக்கும் இதை எடுத்து நடத்த விருப்பமில்லை. பேர பிள்ளைகள், மங்களூரா என்ற கேள்வியுடன் மறுத்து ஒதுங்கிக் கொண்டார்கள். 

ஆனால், அவர்களுக்கு இந்த சொத்தின் மூலமாக வரும் பணம் பிடித்தது. அதை மொத்தமாக விற்று பங்கு தரச் சொல்லி பெரியவரிடம் கேட்டனர். அவரும் வேறு வழியின்றி விற்க நினைத்தார். அந்த செய்தி காற்றில் பரவ நிறைய பேர் வாங்க முன் வந்தார்கள். ஆனால், அந்த இடத்தின் கண்ணியம் மாறாமல் அவர்கள் நடத்த மாட்டார்கள் என்று மறுத்து விட்டார் பெரியவர். 

அவர் இந்த ரிசார்ட் தொடங்கி கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாகிறது. மனைவி, மக்களுடன் இங்கு நிறைய நினைவுகள் அவருக்கு உண்டு. அதை சரியான கைகளில் ஒப்படைக்க நினைத்தவரின் முன் சென்று நின்றார்கள் உதய், வீரா, செல்வா. 

பெரியவரின் பல வருட வாடிக்கையாளர்கள். அவர்களை நன்கு அறிவார் அவர். மூன்று கட்ட பேச்சு வார்த்தைக்கு பின் இரண்டு பக்கமும் எல்லா விஷயங்களும் சுமூகமாக முடிய, விக்ரமின் விருப்பத்தின் படி ரிசார்ட்டை மனைவிக்காக வாங்கியிருந்தான் அவன். 

விக்ரமும் சில முறை இந்த ரிசார்ட் வந்த போது பெரியவரை சந்தித்திருக்கிறான். ஆனால், சுஹாசினியின் கணவன் விக்ரம் என்று கொங்கனியில் அறிமுகப்படுத்தி கொண்டு அவன் பேச, பெரியவர் அப்படியே அவன் பக்கம் வந்திருந்தார். அதிலும் மனைவிக்காக அவன் வாங்குகிறான் என்பதை கேட்டவருக்கு அப்படியொரு சிரிப்பு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் மனைவியை இழந்திருந்தார் அவர். பத்து நிமிடங்களுக்கு மேலாக மனைவியைப் பற்றி விக்ரமிடம் பேசினார் அவர். 

விக்ரம் ரிசார்ட்டை அன்றைய நிலவரப்படி சரியான தொகையை கொடுத்து முறையாக வாங்கியிருந்தான். 

போலீஸ் உதய், வக்கீல் ராகவி, பெங்களூரில் வசித்த தொழில் அதிபர்கள் வீரா, செல்வா என நண்பர்களின் உதவியில்லாமல் விக்ரமால் நிச்சயம் அதை வாங்கியிருக்க முடியாது. அவர்களுக்கு மனதார நன்றி சொன்னான் அவன். 

மனைவிக்கு அதை சர்ப்ரைஸாக கொடுக்க எல்லா உதவிகளையும் செய்த அவளின் நண்பர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொன்னான் அவன். 

இப்போது சுஹாசினியிடம் ரிசார்ட்டை எப்படி வாங்கினார்கள் என்ற கதையை அவர்கள் சொல்லி முடிக்க, தன் வழக்கமாக கேள்வி கேட்கத் தொடங்கினாள் அவள். 

“எல்லாம் ஓகே ஹீரோ. ஆனா, நாம ராஸ் அல் கைமாவில் இருக்கப் போறோம். இங்க ரிசார்ட்டை யார் பார்த்துப்பா?” கணவனிடம் கேள்விக் கேட்டவளின் பார்வை நண்பர்கள் அனைவரையும் வட்டமிட்டது. 

“ஆத்தி.. நான் இல்ல. சாப்ட்வேர் கம்பனி, பூக்கடை, நர்சரின்னு நான் ரொம்ப பிஸி” வீரா சொல்ல,

“ஆளை விடு தாயி. எனக்கு வேலை இருக்கு” என்றான் செல்வா. 

உதய், ராகவன் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டனர். 

“உங்க ரெண்டு பேருக்கும் வீட்டை பார்க்கவே நேரம் இருக்காது. இதுல” என்று அவள் இழுக்க, “விக்ரம்..” என்று ஒன்று போல ஆட்சேபித்து கத்தினார்கள் உதயும், ராகவனும். 

“ஷோனா…” என்று மனைவியை தனியாக இழுத்துக் கொண்டு போனான் விக்ரம். அவர்களின் பார்வை குழந்தைகளின் மேல் படிய, அவர்கள் நிரஞ்சன், நந்தனாவிடம் கைகளை அசைத்து அசைத்து சுவாரஸ்யமாக கதைப் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. 

“தேங்க்யூ ஹீரோ” கணவனின் கழுத்தில் கரம் கோர்த்து அணைத்துக் கொண்டாள் சுஹாசினி. அவனது கன்னக் குழியில் அழுத்தமாய் முத்தமிட்டாள். 

மெல்ல சிரித்த விக்ரம் அவளின் உச்சியில் மென்மையாய் முத்தமிட்டான். 

“இந்த ரிசார்ட்டை எப்படி ரன் பண்ண போறோம் ஹீரோ? நமக்கு அங்க அத்தனை பிசினஸ் இருக்கு. கமிட்மெண்ட்ஸ் இருக்கு. நடுவுல இதையும் பார்க்கிறது, முடியுமா?”

“நாம பார்க்க போறோம்னு யார் சொன்னா?” விக்ரம் கேட்க, அவள் விழிகள் குழப்பத்துடன் சுருங்கியது. 

“இந்த பிராப்பர்டி நம்மளோடது. ஆனா, இதை நடத்த போறது ராஜ் க்ரூப் ஆப் ஹோட்டல்ஸ்” அவன் சொல்ல, அதிர்ச்சியில், வியப்பில் விரிந்தது அவள் விழிகள். 

“ராஜ் க்ரூப் ஆப் ஹோட்டல்ஸா?” அவள் ஆச்சரியமாக வினவ, “எஸ்” என்றான் அழுத்தமாக. 

“எப்படி ஹீரோ? நாம அவங்களுக்கு ஷார்ஜாவில் ரிசார்ட் கட்டிக் கொடுக்க தானே காண்ட்ராக்ட் சைன் பண்ணியிருந்தோம். இங்க எப்படி?” 

அவளுக்கு கேள்வி கேட்க சொல்லியா கொடுக்க வேண்டும்? அவனுக்கு பதில் சொல்லும் பொறுமையும், கடமையும் இருந்ததால் விளக்கமாக பதில் சொன்னான். 

“எஸ் ஷோனா. ஷார்ஜா ப்ராஜெக்ட் பத்தி பேசும் போது, மங்களூர் பத்தி கேஷுவலா சொன்னேன். இங்க அவங்க ரிசார்ட் கட்ட இடம் தேடுறதா அவங்க சீப் சொன்னார். அப்புறம் என்ன, ஹம்தானை வச்சு டீல் பேசிட்டேன்” என்று கண் சிமிட்டினான் அவன். 

“பிசினஸ் பக்காவா பேசியாச்சு சுஹாசினி ஷோனா. நீ கவலையே படத் தேவையில்லை” மனைவியின் தோளில் இரு பக்கமும் கைப் போட்டு சொன்னான். 

அவன் கண்களை ஆழ ஊடுருவியது சுஹாசினியின் விழிகள்.

“என்ன?” என்றான். 

“ஹேப்பியா இருக்கு. அதை எப்படி உங்ககிட்ட காமிக்க தெரியல.” அவள் சொல்ல, “நான் அப்புறமா சொல்லித் தரேன்” என்று கண் சிமிட்டியவன்,

“எல்லாம் வெயிட் பண்றாங்க. வா. போகலாம், ஷோனா” என்றான். 

முகத்தில் வெட்கப் பூக்கள் பூத்து நின்றிருந்த மனைவியின் கைப் பிடித்து அழைத்துப் போனான் விக்ரம்.

அங்கே நிரஞ்சன், நந்தனா குடும்பத்துடன் நின்றிருந்தனர். 

“திறப்பு விழாவுக்கு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். நாங்க கேட்டதும் உடனே வந்தீங்க” விக்ரம், நிரஞ்சனுக்கு நன்றி சொல்ல, அவனோ திரும்பி மதுமிதாவைப் பார்த்தான். 

பின் விக்ரமிடம் திரும்பி, “இது நட்புக்காக செய்தது. அதுக்கு நன்றி எல்லாம் எதுக்கு?” என்றான் நிரஞ்சன் பெருந்தன்மையாக. 

சுஹாசினி புருவங்கள் சுருங்க மதுமிதாவை பார்த்தாள். அவளுக்கு அப்போது தான் மதுவின் அப்பா ஶ்ரீதரன், கிரிக்கெட் வீரர் என்பதே நினைவுக்கு வந்தது. 

“மதுவோட அப்பா தான் என்னோட ஃபர்ஸ்ட் கோச். அவர் இல்லனா. இன்னைக்கு நான் இல்ல” விக்ரமிடம் சொல்லிக் கொண்டிருந்தான் நிரஞ்சன். 

“உங்க திறமை நிச்சயம் உங்களை வெளில கொண்டு வந்திருக்கும். இன்னைக்கு நீங்க இருக்க இடம் நிச்சயமா உங்களுக்கானது தான். நீங்க அதுக்கான உழைப்பை போட்டு இருக்கீங்க. யூ டிசர்வ்ட் இட்” விக்ரம் சொல்ல, புன்னகைத்தான் நிரஞ்சன். 

“அப்பா, ஒரு மேட்ச் பிளீஸ்? நிரஞ்சன் சார் கிட்ட கிரிக்கெட் பேட், கிட் எல்லாம் இருக்காம். பிளீஸ் ப்பா. விளையாடலாம்” ஷ்ரவன் கெஞ்சலாக கேட்க, அவனைத் தொடர்ந்து மொத்த குழந்தைகளும் கத்தினார்கள். 

“ஓகே, ஓகே. டென் ஓவர் மேட்ச். ஆனா, எல்லோரும் ஒரே டீம். ஓகே?” நிரஞ்சன் சொல்ல, அவன் மேல் மகிழ்ச்சியுடன் பாய்ந்தார்கள் குழந்தைகள். 

ரிசார்ட்டில் இருந்த வெட்ட வெளியை நோக்கி நடந்தார்கள் அனைவரும். 

Advertisement