Advertisement

ராகவன், மதுமிதா, மலர், வீராவும் கூட இப்போது அங்கிருக்க, “சுஹாசினி சாப்பிடல வரல?” என்று விசாரித்தான் செல்வா. 

“அவங்க குடும்பமே அசந்து தூங்கிட்டு இருக்காங்க. லஞ்ச் ரூமுக்கு கொடுத்து விட்டுருக்கேன். பொறுமையா எழுந்து, சாப்பிட்டு வரட்டும்” உதய் சொல்ல, “ஓகே” என்றபடி சாப்பிட அமர்ந்தான் செல்வா. 

மதிய உணவு முடித்து மீண்டும் குழந்தைகளோடு ஆட்டம் போட்டார்கள் அவர்கள். காலை குறுகுறுத்த அந்த கடற்கரை மணலில் ராகவனின் குழந்தைகளும் தளிர் நடை போட்டார்கள். 

ஒரே பேச்சும், சிரிப்பும், விளையாட்டுமாக பொழுது இறக்கை கட்டி பறந்தது. 

மாலை தேநீர் மற்றும் சிற்றுண்டி வகைகளுடன் நேராக அனைவரும் சுஹாசினியின் அறைக்கு சென்று விட்டார்கள். 

அவர்களின் அறைக்கு முன்பிருந்த வராண்டாவில் இருக்கைகள் மற்றும் விரிப்பு விரித்து அமர்ந்து கடலை குளிர்ச்சியாக கண்ணில் நனைத்தபடி, தொண்டைக்கு சூடான தேநீரை கொடுத்தனர். 

“ப்பா, எனக்கு வத..” 

“ப்பா, எனக்கு போண்டா”

“எனக்கு காஃபி வேணும். டீ வேணாம்” குழந்தைகள் ஆளுக்கொன்றை கேட்க, அவர்கள் குரலில் விக்ரம் எழுந்து வெளியில் வந்தான். அவன் கைப் பிடித்து நடந்து வந்த ஷான்வி, சட்டென ஓடி வந்து குழந்தைகளோடு அமர்ந்துக் கொண்டாள். 

அடுத்து பத்து நிமிடத்தில் ஷ்ரவன், சுஹாசினியும் வர, கண் விழித்து பாட்டு பாடிக் கொண்டிருந்த மகனை கையில் வைத்திருந்தான் விக்ரம். 

அவனிடம் இருந்து சைலேஷை, மலர் வாங்கிக் கொள்ள, மனைவியின் பக்கத்தில் சென்று அமர்ந்தான் விக்ரம்.

மாலையும், இரவும் அவர்களின் பேச்சில் மயங்கி மறைந்திருந்தது. 

இரவு உணவையும் அங்கேயே முடித்துக் கொண்டு அனைவரும் அவரவர் அறைக்கு உறங்க சென்றார்கள். 

“இந்த ரிசார்ட் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் விக்ரம்” அறையை ஒட்டிய பால்கனி போன்ற பகுதியில் நின்றிருந்தார்கள் இருவரும். 

“உங்ககிட்ட இந்த இடத்தில் இருந்து பேசியிருக்கேன் நான். அப்போ உங்க மேல அவ்வளவு கோபம் இருந்தது. ஆனா, இதே இடத்தில் நாம அன்பை பரிமாறவும் செய்திருக்கோம்.” அந்த இனிமையான நினைவுகளில் அவள் கண்கள் மின்ன, மனைவியை அணைத்துக் கொண்டான் விக்ரம். 

கடல் காற்று குளிரை அலையாய் அள்ளி வீச, கணவனின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். 

“இந்த இடத்தை விக்கப் போறாங்க கேள்வி பட்டதும் அவ்ளோ வருத்தமா இருந்தது. ஆனா, இப்போ யாரோ இதை வாங்கி, இவ்வளவு அழகா சீர்ப்படுத்தி, திரும்பவும் திறக்கப் போறாங்கன்னு தெரியும் போது, அவ்வளவு சந்தோஷமா இருக்கு. நாம எப்பவும் போல இனிமே இங்க வரலாம். இல்ல, ஹீரோ?” அவள் கேட்க, “கண்டிப்பா வரலாம் ஷோனா” என்று உத்திரவாதம் தந்தான் அவன்.

“ரிசார்ட் மெயின் போர்ஷனில் இன்னமும் லைட் எரியுது ஹீரோ. இந்நேரம் அங்க யார் இருப்பா? வாங்க, போய் என்னனு பார்ப்போம்” அவள் சொல்ல, “காலையில பார்த்த தானே ஷோனா? வேலை நடக்குது. புதுசா வாங்கின ஓனர் சீக்கிரம் வேலையை முடிக்கணும் நினைக்கிறார் போல” என்றான் விக்ரம்.

அவன் அப்படியே அவளை அறைக்குள் தள்ளிக் கொண்டு போக, “ம்ம். நல்லது தான்” என்று அவனோடு இழுபட்டாள் சுஹாசினி. 

மறுநாள் அதிகாலையில் மனைவியை உலுக்கி எழுப்பினான் விக்ரம். 

“என்ன ஹீரோ? எனக்கு தூக்கம் வருது” புரண்டு படுத்து தூங்க முயன்றவளின் முகத்தில் தண்ணீர் தெறிக்க, கண்ணை திறந்து பார்த்தாள் அவள். விக்ரம் தலையில் ஈரம் சொட்ட, புன்னகை முகமாக நின்றிருந்தான். 

“என்ன இவ்வளவு சீக்கிரம் குளிச்சுட்டீங்க?” என்ற சுஹாசினி மெல்ல விழிகளை சுழற்றி கணவனுக்கு பின்னால் பார்க்க, அங்கே ஷ்ரவன், ஷான்வி இருவரும் குளித்து, புது உடை அணிந்து நின்றிருந்தனர். 

“என்ன எல்லோரும்..” என்று கேள்வி கேட்கத் தயாரான மனைவியை பேச விடாமல் எழுப்பி, குளியல் அறைக்குள் தள்ளி கதவை மூடினான் விக்ரம். சரியாக ஒரு மணி நேரம் கழித்து, அவர்களின் மொத்த குடும்பமும் புத்தாடை அணிந்து அறையை விட்டு வெளியே வந்தனர். 

சுஹாசினி பொன்னிற லினன் பட்டில் இருந்தாள். அவள் அணிந்திருந்த போட் நெக் ப்ளவுஸ் சேலைக்கு மிகப் பொருத்தமாகவும், அவள் கழுத்தில் மின்னிய வைரத்தை மின்னவும் வைத்து, தனித்துக் காட்டியது. 

மிதமான அலங்காரம், அளவான நகைகளுடன் பேரழகியாக அவள் மிளிர, பொன்னிற நீண்ட பட்டு கவுனில் பார்த்ததும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருந்தாள் அவளின் இளவரசி ஷான்வி. அம்மாவும் மகளும் ஒரே நிற உடை, அலங்காரத்தில் இருக்க, விக்ரம், ஷ்ரவன், ஷைலேஷ் மூவரும் அதே நிற சட்டையும், பட்டு வேட்டியும் அணிந்திருந்தனர். விக்ரம் தோளில் இளைய மகனுடன், ‍கையில் ஷ்ரவனை பிடித்துக் கொண்டு கம்பீரமாக தன் மகாராணி மற்றும் இளவரசியுடன் நடந்தான். 

“அழகி ஷோனா நீ” மையலுடன் சொன்னான் விக்ரம்.

“தேங்க்யூ, ஹீரோ. நீங்க எப்பவும் ஹாண்ட்சம் தான்” கண் சிமிட்டி சொன்னாள் சுஹாசினி. 

குழந்தைகள் அவர்களுக்கு முன்னே நடந்துக் கொண்டிருந்தனர். எதிரே மலர், ராகவி, மதுமிதா வர, அவர்களை நோக்கி ஓடினார்கள். 

ஷான்வியை தூக்கி முத்தமிட்டு கீழே விட்டாள் மலர். 

“என்ன விசேஷம் ரா? எங்களுக்கு ட்ரெஸ் எல்லாம் கிஃப்ட் பண்ணியிருக்க?” என்று கேட்ட சுஹாசினி, “எனக்கு எங்க ட்ரெஸ் எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு. கலர் எல்லாம் செம்மயா இருக்குல்ல?” தோழிகளின் முன் வட்டமடித்து காட்டினாள் அவள். 

விக்ரம் மகனை வாகாக தோளில் போட்டுக் கொண்டு, அதைப் பார்த்து புன்னகைக்க, கணவனின் கைப் பிடித்து கொண்டாள் சுஹாசினி. 

“ஆமா, ரா. எதுக்கு இந்த ட்ரெஸ்? எங்க இவ்வளவு காலையில் கிளம்பி போறோம்? கோவிலா?” அவள் சந்தேகம் கேட்க, ஒரு நொடி பதிலின்று முழித்தாள் ராகவி. 

அதற்குள் சுஹாசினியின் பார்வை ரிசார்ட் மீது படிய அப்போது தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள் அவள். 

காற்றில் எங்கும் பூக்களின் மணம். அவள் கண்களை திருப்பிய பக்கமெல்லாம் பூ அலங்காரம் இருந்தது. ரிசார்ட் ஒரே இரவில் புது பொலிவுடன் பளபளத்தது. 

பூக்கள், பல வண்ண காகிதங்கள் கொண்டு பார்க்கும் இடங்களை எல்லாம் அலங்கரித்து இருந்தார்கள். 

“ஹேய்.. எவ்வளவு அழகா இருக்கு. ஆமா, என்ன ஃபங்ஷன்? வேலை நடக்கும் போது எப்படி இதெல்லாம் அலவ் பண்றார் ஓனர்?” சுஹாசினி கேட்க,

“புது ஓனர் வேலையா கூட இருக்கலாம். இல்லையா?” கேட்டான் விக்ரம்.

“ஓ. இருக்கும். நான் அப்படி யோசிக்கல பாருங்க ஹீரோ” அவள் சொல்ல,

“இன்னைக்கு ரிசார்ட் திறப்பு விழா சுஹா. அதுக்கு தான் உங்களுக்கு புது ட்ரெஸ் கொடுத்து விட்டேன்” ராகவி சொல்ல, சுஹாசினி செய்தியை மெல்ல உள்வாங்கி, தோழியை ஏறிட்டு பார்த்தாள். 

மலர், மது, ராகவி மூவரும் கடல் நீல வண்ண லினன் பட்டில் இருந்ததை அப்போது தான் கவனித்தாள் அவள். 

“ஹேய்.. நீங்க மூனு பேரும் ஒரே போல ட்ரெஸ் பண்ணியிருக்கீங்க” என்று ஆச்சரியப்பட்ட சுஹாசினி, “ஆமா, இன்னைக்கு திறப்பு விழான்னு உனக்கு எப்படித் தெரியும்? அப்புறம் எங்களுக்கு மட்டும் ஏன் வேற கலர் ட்ரெஸ்?” என்று ராகவியை கேள்வி கேட்டாள். அவளோ ஆயாசமாக கண்களை மூடித் திறந்தாள். 

“எங்கிட்ட காலையில் தான் சொன்னாங்க சுஹா. எங்க ரூம்ஸ் வந்து இன்வைட் பண்ணாங்க”

“ஓ, ஓகே. ஆனா, நீ முன்னாடியே ட்ரெஸ் எப்படி நமக்கு கொண்டு வந்த?” அவள் அடுத்த கேள்வியை கேட்க, மலர் நடையை நிறுத்தி, அவளின் முன்னே வந்து நின்றாள். 

“அடியே சுஹா. கேள்வியின் நாயகியே, எல்லோரும் ஒன்னா ரிசார்ட்டுக்கு ட்ரிப் வந்திருக்கோம். குடும்பமா சேர்ந்து ஃபோட்டோ ஷூட் ஒன்னு பண்ணலாம்னு நமக்கு எல்லோருக்கும் ராகவி ஒரே மாதிரி ட்ரெஸ் ரெடி பண்ணா. போதுமா? வேற டவுட் எதுவும் இருக்கா?” மலர் கேட்க,

“ஆ.. ஓகே” என்று ராகம் இழுத்த சுஹாசினி, “ஏன் மலர்.. இன்னைக்கு திறப்பு விழான்னு நேத்தே நமக்கு ஏன் சொல்லல?” என்று அடுத்த கேள்வியை கேட்க, “பேசாம வா, ஷோனா” சிரிப்புடன் மனைவியை அதட்டினான் விக்ரம். 

“அதானே நான் கேள்வி கேட்டா.. யாருக்கும் பதில் சொல்ல தெரியாது. ‍ அதட்ட மட்டும் செய்வீங்க” புலம்பிக் கொண்டே நடந்தாள் சுஹாசினி. 

ஷான்வியை கையில் பிடித்துக் கொண்டு முன்னே சென்று விட்டனர் மலர், ராகவி மற்றும் மது. 

சுஹாசினி, விக்ரம், ஷ்ரவன் மூவரும் ரிசார்ட்டின் முன் பகுதிக்கு செல்ல, அத்தனை அழகான அலங்காரத்தில் இருந்தது வரவேற்பு பகுதி. ரிசார்ட்டின் நுழைவு பகுதியில் மிக பெரிய பூ வளையம் வைத்திருந்தனர். அங்கே ரோஜாக்கள் கொண்டு, திறப்பு விழா ரிப்பன் அமைக்கப்பட்டிருந்தது. 

அதைப் பார்த்துக் கொண்டே அவர்கள் நடக்க, அங்கே கம்பீரமாக மனைவி, மக்களுடன் நடந்து வந்து நின்றான் அவன். 

அவனுக்கு பின்னே சுஹாசினியின் மொத்த நண்பர்களின் குடும்பங்களும் இருந்தது. ஆனால், சுஹாசினியின் கண்களுக்கு அவன் மட்டுமே தெரிந்தான். 

இந்திய கிரிக்கெட் அணியின் துணைத் தலைவன். சென்னை ஐபிஎல் கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவன் நிரஞ்சன் கிருஷ்ணகுமார், மனைவி நந்தனா கார்த்திகேயன் மற்றும் மகன் நிரூபன், மகள் நிலவினி சகிதம் அங்கே புன்னகையுடன் நின்றிருந்தான்.  

“ஓ மை காட். ஹீரோ, இவர், நிரஞ்சன் எப்படி இங்க?” இன்ப அதிர்ச்சியும், ஆச்சரியமும் மிக கத்தினாள் சுஹாசினி. 

“அப்பா, வாட் அ சர்ப்ரைஸ்” என்று வியந்த ஷ்ரவன், “யூ ஆர் தெ பெஸ்ட். தேங்க்ஸ் ப்பா” எம்பி ஒரே தாவலில் விக்ரமின் கன்னத்தில் முத்தமிட்டு, துள்ளி குதித்து கத்தியபடி முன்னால் ஓடினான் அவன். 

“எப்படி ஹீரோ? என்னால நம்பவே முடியல. இவர்.. நிரஞ்சன் தான் ரிசார்ட்டை வாங்கி இருக்காரா?” மனைவி கேட்க, “எத்தன கேள்வி கேட்கிற? பேசாம வா ஷோனா.” அவளின் கைப் பிடித்து முன்னே நடந்தான் விக்ரம். 

“அச்சோ. என்னால இன்னமும் நம்பவே முடியல. நிரஞ்சன் தானா இது? கிரிக்கெட்டர் நிரஞ்சன். அவரே தானா?” அவள் மீண்டும் மீண்டும் கேட்க, முறைத்தான் விக்ரம்.

“அவர் என் க்ரஷ் தெரியுமா?” மென்நகையுடன் கேட்டாள். 

“நல்லா தெரியும்” அவளின் ஹீரோ சிரிப்பை மறைத்து, கோபமாக சொன்னான். 

“நிரஞ்சனா புது ஓனர்?” அவள் கேட்கும் போதே, ரிசார்ட்டின் ஓனர் அங்கு வந்து நிற்க, அந்த முதியவரை பார்த்து பளிச்சென்று மலர்ந்து புன்னகைத்தாள் சுஹாசினி. 

கணவனுடன் வேகமாக நடந்து போய் தன் நண்பர்கள் கூட்டத்துடன் கூட்டமாக நின்றாள் அவள். 

அங்கு திறப்பு விழாவிற்காக ஏற்கனவே சிறிய கூட்டம் கூடியிருந்தது. 

அந்த ரிசார்ட்டின் ஓனர் முன்னே வந்து, “வாங்க” என்று ஆங்கிலத்தில் மென்மையாய் அழைத்தார். 

அந்த பெரியவரின் வரவேற்பை பார்த்து விட்டு பின்னால் திரும்பி தற்போதைய ரிசார்ட் உரிமையாளரை கண்களால் தேடினாள் சுஹாசினி. 

“புது ஓனர் வந்தாச்சா ஹீரோ? யாருன்னு தெரியுமா? எனக்கு காட்டுங்க” அவள் கணவனிடம் கிசுகிசுக்க, விக்ரம் பதில் சொல்லும் முன், “ஓனர் ஃபேமிலி முன்னாடி வாங்க” என்று வீரசிவத்தின் கணீர் குரல் ஆங்கிலத்தில் அன்பு கட்டளையிட்டது.

சுஹாசினி கண்களை எல்லா பக்கமும் சுழற்ற, ஷ்ரவன், ஷான்வி இருவரையும் ஒன்றாக முன்னே நகர்த்தினான் விக்ரம். 

மனைவியின் சுண்டு விரலை மென்மையாய் கோர்த்து, தோளில் இருந்த நான்கு மாத மகன் சைலேஷிடன் அவன் முன்னே நடக்க, சுஹாசினி அப்போது தான் கணவனின் தொடுகையை, செயலை உணர்ந்தாள். 

“ஹீ…ரோ..” பேரதிர்ச்சியுடன் அழைத்து, கணவனின் முகத்தை ஏறிட்டு பார்த்தாள். விக்ரம் மெல்ல புன்னகைக்க, அந்த பழுப்பு விழிகளில் பளிச்சிட்டது அவள் மீதான மொத்த அன்பும், காதலும். அவளோ அசையாமல் அப்படியே நின்றாள். 

Advertisement